சந்திரகாந்தா (கடவுள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரகாந்தா
சந்திரகாந்தா தெஉவம்
தேவநாகரிचंद्रघंटा
வகைதுர்க்கையின் அவதாரம்
கிரகம்சந்திரன்
ஆயுதம்திரிசூலம், தாமரை, கதை, கமண்டலம், வாள், வில், அம்பு, ஜபமாலை, அபயமுத்திரை, ஞான முத்திரை[1]
துணைசிவன்

சந்திரகாந்தா (Chandraghanta) இந்து மதத்தில், துர்கையின் மூன்றாவது வடிவமாக கருதப்படுகிறார். இவரது பெயருக்கு, "மணி போன்ற அரை நிலவைக் கொண்டவர்; இவருடைய மூன்றாவது கண் எப்போதும் திறந்திருக்கும் எனவும், இவர், எப்போதும் அரக்கர்களுக்கு எதிரான போருக்கு தயாராக இருப்பவர் " என்று காரணங்கள் சொல்லப்படுகிறது. இவர், சண்டிகா அல்லது ராண்சண்டி என்றும் அழைக்கப்படுகிறார். இவரது வழிபாடு நவராத்திரியின் மூன்றாம் நாளில் ( நவ துர்காவின் ஒன்பது தெய்வீக இரவுகள்) நடைபெறுகிறது. இவர் தனது அருள், துணிச்சல் மற்றும் தைரியத்தால் மக்களுக்கு வெகுமதி அளிப்பார் என்று நம்பப்படுகிறது. இவருடைய கிருபையால் பக்தர்களின் அனைத்து பாவங்களும், துன்பங்களும், உடல், மன உபத்திரவங்களும், பேய் தடைகளும் ஒழிக்கப்படுகின்றன என்று கருதப்படுகிறது.

புராணம்[தொகு]

புராணத்தில், முன்பு ஒரு சமயம், சிவன் இனி, எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பார்வதியிடம் வாக்கு கொடுத்தார். ஆனால், அதை மீறியதால், பார்வதி சிவனை விட்டு விலகியிருந்தார். சிவன், தன் மனைவி இல்லாமல் தான் அடைந்த துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி, பார்வதியை மீண்டும் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்கிறார். இதனால், பார்வதியின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் வருகிறது. தன் திருமணத்திற்காக, சிவன் கடவுளர்கள், பேய்கள், தேவதைகள், முனிவர்கள், அகோரிகள் மற்றும் சிவ கணங்கள்ஆகிய அனைவருடனும் மன்னர் இமவானின் அரண்மனைக்கு வந்தார். சிவனின் பயங்கர வடிவத்தைக் கண்டதும், மன்னர் இமவானின் மனைவியும், பார்வதியின் தாயுமான மேனாவதி தேவி அச்சத்தினால் மயக்கமடைந்தார். பார்வதி சிவனுக்கு முன்னால் தோன்றி அவரது பயமுறுத்தும் வடிவத்தைப் பார்க்கிறார். அதனால் இவருடைய பெற்றோரையும் மற்ற குடும்ப உறுப்பினர்களையும் காப்பாற்ற வேண்டி, தன்னை சந்திரகாந்தா தேவியாக மாற்றிக் கொள்கிறார்.

திருமணம்[தொகு]

சந்திரகாந்தா சிவனை மீண்டும் ஒரு அழகான வடிவத்தில் தோன்றும்படி வேண்டினார். தேவியின் வேண்டுகோளைக் கேட்டு, சிவன் எண்ணற்ற நகைகளால் அலங்கரிக்கப்பட்ட இளவரசனாகத் தோன்றுகிறார். பார்வதி தனது தாய், தந்தை மற்றும் நண்பர்களை உயிர்ப்பித்தார், பின்னர் சிவபெருமானும் பார்வதியும் திருமணம் செய்துகொண்டு ஒருவருக்கொருவர் வாக்குறுதிகள் அளித்தனர்.

உருவ அமைப்பு[தொகு]

சந்திரகாந்தா பத்து கைகளை உடையவராக காட்சியளிக்கிறார். அவற்றில், திரிசூலம், கதை, (தண்டாயுதம்), வில் - அம்பு, வாள் , தாமரை மலர் , மணி மற்றும் கமண்டலம் எனப்படும் நீர் நிரம்பிய சிறு குடத்தை, அவரது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். எஞ்சியுள்ள ஒரு கையை ஆசீர்வதிக்கும் தோரணை அல்லது அபயமுத்ராவில் வைத்திருக்கிறார். இவர், ஒரு புலி அல்லது சிங்கத்தின் மீது சவாரி செய்பவராக இருக்கிறார். இது, துணிச்சலையும் தைரியத்தையும் குறிக்கிறது, மேலும், இவரது நெற்றியில் பிறை நிலவை அணிந்துகொண்டு, நெற்றியின் நடுவில் மூன்றாவது கண் வைத்திருக்கிறார். இவருடைய நிறம் பொன்னிறமாக உள்ளது. சிவபெருமான், சந்திரகாந்தாவின் வடிவத்தை அழகு, கவர்ச்சி மற்றும் கருணைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதை காண்கிறார்.

மங்களூர் தசரா ஊர்வலத்தின் போது சந்திரகாந்தா விக்கிரகம் எடுத்துச் செல்லப்படுகிறது.

வேறு பெயர்கள்[தொகு]

சந்திரகாந்தா ஒரு புலி அல்லது சிங்கத்தை தனது வாகனமாக ஏற்றுக்கொண்டு சவாரி செய்பவராக குறிப்பிடப்படுகிறார். இது துணிச்சலைக் குறிக்கிறது. மேலும், இவரின் இந்த நிலை, ஒரு பயங்கரமான அம்சமாகவும், இவரின் கோபத்தைக் காட்டும் நிலையாகவும் உள்ளது. துர்காவின் இந்த வடிவம் முந்தைய வடிவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதல்ல என்று கருதப்படுகிறது. இவர், தூண்டப்படும்போது, மூர்க்கமானவராக மாறுவதை சுட்டிக்காட்டுகிறது. இவரது மூர்க்கமான வடிவம் சண்டி அல்லது சாமுண்டி தேவி என்று கூறப்படுகிறது. மற்ற நேரங்களில், இவர், அமைதியின் உருவகமாக சித்தரிக்கப்படுகிறார்.

கௌசிகி அவதாரம்[தொகு]

சும்பன் மற்றும் நிசும்பன் அரக்கர்களின் படையினரை வெல்லும் பொருட்டு துர்கா கௌசிகியாக அவதரித்தார். கௌசிகியின் அழகு அரக்கர்களின் அழிவுக்கு ஈர்ப்பதாக இருந்தது. கௌசிகியை தனது சகோதரர் நிசும்பனுக்கு திருமணம் செய்து கொள்ள விரும்பிய சும்பன், இவரை அழைத்து வர தும்ரலோகன் என்ற அரக்கனை அனுப்பினான். இவர், எதிர்த்தபோது, தும்ரலோகன் இவரைத் தாக்கினான். கோபமடைந்த, மாதா பார்வதி வெறும் 'ஹும்கர்' மூலம் தும்ரலோகனை அழித்தார் எனப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [2]

குறிப்புகள்[தொகு]

  1. "What is Gyan Mudra?". inShape. பார்க்கப்பட்ட நாள் 13 October 2017.
  2. "Goddess Chandraghanta". DrikPanchang. பார்க்கப்பட்ட நாள் 26 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகாந்தா_(கடவுள்)&oldid=3887485" இலிருந்து மீள்விக்கப்பட்டது