ஜெயந்தன் சங்கரன் நம்பூதிரி
ஒடியேரி ஜெயந்தன் சங்கரன் நம்பூதிரி (Odiery Jayanthan Sankaran Nampoothiri) என்பவர் 18 ஆம் நூற்றாண்டின் முன்னாள் இந்திய இராச்சியமான திருவிதாங்கூரின் திவானாக இருந்தார்.
ஜெயந்தன் நம்பூதிரி ஒரு வரலாற்றாசிரியராவார். திருவிதாங்கூர் வரலாற்றிலும் கேரளாவின் பொது வரலாற்றிலும் இடம் பெற்றிருந்தார். திருவிதாங்கூரின் திவான் இராஜா கேசவதாசுக்குப் பிறகு இவர் முழுமையான ஆட்சியாளராக நியமிக்கப்பட்டு திருவிதாங்கூர் வரலாற்றில் தனது இடத்தை நிலைநாட்டினார். திவான் பதவிக்கு ஜெயந்தன் நம்பூதிரி எழுந்தது வியக்கத்தக்க வேகத்தில் இருந்தது. அப்போதைய நாட்டின் ஆட்சியாளராக இருந்த பலராம வர்மன் இவரை பதவியில் அமர்த்தினார். பல வரலாற்றாசிரியர்கள் இதை அப்போதைய பிரிட்டிசு அரசுப் பிரதிநிதி முழுமையாக ஆதரிக்கவில்லை என்று நம்புகிறார்கள். திருவிதாங்கூர் வரலாற்றில் ஜெயந்தன் நம்பூதிரியின் ஆட்சி பிரகாசமானதல்ல என்றும் வரலாற்றாசிரியர்கள் பொதுவாக நம்புகிறார்கள்
பின்னணி
[தொகு]ஜெயந்தன் நம்பூதிரி சாமோரின் இராச்சியத்திலிருந்து, திப்பு சுல்தானின் படையெடுப்பின் போது திருவிதாங்கூரில் குடியேறினார். சாமோரின் அரண்மனையில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட நம்பூதிரி திருவிதாங்கூர் அரச குடும்பத்தினரிடம் செல்வாக்கைப் பெற்றிருந்தார்.
அதிகாரம்
[தொகு]1798 பிப்ரவரி 17, அன்று தர்ம ராஜா கார்த்திகை திருநாள் ராம வர்மன் இறந்தவுடன், அவரது வாரிசான பலராம வர்மன் திருவிதாங்கூர் மகாராஜாவாக அரியணை ஏறினார். திருவிதாங்கூர் மன்னர்களின் பரம்பரையில் பலவீனமானவராகவும் வயது குறைந்தவராகவும் ஆட்சியில் அனுபவமில்லாமலும் இருந்தார் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இவரது ஆரம்ப ஆண்டுகளில், வேலுத்தம்பி அரண்மனை நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும், இவரது ஆட்சிக்கு உள்நாட்டிலும் வெளிப்புறத்திலிருந்தும் பல்வேறு எதிப்புகள் ஏற்பட்டன. [1] பதினாறு வயதில் இராஜாவான பலராம வர்மன் ஜெயந்தன் நம்பூதிரியின் செல்வாக்கின் கீழ் வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த முதல் அட்டூழியங்களில் ஒன்று, 1799 ஏப்ரல் 21 அன்று நடந்த இராஜா கேசவதாசின் கொலையாகும். [2]
பிரிட்டிசு ஆளுநர் ரிச்சர்டு வெல்லசுலி, திவானைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆங்கிலேயர்களின் உதவியைப் பெறுமாறு அறிவுறுத்தியதால், ஜெயந்தன் திவானாக நியமிக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு திவானின் அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப்பட்டது. இவருக்கு உதவியாக தக்கலையின் சங்கரநாராயணன்பிள்ளை என்பவர் தலைமை கண்காணிப்பாளராகவும், தச்சில் மாத்து தரகன் என்பவர் தலைமை ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டனர். ஆனால் இவை அனைத்தும் அப்போதைய அரசப்பிரதிநிதியுடன் கலந்தாலோசித்து நியமனம் செய்யப்படவில்லை.
ஸ்ரீதரன் மேனன் போன்ற திருவிதாங்கூரின் வரலாற்றாசிரியர்கள் ஜெயந்தன் நம்பூதிரியின் ஆட்சியை மோசமானதாக சித்தரித்துள்ளனர். ஜெயந்தன் நம்பூதிரிக்கு உதவியாக இருந்த சங்கரநாராயணனும், தரகனும் இருந்தனர். இந்த மூன்று பேரின் தவறான செயலால் மக்கள் துயரப்பட்டனர்.
அவர்களின் ஊழல் காரணமாக, விரைவில் கருவூலம் காலியானது. ஜெயந்தன் நம்பூதிரி கருவூலத்தை நிரப்ப மக்களிடமிருந்து பெரும் தொகையை வரியாக வசூலிக்க முடிவு செய்தார். இதனால் வேலுத் தம்பி தளவாய் தலைமையில் கிளர்ச்சி ஏற்பட்டது. மகாராஜா ஜெயந்தனையும் அவனது கூட்டாளிகளையும் 1799 சூன் மாதம் அரண்மனையை விட்டு வெளியேற்றினார். பின்னர், சிராயின்கீழுவைச் சேர்ந்த அய்யப்பன் செம்பகராமன் பிள்ளை புதிய திவானாகவும், மிளகாய் வெல்லம்பி என்பவர் நிதி மந்திரியாகவும் வேலுத் தம்பி வர்த்தக அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் வேலுத் தம்பி ஜெயந்தன் நம்பூதிரியும் அவனது உதவியாளர்களையும் பழிவாங்கினார். ஜெயந்தன் நம்பூதிரி நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். தரகன் திருவனந்தபுர சிறையில் அடைக்கப்பட்டார். [3] [4] சங்கர நாராயணன் உதயகிக் கோட்டையில் அடைத்து வைக்கப்பட்டார்.