பிரமிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரமிள்
பிறப்புசிவராமலிங்கம்
20 ஏப்ரல் 1939
திருகோணமலை, கிழக்கு மாகாணம், பிரித்தானிய சிலோன்
(தற்போது இலங்கை)
இறப்பு6 சனவரி 1997(1997-01-06) (அகவை 57)
கரடிகுடி , வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்லக்ஷ்மிஜோதி, இலக்குமி, இளங்கோ, கெளரி, பூம்பொழில் வேலவன், பூம்பொற்கொடி இளங்கோ, குகேந்திர அமுதன், டி.சி.ராமலிங்கம், பிருமிள், பிரமின், பிரமிள்பானு, ஜீவராம், அஜீத்ராம் பிரமிள், பிரமிள் பானு சந்திரன், பானு அரூப் சிவராம், விக்ரம் குப்தன் பிரமிள், ராம் தியவ் விபூதி பிரமிள், தர்மு சிவராம்[1]
இனம்ஈழத்தமிழர்
குடியுரிமைஇலங்கையர் (1939-59) இந்தியர் (1959-97)
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர், ஓவியர்

பிரமிள் (Premil, ஏப்ரல் 20, 1939 - சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார்.[1] அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மு சிவராம்[1] இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில், 1997இல் மறைந்தார்.

எழுத்துலகில்[தொகு]

தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்து பத்திரிகையில் கவிதைகளும் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளராகவே மதிக்கப்பட்டார். இலங்கை எழுத்துலகமும் இவ்வாறே இவரைக் கணித்து வந்துள்ளது.

புதுக் கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்தபட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்திருந்தார்; இவரது ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக் கவிஞர்’ என்றும் ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும்.

ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்சனக்கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள், நவீன தமிழ் இலக்கியம் குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர்.

ஆரம்பக் கல்வி மட்டும் ராமகிருஷ்ணமடம் நடத்திய இரவுப்பாடசாலையில் கிடைத்தது. தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள். இளம் வயதிலேயே மௌனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்குண்டு.

"கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்" என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுத்துவில் எழுதினார். மைசூரிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை, கேரளக் கருத்தரங்கில் படித்த தமிழ்க்கவிதை பற்றிய இவரது கட்டுரை ஒன்றைக் கேட்டு வாங்கி வெளியிட்டது.

தொடக்கத்தில் எழுத்து- இதழும் இடையில் கொல்லிப்பாவை இதழும் இறுதியில் லயம் பத்திரிகையும் இவருக்கு முதன்மையான படைப்புக் களம் அமைத்துத் தந்தன. பிரமிளின் பெரும்பாலான நூல்கள் லயம் வெளியீடுகளாகவே பிரசுரம் பெற்றன.

ஓவியர்[தொகு]

புத்தகங்களிலும் இதழ்களிலும் சிவராம் வரைந்த ஓவியங்கள் வெளியாகியுள்ளன. 1971 இல் கண்டி பிரான்சு நட்புறவுக் கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.[2]

படைப்புகள்[தொகு]

கவிதைத் தொகுதிகள்[தொகு]

  • கண்ணாடியுள்ளிருந்து
  • கைப்பிடியளவு கடல்
  • மேல்நோக்கிய பயணம்
  • பிரமிள் கவிதைகள்

சிறுகதை தொகுப்பு[தொகு]

  • லங்காபுரி ராஜா
  • பிரமிள் படைப்புகள்

சிறுகதைகள் சில[தொகு]

  • காடன் கண்டது
  • பாறை
  • நீலம்
  • கோடரி
  • கருடனூர் ரிப்போர்ட்
  • சந்திப்பு
  • அசரீரி
  • சாமுண்டி
  • அங்குலிமாலா
  • கிசுகிசு

குறுநாவல்[தொகு]

  • ஆயி
  • பிரசன்னம்
  • லங்காபுரிராஜா

நாடகம்[தொகு]

  • நட்சத்ரவாசி

பிரமிள் நூல் வரிசை[தொகு]

(பதிப்பு : கால சுப்ரமணியம்)
1. பிரமிள் கவிதைகள். 1998. (முழுத் தொகுதி). (லயம்).
2. தியானதாரா. 1989 (லயம்), 2005 (ஆகாஷ்), (1999), (2006), 2008 (கவிதா).
3. மார்க்ஸும் மார்க்ஸியமும். 1999. பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). (லயம்).
4. பிரமிள் படைப்புகள். 2003. (அடையாளம்).
5. வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்.2004. (அடையாளம்).
6. பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள். 2007. (வம்சி).
7. பிரமிள் கவிதைகள். 2007. (சிறப்புப் பதிப்பு). (அடையாளம்).
8. விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள். 2009. (விருட்சம்)
9. ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. 2009. (தமிழோசை).
10. யாழ் கதைகள். 2009. (லயம்).
11. காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள். 2009. (உள்ளுறை).
12. வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். 2011. (வம்சி).
13. வரலாற்றுச் சலனங்கள்: சமுதாயவியல் கட்டுரைகள். 2011. (வம்சி).
14. எதிர்ப்புச்சுவடுகள்: பேட்டிகள், உரையாடல்கள். (வெளிவராதது)
15. அறைகூவல்: இலக்கிய அரசியல் எழுத்துகள். (வெளிவராதது)
16. தமிழின் நவீனத்துவம்: எழுத்து கட்டுரைகள். 2011. (நற்றிணை)
17. சூரியன் தகித்த நிறம் (மொழிபெயர்ப்புக் கவிதைகள். 2011. (நற்றிணை)
18. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதையில்லாப் பயணம். 2014. தமிழினி
19. மார்க்ஸும் மார்க்ஸியமும் - பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). 2014. தமிழினி
18. பிரமிள் படைப்புகள்: தொகுதி 1 கவிதைகள். 2015. அடையாளம்
19. பிரமிள் படைப்புகள்: தொகுதி 2 கதைகள், நாடகங்கள். 2015. அடையாளம்
20. பிரமிள் படைப்புகள்: தொகுதி 3 விமர்சனக்கட்டுரைகள்-1. 2015. அடையாளம்
21. பிரமிள் படைப்புகள்: தொகுதி 4 விமர்சனக்கட்டுரைகள்-2. 2015. அடையாளம்
22. பிரமிள் படைப்புகள்: தொகுதி 5 பேட்டிகளும் உரையாடல்களும். 2015. அடையாளம்
23. பிரமிள் படைப்புகள்: தொகுதி 6. மொழிபெயர்ப்பு, அறிவியல் ஆன்மீகம். 2015. அடையாளம்

விருதுகள்[தொகு]

நியூயார்க் விளக்கு அமைப்பு "புதுமைப்பித்தன்" விருதை இவருக்கு அளித்தது. கும்பகோணம் சிலிக்குயில் "புதுமைப்பித்தன் வீறு" வழங்கியது.

மறைவு[தொகு]

உதரவிதானத்தில் ஏற்பட்ட புற்றுநோயால் பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர், 1997ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி காலமானார். வேலுருக்கு அருகிலுள்ள கரடிக்குடி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 அந்தனி ஜீவா (20 செப்டம்பர் 2015). "மட்டு நகர் பிரமிளுக்கு சூட்டிய மகுடம்". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) 1987". ஆகத்து 1987. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிள்&oldid=3647243" இலிருந்து மீள்விக்கப்பட்டது