நாற்றுமேடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாற்று மேடையொன்றில் உள்ள தாவரங்கள்

நாற்றுமேடை (Plant nursery) என்பது தாவரங்களின் இளம்பருவமான நாற்று நிலையில் அதிக கவனிப்புத் வழங்கப்பட்டு, அவை தகுந்த வளர்ச்சியடைந்து வருவதற்காக உகந்த சூழ்நிலைகளை வழங்கி, அவற்றின் இலகுவான இனப்பெருக்கத்திற்காக பராமரிக்கும் இடமாகும். இந்த நாற்று மேடையில் உருவாக்கப்படும் நாற்றுக்களிலிருந்து பின்னர் வளர்ந்த தாவரங்களை உருவாக்குவதற்காக நாற்றுநடல் செய்யப்படும். நாற்றுக்களாக இருக்கும் நிலையிலேயே விற்பனைக்கு விடப்படவோ, அல்லது வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படவோ முடியும்[1]

இப்படியான நாற்றுமேடைகளில் வளர்க்கப்படும் நாற்றுக்கள் சிறிய அளவில் பொது மக்களுக்கு சில்லறையாக விற்கப்படும் நோக்கிலோ, அல்லது பெரிய அளவில் வேறு நாற்றுமேடைகளுக்கோ அல்லது வர்த்தக ரீதியான தோட்டங்களை வைத்திருப்பவர்களுக்கோ விற்கப்படக்கூடிய மொத்த விற்பனை நோக்கிலோ வளர்க்கப்படலாம். சில தனியார் நிறுவனங்களில், அல்லது தனியார் தோட்டங்களில் தமது நாற்றுத் தேவையை தாமே பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் இவ்வாறான நாற்றுமேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சில நாற்றுமேடைகள் பல்வேறுபட்ட தாவரங்களை இனப்பெருக்கத்துக்கு உட்படுத்தும் நோக்கிலும், வேறு சில பல தாவரங்களை வளர்த்தெடுக்கவும், இன்னும் சில நாற்றுமேடைகள் குறிப்பிட்ட ஒரு தாவரத்திற்காகவோ தயார் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நாற்றுமேடை தயாரிப்பு முறை[தொகு]

An ஆர்க்கிட் nursery
A tree nursery using gutters to decrease growing costs

பொதுவாக நவீன நாற்றுமேடைகள் கண்ணாடி அல்லது நெகிழிகளால் ஆன குகைபோன்ற அமைப்பையுடைய பசுமைக்குடில்களில் தயார் செய்யப்படுகின்றன. ஆனாலும் திறந்த வயல்/தோட்ட நிலங்களிலும் நாற்றுமேடைகள் தயாரிக்கப்படுவதுண்டு. நிலத்திலோ, வெவ்வேறு வகையான கொள்கலன்களிலோ நாற்றுக்கள் வளர்க்கப்படலாம். கொள்கலன்களைக் கொண்ட வயல்/தோட்ட நிலங்களிலோ, அல்லது கட்டடங்களிற்குள்ளாகவோ கூட நாற்றுமேடைகள் அமைக்கப்படுவதுண்டு.

சிறிய வீட்டுத் தோட்டம் அமைக்கத் தேவையான நாற்றுக்களைப் பெற வேண்டுமாயின், ஒரு சிறிய கொள்கலனிலேயே கூட நாற்றுமேடையை அமைத்துக் கொள்ளலாம். அதேவேளை, அழிக்கப்பட்ட காடுகளை மீண்டும் காடாக்கல் மூலம் திரும்பப் பெறவோ, அல்லது புதிய காடுகளை உருவாக்கவோ வேண்டுமாயின், பெரிய மரங்களுக்கான நாற்றுமேடை அமைப்பதற்கு பெரிய நிலப்பரப்பை உள்ளடக்கிய இடம் தேவைப்படும்.

நாற்றுமேடைகளில் இளம்தாவரங்களுக்கு மேலதிக கவனிப்பு கொடுக்கப்பட்டு, அவற்றிலிருந்து சிறப்பான, நலம் மிக்க தாவரங்கள் உருவாதல் உறுதிப்படுத்தப்படுகின்றது. பராமரிப்பில் சில தொழில்நுட்ப உதவியுடன் தானியங்கிகளாக அமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நீர் பாய்ச்சும் இயந்திரங்கள், குறிப்பிட்ட நேரத்தில தாமாகவே இயங்க ஆரம்பித்து, குறிப்பிட்ட நேரத்திற்கு நீர் பாய்ச்சுமாறு அமைக்கப்படுவதுண்டு.

நாற்றுமேடைகளில் கலவிமுறை இனப்பெருக்கத்தால் விளைந்த வித்துக்களை இட்டு முளைக்கவிட்டு நாற்றுக்கள் பெறப்படுவதுண்டு. கலவியற்ற இனப்பெருக்க முறைகள் மூலமும் நாற்று மேடைகள் பராமரிக்கப்படுவதுண்டு. தண்டு ஒட்டல் முறை (Grafting), அல்லது அரும்பொட்டல் முறை (Budding) போன்ற கலவியற்ற இனப்பெருக்கம் மூலம் பல விரும்பப்படும் இயல்புகள் கொண்ட தாவரங்கள் பெறப்படுகின்றன.

நாற்றுமேடை அமைக்கும் முறைகள் பல விதப்படும். இவை தாவர வகை, அவற்றின் இனப்பெருக்க முறை, தேவைப்படும் நாற்றுக்களின் அளவு, கிடைக்கும் இட வசதி, நீர் கிடைக்கும் அளவு போன்ற பல்வேறு காரணிகளில் தங்கியிருக்கும். நாற்றுக்கள் குறிப்பிட்ட அளவு வளர்ந்து, உறுதியானவையாக வந்ததும், அவை வயலிலோ, தோட்டத்திலோ, அவற்றிற்கான இடத்தில் மீள்நடுகை செய்யப்படும். அவ்வாறு மீள்நடுகைக்கான காலம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப, நாற்றுக்கள் உறுதியானவையாக வருவதற்கான போதியளவு காலம் வழங்கப்பட்டு நாற்றுமேடை தயார் செய்ய்யப்படும்.

நாற்றுமேடை வகைகள்[தொகு]

அதிகளவு நாற்றுக்கள் தேவைப்படும் வர்த்தக ரீதியான நாற்று உற்பத்தியின் போது அதிக மழைவீழ்ச்சி கிடைக்கும் இடங்களில் உயர் நாற்று மேடையும் குறைந்த மழை வீழ்ச்சி கிடைக்கும் இடங்களில் தாழ் நாற்று மேடையும் அமைக்கலாம்.

தொட்டிக்குள் தொட்டி[தொகு]

தொட்டிக்குள் தொட்டி என்பது தாவர நாற்றுக்களை வளர்க்கும் ஒரு முறையாகும். இம்முறையினை ஆங்கிலத்தில் POT IN POT என்று கூறுவர். இம்முறையில் விற்பனை செய்ய வேண்டி உருவாக்கும் தாவர நாற்றுக்களை சிறு தொட்டிகளிலும் , அச்சிறு தொட்டிகளை முன்னரே நிரந்தரமாக அமைக்க பட்ட பெரிய தொட்டிகளில் வைத்து வளர்ப்பர். இந்த பெரிய தொட்டிகள் வழக்கமாக பெரியநிலத்தில் நீண்ட வரிசையில் நிரந்தரமாக அமைத்திருப்பர் . பெரிய பானைகள் வழக்கமாக ஒரு மத்திய பாசன முறைமைக்கு இணைக்கப்பட்டு இருக்கும். சிறு தொட்டியில் வளர்க்கப்படும் நாற்றுக்கள், தேவையான அளவு வளர்ச்சி பெற்றபின் அவை அச்சிறு தொட்டியுடன் விற்பனைக்கு அனுப்பப்படும். பெரிய தொட்டிகள் அடுத்த சிறு தொட்டிகளுகாக காத்திருக்கும். பெரிய தொட்டிகள் நிரந்தரமாக இருக்கும். இந்த அமைப்பு விவசாயிகளுக்கு நடவு மற்றும் மீண்டும் நடவு செய்வதில் உள்ள செலவினங்களை குறைக்கிறது.

நாற்று மேடை தயாரிக்கும் முறை[தொகு]

இந்த நற்று மேடைப் பாத்திகளில் நாம் மண்ணை 25–30 cm ஆழத்திற்கு புரட்ட வேண்டும்.பின் பாத்தியின் மேல் சேதனப்பசளை மேல் மண் ஆகியவற்றை 1:1 எனும் வீதத்தில் கலந்து பாத்தியின் மேல் 5 cm உயரத்திற்கு இட வேண்டும்.

நாற்று மேடையில் வித்துகளை இடல்[தொகு]

தொற்று நீக்கப்பட்டு தயார்செய்யப்பட்ட நாற்று‌‌‌மேடைகளில் அகலவாக்கில் சால்கள் அமைக்கப்பட்டு அவற்றில் வித்துக்களை இட்டு ஊடகக் கலவையால் மூடவேண்டும்.வித்துக்களுக்கேற்ப நாட்டும ஆழம் தீர்மானிக்கவேண்டும்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nursery". The Free Dictionary. Farlex.inc. பார்க்கப்பட்ட நாள் சூலை 31, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்றுமேடை&oldid=3370277" இலிருந்து மீள்விக்கப்பட்டது