சிங்கைநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிங்கைநகர் என்பது ஒருகாலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்தது எனக் கருதப்படும் ஒரு நகரைக் குறிக்கும். யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதல் அரசனின் பெயர் "சிங்கையாரியன்" எனவும் அவனைத் தொடர்ந்து கிபி 1478 வரை அரசாண்ட கனகசூரிய சிங்கையாரியன் ஈறாக எல்லா அரசர்களும் சிங்கையாரியன் என்னும் பட்டத்தைக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் வந்த இரண்டு அரசர்கள் இப்பட்டத்தைச் சுருக்கிச் சிங்கைப் பரராசசேகரன், சிங்கைச் செகராசசேகரன் என்னும் பெயர்களுடன் ஆட்சி புரிந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.[1] இப்பட்டப் பெயரே சிங்கைநகர் என்னும் ஒரு நகர் இருந்தது என்ற கருத்து உருவானதற்கான அடிப்படை ஆகும். மேலும் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைப்ஒபகுதியை ஒட்டி அமைந்துள்ள கொங்கு நாட்டின் இருபத்தி நான்கு நாடுகளில் ஒன்று காங்கேயம். இதன் பழைய பெயரும் "சிங்கைநகர்" என்பதே. இந்நாட்டின் முதன்மை ஆட்சியாளர்களாக கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமுதாயத்து "பெருங்குடி குலத்தார்" இருந்தனர். பிற்காலத்தில் சோழர் ஆட்சி வீழ்ந்தபின் சோழ தேசத்து வளநாடுகளில் ஒன்றான இராஜகம்பீரவளநாட்டை ஆண்ட அரசகுடியினரான செங்கண்ணக் குலத்தார் இவ்வூரில் மணவினைப்பூண்டு சிங்கையை சீதனமாக கொண்டு இப்பகுதியிலேயே குடியேறி காங்கேய நாட்டு சபையில் முன்னுரிமையும் பெற்ற இவர்கள் "பல்லவராயன்" பட்டம் தாங்கியவர்கள். பின்னர் இப்பகுதியில் பதினெண் வேளிரில் இருவரான தூரம்பாடி தூரன் மற்றும் திருஆவிநன்குடி பதுமன் குலத்தாரும், வணிகர் பெருந்தகையோரும் வெள்ளோடு காணியாளருமான உலகுடைய சாத்தந்தை குலத்தாரும், பதரி, வேந்தன், வாணி ஆகிய குலத்தாரும் இவ்வூரில் குடியமர்த்தப்பெற்றனர்.

பல்வேறு கருத்துக்கள்[தொகு]

சிங்கைநகர் என்னும் நகரம் எது என்பது குறித்து யாழ்ப்பாண வரலாறு தொடர்பாக ஆராய்ந்த அறிஞரிடையே ஒருமித்த கருத்து இல்லை. இருக்கக்கூடிய மிகக் குறைவான வரலாற்று மூலங்களைச் சான்றாகக் கொண்டு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு.

  1. சிங்கைநகர் என்பது நல்லூரே.
  2. சிங்கைநகர் இன்றைய வல்லிபுரப் பகுதியில் இருந்தது. இது நல்லூருக்கு முன்னர் தலைநகராக இருந்தது.
  3. சிங்கைநகர் யாழ் குடாநாட்டுக்குத் தெற்கே தலைநிலத்தில் இருந்தது.
  4. சிங்கைநகர் என்பது கொங்கு நாட்டு காங்கேயமே.

சிங்கைநகர் என்பது நல்லூரே[தொகு]

சிங்கைநகர் என்பது நல்லூரே என்பது இன்னொரு சாரார் கருத்து. கலாநிதி கா. இந்திரபாலா போன்றோர் இக்கருத்தை வலியுறுத்தி வந்தனர். யாழ்ப்பாண வைபவமாலை போன்ற யாழ்ப்பாண வரலாற்று நூல்களும் நல்லூர் தவிர்ந்த இன்னொரு நகரம் தலைநகரமாயிருந்தது பற்றிப் பேசவில்லை.

சிங்கைநகர் என்பது வல்லிபுரமே[தொகு]

சிங்கைநகர் என்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ள இடமான வல்லிபுரம் என்ற இடமே என்பது சில வரலாற்றாளர்களின் கருத்து. செ. இராசநாயகம் போன்றோர் இக்கருத்துடையவர்கள். இவ்விடத்தில் பழங்காலத்தில் கட்டிடங்கள் இருந்ததற்கான தொல்பொருள் சான்றுகளை வைத்தும், தென்னிலங்கையிலுள்ள கோட்டகம என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்றில், .... பொங்கொலி நீர்ச் சிங்கைநக ராரியனைச் சேராவனுரேசர்..., என்று வரும் தொடரில் பொங்கொலி நீர்ச் சிங்கைநகர் எனச் சிங்கைநகருக்கு அடைமொழி தரப்பட்டிருப்பதால், இந்நகரம், பொங்கி ஒலிக்கின்ற அலைகளோடு கூடிய கடற்கரையில் அமைந்திருந்திருக்க வேண்டுமென்ற அடிப்படையிலும் இக் கருத்து முன்வைக்கப் படுகின்றது.

சிங்கைநகர் குடாநாட்டுக்குத் தெற்கே[தொகு]

மிக அண்மைக்காலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் சிங்கை நகரத்தைக் குடாநாட்டுக்கு வெளியே அடையாளம் காணவும் முயன்றுவருகின்றனர்.

சிங்கைநகர் என்பது காங்கேயமே[தொகு]

சிங்கைநகரானது கொங்கு நாட்டு காங்கேயம் என "கொங்கு நாட்டு காணி பாடல்கள்" மூலம் அறியலாம். மேலும் பெருங்குடி போன்ற குலத்தார்களின் காணி பாடல்கள் யாவும் காங்கேயத்தை சிங்கைநகர் என்றே குறிக்கின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. யாழ்ப்பாண வைபவமாலை, 1995, பக். 50.

உசாத்துணைகள்[தொகு]

  • மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாண வைபவமாலை குல. சபாநாதன் பதிப்பு, இந்துசமய அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1995.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கைநகர்&oldid=2437389" இருந்து மீள்விக்கப்பட்டது