உள்ளடக்கத்துக்குச் செல்

தேங்காய்ப்பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுவர்கள் தேங்காய் துருவும் காட்சி.

தேங்காயை உடைத்து அதனகத்தே வெள்ளைநிறத்தில் காணப்படும் பருப்பை 'திருவலை' (துருவுபலகை) எனும் கருவியினால் துருவி பெறப்படும் துகள்களே தேங்காய்ப்பூ எனப்படும். ஒரு நடுத்தர அளவுத் தேங்காயில் இருந்து மூன்று தொடக்கம் நான்கு கிண்ணம் அளவு தேங்காய்த் துருவல் பெற முடியும்.[1]

பயன்பாடு

[தொகு]

தேங்காய்ப்பூ பல்வேறு உணவுப் பொருட்களில் ஒரு சேர்மானமாகப் பயன்படுகிறது. தேங்காய் சட்னி போன்ற இணை உணவுப் பொருட்களில் இது ஒரு முதன்மைச் சேர்மானம். சில கறி உணவுகளில் இது சுவையூட்டுவதற்காகப் பயன்படுகிறது. சில கறிகளுக்கு தேங்காய்ப்பூவை நேரடியாகவே அரைத்துச் சேர்ப்பதுண்டு. சில கறிகளுக்குத் தேங்காய்ப் பால் சேர்ப்பது உண்டு. தேங்காய்ப் பால், தேங்காய்க் குழைவு (cream)என்பன தயாரிப்பதற்கு ஒரு இடைப் பொருளாகத் தேங்காய்த் துருவல் பயன்படுகின்றது. தேங்காய்த் துருவலை நீருடன் சேர்த்துப் பிழிந்து இவற்றைத் தயாரிக்கின்றனர். சம அளவில் தேங்காய்ப்பூவும் நீரும் சேர்த்துப் பிழியும்போது தேங்காய்ப் பாலும், முக்கால் பங்கு தேங்காய்ப்பூவும் கால் பங்கு நீரும் கலந்து பிழியும்போது குழைவும் கிடைக்கின்றன.[2] தேங்காய்ப்பூ, தேங்காய்ப் பால் என்பன கறிகளுக்குத் தடிப்புத் தன்மையைக் கொடுக்கின்றன.

தேங்காய்ப்பூ தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள், விசுக்கோத்து போன்ற பொருட்களிலும் ஒரு சேர்மானப் பொருளாகப் பயன்படுவது உண்டு. பீடா போன்றவற்றில் அழகூட்டுவதற்காகத் நிறமூட்டப்பட்ட காய்ந்த தேங்காய்ப்பூ பயன்படுகின்றது.

பால் பிழிந்தபின் எஞ்சும் சாறற்ற பூவைக் காயவைத்து நிறமூட்டி நிறக்கோலங்கள் இடுவதற்குப் பயன்படுத்துவதும் உண்டு இது தேங்காய்ப்பூக் கோலம் என அழைக்கப்படுகிறது.

பாதுகாத்தல்

[தொகு]

முழுத் தேங்காய் ஆறு மாதம் வரையில் கெட்டுப் போகாமல் இருக்கும். உடைத்தத் தேங்காப்பூவை அறை வெப்பநிலையில் நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. இது விரைவில் பழுதடையக் கூடியது. இதனால், வீடுகளிலும், உணவகங்களிலும் தேங்காய்களைத் தேவைப்படும்போது துருவி உடனேயே பயன்படுத்துவர். குளிர்பதனப் பெட்டியில் இறுக மூடி வைப்பதன் மூலம் ஒரு கிழமை வரை இது கெடாமல் பாதுகாக்க முடியும். எனினும், உறை பெட்டியில் (freezer) வைத்துப் பாதுகாத்தால் ஆறு மாதங்கள் வரை தேங்காய்ப் பூவையும் பழுதடையாமல் வைத்திருக்கலாம்.[3] இதனால், தற்காலத்தில் துருவிய தேங்காய்ப்பூவும் சில கடைகளில் விற்பனைக்கு உண்டு. இதைவிட தேங்காய்ப்பூவைக் காயவைத்தும் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியும்.

தேங்காய் துருவுவதற்கான கருவிகள்

[தொகு]

தேங்காய் துருவுவதற்குப் பல வகையான கருவிகள் பயன்படுகின்றன. இவற்றுள் சிறிய அளவில் தேங்காய் துருவுவதற்கு உகந்த எளிமையான கருவிகள் முதல் பெருமளவில் தேங்காய் துருவுவதற்குரிய மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்கள் வரை உள்ளன.

தேங்காய்ப்பூ அல்லது பால் பயன்படுத்தும் உணவுகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

குறிப்புக்கள்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேங்காய்ப்பூ&oldid=3911134" இலிருந்து மீள்விக்கப்பட்டது