உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோசேபே முஸ்காதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித ஜோசேபே முஸ்காதி
பிறப்புஜூலை 25, 1880
பெனவென்தோ
இறப்புஏப்ரல் 12, 1927
நாபொலி
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்நவம்பர் 16, 1975
புனிதர் பட்டம்அக்டோபர் 25, 1987 by இரண்டாம் யோவான் பவுல்
முக்கிய திருத்தலங்கள்ஜேசு நோவோ, நாபொலி
திருவிழாநவம்பர் 16
சித்தரிக்கப்படும் வகைமருத்துவ உடைகளில்
பாதுகாவல்மருத்துவர்கள், துறவர சபைகளால் நிராகரிக்கப்பட்டோர், மணமாகாதோர்

புனித ஜோசேபே முஸ்காதி[1] (ஜூலை 25, 1880 – ஏப்ரல் 12, 1927) என்பவர் ஒரு இத்தாலிய மருத்துவரும், அறிவியல் ஆராய்ச்சியாளரும், பல்கலைக்கழக பேராசிரியரும் ஆவார். உயிர்வேதியியலில் இவரின் பங்களிப்புகளுக்காகவும், இவரின் பக்திக்காகவும் இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.[2] கத்தோலிக்க திருச்சபையில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இவரின் விழா நாள் நவம்பர் 16 ஆகும்.

இத்தாலியில் வாழ்ந்த வழக்கறிஞரும் நீதியரசருமான ஃப்ரான்செஸ்கோ முஸ்காதி மற்றும் உயர்குடியில் பிறந்த ரோசா தே லூகா தேயி மார்சேசி தெ ரொசெதொ என்பவருக்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஜோசேபே முஸ்காதி ஏழாவது குழந்தை ஆவார். இவருக்கு நான்கு வயதாகும் போது இவரின் குடும்பம் இத்தாலியின் நாபொலி நகருக்கு குடி பெயர்ந்தது. இவருக்கு 8ஆம் அகவையில் புது நன்மையும் 10ஆம் அகவையில் உறுதிபூசுதலும் வழங்கப்பட்டது. இவர் 1903இல் நாபொலி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஒரு மருத்துவமனையின் நிர்வாகியாக பணியாற்றிய இவர், அதே நேரத்தில் மருத்துவ ஆராய்ச்சியிலும் மேற்படிப்பிலும் ஈடுபட்டார். வெசுவிஸ் என்னும் எறிமலை வெடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் புறிந்த உதவிக்கு எந்த கைமாறும் பெற மறுத்தார். நாபொலியில் வாந்திபேதியை தடுக்க அரும்பாடுபட்டார். நீரிழிவு நோயிக்கு முதன் முதலில் இன்சுலின் பயன்படுத்தி குணப்படுத்த முயன்றவர்களுள் இவரும் ஒருவர். முதல் உலகப் போரின் போது இத்தாலிய தரைப்படையில் சேர இவர் அளித்த விண்ணபம் மறுக்கப்பட்டாலும் இவர் இராணுவ மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டார். இவர் ஏறத்தாழ 7000 வீரர்களுக்கு சிகிச்சை அளித்திருப்பார் என நம்பப்படுகின்றது. இவர் பலரை காணாமலேயே குணப்படுத்தினார் என்பர்.

இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் தாய் இவரிடம் வேண்டியப்பின்பு அவரின் மகன் குணமடைந்ததை ஏற்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இவருக்கு அக்டோபர் 25, 1987இல் புனிதர் பட்டம் அளித்தார். புனிதர் பட்டம் பெற்ற முதல் நவீன கால மருத்துவர் இவர் என்பது குறிக்கத்தக்கது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Giuseppe Moscati - ஒலிப்பு
  2. Miller, Michael J. (2004). "Joseph Moscati: Saint, doctor, and miracle-worker". Catholic Education Resource Center. Catholic Educator's Resource Center. Archived from the original on 2009-11-25. பார்க்கப்பட்ட நாள் 2007-08-13.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசேபே_முஸ்காதி&oldid=3665802" இலிருந்து மீள்விக்கப்பட்டது