சுகம சங்கீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுகம சங்கீதம் (Sugama Sangeetha) பலவிதமான பாவகீதங்களில் ஒரு இந்திய இசை வகையாகும். இந்த வகை கருநாடகம் மற்றும் மகாராட்டிராவில் மிகவும் பிரபலமானது. இது பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படலாம். கன்னட பாவகீதம் கன்னட கவிதைகளுக்கு அமைக்கப்படும் இசையாகும். இது 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பி.கலிங்க ராவின் பணியால் அங்கீகாரம் பெற்றது. நவீன கன்னட கவிஞர்கள் குவெம்பு, த. ரா. பேந்திரே, கோபாலகிருஷ்ண அடிகா, கே. எஸ். நரசிம்மசுவாமி, ஜி. எஸ். சிவருத்ரப்பா, கே. எஸ். நிசார் அகமது, ராஜு அனந்தசாமி ஆகியோரின் பாடல்களுக்கு இவ்வகையான இசையமைக்கப்பட்டுள்ளன. மைசூர் அனந்தசுவாமி மற்றும் சி. அஸ்வத் ஆகியோர் 1960கள் மற்றும் 1970களில் இந்த வடிவத்தை மேலும் மேம்படுத்தினர்.

தோற்றமும் வளர்ச்சியும்[தொகு]

பாவகீதம் எப்போது தொடங்கியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் 1920கள் மற்றும் 30களில் கவிதை இசைக்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1950களில் இது மிகவும் வரையறுக்கப்பட்ட வடிவத்தையும் மிகவும் திறமையான இசைக்கலைஞரையும் பெறத் தொடங்கியது

பி.கலிங்க ராவ்[தொகு]

பி.கலிங்க ராவ் என்பவர் இந்த கலை வடிவத்தை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். [1] [2] பல பிரபலமான கன்னட இலக்கியக் கவிஞர்களின் கவிதைகளுக்கு இவர் இசையமைத்தார். மேலும் அனைத்திந்திய வானொலிகளிலும் பொதுக் கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளை வழங்கினார். [3] உதயவகலி நம்மா செல்லுவ கன்னட நாடு, யாரூ ஹிட்டாவாரு நினகே, அனாததிம் திகந்தாதிம், பாரய்யா பெலடிங்கேலே, பிரம்மா நிங்கே ஜோடிஸ்தீனி போன்றவற்றை இவர் வழங்கியதன் மூலம் இந்த கலை வடிவம் பிரபலமடையத் தொடங்கியது. இவர் சுகம சங்கீதத்தின் இந்த வடிவத்தின் அடித்தளமாகக் கருதப்பட்டார்.

மைசூர் அனந்தசுவாமி[தொகு]

இந்த துறையில் அடுத்த முக்கிய ஆளுமையாக மைசூர் அனந்தசுவாமி இருந்தார். அதுவரை, நிறைய இசையமைப்புகள் இருந்தபோதிலும், அவை இசைக் கண்ணோட்டத்தில் பாரம்பரிய இசையின் துணைக்குழுவாக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தன. இவர் இவ்வகையிலிருந்து வேறு விதமாக யோசித்தார். இவர் பாரம்பரிய இசையின் தடையைத் தாண்டியது மட்டுமல்லாமல், அதன் சொந்த நுணுக்கங்களை பாவகீதத்தில் சேர்ப்பதில் கருவியாக இருந்தார். அந்த சமயத்தில் கருவியும் வெவ்வேறு வடிவத்தை எடுத்ததால், இவர் இசைக்கோர்வையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அந்த சமயத்தில் பாவகீதமே மிகவும் பிரபலமாக இருந்தது. வணிகர்கள் அதை இசைத்தட்டு வடிவத்தில் வெளியிடத் தொடங்கினர். 'நித்யோத்ஸவா' என்ற முதல் பாவகீத இசைத் தொகுப்பு வெளியானது. இவர் இசையமைத்த பிரபலமான இசைத் தொகுப்புகள் நிறைய வெளிவர ஆரம்பித்தன. 'நித்யோத்ஸவா', 'பாவ சங்கமா', 'மிஞ்சு', 'ரத்னான பாடகலு' போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம்.

சி. அஸ்வத்[தொகு]

1970களில் திறமையான மற்றும் சிறந்த தொலைநோக்குடைய சி. அஸ்வத் என்பவர் இதில் பங்கு கொண்டிருந்தார். இசைக்கும், சொல்லுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒரு பாடலை வழங்குவதற்கான இவரது முறை தனித்துவமானது. இவர் கலையில் பல மாற்றங்களையும் கொண்டு வந்தார். நாடக கூறுகள், மெய்நிகர் படமாக்கல் மற்றும் பிற கண்டுபிடிப்புகளை இவரது பாடல்களில் ஏராளமாகக் காணலாம். சிசுநாள ஷரீஃப்பின் கவிதைகளை கருநாடகா முழுவதும் பிரபலமாக்குவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இவரது பிரபலமான இசைத் தொகுப்புகளில் 'மைசூரு மல்லிகே', 'சிசுநாள ஷரீஃப் சஹேபரா கீதேகலு', 'சைத்ரா', 'கன்னடவே சத்யா' போன்றவை இருந்தன. பாவகீத பாடல்களைப் பாடியதோடு அவை சாமானியர்களைச் சென்றடைவதை உறுதிசெய்த பெருமையும் இவருக்கு கிடைத்தது.

பி.கலிங்க ராவ், மைசூர் அனந்தசாமி மற்றும் சி.அஸ்வத் ஆகியோர் சுகம சங்கீதத்தின் மும்மூர்த்திகளாக கருதப்படுகிறார்கள். 70களின் நடுப்பகுதி முதல் 90களின் நடுப்பகுதி வரை பொற்காலமாககருதப்படுகிறது .

குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்கள்[தொகு]

1960 மற்றும் 70களில் பல வளர்ந்து வரும் இசைக்கலைஞர்கள் இந்த துறைக்கு பங்களித்தனர். எச். ஆர். லீலாவதி, பத்மசரன், தெற்கு கர்நாடகாவிலிருந்து எச். கே. நாராயணா, வட கருநாடகாவிலிருந்து பாலப்பா ஹுக்கேரி போன்றவர்கள் கருநாடகா முழுவதும் இக்கலையை பிரபலப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களின் சொந்த பாடல்களின் மூலம் களத்திற்கு பங்களித்தனர். மேலும், பல இசைக்கலைஞர்கள் சுகம சங்கீதத்தை தங்கள் இசை அல்லது பாடல்கள் மூலம் பிரபலப்படுத்துவதில் வெற்றி பெற்றனர்,

இசையமைப்பாளர்கள்[தொகு]

பி. கலிங்க ராவ், மைசூர் அனந்தசுவாமி, சி. அஸ்வத், எச். கே. நாராயணா, பத்மசரன், எச். ஆர். லீலாவதி, பாலப்பா ஹுக்கேரி, ராஜு அனந்தசாமி, என். எஸ். பிரசாத், பி. கே. சந்திரசேகர், பி. வி. ஸ்ரீனிவாஸ், சுனிதா அனந்தசுவாமி, ஜெயசிறீ ஆனந்த், பிரவீன் டி. ராவ், பிரவீன் கோட்கிந்தி, எம். டி. பல்லவி, அர்ச்சனா உடுப்பா, சிதம்பர கலாமஞ்சி, மகேஷ் மகாதேவ், உபாசனா மோகன், வசந்த கனகாபூர், கார்த்திக்ரே ராகண்ணா, மஞ்சுளா குருராஜ், சியாமளா ஜாகிர்தார் போன்ற இசையமைப்பாளர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர்.

பாடகர்கள்[தொகு]

பி.கலிங்க ராவ், மைசூர் அனந்தசுவாமி, சி.அஸ்வத், பாலப்பா ஹுக்கேரி, பீம்சென் ஜோஷி, சுலோச்சனா , இரத்னமாலா பிரகாஷ், மஞ்சுளா குருராஜ், எம். கே. ஜெயஸ்ரீ, எச். கே. நாராயணா, சிமோகா சுப்பண்ணா, சியாமளா ஜாகிர்தார், பி. கே. சுமித்ரா, கஸ்தூரி சங்கர், ராஜு அனந்தசுவாமி, பி. ஆர். சாயா, சுனிதா அனந்தசுவாமி, யஷ்வன்ந் ஹலிபந்தி, நாகரா ஸ்ரீனிவாச உடுப்பா, சங்கீதா கட்டி, எம். டி. பல்லவி , அர்ச்சனா உடுப்பா, புத்தூர் நரசிம்ம நாயக், ராஜ்குமார், எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனிதா அனந்தசுவாமி, மகேஷ் மகாதேவ், மாலதி சர்மா, அமீர்பாய் கர்நாடகி போன்ற பாடகர்கள் இக்கலையை தங்கள் பாடல்கள் மூலம் வளர்த்தனர்.

எதிர்காலம்[தொகு]

இத்துறையில் அனந்தசுவாமி மற்றும் அஸ்வத் போன்றவர்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க மற்றும் அர்ப்பணிப்புள்ள பங்களிப்பாளர்கள் மிகக் குறைவு. 'கன்னடவே சத்யா' நிகழ்வு போன்ற சில விதிவிலக்குகள் இருந்தபோதிலும், சுகம சங்கீதத்துக்கு பரந்த பார்வையாளர்களைப் பெற முடியவில்லை. இன்றும், கலிங்க ராவ், மைசூர் அனந்தசுவாமி மற்றும் சி.அஸ்வத் ஆகியோரின் இசையமைப்புகள் இல்லாத ஒரு முழுமையான சுகம சங்கீதா இசை நிகழ்ச்சி நடைபெறுவதில்லை .

கருநாடகாவின் சுகம சங்கீத பரிஷத்தின் 11 வது ஆண்டு சுகம சங்கீத மாநாடான "கீதோத்சவம்-2014" பிப்ரவரி 7–9 அன்று பெங்களூரின், பசவனகுடி தேசியக் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kalinga Rao remembered". Karnataka: The Hindu. 4 January 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/kalinga-rao-remembered/article367739.ece. பார்த்த நாள்: 16 December 2013. 
  2. "Kalinga Rao: Nightingale of Karnataka". Karnataka: OurKarnataka.Com,Inc. 4 January 2009. Archived from the original on 24 நவம்பர் 2005. Retrieved 18 December 2013.
  3. "Down memory lane with Kalinga Rao". India: The Hindu. 4 April 2004 இம் மூலத்தில் இருந்து 19 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219130522/http://www.hindu.com/lf/2004/04/04/stories/2004040409160200.htm. பார்த்த நாள்: 16 December 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகம_சங்கீதம்&oldid=3554912" இலிருந்து மீள்விக்கப்பட்டது