உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதாபருத்ர தேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதாபருத்ர தேவன்
கஜபதி
ககாதிக்கு அருகிலுள்ள பலராம்பூர் கிராமத்தில் கஜபதி பிரதாபருத்ரதேவனின் ஆட்சியின் போது கட்டப்பட்ட சரபேசுவர கோவிலில் உள்ள சித்தரிப்பு.
3வது கஜபதி பேரரசர்
ஆட்சிக்காலம்அண். 1497 – அண். 1540 கி.பி
முன்னையவர்புருசோத்தம தேவன்
பின்னையவர்கலுவ தேவன்
துணைவர்பதமா
பத்மாலயா
இளா
மகிலா
கௌரி தேவி
மரபுசூரிய குலம்
தந்தைபுருசோத்தம தேவன்
மதம்இந்து சமயம்

பிரதாபருத்ர தேவன் (Prataparudra Deva) என்பவர் கி.பி 1497 முதல் 1540 வரை கஜபதி பேரரசை ஆட்சி செய்த மூன்றாவது பேரரசர் ஆவார். கஜபதி பேரரசை நிறுவிய கபிலேந்திர தேவன் என்பவரின் பேரனான இவர் ஓர் ஆட்சியாளர் என்பதைத் தவிர, தீவிர வைணவராகவும் இருந்தார். மேலும் தனது ஆட்சியின் போது ஒடிசாவிற்கு வந்த துறவியான சைதன்யரை ஆதரித்தார். எதிரி நாடுகளான விஜயநகரப் பேரரசு, வங்காளத்தின் உசேன் சாகி வம்சம் மற்றும் கோல்கொண்டாவின் குதுப் சாகி வம்சத்தின் மூன்று முக்கியப் படையெடுப்புகளிலிருந்து தனது தேசத்தை காப்பாற்றவே தனது பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார்.[1] இவரது காலத்திற்கு முன்னர் 600 ஆண்டுகள் தொடர்ந்த ஒடிசாவின் இராணுவ மேலாதிக்கம் இவரது ஆட்சியில் நாட்டின் பெரும்பகுதி அண்டை எதிரி நாடுகளிடம் இழந்தது.

கஜபதி பிரதாபருத்ர தேவன்

வங்காளத்தின் உசேன் ஷாஹி வம்சத்துடனான முதல் போர் (1497-1500 கி.பி)

[தொகு]

தனது தந்தை புருசோத்தம தேவன் இறந்தவுடன், பிரதாபருத்ர தேவன் ஆட்சிக்கு வந்த பிரதாருத்ர தேவன் கௌடா அல்லது வங்காள சுல்தான் அலாவுதீன் உசேன் ஷாவின் தொடர்ச்சியான படையெடுப்புகளிடமிருந்து தனது பகுதிகளைத் தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளால் உடனடியாக ஈடுபட்டார். பக்தி பாகவத மகா காவியம் இத்தாக்குதலை எதிர்கொண்டபோது இவருக்கு வயது 17 தான் என்றும், இறுதியில் எதிரிகளை தனது வடக்கு எல்லையிலிருந்து விரட்டியடித்தார் என்றும் கூறுகிறது. சிறு சிறு மோதல்கள் தொடர்ந்தாலும் இவர் வடக்கு எல்லைகளை தனது இராணுவத்தால் வலுப்படுத்தினார்.[2]

விஜயநகரத்தின் மீதான போர் (1500-1508 கி.பி)

[தொகு]

வங்காளப் படையெடுப்பிற்குப் பிறகு, பிரதாபருத்ர தேவன் விஜயநகரப் பேரரசின் வசம் இருந்த தனது பிரதேசங்களை மீட்டெடுக்கவும் கைப்பற்றவும் தெற்கே அணிவகுத்துச் சென்றார். சிறிது காலத்திற்கு இவர் விஜயநகரம் அல்லது வித்யாநகர் கோட்டையை கைப்பற்ற முடிந்தது. பிரதாபருத்ர தேவனின் அனந்தவர்ம செப்புத் தகடுகள் கி.பி 1500 நவம்பர் 4 இல் கிருஷ்ணா ஆற்றங்கரையை அடைந்ததாகக் கூறுகிறது.[3]

விஜயநகரத்துடன் முதல் மோதல்

[தொகு]

விஜயநகரப் பேரரசின் சாளுவ மன்னர் இரண்டாம் நரசிம்ம ராயன் விஜயநகரத்தை ஆண்டபோது, பிரதாபருத்ர தேவன் தனது தெற்குப் பயணத்திற்குப் புறப்பட்டார். நரசிம்ம ராயனின் செல்வாக்கு மிக்க தளபதி துளுவ நரச நாயக்கனை போரில் எதிர்கொண்ட பிரதாபருத்ர தேவன் கொண்டவீடு மற்றும் உதயகிரி கோட்டைகளை மீட்டெத்தார். பிரதாபருத்ர தேவனின் அனந்தவர்ம மாணிக்கியக் கல்வெட்டு, இந்தப் போர் கிருஷ்ணா ஆற்றங்கரையில் நடந்து முடிந்தது என்று அறிவிக்கிறது. உதயகிரி பகுதிக்கு அப்பால் விஜயநகரப் பகுதிக்குள் ஒடிசா ராணுவத்தால் முன்னேற முடியவில்லை. ஆனால் ஒடியா இராணுவம் தெற்கில் இராமர் பாலம் அல்லது ஆதாமின் பாலம் வரை அணிவகுத்துச் சென்றது.

விஜயநகரத்துடன் இரண்டாவது மோதல்

[தொகு]

வீரநரசிம்ம ராயனிடமிருந்து விஜயநகரத்தின் சில பகுதிகளை பெறுவதற்காக தென்பெண்ணை ஆற்றங்கரையில் முகாமிட்டிருந்தார் என பிரதாபருத்ர தேவன் மற்றும் மதல பாஞ்சியின் ராஜவரோலு தகடுகளின் மூலம் அறியப்படுகிறது. இருப்பினும், கி.பி.1507-1508 ஆம் ஆண்டில் தனது சொந்த பிராந்தியத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டதால், திடீரென ஒடிசாவுக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

விஜயநகரத்துடனான ஏழாண்டுப் போர் மற்றும் பேரரசின் வீழ்ச்சி (1512-1519 கி.பி)

[தொகு]

கிருஷ்ணதேவராயன் 1509 ஆம் ஆண்டு விஜயநகரத்தின் பேரரசர் ஆனார். கஜபதி படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த உதயகிரி, கொண்டபாலி மற்றும் கொண்டவிடு போன்ற பகுதிகளை மீண்டும் கைப்பற்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தனது பிரதமர் திம்மருசுவிடம் அறிவுறுத்தினார். இந்த நேரத்தில், பிரதாபருத்ர தேவன் தக்காணத்தில் இல்லாததும், வங்காள முஸ்லிம் படைகளுடன் மோதல்களில் ஈடுபட்டிருந்ததும் அவருக்கு சாதகமாக இருந்தது. கஜபதி மன்னரின் கூட்டாளிகளாக இருந்த கோல்கொண்டா பகுதியின் வெலமா தலைவர்களை கிருஷ்ணதேவராயன் முதலில் அடக்கினார். பின்னர் உதயகிரி கோட்டைக்கு அணிவகுத்துச் சென்றார்.

உதயகிரி கோட்டையைக் கைப்பற்றியது மற்றும் கஜபதி படைகளின் எதிர்ப்பு (கி.பி. 1512-1514)

[தொகு]
Surviving upper part of the Bala Gopala Idol carried away by invading Vijayanagar forces as a symbol of victory after capturing the Udayagiri fort
உதயகிரி கோட்டையைக் கைப்பற்றிய பிறகு வெற்றியின் அடையாளமாக விஜயநகரப் படைகளால் எடுத்துச் செல்லப்பட்ட பால கோபால சிலையின் மேல் பகுதி

உதயகிரி கோட்டைக்கு கவலாக 10,000 காலாட்படை, 400 குதிரைப்படை மற்றும் 8000 காலாட்படையினர் நிறுத்தப்பட்டனர். காவல் படைக்கு கஜபதியின் தந்தைவழி மாமா திருமலை ரௌதராயன் தலைமை தாங்கினார். 34,000 காலாட்படை மற்றும் 800 போர் யானைகள் கொண்ட விஜயநகரப் படைகளின் ஒரு வலுவான இராணுவம் கி.பி. 1512 ஆம் ஆண்டில் குட்டி மற்றும் கோண்டிகோட்டா வழியாகச் சென்று கோட்டையைக் கைப்பற்றியது.[4] கோட்டை வலுவாக இருந்ததாலும் வீரர்களின் துணிச்சலான எதிப்பாலும் சண்டை 18 மாதங்கள் தொடர்ந்து நடந்தது. விஜயநகரப் பேரரசருடன் வந்த போர்த்துகீசிய-யூதப் பயணி பெர்னாவோ நுனிஸ் , இரு தரப்பிலிருந்தும் படைகளுக்கிடையே கடுமையான சண்டை நடந்ததாகவும், ஒடியா படைகள் தங்கள் கடைசி மூச்சு வரை தங்கள் நிலைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கான வலுவான உறுதியுடன் போராடியதாகவும் குறிப்பிடுகிறார். கோட்டைக்குள் நுழைய விஜயநகரப் படைகள் பாறைகளை வெட்டி, சுற்றியுள்ள மலைகள் வழியாக பாதைகளை அமைக்க வேண்டியிருந்தது. கஜபதி படைகளுக்கு எந்த உதவியும் கிடைக்காததால், அவர்கள் இறுதியாக 1514 ஆம் ஆண்டு சரணடைய வேண்டியதாயிற்று. கோட்டையில் இருந்து வெற்றிக் கோப்பையாக கிருஷ்ணரின் பால கோபால சிலை விஜயநகரப் படைகளால் எடுத்துச் செல்லப்பட்டது. [5]

உசைன் ஷாஹி வம்சத்துடன் இரண்டாம் போர் (1509 கி.பி)

[தொகு]

பிரதாபருத்ர தேவன் தென்னிந்தியப் போரில் இருந்தபோது வங்காள சுல்தான் அலாவுதீன் உசைன் ஷா தனது தளபதி இஸ்மாயில் காசியை ஒரு படையுடன் ஒடிசாவைத் தாக்க அனுப்பினார். பிரதாபருத்ர தேவனின் உபாடா மானியம் மற்றும் வெலிச்சேர்லா தகடுகள் வங்காள சுல்தானின் ஆக்கிரமிப்பு நோக்கங்களை தொடர்ச்சியாகக் காட்டுகின்றன.

ஜான்பூர் சுல்தான் உசைன் ஷா பிரதாபருத்ர தேவனிடம் சரணடைந்ததை காட்டும் ஓர் சித்தரிப்பு. தபாலேசுவர் கோயில், கட்டக்.
A sketch of an old painting showing Gajapati Prataprudra Deva bowing before Chaitanya that is in possession of the Zamindar of Kunjaghata
கஜபதி பிரதாப்ருத்ர தேவன் சைதன்யரிடம் வணங்கி நிற்கும் ஓவியம்

குதுப் ஷாஹி கோல்கொண்டா சுல்தானகத்துடன் மோதல் (1531 கி.பி)

[தொகு]

கோல்கொண்டாவின் துர்கோ-பாரசீக சுல்தான் குலி குதுப் ஷா ஒடிசாவின் தெற்குப் பகுதிகளை ஆக்கிரமித்து, 20 மார்ச் 1531 அன்று கொண்டப்பள்ளியின் பல கோட்டைகளைக் கைப்பற்றினார். பிரதாபருத்ர தேவன், 3,00,000 காலாட்படை, 30,000 குதிரைப்படை மற்றும் 700 போர் யானைகளுடன் படையெடுப்புப் படைகளை எதிர்கொள்ளப் புறப்பட்டார். மேலும் முஸ்லிம் படைகளுடன் கடுமையான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்றார். ஆனால் தெற்கில் உள்ள தனது பிரதேசத்தின் பல பகுதிகளையும் இழந்தார். [6] குலியை வென்றதன் நினைவாக கிருஷ்ணா ஆற்றங்கரையில் மங்களகிரி என்ற கோயிலைக் கட்டினார். கிபி 1540 இல் பிரதாபருத்ர தேவனின் மரணத்திற்குப் பிறகு, கஜபதி பேரரசின் மத்திய நிர்வாகம் வீழ்ச்சியடைந்து. பிரதாபருத்திரனின் இரண்டு வாரிசுகள் கோவிந்த வித்யாதர் என்பவனால் கொல்லப்பட்டனர். இதைப் பயன்படுத்தி, சுல்தான் குலி குதுப் ஷா ராஜமகேந்திரியைக் கைப்பற்றினார்.

ஆன்மீக வாழ்க்கை

[தொகு]
A modern-day statue of Sri Chaitanya in Puri town
புரி நகரிலுள்ள சைதன்யரின் சிலை

சைதன்யரின் வாழ்க்கையில் வங்காள சுல்தான் உசைன் ஷா ஒரு பங்கைக் கொண்டிருந்தார் என்ற உண்மையின் அடிப்படையில் வரலாற்றாசிரியர்கள் ஒடிசாவின் இராணுவ அந்தஸ்து இழந்ததற்கு கஜபதி பிரதாபருத்ர தேவன் சைதன்யரிடம் கொண்ட அதிக ஈடுபாடே காரணமாக அமைந்தது எனக் கூறுகின்றன்ர்.[7] சைதன்யரின் இரண்டு முக்கியச் சீடர்களான ரூபா கோஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமி ஆகியோர் சைதன்யருடன் சேர்வதற்கு முன்பு உசைன் ஷாவின் நிர்வாகத்தில் இருந்தனர். இருப்பினும், பிரதாபருத்ரன் சைதன்யரின் வருகைக்கு முன்னர் வைணவராக இருந்தார். மேலும், ஒடிசாவின் கஜபதிகளின் அரச மரபுகளின்படி புரி ஜெகன்நாதர் கோயிலின் தலைமை ஊழியராகவும் இருந்தார். [8] கஜபதியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விஜயநகரத்தைச் சேர்ந்த உளவாளியின் விவரிப்புகள் அவரது ஆன்மீக வாழ்க்கை முறைகளைப் பற்றிய சரியான பார்வையை அளிக்கிறது. கணக்கின்படி, கஜபதி சூரிய உதயத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே எழுந்திருப்பார் என்றும், வேறு யாரையும் பார்க்கும் முன் இரண்டு பிராமணர்களுக்கு மரியாதை செலுத்துவார். பின்னர் அவர் தனது குதிரையில் பதினாறு பிராமணர்களுடன் இருபது முதல் முப்பது மைல்கள் வரை சவாரி செய்து திரும்புவார். குளித்த பிறகு, அவர் ஜெகந்நாதரை வணங்கி வழிபடுவார். அதன் பிறகு அவர் இராமாயண பாராயணத்தைத் தொடர்ந்து உணவு உட்கொள்வார். இதற்குப் பிறகு, அவர் தனது அன்றாட வேலைகளைச் செய்ய உத்தியோகபூர்வ ஆடைகளை அணிந்து கொண்டு வருவார். [9]

கட்டுமானங்கள்

[தொகு]

பிரதாபருத்ர தேவன், போர்கள் நிறைந்த வாழ்க்கையின் நெருக்கடியான நிலையிலும் பல கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். [10]

 • மதல பாஞ்சியின் படி இவர் புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலின் பார்வையாளர் மண்டபத்தை கட்டினார்.
 • தேங்கனல் மாவட்டத்தில் உள்ள கபிலாச மலையில் உள்ள சந்திரசேகரர் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிராஜா தேவியின் கோயில்களை புதுப்பித்தார்.
 • கட்டக் மாவட்டத்தில் உள்ள மஞ்சேசுவரில் தவலேசுவரர் கோயில் கட்டப்பட்டது.
 • ககாடி அருகே உள்ள பலராம்பூர் கிராமத்தில் சரபேசுவரர் கோயில் கட்டப்பட்டது.
 • ஜாஜ்பூர் மாவட்டத்தில் காசி மிஸ்ரா என்றழைக்கப்படும் இவரது ராஜகுரு அல்லது அரச தலைமைப் பூசாரியால் கட்டப்பட்ட வராகர் கோயில்.
 • புரி ஜெகன்நாதர் கோயிலுக்கு அருகிலுள்ள ஜெகநாத் பல்லவ் மடம் அல்லது மடாலயம் ராமானந்த ராய் என்பவரால் நிறுவப்பட்டது
 • கட்டக்கின் பிரிபட்டி அருகே உள்ள பரமகம்ச தேவரின் கோயிலை புதுப்பித்துள்ளார்.

இலக்கியம்

[தொகு]

இவரது உண்டவால் கல்வெட்டில் சிறந்த கல்வி கற்றவர் என்றும் 64 கலைகளில் தேர்ச்சி பெற்றவர் என்றும் விவரிக்கப்படுகிறார். இவர் வித்யாநிதி (கற்றலில் சாதித்தவர்) என்ற பட்டத்தை வைத்திருந்ததாக இவரது வெளிச்சேர்ல கல்வெட்டு கூறுகின்றன. [11]

மார்க்கண்டேயர், இராமகிருஷ்ண பட்டா, பாலபத்ர மிஸ்ரா போன்ற சமசுகிருத கவிஞர்கள் இவரது காலத்தில் வாழ்ந்தனர். [12]

மற்ற ஒடியா கவிஞர்களான சைதன்ய தாசர், அர்ஜுன தாசர், கன்ஹாய் குந்தியா, கோபால குரு, மாதவி தேவி மற்றும் மாதவ பட்டநாயகர் போன்றவர்களும் இவரது ஆட்சியின் போது செழித்து வளர்ந்தனர். அந்த காலத்தில் ஒடிய மொழியின் இலக்கிய சாதனைகளுக்கு புதிய பரிமாணங்களை அளித்தனர். ஒடியா மற்றும் தெலுங்கு தேவதாசிகள் பாடும்போது ஜெயதேவரின் கீத கோவிந்தத்தை மட்டும் பாட வேண்டும் என்று பிரதாபருத்ர தேவன் கட்டாயமாக்கினார். நான்கு வைணவப் பாடகர்கள் கீத கோவிந்தப் பாடல்களைப் பாடும் சேவையை நிகழ்த்த பயிற்சி பெற்றனர். இவரது ஆட்சியில்தான் கோட்டிபுவா நடன மரபு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆளுமை மற்றும் வரலாற்று விளைவுகள்

[தொகு]

தொடர் இராணுவ மோதல் காரணமாக பிரதாபருத்ர தேவனின் ஆட்சியின்போது, இடைக்கால ஒடிசாவின் இராணுவ நிலை வீழ்ச்சியடைந்தது . இறுதியில் கிழக்கு இந்தியாவில் கடலோர மற்றும் மத்திய ஒடிசா, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு வங்காளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சிறிய நிலப்பரப்பாக மட்டுமே குறைக்கப்பட்டது. இளவரசர்கள், கிளர்ச்சியாளர்கள் ஒடிசாவின் உள்நாட்டுப் பகுதிகளை ஆக்கிரமித்து கஜபதியின் மைய அதிகாரத்தை சீர்குலைத்தனர். [13] ஒரு பேரரசராக, பிரதாபருத்ர தேவன் தனது முழு இராணுவ பலத்தையும் தனது பேரரசின் எல்லைகளைக் காக்க பயன்படுத்தினார். ஆனால் உள்நாட்டு துரோக நிகழ்வுகள், வங்காள முஸ்லிம்களின் அச்சுறுத்தல் மற்றும் தனிப்பட்ட ஆன்மீக வாழ்க்கையின் சமநிலையற்ற சூழ்நிலை போன்றவை இவரது எதிரிகளிடம் தெற்கு பிரதேசங்களை இழக்க வழிவகுத்தது. பிரதாபருத்ர தேவனுக்கு 32 மகன்கள் மற்றும் பல மகள்கள் இருந்தார்கள். இவரது பல மனைவில்களில் பத்மா, பத்மாலயா, இளா மற்றும் மகிலா ஆகியோர் மகாராணிகள் அல்லது முக்கிய ராணிகள் என்று அறியப்படுகிறார்கள். இவரது அரசிகளில் ஒருவரான கௌரி தேவி, பஞ்சசக குலத்தைச் சேர்ந்த ஜெகன்னத தாசரின் சீடராவார். இவரது மரணத்திற்குப் பிறகு இவரது வாரிசுகள் துரோகியான கோவிந்த வித்யாதரன் என்பவனால் கொல்லப்பட்டனர். இதன்பிறகு சோமவம்சி வம்சம் மற்றும் கீழைக் கங்கர்களின் காலத்திலிருந்து தொடர்ந்த ஒடிசாவின் இராணுவ மேலாதிக்கம் இவரது மரணத்துடன் முடிவடைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
 1. Prataprudradeva, the Last Great Suryavamsi King of Odisha. New Delhi: Northern Book Centre. 2007. pp. 12–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8172111953.
 2. History of Orissa. Cuttack, Odisha state: Kalyani Publishers. 2004. pp. 102–114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8127213675.
 3. "South Indian Inscriptions". பார்க்கப்பட்ட நாள் 7 September 2017.
 4. History Of Orissa 1930 Vol.1, From the Earliest Times to the British Period.
 5. History Of Mediaeval India by Ishwari Prashad.
 6. Nandapur A Forsaken Kingdom Part-I. Cuttack: The Utkal Sahitya Press. 1939. pp. 20, 21, 22.
 7. "Maharaja Prataparudra: Humble Servant in Kingly Dress".
 8. "Lord Chaitanya Mahaprabhu and His Mercy" (PDF).
 9. "Mahaprabhu and King Prataparudra".
 10. "HISTORY OF ODISHA (FROM 1435 TO 1803 A.D.)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
 11. "Puri, The Home of Lord Jagannatha" (PDF). pp. 194–195. பார்க்கப்பட்ட நாள் 7 September 2017.
 12. "The Panchasakha Movement" (PDF). பார்க்கப்பட்ட நாள் 7 September 2017.
 13. A HISTORY OF INDIA by Athar Azeem Delhi University.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதாபருத்ர_தேவன்&oldid=3834493" இலிருந்து மீள்விக்கப்பட்டது