உள்ளடக்கத்துக்குச் செல்

தேரோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேர்த்திருவிழா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேரோட்டம்
பூரிஆதிஜகந்நாதர் ஆலய திருத்தேர்

தேரோட்டம் என்பது பல மதங்களிலும் பல தெய்வங்களின் சிலையையோ சின்னங்களையோ இதற்காக உருவாக்கப்பட்ட தேரில் வைத்துப் பலர் சேர்ந்து ஊர்வலமாக இழுத்து வரும் ஒரு விழாவாகும். இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய இடங்களிலும் இந்துக் கோயில்களில் இடம்பெறும் ஆண்டுத் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக இது அமைகின்றது.[1] இச்சொல் முக்கியமாக புரி தேரோட்ட நிகழ்வைக் குறிப்பதாகவும் அமைகிறது.[2][3][4]

பன்னெடுங்காலமாக தேரோட்டங்கள் இந்தியாவில் ஜகந்நாதர், இராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட வைணவ வழிமுறைகளிலும்,[5] சைவ வழிமுறைகளிலும்,[6] நேபாளத்தில் கடவுளர்களுக்கும் மகான்களுக்குமானதாகவும்,[7] சமண வழிமுறைகளில் தீர்த்தங்கரர்களுக்கும்,[8] கிழக்கு இந்தியாவில் பழங்குடி சமயங்களிலும் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன.[9] இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவை இந்தியாவின் புரி தேரோட்டம், வங்கதேசத்தின் தம்ராய் இரத யாத்திரை, மற்றும் மகேஷ் இரத யாத்திரை. இந்தியாவுக்கு வெளியே சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஜகந்நாதர், கிருஷ்ணர், சிவன், மாரியம்மன் ஆகிய தேரோட்டங்கள் கொண்டாடப்படுகின்றன.[10]

கோயில்களைப் பொறுத்துப் 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை பல நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய திருவிழாக்களில் இறுதியான தீர்த்தத் திருவிழாவுக்கு முதல் நாள் தேரோட்டத் திருவிழா இடம்பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து தேர்கள் இடம்பெறுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்கள் இடம்பெறும் போது கோயிலின் தலைமைக் கடவுளுக்குப் பெரிய தேரும், பிற கடவுளருக்கு முக்கியத்துவத்தில் அடிப்படையில் சிறிய தேர்களும் இருக்கும்.

தேரோட்டம் என்பது சமயத் தோன்றலாக இருந்தாலும் அவை சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்டவையாகும் என்று நட் ஜேக்கப்சன் கூறுகிறார்.[11]

வரலாற்றுக் குறிப்புகள்

[தொகு]
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்

மிகப் பழைய காலத்தில் இருந்தே அரசர்கள் குதிரை, யானை, தேர் முதலியவற்றில் ஏறி நகர வீதிகளில் உலாவருதல் வழமையாக இருந்துள்ளது. இதைப் பின்பற்றியே கடவுள்களையும் வாகனங்களில் ஏற்றி வீதியுலா வரச் செய்யும் வழக்கமும் ஏற்பட்டது எனலாம். சங்க இலக்கியங்களிலும், சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களிலும் தேர்கள் குறித்த செய்திகள் உள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் தேர்கள் புழக்கத்தில் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. சிலப்பதிகாரம் புத்த சமயத்தவரின் தேர்த் திருவிழா பற்றிக் குறிப்பிடுகின்றது. அக்காலத்துத் தேர்கள் எதுவும் இன்றுவரை நிலைத்து இருக்கவில்லை. இன்றுள்ள மிகப் பழைய தேர்கள் விஜயநகரக் காலத்தைச் சேர்ந்தவை.

தத்துவம்

[தொகு]

கொடியேற்றம் முதல் தீர்த்தத் திருவிழா வரை கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாக்களின் தத்துவங்கள் குறித்துச் சைவ நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இத் திருவிழாக்கள், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இறைவனின் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன என்பது இந்நூல்களின் கருத்து. இதன்படி தேர்த்திருவிழா அழித்தல் தொழிலைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.[12] தேரின் பல்வேறு உறுப்புக்களும் அண்டத்திலும், இவ்வுலகத்திலும் உள்ள பல்வேறு அம்சங்களைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகிறது. இத்தகைய தேரில் எறிச் சென்றே தேவர்களைக் காப்பதற்காகச் சிவன் அசுரர்களின் மூன்று நகரங்களை அழித்தான் என்னும் தொன்மக் கதையும் இங்கு குறிப்பிடத்தக்கது.[13]

தேர் அலங்காரம்

[தொகு]
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசாமி கோயிலில் உள்ள தேர் முட்டி அல்லது தேர் நிலை

தேரோட்டம் நடக்காத காலங்களில் தேரை நிறுத்தி வைத்திருக்கும் இடத்தைத் தேர் நிலை அல்லது தேர் முட்டி (இலங்கை வழக்கு) என்று குறிப்பிடுவர். சில கோயில்களில் தேர் நிலைகள் நிரந்தரமான கட்டிடங்களாக இருக்க, வேறு சில கோயில் தேர் நிலைகள் தற்காலிகமானவையாக இருக்கும். பெரிய தகரக் கூரைகள் கொண்டு தேர் வெயிலிலும் மழையிலும் பாதிக்கப்படாமல் இருக்க வழி செய்வர். அருகில் உள்ள படம் யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசாமி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரமான தேர் முட்டியைக் காட்டுகின்றது. இதில் அலங்காரங்களுடன் கூடிய தாங்குதள அமைப்புக்களும், வேலைப்பாடுகளுடன் கூடிய கூரை அமைப்பும், திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்களும் காணப்படுகின்றன. இத் தேர் நிலைகள், தேர் பாதுகாப்பாக இருக்க உதவுகின்றன.

சில தேர்கள் உச்சி முதல் சில்லுகள் வரை மரத்தினால் செய்யப்பட்டு நிரந்தரமான அலங்காரங்களுடன் இருப்பது உண்டு. இவை "சித்திரத்தேர்" என அழைக்கப்படுகின்றன. வேறு சில தேர்கள் நிலையில் இருக்கும் போது அலங்காரங்கள் இல்லாமல் எளிய நிலையில் இருக்கும். தேரோட்டம் துவங்கும் மாதத்தில் தேரைத் தூய்மைப்படுத்தி, செப்பனிட்டு வைப்பர். கோவிலில் தேரோட்டத்திற்கு கொடி ஏறிய பின்னர், தினமும் அலங்காரங்கள் செய்யப்படும். வண்ண வண்ண மலர்த் தோரணங்கள், உதிரிப் பூக்கள், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட திரைச்சீலைகள், குஞ்சங்கள் கொண்டு தேர் அலங்காரம் செய்யப்படும். சுவாமியும் தேரில் எழுந்தருளுவார். வாழை மரங்கள், அழகிய வண்ணக்கொடிகள், பல்வேறு சிற்பங்கள் என்பன கொண்டு தேர் அலங்காரம் செய்யப்படும். பீடத்துக்குக் கீழேயுள்ள பகுதி மட்டும் நிரந்தரமாக அமைக்கப்பட்ட தேர்களும் உள்ளன. மேற்பகுதி தேர்த் திருவிழாவுக்கு முன்னர் கட்டி அலங்காரம் செய்யப்படும். இவற்றைக் "கட்டுத்தேர்" என்பர்.

வீதியுலா

[தொகு]
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசாமி கோயில் தேர்த் திருவிழா. தேர் முட்டியுள்ளிருந்து தேர் வெளியே வரும் காட்சி

பெரிய கயிறுகள் தேரில் இணைக்கப்படும், அவற்றை "வடம்" என்று கூறுவர். இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை "வடம் பிடித்தல்" என்பர். கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும்.தேர் செல்லும் வழி எங்கும் மக்கள் தத்தம் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு இருப்பார்கள். தேரோட்டத்தன்று இறைவன் எழுந்தருளிய எழில்மிகு தேரை வடம் பிடித்து ஊர்மக்கள் யாவரும், அந்த ரதவீதிகளில் தேரை இழுத்து வருவர்.இறைவனின் திருநாமத்தைச் சொல்லி தேர் இழுப்பவர்களுக்கு நீர்மோர், பானகம், தண்ணீர் என வழங்க பந்தல்கள் அமைக்கப் பெற்று விளங்கும்.மேல ரத வீதி, கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி என கோவிலின் நாற்புறமும் உள்ள ரத வீதிகளைக் கடந்து திரும்பவும் தேர் தன் நிலை வந்து அடையும் வரை தேரோட்டம் நடைபெறும்.

இந்துக் கோயில்களில் தேர் வீதியுலா வரும்போது, அதற்கு முன்னே நாதசுவரம், தவில் ஆகிய இசைக் கருவிகளை வாசித்துக்கொண்டு கலைஞர்கள் வருவர். கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம் போன்ற ஆட்டங்களும் நிகழ்வது உண்டு. தேருக்குப் பின்னே அடியார்கள் திருமுறைகளை இசையுடன் பாடி வருவது வழக்கம்.

தமிழகத்தில் அதிகம் அறியப்பட்ட தேரோட்ட விழாக்கள் நடக்கும் ஊர்கள்

[தொகு]

இலங்கையில் தேரோட்டம்

[தொகு]

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் ஆவணி (ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்) மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். இத்தேரோட்டம் உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒலி/ஒளிபரப்பப்படுகின்றது[14]. இது தவிர யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு போன்ற தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களிலும் தேர்த் திருவிழாக்கள் ஆண்டுக்கு ஒருமுறை இடம்பெறுகின்றன.

கதிர்காமத்தில் இடம்பெறும் திருவிழாக் காலத்தில் கொழும்பில் இடம்பெறும் ஆடிவேல் விழாவின் போது கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள கதிர்வேலாயுத சுவாமி கோயிலில் இருந்து தேர் பம்பலப்பிட்டியில் உள்ள சம்மாங்கோடு மாணிக்கப் பிள்ளையார் கோயிலுக்கு கொழும்பு நகரின் முக்கிய வீதிகளினூடாக இழுத்துவரப்படுகின்றது. இது கொழும்பில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்துவரும் தேரோட்ட விழா ஆகும்.[15]

இலங்கையில் தேரோட்ட விழாக்கள் இடம்பெறும் கோயில்கள்

[தொகு]

தேரோட்டத்தால் போக்குவரத்தில் மாற்றம்

[தொகு]

இலங்கை

[தொகு]

நல்லூர்த் தேர்த்திருவிழாவிற்காக யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியின் ஒரு பகுதி உட்பட சில வீதிகள் வாகனப் போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டு வாகனங்கள் மாற்று வழிகளில் பயணிக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பில் நடைபெறும் பிரசித்திபெற்ற கோயில்களின் தேரோட்டத்தின் போது வீதிகள் பகுதியாகத் தடைசெய்யப்படுகின்றன.

கிருத்தவத் தேரோட்டங்கள்

[தொகு]

தமிழகத்தில் கிருத்தவ சமயத் தேவாலயங்கள் சிலவற்றில் உள்ளூர் இந்து சமயம் தொடர்பு உடையனவாகவோ அல்லது அம்மரபினைப் பின்பற்றியவையாகவோ அமையும் சடங்குகளில் ஒன்றாக தேரோட்டம் அமைகிறது.[16]

வேளாங்கண்ணி மாதா கோவில்

[தொகு]
கிருத்தவத் தேரோட்டம்
கிருத்தவத் தேரோட்டம்

வேளாங்கண்ணி மாதா கோவில் தமிழகத்துக் கத்தோலிக்கத் திருச்சபைகளில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். இத்திருச்சபைச் சடங்குகளில் சிரிய அல்லது இலத்தீன் மொழி பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும், பக்திச் செயற்பாடுகள் இந்து சமயத்தினை ஒத்துள்ளதைக் காணலாம்.[16] இங்கு, திருவிழாக்களின் போது மரத்தாலான தேரில் வேளாங்கன்னி மாதாவின் மரச் சிற்பம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. இத்தேரில் இயேசு நாதரின் வாழ்க்கை மற்றும் விவிலியத் தொடர்பான கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பனிமயமாதா கோயில்

[தொகு]

தூத்துக்குடியிலுள்ள பனிமயமாதா கோயிலிலும் தேர்த்திருவிழா நடத்தப் பெறுகிறது. இக்கோயில் தேர்த்திருவிழாதான் கிறித்தவ மதத்தின் சார்பாக நடைபெற்ற உலகின் முதல் தேர்த் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.

முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த நெட்டையான பல்லக்கில், உருவம் நிறுத்தி வைக்க ஒரு இடமும் பக்கத்தில் ஒரு இருக்கையும் மட்டும் இருக்கும். உருவத்தை இறக்கி வைப்பவர்களும், பல்லக்குத் தூக்குபவர்களும், ஜாதித் தலைவருடன் இரவு முழுவதும் உபவாசம், ஆராதனையில் கழிப்பர். அதிகாலை மிகவும் பக்தி வணக்கத்துடன், பாவப் பரிகாரச் செபம் படித்தபின் உருவம் இறக்கப்பட்டு பல்லக்கினுள் வைக்கப்படும். ஜாதித் தலைவர் இருக்கையில் அமர்ந்து உருவத்தைப் பிடித்துக் கொள்ள, மாதாவின் பாடலுடன் 6 பேர் சுமந்தபடி பல்லக்கு தேரைச் சென்றடையும்.

தேருக்கடியில் மிகவும் பக்தி ஆசாரத்துடுன் உருவம் இறக்கி வைக்கப்பட்டு, குருவானவர் மந்திரித்தபின் தேரின் மீது ஏற்றி வைக்கப்படும். பரதகுலச் சிற்றரசன், நல்முத்துகள் கலந்த மலர்களை அன்னை மீது தெளிப்பார். அதிகாலையில் பலிபூசை நிறைவேறியபின், தேரின் வடத்தை பரதகுல ஜாதித்தலைவர் தொட்டுக் கொடுத்து, தனது மந்திரி, பிரதானிகளாகிய அடப்பன்மார் மற்றும் ஊர்த் தலைவர்களிடம் அளிப்பார். மக்கள் வடத்தை மரியே, மாதாவே எனும் வானைப் பிளக்கும் வாசகத்துடன் தேர் இழுத்துச் செல்வர்.

யானை மீது பாண்டியரின் மீன் கொடி தாரை தப்பட்டையுடன் முன் செல்ல அதனைத் தொடர்ந்து பரதவர்களின் சின்னம் பொறித்த மீதி 20 கொடிகளும், கேடயம், குடை, குடைச் சுருட்டி, அசை கம்பு, முரபு, பரிசை போன்ற விருதுகள் கொண்ட குழு அணிவகுத்துச் செல்லும். இருபக்கமும் குதிரை வீரர்களும் வருவர். 1926-ம் ஆண்டு வரையில் இப்படித்தான் தேர் இழுக்கப்பட்டு வந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இத்தேர்ப்பவனி சற்று மாற்றப்பட்டு நடைபெறுகிறது.[17] 

புரத்தாக்குடி

[தொகு]

திருச்சி மாவட்டம் புரத்தாக்குடி என்ற ஊரில் உள்ள மாதா கோயிலில் ஆண்டு தோறும் புகழ்பெற்ற திருச்சபைத் தேரோட்டம் நடைபெறுகிறது.[16]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Michaels; Cornelia Vogelsanger; Annette Wilke (1996). Wild Goddesses in India and Nepal: Proceedings of an International Symposium, Berne and Zurich, November 1994. P. Lang. pp. 270–285. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-906756-04-2.
  2. Peter J. Claus; Sarah Diamond; Margaret Ann Mills (2003). South Asian Folklore: An Encyclopedia : Afghanistan, Bangladesh, India, Nepal, Pakistan, Sri Lanka. Taylor & Francis. pp. 515–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-93919-5.
  3. Lavanya Vemsani (2016). Krishna in History, Thought, and Culture: An Encyclopedia of the Hindu Lord of Many Names. ABC-CLIO. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61069-211-3.
  4. Mandai, Paresh Chandra (2012). "Rathajatra". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Bruce M. Sullivan (2001). The A to Z of Hinduism. Rowman & Littlefield. pp. 100, 166, 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-4070-6.
  6. Pratapaditya Pal; Stephen P. Huyler; John E. Cort; et al. (2016). Puja and Piety: Hindu, Jain, and Buddhist Art from the Indian Subcontinent. University of California Press. pp. 72–74 with Figures 23–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-28847-8.
  7. J.P. Losty (2004). David M. Waterhouse (ed.). The Origins of Himalayan Studies: Brian Houghton Hodgson in Nepal and Darjeeling, 1820-1858. Routledge. pp. 93–94 with Figure 5.11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-31215-8.
  8. Virendra Kumar Sharma (2002). History of Jainism: With Special Reference to Mathurā. DK. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-246-0195-2.
  9. Ajit K. Singh (1982). Tribal Festivals of Bihar: A Functional Analysis. Concept. pp. 30–33.
  10. Vineeta Sinha (2008). Knut A. Jacobsen (ed.). South Asian Religions on Display: Religious Processions in South Asia and in the Diaspora. Routledge. pp. 159–174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-07459-4.
  11. Knut A. Jacobsen (2008). Knut A. Jacobsen (ed.). South Asian Religions on Display: Religious Processions in South Asia and in the Diaspora. Routledge. pp. 8–11, 200–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-07459-4.
  12. அகில இலங்கை இந்து மாமன்றம், 2012. பக். 89
  13. அகில இலங்கை இந்து மாமன்றம், 2012. பக். 93
  14. "டான் தொலைக்காட்சியில் நல்லூர்த் தேர்". Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 26, 2012.
  15. டெய்லி நியூஸ் இணையப் பதிப்பு, 26 யூலை 2010. 1 டிசம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது.
  16. 16.0 16.1 16.2 "தேர்ச் சிற்பங்கள்". முனைவர் லோ. மணிவண்ணன். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 26, 2012.
  17. தூத்துக்குடி தூய பனிமய அன்னைப் பேராலயம்

உசாத்துணைகள்

[தொகு]
  • அகில இலங்கை இந்து மாமன்றம், இந்து மக்களுக்கு ஒரு கையேடு, கொழும்பு. 2012 (முதற்பதிப்பு 2001)
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Temple chariots in Tamil Nadu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரோட்டம்&oldid=3812669" இலிருந்து மீள்விக்கப்பட்டது