உள்ளடக்கத்துக்குச் செல்

நற்கருணை பேழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோவாவின் புனித ரபேல், மறைமாவட்ட முதன்மைப்பேராலயத்தின் நற்கருணை பேழை

நற்கருணை பேழை அல்லது நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருப்பேழை (ஆங்கில மொழி: Tabernacle) என்பது கிறித்தவத்தில் திருப்பலி முடிந்த பின்பு மீதமுள்ள நற்கருணையினை பாதுகாத்து வைக்கும் இடமாகும். இவ்வழக்கம் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் சில ஆங்கிலிக்கம் மற்றும் லூதரனிய சபைகள் சிலவற்றிலும் உள்ளது. இப்பேழையானது வழக்கமாக அசைக்க முடியாததாகவும், உறுதியானதாகவும், ஒளி ஊடுருவாத பொருளால் (பொதுவாக உலோகம், கல் அல்லது மரம்) செய்யப்பட்டதாகவும் இருக்கும். இறைநிந்தனை தவிர்க்கப்படும் வண்ணம் இது பூட்டிவைக்கப்பட்டிருக்கும்.

நோயுற்றோருக்கும் இறக்கும் ஆபதில் இருப்போருக்கும் நற்கருணையினை எடுத்து செல்ல ஒரு பேழையில் அதனை பாதுகாகும் வழக்கம் கிறுத்தவத்தின் துவக்க காலம் முதலே இருந்து வந்தது. குறிப்பாக மேற்கத்திய கிறித்தவத்தில் நற்கருணை பேழையே தியானம் மற்றும் இறைவேண்டலின் மையமாக இருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் பெரிய வியாழனன்று திருப்பலி தொடங்கும் முன் நற்கருணைப் பேழை வெறுமையாக்கப்படும். புனித சனியின் நள்ளிரவுத்திருப்பலியின் போதே அதில் மீண்டும் நற்கருணை வைக்கப்படும் என்பது குறிக்கத்தக்கது.

இயேசுவை தன்னுள் தாங்கியதால் தூய கன்னி மரியாவை நற்கருணை பேழை என உருவகமாக அழைக்கும் வழக்கம் கத்தோலிக்க திருச்சபை மற்றும் மரபுவழி சபைகளில் உண்டு.

பெயர் காரணம்

[தொகு]
கூடாரம் போன்ற அமைப்பில் உள்ள பிரான்சின் அல்சேசு நகரில் உள்ள புனித மார்டின் கோவிலின் நற்கருணை பேழை

தமிழில் பேழை என்று இது அழைக்கப்படாலும் இது பெரும்பான்மையான மொழிகளில் கூடாரம் என்னும் பொருள்படும் வகையிலேயே அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் TABERNACLE எனப்படுகிறது (இலத்தீன் மொழியிலிருந்து பிறந்த இச்சொல்லுக்கு கூடாரம் என்று பொருள்). பழங்காலத்தில் நற்கருணை பேழைகள் சிறிய கூடாரம் போன்றே வடிவமைக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டில் கடவுளின் கூடாரத்தை நினைவுறுத்துவதவும், புதிய ஏற்பாட்டில் 'வார்த்தை மனு உருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14) என்னும் விவிலிய வாக்கை நினைவுறுத்தவும் இவ்வழக்கம் எழுந்ததாக நம்பப்படுகின்றது. இதனாலேயே இன்றளவும் நற்கருணை பேழையினை துனியால் மூடிவைக்கும் வழக்கம் இருக்கின்றது.

கத்தோலிக்க சட்டங்கள் மற்றும் வழக்கங்கள்

[தொகு]
மரத்தாலான நற்கருணை பேழை

ஒரு கத்தோலிக்க ஆலயத்தின் மையமும் காரணமுமாக இருப்பது நற்கருணை பேழையாம். திருச்சபைச் சட்டதின்படி நற்கருணை பேழையினை வழக்கமாக ஓர் ஆலயம் அல்லது செபக்கூடத்தில் மட்டும் பாதுகாத்து வைக்கவேண்டும். நற்கருணை பாதுகாத்துவைக்கப்பட்டுள்ள பேழையினை தெளிவாகத் தெரிகின்ற, அழகுடன் அணிசெய்யப்பட்டுள்ள, இறைவேண்டல் செய்வதற்குப் பொருத்தமான ஒரு பகுதியில் வைக்கப்படவேண்டும். ஆலயம் அல்லது செபக்கூடத்தின் பொறுப்பைக் கொண்டவர் நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருப்பேழையின் திறவுகோல் மிகுந்த கவனமுடன் பாதுகாக்கப்படுவதைக் கவனித்துக்கொள்ளவேண்டும்.[1]

நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பேழைக்குமுன் கிறிஸ்துவின் உடனிருப்பைக் குறித்துக்காட்டவும் மகிமைப்படுத்தவும் ஒரு சிறப்பு விளக்கு எப்பொழுதும் எரியவேண்டும்.[2]

நற்கருணை, திருப்பேழைக்கு உள்ளே இருந்தால் அதனை கடந்து செல்லும் போது ஒரு முழங்கால் மண்டியிடுவதும் பேழைக்கு வெளியே இருந்தால் இரு முழங்கால்களும் மண்டி இடுவதும் பல நூற்றாண்டுகளாக திருச்சபையில் இருக்கும் ஒழுங்கு ஆகும்.

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. திருச்சபைச் சட்டம் 938
  2. திருச்சபைச் சட்டம் 940
"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்கருணை_பேழை&oldid=1526739" இலிருந்து மீள்விக்கப்பட்டது