திம்மருசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாளுவ திம்மருசு
మహామంత్రి తిమ్మరుసు
விஜயநகரப் பேரரசின் தலைமை அமைச்சர்
"மகாமந்திரி திம்மருசு"
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 December 1461 (1461-12-31)
மச்சிலிப்பட்டணம், விஜயநகரப் பேரரசு
இறப்பு1534 (1535) (அகவை 72)
பெனுகொண்டா, விஜயநகரப் பேரரசு
துணைவர்கமலா (சிறீ கிருஷ்ணதேவராயா திரைப்படத்தில் உள்ளவாறு)

சாளுவ திம்மருசு அல்லது சாளுவ நாயக்கா அல்லது வெறுமனே திம்மராசு (Timmarasu) என்பவர் கிருஷ்ண தேவராயரின் தலைமை அமைச்சரும் (மகாபிரதானி), படைத் தளபதியும் ஆவார். இவர் "அப்பாஜி" என்றும் அழைக்கப்படுகிறார். இவர் வீரநரசிம்ம ராயன், துளுவ நரச நாயக்கரின் கீழும் தலைமை அமைச்சராக பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் தெலுங்கு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். [1] திம்மருசு 1461 இல் மச்சிலிப்பட்டணத்தில் பிறந்தார். கிருஷ்ணதேவராயர் முடிசூட திம்மராசு ஒரு காரணமாக இருந்தார். போர்த்துகீசியப் பயணியான பெர்னாவோ நுனிசின் பதிவுகளின் படி, வீர நரசிம்மர் மரணப் படுக்கையில் இருந்தபோது, திம்மராசுவிடம் தன் ஒன்றுவிட்ட சகோதரன் கிருஷ்ணதேவராயரைக் குருடாக்கும்படி கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலாக திம்மராசு இறக்கும் நிலையில் உள்ள மன்னனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அரசரிடம் ஒரு சோடி ஆடுக் கண்களை வழங்கினார். இதன் மூலம் கிருஷ்ணதேவராயர் அடுத்த வாரிசாக வருவதை திம்மராசு உறுதி செய்தார். இருப்பினும், க. அ. நீலகண்ட சாத்திரி இரண்டு ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கு இடையே நட்பு உறவைத் தவிர வேறு எதையும் பரிந்துரைக்க முடியாது என்று நம்புகிறார். திம்மராசு தெனாலி ராமகிருஷ்ணனுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். மேலும் அவருக்கு ஆதரவாக இருந்தார்.

இராணுவ வாழ்க்கை[தொகு]

கஜபதிக்கு எதிரான போர்த்தொடர்கள்[தொகு]

சாளுவ திம்மராசா கிருஷ்ணதேவராயருக்காக கொண்டவீடு செல்லும் வழியில் அத்தங்கி, வினுகொண்டா, பெல்லம்கொண்டா, நாகார்ஜுனகொண்டா, தங்கேடா, கேதாவரம் ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றினார் . [2]

ராய்ச்சூர் சமர்[தொகு]

கிருஷ்ணதேவராயர் ஒரிசாவிற்கு எதிராக போர்த்தொடரில் ஈடுபட்டபோது, பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில் கான் ராய்ச்சூரைக் கைப்பற்றினார். கிருஷ்ணதேவராயர் ஒரு பெரிய படையுடன் அவருக்கு எதிரான படையெடுப்புக்கு தலைமை தாங்கினார். இந்த போர்த்தொடரில் அவருக்கு துணைத் தளபதியாக சாலுவ திம்மருசு இருந்தார். முஸ்லீம் முகாம் சூறையாடப்பட்டது. மேலும் எதிகளிடமிருந்த பெரிய அளவிலான செல்வம் கொள்ளைப் பொருட்களாக கிருஷ்ணதேவராயரின் கைகளில் வந்து சேர்ந்தது. ரெய்ச்சூர் மீண்டும் கைப்பற்றப்பட்டது. [3]

கோல்கொண்டாவுடன் போர்[தொகு]

கிருஷ்ணதேவராயரால் கொண்டவீடு ஆளுநராக சாலுவ திம்மருசு நியமிக்கப்பட்டார். குதுப் ஷாஹியின் படைகள் அப்பகுதிக்குள் நுழைந்தன. ஆனால் திம்மருசுவின் தலைமையிலான படைகள் குலி குத்பை தோற்கடித்து. குதுப் ஷாஹி படையின் தளபதியான மதர்-உல்-முல்க்கைக் பிடித்தார். போரில் பிடிபட்ட அவர்கள் அனைவரையும் கைதிகளாக விஜயநகரத்திற்கு அனுப்பிவைத்தார். எதிர்காலத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க தேவையான ஏற்பாடுகளையும் சலுவா செய்தார். [4]

பிற்கால வாழ்வு[தொகு]

1524 இல், கிருஷ்ணதேவராயர் சிறுவனான தன் மகனுக்கு இளவரசராசு பட்டம் கட்டினார். சில மாதங்களுக்குப் பிறகு இளவரசர் நோய்வாய்ப்பட்டு, நஞ்சிடப்பட்டு இறந்தார். இந்தக் குற்றத்திற்காக திம்மருசுவைக் குற்றம் சாட்டி, கிருஷ்ணதேவராயர் அமைச்சரையும் அவரது மகனையும் சிறையில் அடைத்து, குருடாக்கினார். தன் மகனைக் கொல்லும் சதி ஒடிசாவின் கஜபதிகளால் தீட்டப்பட்டது என்பதை அறிந்த மன்னர் பின்னர் திம்மருசுவை விடுவித்தார் என்று கூறப்படுகிறது. கஜபதிகள் தங்கள் இளவரசி ஜகன்மோகினியை கிருஷதேவராயர் திருமணம் செய்து கொள்ளவிருந்ததை விரும்பவில்லை. ஏனெனில் அவர் தூய்மையான குலத்தவர் அல்ல என்று அவர்கள் நம்பினர். கஜபதிகள் ஒடிசாவின் சூரிய குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் கஜபதிகளை கிருஷ்ணதேவராயர் வெற்றி கொண்டதன் காரணமாக இந்த திருமணத்திற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணதேவராயரின் பெற்றோர், தட்சிண கன்னடத்தின் தலைவரான நரச நாயக்கா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தலைவரின் மகளான நாகலாதேவி ஆகியோராவர். அவர்கள் விஜயநகர ( சங்கம மரபு ) அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். மன்னன் பின்னர் திம்மருசுவை சந்தேகித்தது சிறையில் இட்டதற்கு வருந்தினான். விடுதலையான பிறகு, திம்மருசு தனது வாழ்நாள் முழுவதையும் திருப்பதியில் கழித்தார். பின்னர் இவர் தன் முன்னாள் அரசரிடமிருந்து எந்த ஆதரவையும் பெற மறுத்துவிட்டார். இவர் வறுமையில் இறந்தார். இவரது சமாதி ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டாவில் உள்ளது.

பரவலர் பண்பாட்டில்[தொகு]

மகாமந்திரி திம்மருசு என்பது 1962 ஆம் ஆண்டு கமலாகர காமேஸ்வர ராவ் இயக்கிய இந்திய தெலுங்கு வரலாற்று நாடக திரைப்படமாகும். இப்படத்தில் முதன்மை பாத்திரமான தலைமை அமைச்சர் திம்மருசு பாத்திரத்தில் கும்மாடி நடித்தார். இந்தத் திரைப்படம் 1962 இல் தேசிய திரைப்பட விருதுகளில் வெள்ளிப் பதக்கம் வென்றது. 1970 இல் பி. ஆர். பந்துலு இயக்கி தயாரித்த கன்னடத் திரைப்படமான ஸ்ரீ கிருஷ்ணதேவராயா படத்தில் தலைமை அமைச்சர் மகாமந்திரி திம்மருசு பாத்திரத்தில் பி. ஆர். பநுதுலு ஏற்று நடித்தார். அப்படம் 1969-70 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றது.

குறிப்புகள்[தொகு]

  1. Burton Stein (1989). The New Cambridge History of India: Vijayanagara. Cambridge University Press. பக். 49. https://books.google.com/books?id=OpxeaYQbGDMC&pg=PA49. "Saluva Nayaka was one whom historians identify as Saluva Timmarasu, a Telugu (Niyogi) Brahman" 
  2. Andhra Pradesh District Gazetteers: Guntur
  3. |Book Tile=History of South India: Medieval period,|Book Title= History of India
  4. |Book Title=Krishnadeva Raya: The Great Poet-emperor of Vijayanagara |2nd Book Title=The History and Culture of the Indian People - Volume 6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திம்மருசு&oldid=3693567" இலிருந்து மீள்விக்கப்பட்டது