பிரபுல்லா சந்திர ராய்
பிரபுல்லா சந்திர ராய் | |
---|---|
பிறப்பு | பிரபுல்லா சந்திர ராய் 2 ஆகத்து 1861 ஜெஸ்சூர் மாவட்டம், வங்காள மாகாணம், இந்தியா (இன்றைய குல்னா மாவட்டம், குல்னா கோட்டம், வங்காளதேசம்) |
இறப்பு | 16 சூன் 1944 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (இன்றைய இந்தியா) | (அகவை 82)
தேசியம் | இந்தியர் |
துறை | |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | வித்யாசாகர் கல்லூரி மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா கொல்கத்தா பல்கலைக்கழகம் எடின்பரோ பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | (1887) |
ஆய்வு நெறியாளர் | அலெக்சாந்தர் கிரம் பிரவுன் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | சத்தியேந்திர நாத் போசு மேகநாத சாஃகா |
அறியப்படுவது | இந்திய வேதியியல் ஆய்வு, வேதித்தொழில்துறை முன்னோடி |
விருதுகள் |
|
பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray - வங்கமொழியில் - প্রফুল্ল চন্দ্র রায়, ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர்.
வரலாறு
[தொகு]பிரபுல்ல சந்திர ரே 1861-ல் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் நாள் மேற்கு வங்காளத்திலுள்ள குல்னா மாவட்டத்தில் (தற்போதைய வங்கதேசத்திலுள்ளது) ராகுலி-காட்டிபரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் ஹரிஷ் சந்திர ரே என்பவர். இவர் ஒரு பண்ணையார். வடமொழி, பெர்சிய மொழி, ஆங்கிலம் மூன்றிலும் புலமை பெற்றவர். ஆங்கில நாகரிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவருடைய சிந்தனைகள் பகுத்தறிவு அடிப்படையிலேயே அமைந்திருந்தன. சமுதாய நடவடிக்கைகள், இசை, கல்வி இவற்றில் அதிக நாட்டம் கொண்டவர். எனவே, தனது மகன் 'பிரபுல்ல சந்திர ரே' வின் இளமைக் கல்வி தந்தையின் வழிகாட்டுதலின் படி சிறப்பாக அமைந்தது. ஒன்பது வயது வரை இவருடைய கிராமத்திலேயே கல்வி பயின்றார்.
கல்வி
[தொகு]1870-ல் இவருடைய குடும்பம் கல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தது. அங்கு சில ஆண்டுகள் ஹேர் பள்ளியில் படிப்பைத்தொடர்ந்தார் ரே. அப்போது இவருடைய உடல் நலம் குன்றி பள்ளிக்குச் செல்வது தடைப்பட்டது. ஆயினும் வீட்டில் இருந்த படியே தீவிரமாகப் படித்தார். உடல் நலம் தேறிய பின்னர் மீண்டு படிப்பைத் தொடர்ந்தார். நன்கு படித்து முதல் மாணவராகத் திகழ்ந்தார். பள்ளிப் படிப்பின் போது, வழக்கமான பள்ளிப் படிப்போடு ஆங்கிலம் மற்றும் வங்க இலக்கியங்களைக் கற்று வந்தார். பத்து வயது இருக்கும்போதே இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளைக் கற்றுத்த் தேர்ந்தார். இங்கிலாந்து, ரோம், ஸ்பெயின் நாடுகளின் வரலாறுகளைக் கற்றறிந்தார். இதனால் அவர் புத்தகப் புழுவாகவே மாறினார்.
1874 -ல் ஆல்பர்ட் பள்ளியில் சேர்ந்தார். இவருடைய நுண்ணறிவு அங்குள்ள ஆசிரியர்களைக் கவர்ந்தது. ஆசிரியர்கள் வகுப்பெடுக்கும் முறைகளால் இவர் கவரப்பட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக தேர்வு எழுதாமல் இவர் பிறந்த கிராமத்திற்குச் செல்ல வேண்டி வந்தது. பிறகு 1876-ல் கொல்கொத்தா திரும்பி ஆல்பர்ட் பள்ளியிலேயே தன் படிப்பைத் தொடந்தார். தேர்வுகளில் சிறப்பான வெற்றிகளையும் பல்வேறு பரிசுகளையும் வென்றார்.
1879 -ல் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று மெட்ரோ பாலிடன் நிலையத்தில் (தற்போது இது வித்யாசாகர் கல்லூரி) சேர்ந்தார். இதற்குள் இவருடைய குடும்பம் தங்களுடைய சொத்துக்களை இழந்து வறுமையின் பிடியில் சிக்கியது. வறுமையில் வாட வாட ரேயின் உழைப்பு அதிகரித்தது. அதே நேரம் இவரின் குடும்பம் மீண்டும் தங்கள் கிராமத்திற்கே திரும்பியது. ஆனால் இவர் கொல்கத்தாவில் தங்கித் தன் படிபைத் தொடர்ந்தார்.
மெட்ரோ பாலிடன் நிலைய ஆசிரியர்கள் பாடங்களைப் போதித்ததோடு அல்லாமல் அன்றைய நாளில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் சுதந்திர உணர்வையும், நலிவடைந்த மக்களின் உயர்வுக்கு வேண்டிய பணிகளையும் ரேயின் மனதில் ஊட்டி வளர்த்தனர். மெட்ரிகுலேசன் தேர்வில் வெற்றிபெற்று பிறகு மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, வேதியலைப் பாடமாக எடுத்துக் கொண்டார். அதே சமயம் இவர் வடமொழி, லத்தீன், பிரெஞ்சு போன்ற பல மொழி கற்பதையும் விடவில்லை.
உதவித்தொகை
[தொகு]லண்டனில் உள்ள பல்கலைக் கழகம் பல போட்டித்தேர்வுகளை நடத்திப் பரிசு வழங்கி வந்த கால கட்டம் அது. அப்படி ஒரு தேர்வில் வெற்றி பெற்ற பிரபுல்ல சந்திரர் ' கில்கிரிஸ்ட் கல்வி உதவித் தொகை ' பெற்று இங்கிலாந்து சென்று எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இங்கும் வேதியலில் ஆர்வம் செலுத்தினார்.எடின்பரோ பல்கலைக் கழகத்தில் தன்னுடைய பட்டப் படிப்பை முடித்த பின் வேதியலில் ஆய்வுப் பட்டம் பெறுவதற்கான முயற்சியில் இவர் ஈடுபட்டார். அப்போது ஹோப் கல்வி உதவித்தொகையும் இவருக்கு வழங்கப் பட்டது.
பாராட்டுக்கள்
[தொகு]எடின்பரோ பல்கலைக் கழகத்தில் பயின்ற போது ' இந்தியா - சிப்பாய்க் கலகத்திற்கு முன்னும் பின்னும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட ரே இந்திய வரலாற்றை ஆய்வு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுதினார். அப்போட்டியில் இவருக்குப் பரிசு கிடைக்க வில்ல . எனினும் பரிசளிப்பு விழாவில் அப்பல்கலைக் கழக முதல்வர் இவருடைய கட்டுரையைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அக்கட்டுரை பிறகு சக மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் அச்சிட்டு வழங்கப்பட்டது. இதனால் இவருடைய புகழ் லண்டனில் பரவியது. இந்தியாவின் சிறந்த நண்பராகத் திகழ்ந்த 'ஜான் பிரைட் என்ற ஆங்கிலேயப் நாடாளுமன்ற பிரதிநிதிக்கு இது அனுப்பப்பட்டு, அவர் பிரபுல்ல சந்திரரைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். இவர் படிக்கும் போதே பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். 1887 -ல் டி.எஸ்ஸி. (டாக்டரேட் ஆஃப் சயின்ஸ்) பட்டம் பெற்றார். இப்பட்டம் பெற்ற முதல் இந்தியர் இன்ற பெருமையையும் பெற்றார்.
பணிகள்
[தொகு]1888- ல் இந்தியா திரும்பிய ரே பணியைப் பெற போராடினார். அந்தக் கால கட்டத்தில் இந்தியாவில் பல உயர் பதவிகளில் எல்லாம் ஆங்கிலேயரே இருந்தனர். இவர் இங்கிலாந்தின் பல பேராசிரியர்களிடம் பரிந்துரைக் கடிதங்களை வாங்கி வந்த போதும், லண்டனில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற போதும் சொந்த நாட்டில் ஒரு பணியைப் பெற போராட வேண்டியதாயிற்று. அப்பொழுது புகழ் பெற்றிருந்த அறிவியல் அறிஞர் ஜகதீஸ் சந்திர போஸ் நடத்திவந்த ஆய்வுச் சாலையில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
1896 -ல் மாநிலக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பதவியேற்றார். அன்றைய நாளில் அவருடைய மாதச்சம்பளம் ரூ 250 மட்டுமே. ஆனால், அவர் மிகச் சிறந்த ஆசிரியராக அனைவரையும் கவரத்தக்க வகையில் பணியாற்றினார். மாணவர்களிடம் ஆய்வு மணப்பான்மையை வளர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்தினார். இந்தப் பணியில் இருந்து கொண்டே வீட்டிலும் ஓர் ஆய்வுக் கூடத்தை நிறுவினார். தன் மாணவர்களையும், அந்த ஆய்வுக் கூடத்தில் ஆய்வுகளைச் செய்ய அனுமதித்தார்.மேக்நாத் சாகா, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் ஆகிய தலைசிறந்த அறிவியலாளர்களை உருவாக்கியவர் ரே.
ஆய்வுகள்
[தொகு]1896 -ல் பாதரச நைட்ரேட் என்னும் அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டுபிடித்தார். அவருடைய மாணவர்களைக் கொண்டு நைட்ரேட் சேர்மங்களின் நிலைத்தன்மை பற்றி ஆராய முயன்றார். அம்மோனியம் நைட்ரேட் மிகவும் நிலைத் தன்மை கொண்டது எனவும், அதை வெற்றிடத்தில் வைத்து 78° செல்ஷியஸ் வெப்பநிலையில் சூடாக்கினால் பிரிகையடையாத ஆவி மூலக்கூறுகள் கிடைக்கும் என்றும் அவர் கண்டுபிடித்தார். இது முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டது. அமீன் நைட்ரைட்டுகளின் பண்புகளையும் இவர் கண்டு பிடித்தார். கார மண் உலோகங்களின் நைட்ரேட்டுகளைப் பற்றி இவர் ஆய்வுகளைச் செய்தார். கந்தகம், பாஸ்பரஸ், பிளாட்டினம் போன்றவற்றின் கரிம உலோகச் சேர்மங்களைப் பற்றி இவர் செய்த ஆய்வுகள் சிறப்பானதாகும். I-Hg-S-s-Hg-I என்ற சேர்மத்தை இவர் உருவாக்கி, அதன் படிகங்களின் மேல் ஒளியைப் பாய்ச்சினால் அவற்றின் நிறம் மாறுகிறது என்பதையும், பின்னர் இருட்டில் வைத்தால் அவற்றிற்குப் பழைய நிறம் மீண்டும் வந்து விடுவதையும் கண்டு பிடித்தார்.
மருத்துவ ஆய்வுகள்
[தொகு]ஆயுர்வேதம் பற்றியும் இவர் ஆராய்ந்தார். " இந்திய வேதியியல் வரலாறு" என்ற மிகச் சிறந்த நூலைப் பத்தாண்டு காலம் கடுமையாக உழைத்து எழுதி வெளியிட்டார். இந்திய நாட்டு மூலிகைகளைப் பற்றி அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்தார். அவற்றிலிருந்து மருந்துகளை எப்படித் தயாரிக்கலாம் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இதன் பயனாக " வங்காள வேதியல் மற்றும் மருந்துகள் தொழிற்சாலை"(பெங்கால் கெமிக்கல்சு அன் பார்மசூட்டிகல்சு) என்ற இந்தியாவின் முதல் மருந்துத் தொழிற்சாலையை 1901 -ல் நிறுவினார். வேதியியல் ஆய்வுகளோடு நின்று விடாமல் 'இந்திய வேதியியல் கழகம்', 'இந்திய வேதியியல் பள்ளி' ஆகியவற்றையும் தொடங்கினார். மாநிலக் கல்லூரியில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். 1936 -ல் இதிலிருந்து ஓய்வு பெற்று கொல்கத்தா பல்கலைக் கழத்தில் மதிப்பியல் சிறப்புப் பேராசிரியராகப் பதவியேற்றார்.
தொண்டுகள்
[தொகு]தாம் பிறந்த குல்சானா மாவட்டம் ஒருமுறை பஞ்சத்தின் பிடியில் சிக்கிய போது அப்பஞ்சத்தைப் போக்குவதற்கான பல்வேறு நடவடிக்கையில் ரே மனமுவந்து ஈடுபட்டார். 1931 முதல் 1934 வரை சாகித்திய பரிசத் என்ற கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார். அறிவியல் கல்லூரியில் வேதியியல் ஆய்வகத்தின் இயக்குநராகப் பணியாற்றிய போது தனது ஊதியம் முழுவதையும் அந்த ஆய்வகத்தின் வளர்ச்சிக்கே செலவு செய்தார். இவர் தாம் பிறந்த இந்தியத் தாய்த்திருநாட்டைப் பெரிதும் நேசித்தார். தேச விடுதலைப் போராட்டங்களில் பங்கு கொண்டார். தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார். இவருடைய கடுமையான உழைப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். 16-6-1944 -ல் இவர் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்தார்.
சிறப்புகள்
[தொகு]1919-ல் இந்திய அரசாங்கம் இவரைப் பாராட்டி "Companion of the Indian Empire" என்ற பட்டத்தையும், பிறகு "சர்" என்ற பட்டத்தையும் கொடுத்துச் சிறப்பித்தது. இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து, 1989-ல் இருந்து அவர் பெயரில் "பி. சி. ராய் விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது. ஆச்சார்யா பிரபுல்ல சந்திரா கல்லூரி, ஆச்சார்யா சந்திர ராய் பல்தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவை வங்காள தேசத்தில் இன்றும் இவர் பெயரை நினைவுகூறுகின்றன. இவர் பெயரில் வங்க தேசத்தில் ஒரு சாலையும் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Prior to 1970, the இந்திய தேசிய அறிவியல் கழகம் was named the "National Institute of Sciences of India", and its fellows bore the post-nominal "FNI". The post-nominal became "FNA" in 1970 when the association adopted its present name.
'அறிவியல் ஒளி', ஆகஸ்ட்-2008 இதழ்.
உசாத்துணை
[தொகு]- TIFR [1]
- http://scientistsinformation.blogspot.com/2009/06/scientists.html
- http://www.caluniv.ac.in/About%20the%20university/Some%20of%20the%20Alumni1.htm பரணிடப்பட்டது 2011-02-06 at the வந்தவழி இயந்திரம்