உள்ளடக்கத்துக்குச் செல்

தச்சில் மாத்து தரகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தச்சில் மாத்து தரகன்
தச்சில் மார் மாத்து தரகன்
பிறப்பு1741
ஆலங்காடு, வடக்கு பறவூர்
இறப்பு1814
வடக்கு குத்தியக்கோடு
தேசியம்இந்தியன்

தச்சில் மாத்து தரகன் (Thachil Matthoo Tharakan) (1741-1814) என்பவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்தியாவின் திருவிதாங்கூர் / கொச்சியின் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தவராவார். திருவாங்கூரின் அரச நிர்வாகத்திலும், சிரிய கிறிஸ்தவ சமூகத்தின் தலைமையிலும் தரகன் பங்கேற்றார். உப்பையும் புகையிலையையும் வர்த்தகம் செய்தார். திருவிதாங்கூரில், நிறுவப்பட்ட ஆட்சிக்கும் பிரிட்டிசு ஆதிக்கத்திற்கும் எதிரான, வேலுத்தம்பி தளவாய் தலைமையிலான கிளர்ச்சியை எதிர்த்த 'சதிகாரர்களின்' மூன்று உறுப்பினராகவும் இவர் அறியப்படுகிறார்.

வர்த்தகமும் ஏற்றுமதியும்

[தொகு]

இவர் தற்போதைய எர்ணாகுளம் மாவட்டத்தின் பறவூர் வட்டத்து வடக்கு குத்தியதோடு அருகே உள்ள ஆலங்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர். 1741 ஆம் ஆண்டில் தச்சில் தரியத்து மற்றும் கேல்பறம்பு இட்டி அண்ணா ஆகியோரின் மகனாக வளமான சிரிய-மலபார் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தார்.[1]. இவர் வெற்றிகரமான ஒரு வணிகராக இருந்தார். இவரது தந்தையின் நண்பர்களான இரங்கா செனாய், நாராயண செனாய் ஆகியோரின் உதவியுடன், முன்னேற்றம் அடைந்தார். 1747இல் பிளாசிப் போரில் வெற்றி பெற்றப் பின்னர், ஆங்கிலேயர்களுக்கான போர்க்கப்பல்கள் தேவை அதிகரித்தது. பிரெஞ்சுப் புரட்சி, நெப்போலியன் பொனபார்ட் மீதான வெற்றியின் மூலம், ஆங்கிலேயர்கள் கடற்படையின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டினர். போர்க்கப்பல்களை நிர்மாணிக்க தேக்கு மரம் அதிகம் தேவைப்பட்டது. அச்சன்கோயில், மலையாளூர் வனப்பகுதிகளில் தேக்கு ஏராளமாக இருந்தது. 3000 குவியல் தேக்கு மரங்களை துறைமுகத்திற்கு வெட்ட உத்தரவு இவருக்கு கிடைத்தது. எதிர்பாராத வெள்ளம் காரணமாக, இவர் அச்சங்கோயிலிலிருந்து ஆலப்புழாவுக்கு எளிதில் மரக்கட்டைகளை கொண்டு செல்ல முடிந்ததால் பெரும் லாபம் ஈட்டினார். இவர் ஏற்றுமதி செய்த தேக்கு மரத்தின் வலிமை காரணமாக தளபதி நெல்சன் டிராஃபல்கர் நெப்போலியனுக்கு எதிரானப் போரில் தோற்கடித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்தக் காலகட்டத்தில் இவர் உருவாக்கிய நண்பர்கள் பின்னர் இவரை மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். திருவிதாங்கூர் இராணுவத்தின் தலைவரான இடச்சு தளபதி இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய், இராஜா கேசவதாசு ஆகியோர் இவரது சக்திவாய்ந்த நண்பர்களில் அடங்குவர். அத்தகைய நண்பர்கள் மூலம், திருவிதாங்கூர், கொச்சியின் மன்னர்களுக்கு அறிமுகமானார். பின்னர் இவர் தனது அரச சேவையைத் தொடங்கினார். [2] கேரளாவின் இந்திய சிரிய-சடங்கு கிறிஸ்தவர்களிடமிருந்து மாத்து தரகன் ஒரு முன்னணி வர்த்தகராகவும், செல்வாக்கு மிக்க கிறிஸ்தவத் தலைவராகவும் ஆனார். இவர் ராஜாவின் பாராட்டைப் பெற்ற 'தங்கக்கொம்பன்' விருதைப் பெற்றார். பின்னர் மன்னர் இவருக்கு 'மாத்து தரகன் முதலாளி அவர்கள்' என்ற பட்டத்தை வழங்கினார். [3] திருவிதாங்கூர் மன்னர் தர்ம ராஜாவால் 'உன்னத வர்த்தகர்' என்பதைக் குறிக்க தரகன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர் மரம், மசாலாப் பொருள்கள், உப்பு, புகையிலை போன்றவற்றை வியாபாரம் செய்தார். மேலும் தென்னிந்தியாவிலிருந்து முதல் மர ஏற்றுமதியாளர் ஆனார். இவரும் திவான் இராஜா கேசவதாசும் ஆலப்புழா துறைமுகத்தை கட்டினர். ஆலப்புழா, கொச்சி துறைமுகங்களிலிருந்த ஏற்றுமதியை இவர் கட்டுப்படுத்தினார்.

திருவிதாங்கூரின் அமைச்சர்

[தொகு]

இவர் திருவிதாங்கூர் மகாராஜா பலராம வர்மனுக்கு வர்த்தக அமைச்சராக இருந்தார். இவரது சிறந்த ஆண்டுகள் தர்ம ராஜாவின் காலத்தில் இருந்தன. திப்பு சுல்தானுக்கு எதிரான போர்களை எதிர்த்துப் போராட இவர் ஒரு பெரிய தொகையை இராச்சியத்திற்கு கடன் கொடுத்தார். இருப்பினும், ஜெயந்தன் சங்கரன் நம்பூதிரியின் திவான் பதவிக் காலத்தில், வேலுத் தம்பி என்பவரால் தூண்டப்பட்ட ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. இதனால் வேலுத் தம்பி 1801இல் பதவிக்கு வந்தார். வேலுத்தம்பி இவரை துன்புறுத்தினார் (இவரது காது வெட்டப்பட்டு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்). திருவிதாங்கூர் அரசுக்கு பெரும் வருவாய் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியிருப்பதாகக் கூறி மாத்து தரகனின் நிலங்களும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த உத்தரவை பின்னர் பிரிட்டிசு அரசப்பிரதிநிதி மெக்காலே ரத்து செய்தார். பலராம வர்மன் வேலுத் தம்பியின் செயல்களுக்கு மனம் வருந்தி தரகனுக்கு தங்கக் காதுகளை கொடுத்தார். மகாராஜாவின் அனுமதியின்றி ஆங்கிலேயருக்கு எதிரான வேலுத்தம்பியின் கிளர்ச்சி 1809 ஆம் ஆண்டில் அடூரின் மண்ணடி கோவிலில் வேலுத்தம்பியின் தற்கொலைக்கு வழிவகுத்தது.

சமூக, மதத் தலைவர்

[தொகு]

கூனன் குறுக்கு உறுதிமொழியால் பிரிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகங்களை மீண்டும் ஒன்றிணைக்க இவர் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் இவரது முயற்சிகள் போர்த்துகீசியர்களால் முறியடிக்கப்பட்டன. இவரது முயற்சிகளுக்கு இந்திய சிரிய-சடங்கு கத்தோலிக்கர்களின் மார் ஜோசப் காரியாட்டிலின் ஆதரவும், ஜேக்கபியர்கள் என அழைக்கப்படும் இந்திய சிரிய-சடங்கு ஆர்த்தடாக்ஸ் பிரிவின் மார் டியோனீசியசின் ஆதரவும் இருந்தது. ஆனால் கோவாவில் பிஷப் காரியாட்டிலின் மரணம், ரோமின் மௌனம், இறுதியில் இந்திய யாக்கோபியர்கள் தனித்தனியாக இருக்கவும், இந்திய சிரியக் கத்தோலிக்கர்கள் இந்தியாவில் லத்தீன் ஆயர்களின் அதிகார வரம்பை ஏற்றுக்கொள்ளவும் வழிவகுத்தது. சிரியக் கத்தோலிக்கரின் குறைகளை போப்பின் முன் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 1782 ஆம் ஆண்டில் மார் ஜோசப் காரியாட்டில், பரேமக்கல் தோமா கதனார் ஆகியோரின் வரலாற்றுப் பயணத்தை ரோம் நகருக்கு ஏற்பாடு செய்வதில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். [4]

குறிப்புகள்

[தொகு]
  1. Ooken, C.C. Lonappan (1966). Thachil Mathu Tharakan. Irinjalakuda: St. George's Press. p. 2.
  2. Ooken, C.C. Lonappan (1966). Thachil Mathu Tharakan. Irinjalakuda: St. George's Press. p. 3.
  3. K.M.Varghese, Chitramezhuthu (1929). Thachil Tharakante Thankakompan. Kottayam: M.O.C. Publications. p. 25.
  4. Thachil Matthoo Tharakan பரணிடப்பட்டது 1 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம்

மேலும் படிக்க

[தொகு]
  • M. O. Joseph, Nedumkunnam: Thachil Matthoo Tharakan, (Malayalam) Kottayam, NBS, 1962.
  • Thachil Matthoo Tharakante Thankakompan (Malayalam) by K M Varghese, Manorama, Kottayam (1927)
  • Thachil Matthoo Tharakante Suvarna Kamalam (Malayalam) by John Peter Thottam, Kalavilasini, Trivandrum (1933)
  • Thachil Matthoo Tharakan by C. C. Lonappan Ookken (1966)
  • Thathampally Enna Desathinte Katha (Malayalam) by Joseph Kottaparamban,Vidyarambham Press,Alappuzha(2001)
  • Niranam Granthavari Malayalathile Adya Charithragrantham (Malayalam) by Thomas M. Kurien ,Sofiya Books,Kottayam(2006)
  • Thachil Matthoo Tharakan
  • Thachil Family Official Website பரணிடப்பட்டது 2020-07-12 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தச்சில்_மாத்து_தரகன்&oldid=3368966" இலிருந்து மீள்விக்கப்பட்டது