உள்ளடக்கத்துக்குச் செல்

புந்தோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புந்தோங்
Buntong
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1890
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன்
(2013 - 2018)
 • சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம்
(2013 - 2018)
மக்கள்தொகை
 (2009)
 • மொத்தம்1,02,000
நேர வலயம்ஒசநே+8 (MST)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை

புந்தோங் (ஆங்கிலம், மலாய் மொழி: Buntong) என்பது மலேசியா, பேராக், கிந்தா மாவட்டம், ஈப்போ மாநகருக்கு அருகாமையில் அமைந்து இருக்கும் ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] மலேசியாவில் அதிகமாகத் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் புந்தோங் முதலிடம் வகிக்கின்றது.[2] 2013 ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் 49 விழுக்காட்டினர் இந்தியர்கள்.[3]

புந்தோங் புறநகர்ப் பகுதி, தமிழ்நாட்டு நகர்ப்புறச் சுற்றுச் சூழலை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. அங்கு உள்ள சுங்கைபாரி சாலையில், பெரும்பாலும் இந்தியர்களின் கடைகளாக உள்ளன.[4] புந்தோங்கின் பழைய பெயர் குந்தோங் (Guntong). 2009 ஆம் ஆண்டில் அதன் மக்கள் தொகை 102,000.

வரலாறு

[தொகு]
1945ல் ராச முத்திரியார் புந்தோங்கில் தயாரித்து வெளியிட்ட சுருட்டுகளின் விளம்பரச் சின்னங்கள்.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஈயச் சுரங்கத் தொழிலுக்கு புந்தோங் புகழ் பெற்று விளங்கியது.[5]

சீனாவில் இருந்து ஆயிரக் கணக்கான சீனர்கள் ஈப்போவின் சுற்று வட்டாரப் பகுதிகளில் குடியேறினார்கள்.[6] தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழர்கள் ஈப்போவில் சிறு வணிகத் துறை, துணிமணிகள், ஆடை ஆபரணங்கள் விற்பனைத் துறைகளில் ஈடுபட்டனர். குஜாராத் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் கம்பளங்களைக் கொண்டு வந்து வியாபாரம் செய்தனர்.

ஈப்போ மக்கள் தொகை

[தொகு]

1892-இல் ஈப்போவின் மக்கள் தொகை

  • ஆங்கிலேயர் - 80
  • சீனர்கள் - 39,513
  • மலாய்க்காரர்கள் - 14,950
  • இந்தியர்கள் - 2,645

1901-இல் ஈப்போவின் மக்கள் தொகை

  • சீனர்கள் - 93,003
  • மலாய்க்காரர்கள் - 18,273
  • இந்தியர்கள் - 6,284

2012-ஆம் ஆண்டு, ஈப்போவின் மக்கள் தொகை 673,318 என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.[7] ஈப்போவில் விலைவாசியின் தாக்கங்கள் குறைவு என்பதால், பெரும்பாலோர் இங்கு இருந்து கோலாலம்பூருக்கு வேலைக்குச் செல்வதை விரும்புகின்றனர்.[8]

தோற்றம்

[தொகு]

சங்கீத சபா கலாசாலை

[தொகு]

இவர்கள் பெரும்பாலும் சுங்கை பாரி, சிலிபின், குந்தோங் பகுதிகளில் குடியேறினர். முதன்முதலாகச் சுங்கை பாரியில் தான் தமிழர்கள் குடி பெயர்ந்தனர். பெரும்பாலும் இரயில்வே சாலைக்கு அருகில் வீடுகளைக் கட்டிக் கொண்டனர். 1903 ஆம் ஆண்டு ஓர் அரசாங்கத் தமிழ்ப் பள்ளிக்கூடம் கட்டப் பட்டது. அதன் பெயர் சங்கீத சபா கலாசாலை.[9] இப்போது அதைச் சங்கீத சபா தமிழ்ப்பள்ளி என்று அழைக்கிறார்கள்.[10]

1906 ஆம் ஆண்டு தமிழர்களுக்காக மேடான் கிட்[11] எனும் இடத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி உருவாக்கப் பட்டது. அப்பகுதி இப்போதைய பேராக் போலீஸ் தலைமையகத்திற்கு அருகில் இருக்கிறது. 150 குடும்பங்கள் அங்கு குடியேற்றம் செய்யப் பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 40 X 50 அடி பரப்புள்ள நிலம் வழங்கப் பட்டது.

பத்து ஆண்டுகளில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் ஒரு மாற்று இடம் தேவைப் பட்டது. ஆகவே, தமிழர்களுக்கு என புந்தோங் குடியேற்றப் பகுதி புதிதாகத் தோற்றுவிக்கப் பட்டது. இப்பகுதி சுங்கை பாரியின் கிழக்குப் பகுதியில் இருந்தது. இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் அங்கே குடியேறினர்.

தேவஸ்தான பரிபாலன சபா

[தொகு]

இந்துக்களின் நலனை ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா[12] கவனித்துக் கொண்டது. அந்தக் காலகட்டத்தில், கோலாலம்பூரில் ஆண்டுதோறும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. அதைப் போல ஈப்போவிலும் கொண்டாட விருப்பப் பட்டார்கள். புந்தோங் சுங்கை பாரி சாலையில் ஏற்கனவே மாரியம்மன் ஆலயம் இருந்தது.

ஆகவே, அங்கு இருந்து குனோங் சிரோ பகுதியில் இருக்கும் கல்லுமலைக் கோயிலுக்குத் தைப்பூச ரத ஊர்வலம் சென்று அடைவது என முடிவு செய்யப் பட்டது. 1912 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை அந்த ரத ஊர்வலம் ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்று வருகிறது.[13]

அப்பகுதி வாழ் இந்தியர்களுக்காக ஓர் உல்லாச மையம் தேவைப் பட்டது. தங்களுடைய பொழுதை நல்ல முறையில் கழித்திட அந்த மையம் உதவும் என்று எதிர்பார்த்தனர். அந்த வகையில் 1915 ஆம் ஆண்டு ‘இந்திய பொழுது போக்கு மன்றம்’ உருவானது. அதனை Indian Recreation Club என்று இப்போது அழைக்கின்றனர்.

நகரத்தார்கள்

[தொகு]

நகரத்தார்கள் எனப்படும் செட்டியார்கள் ஈப்போ வாணிபத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டினர்.[14] அவர்கள் இரும்பு சாமான் வியாபாரத்திலும் ஈடுபட்டனர். பேராக் மாநிலத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களே நகரத்தார்களிடம் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

கிந்தா மாவட்டத்தில், குறிப்பாக ஈப்போவில் வாழ்ந்த செட்டியார்கள் தங்களின் வட்டித் தொழிலை விரிவு படுத்தினர். அவர்களிடம் சீனச் சுரங்க முதலாளிகளும் கடன் வாங்கி உள்ளனர்.[15] மலாய்க்காரர்கள் தங்கள் நிலங்களை அடைமானம் வைத்துக் கடன் வாங்கினர். வட்டி கட்டத் தவறிய நிலங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. அந்த நிலங்கள் பின்னர், நகரத்தாரின் உடைமைகளாயின..

ஏ.எம்.ஏ நைனா முகமது

[தொகு]

இந்திய முஸ்லீம் வர்த்தகர்கள் மளிகைக் கடைகள், சாப்பாட்டுக் கடைகள், புத்தகக் கடைகள் போன்றவறை நடத்தினர். சுருட்டு, பீடி, புகையிலை வியாபாரத்திலும் ஈடுபட்டனர். அவர்களில் ஏ.எம்.ஏ நைனா முகமது, கே,என். முகமது நிறுவனங்கள் குறிப்பிடத் தக்கவை. இவர்களின் தலைமையகங்கள் அப்போது பினாங்கு, தைப்பிங்கில் இருந்தன. புட்டியில் அடைக்கப் பட்ட பான வகைகளை விநியோகம் செய்வதிலும் இந்திய முஸ்லீம் வர்த்தகர்கள் தீவிரம் காட்டினர்.[16]

1887 ஆம் ஆண்டு தைப்பிங்கைச் சேர்ந்த சையது புர்ஹான் என்பவர் பேராக்-பினாங்கு குளிர்பான நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அதே காலகட்டத்தில் தைப்பிங்-கம்பார்-ஈப்போ குளிர்பான நிறுவனத்தை ஷேக் அடாம் என்பவர் உருவாக்கினார். 1910ல் சிங்கப்பூரின் பிரசர் நீவ் நிறுவனம் தன்னுடைய கிளைத் தொழில்சாலையை ஈப்போவில் திறந்தது. அதனால், மூன்று நிறுவனங்களுக்குள் கடும் போட்டி தோன்றியது.

1905ல் கோல்ட் ஸ்டோரேஜ் நிறுவனம் சுங்கை பாரி சாலையில் குளிர்படுத்தப் பட்ட இறைச்சி வகைகள், பழங்கள், வெண்ணெய் பொருள்களை விற்கும் நிறுவனத்தைத் திறந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஷேக் அடாம் ஓர் ஐஸ்கட்டி நிறுவனத்தை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் பல டன்கள் ஐஸ் கட்டிகள் தயாரிக்கப் பட்டன. ஷேக் அடாம் விரைவில் செல்வந்தர் ஆனார். 1908 ஆம் ஆண்டு ஈப்போ இந்தியர் பள்ளிவாசலைக் கட்ட 500,000 டாலர்கள் அன்பளிப்பு செய்தார். ஷேக் அடாம் 1895ல் மதராஸிலிருந்து மலாயா வந்தவர்.

செட்டியார் தமிழ்ப்பள்ளி

[தொகு]

ஒரு கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கின் பணச் சுழற்சியே செட்டியார்களின் பிடியில் தான் இருந்தது. இவர்கள் கட்டிய தமிழ்ப்பள்ளியின் பெயர் செட்டியார் தமிழ்ப்பள்ளி. அப்பள்ளி லகாட் சாலையில் இருக்கிறது. அதே சாலையில் தண்டாயுதபாணி கோயிலையும் கட்டினார்கள். அக்கோயிலைச் செட்டியார் கோயில் என்று இந்துக்கள் இன்றும் அழைக்கின்றனர்.

இப்போது ‘லிட்டில் இந்தியா’ என்று அழைக்கப் படும் லகாட் சாலை, ’போத்தல் கடைத் தெரு’ என்று அழைக்கப் படும் ஜாலான் பெண்டாஹாரா போன்றவை நகரத்தார்களின் ஆதிக்கத்தில் இருந்தவை. செட்டித் தெரு என்று ஒரு தனிச் சாலையே ஈப்போவில் இருக்கிறது. புந்தோங் புறநகர்ப் பகுதியில் நகரத்தார் மளிகைக் கடைகளைத் திறந்தனர்.

எம்.எஸ்.மெய்யப்பச் செட்டியார்கள்

[தொகு]

1940 ஆம் ஆண்டுகளில் ஈப்போவில் எம்.எஸ்.எம்.எம் எனும் பெயரில் ஒரு வங்கி செயல் பட்டு வந்தது.[17] அதன் கிளை புந்தோங் சேற்றுக் கம்பத்திலும் இருந்தது. அதை எம்.எஸ்.மெய்யப்பச் செட்டியார்கள் என்று அண்ணன் தம்பிகள் இருவர் நடத்தி வந்தனர். அந்த வங்கியின் தலைமையகம் அப்போது காரைக்குடியில் இருந்தது.

1950 களில் சீனர்களின் ஆதிக்கம் ஈப்போவில் வலுப் பெறத் தொடங்கியது. பொருளாதாரத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். அதனால் அதுவரை அங்கு வாழ்ந்த தமிழர்கள் பலர் தாயகம் திரும்பினர். வேறு சிலர் அருகில் இருந்த மற்ற ஊர்களுக்கும் புலம் பெயர்ந்தனர். வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் தமிழர்களை மறுக் குடியேற்றம் செய்த முடிவு செய்தனர்.

பிரிக்ஸ்’ திட்டம்

[தொகு]

1950ல் ’பிரிக்ஸ்’ திட்டத்தின் கீழ் புந்தோங் புதுக் கிராமம் உருவானது. ஈப்போவில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அந்தப் புதிய குடியிருப்புப் பகுதி உருவாக்கப் பட்டது. ’பிரிக்ஸ்’ திட்டத்தின் கீழ் மலாயா முழுமையும் 450 புதுக்கிராமங்கள் உருவாக்கப் பட்டன. மலாயாக் கம்யூனிஸ்டுகளைத் தோற்கடிக்கப் பிரித்தானிய ஜெனரல் சர் ஹரோல்டு பிரிக்ஸ் என்பவரால் உருவாக்கப் பட்டதே ’பிரிக்ஸ்’ திட்டம்.[18]

புறநகர்களிலும் கிராமங்களிலும் வாழும் பொது மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு உதவி செய்து வந்தனர். அந்த வகையில் சிதறிக் கிடக்கும் பொதுமக்களை ஒரு புது குடியிருப்பில் குடியேற்றம் செய்தால் கம்யூனிஸ்டுகளுக்கு உதவி கிடைக்காது. அதன் மூலம் கம்யூனிஸ்டுகளின் இலட்சியம் தோற்கடிக்கப் படும் என்று பிரிட்டிஷார் கருதினர்.

புந்தோங் புறப் பகுதியில் தமிழர்கள் குடியேற்றப் படுவதற்கு முன், 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடத்தில் ஈயம் தோண்டி எடுக்கப் பட்டு வந்தது. நூற்றுக்கணக்கான ஈய வயல்கள் அங்கே இருந்தன. தூர்ந்து போன ஈய வயல்களை ஈய லம்பங்கள் என்று அழைக்கின்றனர். Lambung எனும் மலாய்ச் சொல்லில் இருந்து லம்பம் எனும் உள்ளூர்த் தமிழ்ச் சொல் உருவானது.

புந்தோங் புதுக்கிராமம்

[தொகு]

ஈய லம்பங்களில் மண்ணும் மணலும் கொட்டப் பட்டுச் சம தரைகளாக ஆக்கப் பட்டன. அங்கே தமிழர்களுக்கு ஒரு பகுதி; சீனர்களுக்கு ஒரு பகுதி என வீடு கட்டிக் கொள்ள நிலம் ஒதுக்கித் தரப் பட்டது. பத்து ஆண்டுகள் அவர்களுக்கு பிரித்தானியரின் பாதுகாப்பு இருந்தது.

மலாயாவில் இருந்து கம்யூனீஸ்டுகள் துடைத்து ஒழிக்கப் பட்டதும் புந்தோங் வாழ் மக்களை ஆங்கிலேயர்கள் பொருட் படுத்தவில்லை. தொடக்கத்தில் குடியேறியத் தமிழர்கள் பழைய ஈயக் குளங்களைச் சீர் செய்தனர். அவற்றை மீன் குளங்களாக மாற்றினர். குளங்களைச் சுற்றி சின்ன சின்ன குடிசைகளைக் கட்டினர். சிலர் ஆடு மாடுகளை வளர்த்தனர். சின்னச் சின்னப் பால் பண்ணைகளை உருவாகினர். ஈப்போ நகருக்குப் பால் விநியோகம் செய்யதனர்.

1950களில் ஈப்போவைச் சுற்றி பல ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களும் தோட்டங்களை விட்டு புற நகர்களில் குடியேறினர். சொந்தத் தொழில்களில் ஈடுபட்டனர். புந்தோங்கில் அதிகமாகத் தமிழர்கள் நிலங்களை வாங்கி வீடுகளைக் கட்டிக் கொண்டனர்.

புந்தோங் முன்னோடிகள்

[தொகு]

புந்தோங்கின் பழைய பெயர் குந்தோங். இப்போது தாமான் ரிஷா, புந்தோங் ஜெயா என்று அழைக்கப் படும் இடங்களில் இருந்து கிளேடாங் மலை அடிவாரம் வரை பரந்து விரிந்து கிடக்கும் நிலப் பகுதியைத் தான் புந்தோங் என்று இப்போது அழைக்கின்றனர். புந்தோங் புதுக் கிராமம் உருவாக்கப் படுவதற்கு முன் கிளேடாங் மலை அடிவாரத்தில் நூற்றுக் கணக்கான சீனர்களும் இந்தியர்களும் சொந்தமாக வீடுகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் சொந்தமாகக் காய்கறித் தோட்டங்களை வைத்து இருந்தனர். சிலர் பன்றி வளர்ப்புத் துறையில் ஈடுபட்டனர். சிலர் ஈயச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முறையான குடிநீர் வசதிகள் இல்லை. சுகாதாரமான மனிதக் கழிவு முறைகளும் இல்லை. மனிதக் கழிவுகளைத் தொட்டியில் தூக்கிச் செல்லும் முறை இருந்தது.

சீக்கியர் ஆலயம்

[தொகு]

1900 களில் புந்தோங் வட்டாரத்தில் 60 சீக்கிய குடும்பங்கள் மட்டுமே இருந்தன. பெரும்பாலும் அவர்கள் அருகாமையில் உள்ள ஈய லம்பங்களில் வேலை செய்தனர். சிலர் பால் மாடுகளை வளர்த்தனர். சிலர் மாட்டு வண்டிகளைக் கொண்டு வருமானம் தேடினர். 1908 ஆம் ஆண்டு தெலுக் குரினில் ஒரு சீக்கிய ஆலயம் கட்டப் பட்டது. அத்தாப்பு கூரைகள், சாதாரண பலகைகளைக் கொண்டு கட்டப் பட்டது.[19]

1934 ஆம் ஆண்டு அந்தக் கோயில் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடமாக மாறம் பெற்றது. 1951 ஆம் ஆண்டு புந்தோங் புதுக் கிராமம் தோற்றுவிக்கப் பட்டதும் ஜாலான் பம்பாயில் புதிய ஆலயம் உருவானது. அதிகாரப் பூர்வமாக 14 மே மாதம் 1952ல் திறக்கப் பட்டது. அதன் முகவரி: No. 1058 Jalan Bombay, Buntong, 30100 Ipoh, Perak.

கச்சான் பூத்தே கிராமம்

[தொகு]

Kacang Putih என்பது மலாய்ச் சொல். 'வேர்க் கடலைக் கிராமம்’ என்று பொருள். ஒரு வேர்க் கடலைக்கே புந்தோங்கில் ஒரு கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமம் மலேசியாவிலேயே மிகவும் புகழ் பெற்றது. இக் கிராமம் தோன்றுவதற்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கின்றது.

ஈப்போ கல்லு மலைக் கோயிலுக்கு அருகில் குனோங் சிரோ எனும் சுண்ணாம்புக் குன்றுகள் உள்ளன. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் சிலர் அந்த குனோங் சிரோ மலை அடிவாரத்தில் தங்கி கச்சான் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டனர்.

வீட்டில் இருக்கும் பெண்கள் வேர்க்கடலைகளைப் பொரித்துக் கொடுத்தனர். அவற்றை ஆண்கள் எடுத்துச் சென்று ஈப்போ நகரில் விற்று வந்தனர். கச்சான்களைப் பொரிப்பதற்கு விறகு அடுப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. அதனால் அவற்றுக்கு சுவை மிகுதி. இரண்டு தலைமுறைகளாக கச்சான் வியாபாரம் அங்கு நடைபெற்று வந்தது.

ஆரம்ப காலங்களில் தலையில் கச்சான் தட்டுகளைச் சுமந்தவாறு ‘கச்சான் பூத்தே, கச்சான் பூத்தே, ஒரு காசுக்கு ஒன்று’ எனக் கூவிக் கூவி விற்றனர். அந்தக் காலகட்டத்தில் குனோங் சிரோ கச்சான்கள் புகழ் பெற்று விளங்கின. 1960களில் பொது மக்கள் குனோங் சிரோவைத் தேடிச் சென்று கச்சான்களை வாங்கினர். குனோங் சிரோ கச்சான்கள் மிக மிகச் சுவையானவை.

குனோங் சிரோ கச்சான்கள்

[தொகு]

அதனால் பேராக் மாநிலத்தில் மட்டும் அல்ல; மலேசியாவிலேயே புகழ் பெற்று விளங்கின. திருவிழாக் காலங்களில் குனோங் சிரோ கச்சான்களுக்கு நல்ல கிராக்கியும் இருந்தது.

1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி, தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன் குனோங் சிரோவில் திடீரென ஒரு மலைச் சரிவு ஏற்பட்டது. அதில் பல வீடுகள் சிதைந்து போயின. 42 பேர் புதையுண்டு போயினர். அந்தப் புதை இடர்பாட்டில் இருந்து 12 உடல்கள் மட்டுமே மீட்கப் பட்டன. குனோங் சிரோ கச்சான் பூத்தே கிராமம் ஒரே நாளில் காணாமல் போய் விட்டது.

அடுத்து, குனோங் சிரோவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மக்கள் போகக் கூடாது என்று பேராக் மாநில அரசாங்கம் தடை விதித்தது. அப்போது பேராக் மாநில முதல்வராக டத்தோ கமாருடின் ஈசா இருந்தார். பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் கொடுக்கப் படும் என்று மாநில அரசாங்கம் உறுதி அளித்தது.

கம்போங் கச்சான் பூத்தே

[தொகு]

அந்த மாற்று இடம் தான் இப்போது புந்தோங்கில் இருக்கும் கம்போங் கச்சான் பூத்தே. 1974 ஆம் ஆண்டில் குனோங் சிரோவில் எஞ்சியிருந்த 30 குடும்பங்களும் கம்போங் கச்சான் பூத்தே கிராமத்திற்குப் புதுக் குடியேற்றம் செய்யப் பட்டன.[20]

அவர்கள் அங்கிருந்து மறுபடியும் கச்சான் வியாபாரத்தைத் தொடர்ந்தனர். முன்பு போல் கச்சான் தட்டுகளைத் தலையில் சுமக்கவில்லை. அதற்குப் பதிலாக சைக்கிள், மோட்டார் சைக்கிள்களைப் பயன் படுத்தினர்.

இவர்களில் சிலர் இப்போது ஈப்போ பேரங்காடிகளில் கச்சான் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். சிலர் பேருந்து நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றில் வியாபாரம் செய்கின்றனர். சிலர் மொத்த வியாபாரத்திலும் இறங்கி விட்டனர்.

மேல் நாடுகளுக்கு ஏற்றுமதி

[தொகு]

இவர்கள் கச்சான் கடலைகளை மட்டும் விற்கவில்லை. முறுக்கு, அதரசம், மரவெள்ளிக் கிழங்குச் சீவுகள், ஓமப் பொடி, உருளைக் கிழங்குச் சீவுகள் போன்றவற்றையும் விற்கின்றனர். ஒரு சில கச்சான் வியாபாரிகள் தங்கள் தயாரிப்புகளை அரபு நாடுகள், தாய்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.[21]

நாள் ஒன்றுக்கு 5000 கிலோ வியாபாரம் செய்யும் வணிகர்களும் இந்தக் கச்சான் பூத்தே கிராமத்தில் இருக்கின்றனர்.இவர்களுடைய பிள்ளைகளில் பலர் மேல்படிப்பு படித்து விமானிகளாக, மருத்துவர்களாக, மேல்நிலை அதிகாரிகளாக மலேசியாவில் பவனி வருகின்றனர்.

புந்தோங் மருத்துவமனை

[தொகு]

புந்தோங்கில் 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 102,000 பேர் வாழ்கின்றனர். அவர்களுக்கு ஒரு நவீன மருத்துவமனை 27 மில்லியன் ரிங்கிட் செலவில் 2009ல் கட்டப் பட்டது. இந்த மருத்துவமனை மூன்று மாடிகளைக் கொண்டது. மலேசியாவின் மிக நவீனமான மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. இதில் 50 மருத்துவ ஊழியர்களும் 10 மருத்துவர்களும் பணி புரிகின்றனர். இந்த மருத்துவமனை தாமான் புந்தோங் ரியாவிற்கு அருகில் உள்ளது.[22]

குளோரி படமேடை

[தொகு]

1940 ஆம் ஆண்டுகளில் புந்தோங் வாழ் தமிழர்களுக்கு ஒரு படமேடை கட்டப் பட்டது.[23] அதன் பெயர் குளோரி. இப்போது அந்தக் குளோரி படமேடை இல்லை. மலேசியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் வந்த பின்னர் பல திரைப்பட அரங்குகள் மூடு விழா கண்டன.

அவற்றில் குளோரி படமேடையும் ஒன்று.[24] 1980களில் இந்தப் படமேடை மூடப்பட்டது. அந்த இடத்தில் இப்போது புந்தோங் மக்கள் மண்டபம் கட்டப் பட்டு உள்ளது. புந்தோங் தமிழர்களின் திருமண நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுகின்றன.

அரசியல்

[தொகு]

மலேசிய அரசியலில் புந்தோங் சரித்திரம் படைத்த ஊர். புந்தோங்கில் உள்ள தமிழர்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஒட்டு மொத்த மலேசியாவின் தமிழர்களின் கவனத்தையும் ஈர்க்கின்றன. 2007 ஆம் ஆண்டு மலேசியத் தமிழர்களில் இரண்டு இலட்சம் பேர் கோலாலம்பூரில் ஒன்று கூடினர். மலேசியத் தமிழர்களுக்குச் சம உரிமைகள் வழங்கப் பட வேண்டும் என்று இண்ட்ராப் இயக்கம் பேரணி நடத்தினர்.

மலேசியத் தமிழர்கள் மூன்றாம் தர மக்களாக நடத்தப் படக் கூடாது. புலம் பெயர்ந்த மக்கள் உரிமை பெற்று வாழ வேண்டும். அதுவே அந்தப் பேரணியின் தலையாய நோக்கம். அந்தப் பேரணியில் பல ஆயிரம் பேர் கைது செய்யப் பட்டனர். பலர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு தைப்பிங் சிறைக்கு அனுப்பப் பட்டனர்.

பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்

[தொகு]

பி. உதயகுமார், எஸ். கணபதிராவ், எம். மனோகரன், கே. கெங்காதரன் போன்றவர்கள் அந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர்கள். மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்கள். அவ்வியக்கத்தின் தலைவரான வேதமூர்த்தி 2007-ஆம் ஆண்டு நாடு கடந்து லண்டனில் ஐக்கிய நாட்டவையின் கடப்பிதழுடன் வாழ்ந்து வந்தார்.

புந்தோங் சட்டமன்ற உறுப்பினராக சிவ சுப்பிரமணியம் ஆதி நாராயணன் இருந்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார்.

தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]
  1. ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி சுங்கை பாரி சாலை, புந்தோங்
  2. மெதடிஸ்ட் தமிழ்பள்ளி சுங்கை பாரி சாலை, புந்தோங்
  3. சங்கீத சபா தமிழ்ப்பள்ளி சிலிபின் சாலை, புந்தோங்
  4. பிலோமினா தமிழ்ப்பள்ளி சிலிபின் சாலை, புந்தோங்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ZON 12 : BUNTONG / SILIBIN". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-02-03.
  2. "Buntong is Malaysia's largest Indian-majority state seat, with the community making up 48 per cent of the 22,907-strong electorate, followed by the Chinese at 44 per cent and Malays at six per cent". Archived from the original on 2013-04-20. பார்க்கப்பட்ட நாள் 2015-02-03.
  3. Indians, who make up 49 per cent of the total 22,887 voter population.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Buntong in Ipoh consists of a predominantly Indian community". Archived from the original on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2015-02-03.
  5. Ipoh developed into one of Malaysia's main cities due to the booming tin mining industry around the turn of the 19th century.
  6. The white coffee was first introduced in the 1900s by Chinese migrants who came to work in the local tin mines.
  7. "The population of Ipoh, Malaysia is 673318 according to the GeoNames geographical database". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2015-02-03.
  8. IPOH is a relatively affordable city to live in compared to other bigger cities.
  9. SJK (T) Perak Sangeetha Sabah
  10. SRJK (T) Perak Sangeetha Sabah new building.
  11. Medan Kidd is the focal point / meeting point for many travellers to the state.
  12. Ipoh Hindu Devasthana Paripalana Sabah secretary M. Vivekananda said there were a total of 900 kavadis, 20,000 milk offerings and more than 6,000 people who shaved their heads to mark the festival.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "Ipoh Hindu Devasthana Paripalana Sabah (IHDPS) said that the Perak State Government has given RM1.3 million for construction of the crematorium". Archived from the original on 2014-08-09. பார்க்கப்பட்ட நாள் 2015-02-03.
  14. "The majority of them were Nattukkotai Chettiars from South India". Archived from the original on 2015-02-16. பார்க்கப்பட்ட நாள் 2015-02-03.
  15. Chettiars from South India who acted as moneylenders to the Chinese tin miners, many who couldn’t get loans from the colonial banks.
  16. HIGH QUALITY OF COPRA AND OILS. The Straits Times, 7 August 1939, Page 15.
  17. Mr.M.S.M.Meyyappa Chettiar (right), proprietor of the Chettiar banking firm of M.S.M.M. in Ipoh அண்ட் Sitiawan, to the F.M.S War Fund.
  18. Briggs' Plan was a military plan devised by British General Sir Harold Briggs shortly after his appointment in 1950 as Director of Operations in the anti-communist war in Malaya.
  19. In 1908, these Sikhs built a single storey Gurdwara Sahib in the area now known as Telok Kurin, Buntong, Ipoh.
  20. "Kacang Putih originates from a small village near Gunung Cheroh, Ipoh several years before Malaysian independence". Archived from the original on 2014-12-18. பார்க்கப்பட்ட நாள் 2015-02-03.
  21. From very humble beginnings, the ‘kacang putih’ industry in Ipoh has grown not only to be famous throughout the country, but also into a multi-million-ringgit business.
  22. Sultan Perak Sultan Azlan Shah merasmikan Klinik Kesihatan Buntong, Ipoh di sini hari ini sempena Sambutan Ulangtahun Keputeraan Sultan Perak ke-83.
  23. Glory cinema was along the main road to the market just before the slope.
  24. Glory Theatre lost its shine and eventually closed down in the early 80's.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புந்தோங்&oldid=3925427" இலிருந்து மீள்விக்கப்பட்டது