சதி அனுசுயா கோயில், உத்தராகண்டம்

ஆள்கூறுகள்: 30°28′48″N 79°17′01″E / 30.48000°N 79.28361°E / 30.48000; 79.28361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுசுயா கோயில்
அனுசுயா கோயிலின் வெளிப்புறக் காட்சி
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது
உத்தரகாண்டில் அமைவிடம்
பெயர்
வேறு பெயர்(கள்):அனுசுயா தேவி, அம்மா அனுசுயா, அனுசுயா
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தராகண்டம்
மாவட்டம்:சமோலி
அமைவு:அனுசுயா (கிராமம்), கர்வால்
ஏற்றம்:2,195 m (7,201 அடி)
ஆள்கூறுகள்:30°28′48″N 79°17′01″E / 30.48000°N 79.28361°E / 30.48000; 79.28361
கோயில் தகவல்கள்

சதி மாதா அனுசுயா கோயில் (Anusuya Devi Temple) என்பது இந்தியாவின் உத்தரகண்ட்ட மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள மண்டலில் அமைந்துள்ளது. இக்கோயிலானது நகர்ப்புற இரைச்சலில் இருந்து விலகி அடர்ந்த காட்டுகு மத்தியில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இந்த கோயிலுக்கான பயணம் சாதாரண சுற்றுலாப் பயணிகளுக்கு சிலிர்ப்பைத் தரக்கூடியதாக இருக்கும். இமயமலையின் உயரமான அணுக முடியாத மலைப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை அடைய சுமார் ஐந்து கிலோமீட்டர் மலையில் நடந்தே செல்ல வேண்டும்.

கோயிலுக்குச் செல்ல, சாமோலி மாவட்டம் மண்டல் என்று அழைக்கப்படும் இடம் வரை சாலை வசதி உள்ளது. தொடருந்து அல்லது பேருந்து மூலம் ரிஷிகேசை அடையலாம். அதன் பிறகு சிறீநகர் மற்றும் கோபேஸ்வர் வழியாக மண்டலை அடையலாம். மண்டலில் இருந்து அனுசுயா கோவிலுக்கு ஐந்து கிலோமீட்டர் செங்குத்தாக ஏறிச் செல்லவேண்டும். கோயிலுக்குச் செல்லும் வழியின் தொடக்கத்தில் உள்ள மண்டல் கிராமம் முழுவதும் பழ மரங்கள் நிறைந்துள்ளது. மலைப் பழமான ஆரஞ்சு இங்கு மிகுதியாகக் காணப்படுகிறது. கிராமத்தின் அருகே ஓடும் அமிர்த கங்கை ஆறு மலையேறுபவர்களை உற்சாகப்படுத்துவதாக உள்ளது. அனுசுயா கோயிலை அடையும் வழியில், பாஞ்ச், புரான்ஸ், தியோதர் காடுகள் கொள்ளை கொள்ளும். நடந்து செல்லும் பயணிகளின் களைப்பை நீக்கும் வகையில், போதிய அளவு இளைப்பாறும் இடங்களும், ஆங்காங்கே குடிநீர் வசதியும் செய்யபட்டுள்ளது.

பயணிகள் கோயிலுக்கு அருகில் வந்ததும் முதலில் பார்ப்பது பாறையில் அமைக்கபட்டுள்ள பிரம்மாண்டமான விநாயகர் சிலை ஆகும். இந்த பாறை இங்கு இயற்கையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதைப் பார்க்கும்போது இங்கு விநாயகர் வலது பக்கம் சாய்ந்து தளர்வான நிலையில் அமர்ந்திருப்பது போல் தோன்றுகிறது. இங்கு அனுசுயா என்ற சிறிய கிராமம் உள்ளது. அங்குதான் இந்தக் கோயில் உள்ளது. நாகரா பாணியில் இக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

தொன்மம்[தொகு]

அத்ரி முனி இங்கிருந்து சிறிது தூரத்தில் தவம் செய்து கொண்டிருந்த போது, அவரது மனைவி அனுசுயா பதிவிரதை தர்மத்தை பின்பற்றி இந்த இடத்தில் தங்கியிருந்தாக கூறப்படுகிறது. அனுசுயா தேவியின் மகிமையை மூவுலகமும் போற்றத் துவங்கியபோது, பார்வதி, லட்சுமி, சரசுவதி ஆகியோர் அனுசுயாவின் கற்பை சோதிக்க பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை கட்டாயப்படுத்தினர் என்று கூறப்படுகிறது. தொன்மக் கதைகளின் படி, மும்மூர்திகளும் அனுசுயா தேவியை சோதிப்பதற்காக துறவிகள் வேடத்தில் அந்த ஆசிரமத்தை அடைந்தனர். உணவு உண்ண அழைத்த அனுசுயாவிடம் தாங்கள் உணவருந்த வேண்டுமானானல் அனுசுயா நிர்வாணமாக வந்து தன் மடியில் உட்கார வைத்து கட்டிப்பிடித்து ஊட்டிவிடுவேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர். இதனால் அனுசுயாவுக்கு அவர்கள் மீது ஐயம் ஏற்படுகிறது. தன் ஞானப்பார்வையினால் வந்திருப்பது, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் என்பதை அறிகிறாள். அனுசுயா தன் கற்பின் வலிமையால் இந்த மூன்று தெய்வங்களையும் ஆறு மாத குழந்தைகளாக மாற்றுகிறாள். பின்னர் அனுசுயா மும்மூர்திகளுக்கும் அவர்கள் கேட்டதற்கு இணங்கியவாறே நிர்வாணமாக உணவளிக்கிறாள். முப்பெரும் தேவியரும் தங்கள் கணவர்கள் திரும்பி வராததால் கவலையுற்றனர். பின்னர் நாரதரின் ஆலோசனையின்படி, அவர்கள் தங்கள் கணவர்களை அவர்களின் அசல் வடிவத்தில் திருப்பித் தர அனுசுயாவிடம் வேண்டுகின்றனர். தன் கற்பின் பலத்தால், அனுசுயா மும்மூர்திகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகிறாள். அதற்கு நன்றிக் கடனாக முப்பெரும் தேவியர் மூன்று குழந்தைகளை ஒன்றாக இணைத்து ஒரே குழந்தையாக மாற்றுகின்றனர். மேலும் மூன்று தெய்வங்களின் முகத்தையும் அந்த உருவத்துக்கு அளிக்கின்றனர். அவரே தத்தாத்ரேயர் ஆவார். இந்த இடத்தில் குழந்தை பிறப்பு நடந்ததால் ஏராளமானவர்கள் குழந்தை வரம் வேண்டி வருகின்றனர்.[1]

கோயில்[தொகு]

இந்தக் கோயிலானது கருறை அதன் மேல் கோபுரம், முன்பக்கம் முன் மண்டபம், உள் மண்டபம் கருவறை ஆகிய அமைப்புகளுடன் உள்ளது. கருவறையில் வெள்ளிக் கவசத்தினாலான அலங்காரத்தில் அனுசியாவின் முகத்தை தரிசிக்கலாம். அதன் பின்னால் பெரிய அளவில் கருப்புக் கல்லில் அனுசுயா சிலை உள்ளது. அதன் மேல் ஒரு வெள்ளி குடை வைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் சிவன், பார்வதி, பைரவர், பிள்ளையார் மற்றும் வன தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலில் இருந்து சற்று தொலைவில் அனுசுயாவின் மகன் தத்தேத்ரயரின் மூன்று முகம் கொண்ட கற்சிலை நிறுவப்பட்டுள்ளது. இப்போது இங்கு ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது.

அனுசுயா கோயிலில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் அத்திரி முனிவரின் ஆசிரமம், ஒரு பெரிய பாறைப் பகுதியில் குகையினுள் அமைந்துள்ளது. குகையை அடைய சங்கிலியைப் பிடித்துக் கொண்டு பாறை ஏற வேண்டும். குகையில் அத்ரி முனிவரின் கற்சிலை உள்ளது. மேலும் இங்கு உள்ள அமிர்த கங்கை என்ற அருவியின் அழகிய காட்சி பக்தர்கள் மற்றும் சாகச சுற்றுலா ஆர்வலர்களை ஈர்க்கும் மையமாக உள்ளது. குகைக்கு வெளியே உள்ள அமிர்த கங்கை மற்றும் அருவியின் காட்சி மனதை மயக்குவதாக உள்ளது.

இங்கு தங்குவதற்கு பல சிறிய தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த பகுதி நவீன சுற்றுலாவாக கண்ணை உறுத்தாமல், சுற்றுச்சூழலை அழிக்காத சுற்றுலா செயல்பாட்டுக்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டாக உள்ளது. இங்குள்ள கட்டடங்கள் பாரம்பரியமாக கல், மரம் போன்றவற்றால் கட்டப்பட்டுள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தத்தாத்ரேய ஜெயந்தி அனுசுயாவின் மகனான தத்தாத்ரேய பகவானின் பிறப்பைக் குறிக்கும் வகையில் இங்கு ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் மாதத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது, இது மார்கழி மாதத்தின் சதுர்தசி மற்றும் பூர்ணிமா (பொதுவாக திசம்பர்) அன்று வருகிறது.

சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்களால், இந்த இடம் ஆண்டு முழுவதும் பார்வையிடப்படுகிறது. இந்த இடத்திலிருந்து, பஞ்ச கேதாரங்களில் ஒன்றான துங்கநாத் ருத்ரநாத் செல்லும் வழியும் உள்ளது. இங்கிருந்து ருத்ரநாத் கோவிலின் சுமார் 7-8 கி.மீ. தொலைவில் உள்ளது. பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இங்கு நிலவும் அமைதியிலும், பக்தி சூழலிலிலும் இயற்கையின் மத்தியில் தங்கள் உணர்வுகளை இழக்கிறனர்.

எப்படி அடைவது[தொகு]

இங்கு செல்ல, முதலில் ரிஷிகேசை அடைய வேண்டும். பயணிகள் பேருந்து அல்லது தொடருந்து மூலம் ரிஷிகேசை அடையலாம். ஜாலிகிராண்ட் வானூர்தி நிலையமும் அருகில் உள்ளது, அதன் வழியாகவும் வானுர்தி வழியாக செல்லலாம். ரிஷிகேசில் இருந்து சுமார் 217 கிலோமீட்டர் தொலைவு சென்ற பிறகு கோபேஷ்வர் அடையவேண்டும். கோபேஷ்வரில் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் மலிவான, தூய்மையான விடுதிகள் ஏராளமாக உள்ளன.

கோபேஷ்வரில் இருந்து 13 கிலோமீட்டர் தூரம் சென்றதும் மண்டல் என்ற இடம் வருகிறது. பேருந்து அல்லது வாடகை மகிழுந்து மூலம் எளிதாக மண்டலை அடையலாம். மண்டலில் இருந்து சுமார் 5-6 கிலோமீட்டர் செங்குத்தான மலைமீது ஏறினால் அனுசுயா தேவி கோயிலை அடையலாம். இது மலை வானிலை நிலவும் இடமாகும். எனவே வெப்பத்தை தக்கவைக்கும் ஆடைகளை உடன் எடுத்துச் செல்வது நலம். மேலும், தேவைப்படும் மருந்துகளை வைத்திருப்பது அவசியம்.

செல்ல ஏற்ற காலம்[தொகு]

அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இங்கு செல்ல ஏற்ற காலமாகும். அப்போது சென்றால் மழைக்காலத்தையும், குளிர்காலத்தையும் தவிர்க்கலாம்.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சீதையைக் காண உதவிய அனுசுயா!". Hindu Tamil Thisai. 2023-04-13. பார்க்கப்பட்ட நாள் 2023-05-24.