தொல்மானிடவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதைபடிவ ஒமினிட் மண்டையோடுகள் ஐக்கிய அமெரிக்காவின் ஒக்லகோமா நகரில் உள்ள எலும்பியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொல்மானிடவியல் (Paleoanthropology) என்பது, தொல்லுயிரியல், உடற்சார் மானிடவியல் ஆகிய துறைகளின் சேர்க்கையும், அவற்றின் துணைத் துறையும் ஆகும். மனித குலத்தின் குறிப்பிட்ட இயல்புகளின் வளர்ச்சி அவற்றின் உருவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன் புதைபடிவங்கள், கற்கருவிகள், தொல்பொருட்கள், குடியேற்றச் சூழல் என்பவற்றை ஆய்வு செய்வதன் மூலம், ஒமினிடே குடும்பத்தின் உறவுமுறைத் தொடர்புகளை மீட்டுருவாக்கம் செய்வதும் இத்துறையின் கீழ் அடங்கும்.[1][2] தொழில்நுட்பங்களும், வழிமுறைகளும் வளர்ச்சியடைந்துவரும் நிலையில், தொல்மானிடவியல் ஆய்வுகளில் மரபியல் பெரும்பங்கு வகிக்கின்றது. குறிப்பாக, இனங்களின் படிமலர்ச்சி தொடர்பான உறவுமுறை வழிகளை ஆய்வு செய்வதில், மக்கள்தொகை மரபியல் ஆய்வும் ஒப்பீடும் முதன்மையான ஆய்வு முறைகளாக உள்ளன.

தொல்மானிடவியலின் வரலாறு[தொகு]

18ம் நூற்றாண்டு[தொகு]

1758 இல் கார்ல் இலின்னேயசு சாரநிலை மாந்தன் (ஓமோ சப்பியன்சு) என்பதைத் தனது சிஸ்டெமா நச்சுரே என்னும் நூலின் 10வது பதிப்பில் ஓமினிடே பேரினத்தின் ஒரு இனப்பிரிவுப் பெயராக அறிமுகப்படுத்தினார். ஆனாலும், அவ்வினத்தின் சிறப்பு இயல்புகள் குறித்த அறிவியல் விளக்கத்தை அவர் தரவில்லை.[3] உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு பேரளவில் மனிதக் குரங்குகள் மனிதனுக்கு நெருக்கமான உறவுடையவை எனக் கருதப்பட்டன.

19ம் நூற்றாண்டு[தொகு]

19ம் நூற்றாண்டின் இறுதியில் மனிதக் கூர்ப்பு தொடர்பான ஆய்வுகளுக்கு வழிவகுத்த முக்கிய கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தொல்மானிடவியல் சார்ந்த அறிவியல் தொடங்கியது. செருமனியில் நீன்டர்தால்களின் கண்டுபிடிப்பு, தாமசு அக்சுலியின் (Thomas Huxley) இயற்கையில் மனிதனின் இடம் குறித்த சான்றுகள் (Evidence as to Man's Place in Nature), சார்லசு டார்வினின் மனிதனின் மரபுவழி (The Descent of Man) ஆகியவை தொடக்க காலத்தின் முக்கியமான ஆய்வுகள்.

நியாந்திரதால் மனிதனின் கண்டுபிடிப்பு, குகை மனிதன் தொடர்பான சான்றுகள் ஆகியவற்றுடன் 19ம் நூற்றாண்டில் நவீன தொல்மானிடவியல் துறை தொடங்கியது. மனிதர்கள் பேரளவில் மனிதக் குரங்குகளுடன் ஒத்த தன்மையைக் கொண்டவர்களலென்பது மக்களுக்கு சில காலமாகவே தெரிந்திருந்தது. ஆனாலும், பொதுவான இனங்களின் உயிரியல் படிமலர்ச்சி தொடர்பான கருத்து 1859 இல் சார்ல்சு டார்வினின் உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species) என்னும் நூல் வெளியாகும்வரை முறையாக உணரப்படவில்லை.

தாமசு அக்சுலிக்கும், இரிச்சார்டு ஓவனுக்கும் இடையிலான விவாதங்கள் மனிதப் படிமலர்ச்சி என்னும் எண்ணக்கரு பற்றியதாகவே இருந்தன. அக்சுலி தனது 1863 ஆம் ஆண்டைய நூலில் மனிதனுக்கும், மனிதக் குரங்குகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் வேறுபாடுகள் என்பன குறித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விளக்கியிருந்தார். டார்வினின் மனிதனின் மரபுவழி என்னும் நூல் வெளியாகியபோது அது அவரது கோட்பாட்டின் பெரிதும் அறியப்பட்ட விளக்கமாக இருந்தது. அத்துடன் அதன் விளக்கம் அவரது கோட்பாட்டைப் பெரும் பூசலுக்கு உரியதாக ஆக்கியது. டார்வினின் சில ஆதரவாளர்கள் கூட (ஆல்பிரட் இரசல் வேலசு, சார்ல்சு இலையெல் போன்றோர்) இயற்கைத் தேர்வு முறையில் மனிதன் அவனது எல்லையில்லா மூளைத் திறனையும், ஒழுக்க உணர்வுகளையும் பெற்று வளர்ச்சியடைந்திருக்க முடியும் என்பதை ஏற்கவே அணிவகுத்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "paleoanthropology". Oxford University Press. ஜூன் 14, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 1, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "paleoanthropology". Dictionary com LLC. October 1, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Caroli Linnæi Systema naturæ". Biodiversity Heritage Library. September 27, 2015 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க[தொகு]

  • David R. Begun, A Companion to Paleoanthropology, Malden, Wiley-Blackwell, 2013.
  • Winfried Henke, Ian Tattersall (eds.), Handbook of Paleoanthropology, Dordrecht, Springer, 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்மானிடவியல்&oldid=3528156" இருந்து மீள்விக்கப்பட்டது