சுலக்சனா பண்டிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலக்சனா பண்டிட்
பிற பெயர்கள்சுலக்சனா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர், நிகழ்ச்சிக் கலைஞர்
தொழில்(கள்)பாடுதல், நடிப்பு

சுலக்சனா பண்டிட் ( Sulakshana Pandit ) ஓர் இந்தியப் பின்னணிப் பாடகியும் மற்றும் மேவதி கரானாவைச் ( இசைப் பள்ளி ) சேர்ந்த பாலிவுட்டில் பணியாற்றிய முன்னணி பெண்மணியும் ஆவார்.

தொழில்[தொகு]

நடிகையாக சுலக்சனாவின் வாழ்க்கை 1970கள் மற்றும் 80களின் முற்பகுதியில் தொடங்கியது. ஒரு முன்னணிப் பெண்மணியாக இவர் 1970களில் ஜீதேந்திரா, சஞ்சீவ் குமார், ராஜேஷ் கன்னா, வினோத் கண்ணா, சசி கபூர் மற்றும் சத்ருகன் பிரசாத் சின்கா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பு வாழ்க்கை 1975 இல் சஞ்சீவ் குமாருக்கு இணையாக உல்ஜான் என்ற அதிரடித் திரைப்படம் மூலம் தொடங்கியது. பரினீதா புதினத்தை அடிப்படையாகக் கொண்ட அனில் கங்குலியின் சங்கோச் (1976) என்ற படத்தில் இவர் நடித்தார். ஹேரா பேரி, அப்னாபன், கந்தான், செஹ்ரே பே செஹ்ரா, தரம் காந்தா மற்றும் வக்த் கி தீவார் ஆகியவை இவரது பிற படங்களில் அடங்கும்.

இவர், பாண்டி 1978 என்ற ஒரு வங்காளத் திரைப்படத்தில் உத்தம் குமார் என்பவருக்கு இணையாக நடித்தார்.

பாடகர்[தொகு]

சுலக்சனா தனது நடிப்புடன் சேர்ந்து பாடும் தொழிலையும் கொண்டிருந்தார். 1967 ஆம் ஆண்டு வெளியான தக்தீர் திரைப்படத்தில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து "சாத் சமுந்தர் பார் சே" என்ற பிரபலமான பாடலைப் பாடுயதன் மூலம் குழந்தைப் பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு, கிஷோர் குமார் மற்றும் ஹேமந்தா முகர்ஜி போன்ற புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் இவர் பல பாடல்களை பதிவுசெய்துள்ளார். இவர் இந்தி, வங்காளம், மராத்தி, ஒரியா மற்றும் குஜராத்தி மொழிகளில் பாடியிருந்தார். 1980 ஆம் ஆண்டில், இவர் ஜஸ்பாத் (HMV) என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார். அதில் இவர் கசல்களை வழங்கினார். கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி, ஷைலேந்தர் சிங், கே. ஜே. யேசுதாஸ், மகேந்திர கபூர் மற்றும் உதித் நாராயண் போன்ற பாடகர்களுடன் இவர் சேர்ந்து பாடினார் . சங்கர் ஜெய்கிஷன், இலட்சுமிகாந்த்-பியாரேலால், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, கனு ராய், பப்பி லஹரி, உஷா கண்ணா, ராஜேஷ் ரோஷன், முகமது சாகுர் கயாம், ராஜ்கமல் மற்றும் பல இசையமைப்பாளர்களின் கீழும் இவர் பணியாற்றியுள்ளார். 1986 ஆம் ஆண்டில், இலண்டனில் உள்ள அரசகழகத்தின் ஆல்பர்ட் அரங்கத்தில் "இந்திய இசையின் திருவிழா" நிகழ்ச்சியைக் கொண்டாட, புகழ்பெற்ற இசை இயக்குநர்கள் இலட்சுமிகாந்த்-பியாரேலால் மற்றும் பாடகர்கள் மன்ஹர், சபீர் குமார், நிதின் முகேஷ் மற்றும் அனுராதா பாட்வால் ஆகியோருடன் இணைந்து பாடிய பாடகிகளில் சுலக்சனாவும் ஒருவர்.

அவரது சகோதரர்கள் ஜதின் மற்றும் லலித் இசையமைத்த காமோஷி தி மியூசிகல் (1996) திரைப்படத்தில் இடம்பெற்ற "சாகர் கினாரே பி தோ தில்" என்ற பாடலை இவர் கடைசியாக பாடியிருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சுலக்சனா, அரியானா மாநிலத்தின் ஹிசார் (இப்போது ஃபதேஹாபாத்) மாவட்டத்தில் உள்ள பிலிமந்தோரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். தனது ஒன்பது வயதில் பாட ஆரம்பித்தார். புகழ்பெற்ற பாரம்பரிய இசைப்பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் இவரது மாமா ஆவார். கிஷோர் குமார் மற்றும் முகமது ரபி போன்ற பிரபலங்களுடன் பல நேரடி மேடை இசைக் கச்சேரிகளில் பாடினர்

இவருக்கு மூன்று சகோதரர்கள் (மந்தீர், ஜதின் மற்றும் லலித் பண்டிட் ) மற்றும் மூன்று சகோதரிகள் (மறைந்த மாயா ஆண்டர்சன், மறைந்த சந்தியா சிங் மற்றும் விஜய்தா பண்டிட் ) இருந்தனர். இவரது தந்தை பிரதாப் நரேன் பண்டிட் ஒரு பாரம்பரிய பாடகர் ஆவார்.

நடிகர் சஞ்சீவ் குமார் இவருடனான திருமணத்தை நிராகரித்த பிறகு சுலக்சனாவுக்கு திருமணம் ஆகவில்லை.[1] தொடர்ந்து தொழிலில் ஈடுபாடில்லாமல் இருந்தார். இவரது சகோதரி விஜய்தா பண்டிட் மற்றும் மைத்துனரும், இசையமைப்பாளருமான ஆதேசு சிறீவத்சவா, இவருக்காக ஒரு பக்தி இசைத் தொகுப்பைவெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் பணிகள் தொடங்கும் முன்னரே ஆதேசு இறந்துவிட்டார். [2] இந்த சமயத்தில் குளியலறையில் விழுந்ததில் சுலக்சனாவின் இடுப்பு எலும்பு முறிந்தது. நான்கு அறுவை சிகிச்சைகள் இவரை பலவீனப்படுத்தியது. அதற்குப் பிறகு இவர் அதிகமாக பொதுவெளியில் தோன்றுவதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. D, Johnny (31 January 2006). "Star couples search for love". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 25 December 2016.
  2. Quality Matters (Archived link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலக்சனா_பண்டிட்&oldid=3890498" இலிருந்து மீள்விக்கப்பட்டது