பசும் கொலோபசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசும் கொலோபசு[1]
Procolobus verus.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: முதனிகள்
குடும்பம்: வால் குரங்கு
(செர்க்கோபித்தேசிடீ)
பேரினம்: முதலுருகொலோபசு
புரோகொலோபசு

Rochebrune, 1877
இனம்: P. verus
இருசொற் பெயரீடு
Procolobus verus
(Van Beneden, 1838)
Olive Colobus area.png
பசுங்குரங்கு வாழும் நிலப்பரப்பு

பசும் கொலோபசு சற்று பாசிப் பச்சை நிறத்தில் உள்ள கொலோபசு வகைக் குரங்கு. வளர்ந்த குரங்கின் முதுகு சற்று பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதனை வான் பெனிடெனின் கொலோபசுக் குரங்கு (Van Beneden's Colobus) என்றும் புரோகொலோபசு வெரசு (Procolobus verus) என்றும் கூறுவர். இக் குரங்கின் அறிவிய இனப்பெயர் முதலுருகொலோபசு அல்லது புரோகொலோபசு (Procolobus). இது முதனிகள் வகுப்பில், வால் குரங்கு அல்லது செர்க்கோபித்தேசிடீ என்னும் குடும்பத்தில் உள்ள ஓர் இனம். இது ஐவரி கோசிட்டு, கானா, கினி, லைபீரியா, நைஞ்சீரியா, சியரா லியோன், டோகோஆகிய நாடுகளில் உள்ள காடுகளில் இயற்கையில் காணப்படுகின்றது. இதன் வாழிடம் வெப்பமண்டலக் காடுகள் அல்லது நடுவெப்பமண்டலக் காடுகள் ஆகும். காடுகளின் அழிவால் இவ்வினத்தின் தொடர்ச்சி அழியும் தருவாயில் உள்ளது.[2]புரோகொலோபசு என்னும் பேரினத்தில் இக் குரங்கு இனம் ஒன்றுதான் உள்ளது. இதற்கு இனமான மற்ற கொலோபசு இனங்கள் எல்லாம் பிலியோகொலோபசு (Piliocolobus) என்னும் பிறிதொரு பேரினத்தில் அடங்கும் குரங்கு இனங்களாகும்.

இது இலைதழைகளையே உண்டு வாழும் கொலோபசுக் குரங்கு. பூக்களையும், பழங்களையும் கொட்டைகளையும் உண்ணும். துளிர் இலைகளை விரும்பி உண்கின்றன. இதன் உடலமைப்பு இலைகளை செவ்வனே செரிக்கும் சிறப்புத் தன்மைகள் கொண்டது. கொலோபசுக் குரங்குகளிலேயே இதுதான் மிகச் சிறியது. இதன் முகத்தைச் சுற்றி வெள்ளையான முடி உண்டு; முகத்தில் முடி இருக்காது. பசும் கொலோபசுக்கள் சிறு குழுக்களாக வாழ்கின்றன. குழுவில் 5 முதல் 20 விலங்குகள் இருக்கும். ஒரு குழுவில் ஒன்றோ இரண்டோ தான் கடுவன்களாக (ஆண் குரங்குகளாக) இருக்கும். மற்றவை மந்திகளாக (பெண் குரங்குகளாக)வோ, இளம் குரங்குகளாகவோ இருக்கும். பிறந்த குட்டிகளை முதல் மாதத்தில் இக் குரங்குகள் தம் வாயில் கவ்வி எடுத்து செல்கின்றன[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 169, 172-173. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3. 
  2. 2.0 2.1 "Procolobus verus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  3. http://www.arkive.org/olive-colobus/procolobus-verus/biology.html[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசும்_கொலோபசு&oldid=3618633" இருந்து மீள்விக்கப்பட்டது