ஜேம்ஸ் சில்வெஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் சில்வெஸ்டர்
James Joseph Sylvester Edit on Wikidata
பிறப்பு3 செப்தெம்பர் 1814
இலண்டன்
இறப்பு15 மார்ச்சு 1897 (அகவை 82)
இலண்டன்
படிப்புமுனைவர்
படித்த இடங்கள்St John's College, Trinity College Dublin
பணிகணிதவியலாளர், காப்புறுதிவல்லுநர், பல்கலைக்கழகப் பேராசிரியர், பார் அட் லா
விருதுகள்கோப்ளி பதக்கம், அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர், Royal medal
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்இயற்கணிதம், சேர்வியல், எண் கோட்பாடு, கணிதம்
நிறுவனங்கள்
முனைவர் பட்ட மாணவர்கள்Fabian Franklin, Ellery William Davis, George Stetson Ely, Oscar Howard Mitchell

ஜேம்ஸ் ஜோசப் சில்வெஸ்டர் (James Joseph Sylvester, செப்டம்பர் 3, 1814 - மார்ச் 15, 1897) 19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில் ஒருவர். கெய்லியுடன் கூட்டாகக் கணித ஆய்வுகள் செய்தவர். கெய்லியைப்போல் கணிதத் துறையில் பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.

வாழ்க்கை[தொகு]

லண்டனில் யூதர் குடும்பத்தில் பல அண்ணன் அக்காக்களுடன் இளையோனாகப் பிறந்தவர். அவர் குழந்தைப் பருவத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை. மூத்த சகோதரன் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு குடிபெயர்ந்து சில்வெஸ்டர் என்ற பெயரை வைத்துக் கொண்டார். அதனால் வெறும் ஜேம்ஸ் ஜோஸஃப் என்ற யூதப்பெயரும் ஜேம்ஸ் ஜோஸஃப் சில்வெஸ்டர் என்றே புழங்க ஆரம்பித்து அதுவே நிலைத்தும் விட்டது.

கல்வி[தொகு]

ஆறு வயதிலிருந்து பதினான்கு வயது வரையில் தனியார் பள்ளிகளில் கற்றார். பதினான்காவது வயதில் ஓர் அரையாண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டிமார்கனிடம் தான் பயின்றதை பெருமிதத்துடன் சொல்வார். 1829 இல் பதினைந்தாவது வயதில் லிவர்பூலில் உள்ள 'ராயல் இன்ஸ்டிடுயூஷனில்' இரண்டாண்டுகள் படித்தார். ஓராண்டிலேயே அங்கு கணிதத்தில் பரிசு பெற்றார். ஆசிரியர்கள் அவரை எல்லா மாணவர்களுக்கும் முதன்மையாகவும் அதற்கு மேலேயே தனித்துவம் வாய்ந்தவராகவும் கணித்தனர். அவருடைய அமெரிக்கன் சகோதரர் தொழில்முறையில் ஒரு Actuary. அமெரிக்காவில் பரிசுச் சீட்டு நடத்தும் இயக்குனர்களிடம் தன் தம்பியின் கணிதத் திறமையைப்பற்றிச் சொல்லி அவருடைய திறமை வெளிப்படும்படியாக ஒரு Project அவரை வந்தடையச் செய்தார். அதை வெகு நேர்த்தியாகத் தீர்த்து வைத்ததில் சில்வெஸ்டருக்கு 500 டாலர் பரிசு கிடைத்தது.

ஆனால் லிவர்பூலில் அவருடைய வாழ்க்கைச் சக்கரம் சரியாகச் சுழலவில்லை. கிறிஸ்தவர்கள் யூதர்களை சரியாக நடத்தவில்லை. சில்வெஸ்டரும் தன் யூத நம்பிக்கைகளை தன் மட்டில் வைத்துக் கொள்ளவில்லை. இதனால் ஒரு நேரத்தில் அயர்லாந்திலுள்ள டப்ளின் நகரத்திற்கு ஓர் அகதியாக அவர் ஓட வேண்டியிருந்தது. ஒரு தூரத்து உறவினர் உதவியதின்பேரில் திரும்பவும் லிவர்பூல் வந்து சேர்ந்தார்.

பதினொரு ஆண்டுகளுக்குப்பிறகு இதே டப்ளின் தான் அவருக்கு மறுபடியும் உதவியது. 1831 இலிருந்து கேம்பிரிட்ஜில் சென் ஜான்ஸ் கல்லூரியில் படித்த ஸில்வெஸ்டருக்கு அவர் ஆங்கிலத் திருச்சபையின் (Church of England) சபதங்களை ஏற்க மறுத்ததால் அவருக்குக் கிடைக்க வேண்டிய பல்கலைக்கழகப் பட்டங்கள் கொடுக்கப்படவில்லை. இப்பட்டங்களை (B.A., M.A.) டப்ளினிலுள்ள ட்ரினிடி கல்லூரியிடமிருந்துதான் பெற்றார். எனினும் வரலாற்று நேர்மைக்காக நாம் இங்கு குறிப்பிடவேண்டியது இன்னொன்றுள்ளது. பிற்காலத்தில் 1871 இல், ஆங்கிலக் கல்வி நிலையங்கள் மதக்கோயில்களின் பிடியிலிருந்து விலகினதும், அவருக்குச் சேரவேண்டிய பட்டங்கள் அவருக்கு கௌரவப் பட்டங்களாக அளிக்கப்பட்டன.

நோய்வாய்ப்பட்டிருந்ததனால் 1837 வரையில் ட்ரைபாஸ் தேர்வை அவர் எழுத முடியவில்லை. அப்பொழுதும் அவர் இரண்டாவது நபராகத்தான் தேறினார். அவரைத் தோற்கடித்த முதலாவது மாணவனைப்பற்றி கணித உலகில் அதற்குப் பிறகு கேள்விப்படவேயில்லை. கிறிஸ்தவரல்லாத காரணத்தால் ஸில்வெஸ்டருக்கு ஸ்மித் பரிசுகள் கிட்டாமல் போயின.

கிரேக்க மொழியிலும் இலத்தீன் மொழியிலும் அகலமாகவும் ஆழமாகவும் தேர்ச்சிபெற்றிருந்த ஸில்வெஸ்டர் தன்னுடைய கணித ஆய்வுக்கட்டுரைகளிலும் கணிதத்தைப் பற்றிய பேச்சுகளிலும் பழம்பெருமை வாய்ந்த லத்தீன் - கிரேக்க மேற்கோள்களைப் பெருமளவில் கையாள்வார். அவைகள் சூழ்நிலைக்குப் பொருந்தியதாகவும் மேன்மை தருவதாகவும் இருக்கும். இதைத்தவிர பிரெஞ்சு, ஜெர்மானிய, இத்தாலிய இலக்கியங்களுடன் அவருக்கிருந்த அறிவுத் தொடர்பினால், கணிதத்தில் மாற்றமுறாமைக் கோட்பாட்டில் இன்று புழங்கும் பல அருமையான கலைச்சொற்கள் அவருடைய படைப்புகளே. எடுத்துக்காட்டாக, 'Discriminant' (தன்மைகாட்டி), 'matrix' (அணி) என்ற சொற்கள்.

ஸில்வெஸ்டர் மணம் புரியவே இல்லை.

தொழில்: 1838 - 1870[தொகு]

24வது வயதில், லண்டனிலுள்ள 'யூனிவர்சிடி காலேஜ்' இல் ஸில்வெஸ்டர் அறிவியல் பேராசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். அடுத்த ஆண்டு அவர் Fellow of the Royal Society யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1841 இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றச் சென்றார். ஆனால் மூன்றே மாதம்தான் அப்பணியில் இருந்தார். ஒரு சிறு கௌரவப் பிரச்சினை காரணமாக அப்பணியை ராஜினாமா செய்தார். ஹார்வர்ட், கொலம்பியா பல்கலைக்கழகங்களில் முயற்சி செய்து பயனில்லாமல் இங்கிலாந்து திரும்பினார். Actuary யாக ஒர் ஆயுள் காப்பு நிர்வாகத்தில் சேர்ந்தார். கணித இயலருக்கு அந்த வேலையில் பிடிப்பே இல்லை. தனியாக சில மாணவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். அப்படி வந்து சேர்ந்த மாணவ மாணவிகளில் உலக வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெற்ற ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலும் ஒருவர். 1854 இல் நைட்டிங்கேல் கிரிமியா போருக்குச்சென்றார். அதே ஆண்டு ஸில்வெஸ்டரும் தன்னுடைய இந்த இரண்டுங் கெட்டான் பிழைப்பிலிருந்து மீண்டார்.

இதற்கு நடுவில் 1846 இல் 32வது வயதில் சட்டக்கல்வி கற்கச்சென்று அதில் தேறி 1850 இல் வழக்கறிஞர் ஆனார். அத்தொழிலில்தான் கெய்லியைச் சந்தித்தார். அன்றிலிருந்து இருவரும் பழகிப்பேசி அலசிய கணித ஆய்வுகள்தாம் இன்று மாற்றமுறாமைக் கோட்பாடு (Theory of Invariants) எனப் புழங்குகிறது. அணிக்கோவைகள், அணிகள், இருபடிய அமைப்புகள் இவைகளிலுள்ள ஆழமான கருத்துகளில் பல இவ்விருவரின் கூட்டினால் உதித்தவையே.

வுல்விச்சில் 'ராயல் மிலிடரி அகடெமி'யில் பதினாறு ஆண்டுகள் (1854 இலிருந்து 1870 வரை) பேராசிரியராகப் பணியாற்றினார்.அவருக்குக் கிடைத்த பல கௌரவங்களில் பிரென்சு விஞ்ஞான அகெடெமிக்கு 1863 இல் ஸ்டைனர் காலமானபிறகு வடிவியல் பிரிவிற்கு வெளிநாட்டு நிருபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒன்று. 1870 இல் ஓய்வு பெற்றார்.

பொன்னான ஏழாண்டுகள்: 1876 - 1883[தொகு]

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் 1875 இல் திறக்கப்பட்டது. ஸில்வெஸ்டர் அங்கு பேராசிரியரானார். வுல்விச்சில் அவருடைய ஓய்வூதியத்தில் சில சர்ச்சைகள் எழுப்பினர். அதை மனதில் கொண்டோ என்னமோ ஜான்ஸ் ஹாப்கின்ஸில் தன் ஊதியத்தை தங்கமாகத் தரவேண்டுமென்று நிபந்தனை செய்து அதைப்பெறவும் செய்தார்.

1878 இல் 'American Journal of Mathematics' என்ற ஆய்வுப்பஞ்சிகை ஸில்வெஸ்டரால் தொடங்கப்பட்டு ஜான்ஸ் ஹப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் வைக்கப்பட்டது. அமெரிக்கா கண்டத்தின் கணித ஆய்வுகளுக்கு அக்காலத்தில் அடிகோலிட்ட காரணிகளில் அதற்கு முக்கிய பங்கு உண்டு. கணித உலகில் இன்றும் அச்சஞ்சிகை ஓங்கி நிற்கிறது.

1881-82 இல் அரையாண்டுக்கு கெய்லியை அழைத்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச்செய்தார் ஸில்வெஸ்டர். இது மறுபடியும் இருவரும் கணிதத்தில் கூட்டு ஆய்வு செய்ய பெரிதும் உதவியது.

1883 இல் ஆக்ஸ்ஃபோர்டில், எண் கோட்பாட்டில் வல்லுனராகவும் பேராசிரியராகவும் இருந்த ஸ்டீஃபன் ஸ்மித் என்பவர் காலமானார். அவருடைய இடத்தை நிரப்புவதற்கு ஸில்வெஸ்டர் அமெரிக்காவிலிருந்து அழைக்கப்பட்டார். 70 வயதான ஸில்வெஸ்டர் அதையும் ஏற்றுக்கொண்டு இன்னமும் கணிதத்துக்காகவே உழைத்தார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_சில்வெஸ்டர்&oldid=2733625" இலிருந்து மீள்விக்கப்பட்டது