உள்ளடக்கத்துக்குச் செல்

புழுக்கொடியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒடியல்
பகுதிதமிழ்நாடு, இலங்கை
முக்கிய சேர்பொருட்கள்பனங்கிழங்கு

புழுக்கொடியல் என்பது, பனங்கிழங்கில் இருந்து செய்யப்படும் ஒரு உணவுப் பண்டம். பனங்கிழங்கு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது. அதனைப் பச்சையாக நீண்டகாலம் வைத்திருக்க முடியாது. இதனை வெயிலில் காயவைப்பதன் மூலம் இதனைப் பதப்படுத்தி நீண்டகாலம் பயன்படுத்த முடியும். பனங்கிழங்கை பச்சையாகவோ அல்லது அவித்தோ வெயிலில் உலர்த்துவர். பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவதே புழுக்கொடியல் ஆகும்.

செய்கை

[தொகு]

பனங்கிழங்குகளை மூழ் மற்றும் பின் பகுதிகளை வெட்டிவிட்டு அடிப்பக்கம் கீழேயும், நுனிப்பக்கம் மேலேயும் இருக்கும் படியாக பானைக்குள் குத்தென குத்தென வைத்து நீர் விட்டு அவிப்பர். பின்னர் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழிப்பர். நடுவில் காணப்படும் முளை நீக்கப்படும். இவ்வாறு கிழித்துப் பெறப்படும் துண்டுகளைப் பாய்களில் பரவியோ அல்லது நூல்களில் கோர்த்து கொடிகளில் தொங்க விட்டோ வெயிலில் காய விடுவர். நன்றாகக் காய்ந்தபின் இவற்றை ஓலைப் பெட்டிகளில் அல்லது சாடிகளில் இட்டுப் பாதுகாப்பர். இந்தப் புழுக்கொடியல் நன்றாக காய்ந்த நிலையில் கடித்து உண்பதற்கு சற்று கடினமானதாக இருக்கும். அதனால் சிலர் கிழங்கை அவித்து, நெடுக்காகப் பிரித்த பின்னரோ அல்லது பிரிக்காமலோ சிறு சிறு வட்டத் துண்டங்களாக, உண்பதற்கு இலகுவான முறையில் வெட்டி எடுத்து, பின்னர் வெயிலில் காயவைப்பர்.

சில பனைகளுக்கு உரிமையாளர்களாக இருப்பவர்கள் தங்கள் வீட்டுத்தேவைகளுக்கு மட்டும் புழுக்கொடியலைத் தயாரித்து வைத்துக்கொள்வர். பெருமளவில் கிழங்குகளைப் பெறக்கூடியவர்கள் புழுக்கொடியல்களைத் தயாரித்து சந்தைகளில் விற்பர்.

பயன்கள்

[தொகு]

புழுக்கொடியலை மேலும் சமைக்காமலே உண்ண முடியும். இவற்றைச் சிறு துண்டுகளாக வெட்டியும், அவ்வாறு வெட்டப்பட்ட துண்டுகளை சர்க்கரைப் பாணியில் (சீனிப் பாணி) தோய்த்தும் உண்ண முடியும்.ஆனால் புழுக்கொடியல் சற்றுக் கடினமாக இருக்கும் கடித்துச் சாப்பிடுவதற்கு நல்ல உறுதியான பற்கள் வேண்டும். இதனால் புழுக்கொடியலை இடித்து மாவாக்கி அத்துடன் தேங்காய்ப்பூ, சர்க்கரை போன்றவற்றையும் கலந்து குழைத்து உண்பதுண்டு. இதை வயதானவர்களும், சிறு குழந்தைகளும் இலகுவாக உண்ணலாம்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புழுக்கொடியல்&oldid=1912792" இலிருந்து மீள்விக்கப்பட்டது