உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க காலப் பழக்க வழக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககால மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றிய தொகுப்பினை அறிஞர் குழு ஒன்று தொகுத்து வழங்கியுள்ளது. [1] அவை அகர வரிசையில் உள்ளன. அவற்றை இங்கு காணலாம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் 18 சங்க நூல்களில் காணப்படும் செய்திகள் இவை. 18 நூல்களில் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, பரிபாடல் ஆகிய மூன்று நூல்களில் மட்டும் தெய்வங்களைப் பற்றிய கதைகள் மிகுதியாக உள்ளன. ஏனைய 15 நூல்களில் இவை காணப்படவில்லை. எனவே இந்த நூல்களில் காணப்படும் புதிய பழக்க வழக்கங்களைப் பிற்காலத்தவை எனக் கருதலாம்.

அகரவரிசை (பொது)[தொகு]

[தொகு]

 • அகழியில் முதலையை இடுதல் [2] [3]
 • அசுணம் பறவையை யாழிசை மீட்டும் கைத்திறத்தால் பிடிப்பர். [4]
 • அயலார் சுடலையை (அயலார் சமைக்கும் அடுப்பை) அடுத்தவர் பார்க்கமாட்டார். [5]
 • அரிசி மாவால் கோலம் போடுவர் (மெழுகிய தரையில்) [6]
 • அவல் இடிக்கும் உலக்கை ஒலி [7]
 • அறச்சாலை (அன்னதான மடம்) அமைத்தல் [8]
 • அறநூல் (வடமொழி வேதம்) பெண்ணைத் தூக்கிச் சென்று நுகர்தலையும் அறம் என்று காட்டுகிறது. [9]
 • அறங்கூறு அவையம் [10]

[தொகு]

[தொகு]

 • தழையாடை - தழையாடை என்பது சங்ககாலத்தில் மகளிர் அணிந்து கொண்ட அணிகல ஆடை. மகளிர் தம் நூலாடைக்கு மேல் ஒப்பனை ஆடையாக இதனை அணிந்து கொள்வது வழக்கம். ஆண்கள் பூமாலை அணிந்து கொள்வது போலப் பெண்கள் அணிந்து கொள்ளும் ஒப்பனை ஆடைதான் தழையாடை. இதனை எங்கெங்கெல்லாம், எப்படி எப்படியெல்லாம் அணிந்துகொண்டனர் என்பதைப் புலவர் தூங்கலோரியார் தெளிவுபடுத்துகிறார். தழையாடையை மகளிர் இடையில் உடுத்திக்கொள்வர். மேலாடையாக மாட்டித் தொங்கவிட்டுக் கொள்வர். அணிகலன்

போலப் பூண்டுகொள்வர். தம் நூலாடையின் மேல் செருகிக்கொள்வர். [11]

[தொகு]

 • நடுகல் - பரல்கற்கள் நிறைந்த பாதை. அங்கே பாறைக் கற்களை அடுக்கி வைத்த பதுக்கைக் குகை. அந்தப் பதுக்கையில் நடுகல். மரல்நாரைக் கிழித்துச் செந்நிறப் பூக்களால் கட்டிய கண்ணியை அந்த நடுகல்லின் தலையில் சூட்டினர். மயில் பீலியை அந்த நடுகல்லோடு கட்டிவைத்தனர். [12]

பூ[தொகு]

 • பூப்பு - அடையாளம் காட்டுதல் - தலைவி பூப்பு எய்தியுள்ள காலத்தில் தோழிக்குச் செந்நிற ஆடை உடுத்திப் பரத்தைமாட்டு உள்ள தலைவனிடம் அனுப்புவது வழக்கம். * செந்நிறம் பூசித்தான் பூப்பெய்தியிருத்தலைப் புலப்படுத்துவது அக்கால வழக்கம் [13]

அகரவரிசை (மக்கள்)[தொகு]

வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை வேத்தியல், பொதுவியல் என்று பகுத்துக் காண்பது தமிழ்நெறி. அந்த வகையில் ஆட்சியாளர் பழக்க வழக்கம் என்றும், பொதுமக்கள் பழக்க வழக்கம் என்றும் பகுத்துக்கொண்டு தொடர்புடைய செய்திகள் தரப்படுகின்றன. பொதுமக்களின் பழக்க வழக்கங்கள் சங்ககால நெறிப்படி ஐந்திணைப் பாகுபாட்டில் தொகுக்கப்படுகின்றன. அதிலும் நிலமக்கள் பாகுபாடு இன்றிப் பொது நோக்கில் பொதுமக்கள் பழக்க வழக்கங்கள் என்னும் பார்வையிலும் செய்திகள் தரப்படுகின்றன.

நிலமக்கள் பழக்க வழக்கம்[தொகு]

குறிஞ்சி நில மக்கள்[தொகு]

 • கானவன் பயிரை அழிக்க வரும் யானைகளை அம்பு எய்து ஓட்டுவான். மகளிர் கிளி ஓட்டுவர். பயிரிடும் குறிஞ்சி நிலத்தைப் புனம் என்பர். [14]
 • 'வரி அதள் படுத்த சேக்கை' கூதிர் காலத்தில் குறிஞ்சிநில மக்கள் வரிப்புலித் தோலில் உறங்குவர். [15]
 • காட்டுப் பன்றியைப் புருவைப் பன்றி என்றனர். மலைநிலத்தில் விளைந்திருக்கும் தினையைப் புலுவைப் பன்றி மேய வரும். குறிஞ்சிநிலக் கானவன் பரண்மீது ஏறி இருந்துகொண்டு தன் கையிலிருக்கும் சீப்பத்தத்தைச் சுற்றி அதனை ஓட்டுவான். [16]

முல்லை நில மக்கள்[தொகு]

 • கோவலர் தலையில் கோடல் என்னும் வெண்காந்தள் பூவைச் சூடிக்கொள்வர். [17]

நெய்தல் நில மக்கள்[தொகு]

 • உப்பு விளைவித்தல் [18]
 • கடலில் மீன் பிடித்தல் [19]
 • உளியை மீன்மீது வீசி மீன் பிடித்தல் [20]
 • கடலில் குளித்துக் கொண்டுவந்த முத்துகளைப் பங்கு போட்டுக் கொள்ளுதல் [21]
 • வெளியூரில் உப்பு விற்க வண்டியில் ஏற்றிச் செல்லல் [22]
 • பரதவர் இரவு வேளையில் தம் திமில்களில் விளக்கேற்றி வைப்பர். [23]

பாலை நில மக்கள்[தொகு]

 • செம்பூழ் என்னும் பறவை பறையொலி கேட்டால் அதன் ஒலியில் மயங்கித் தன்னை மறந்து ஆடும். அதனைக் களவாடும் மக்கள் அவை விளையாடும்போது திடீரெனத் தண்ணுமையை முழக்கி அது ஆடும்போது எளிதாகப் பிடித்துக் கொள்வர். [24]

படையினர்[தொகு]

 • போரில் வெற்றி பெற உதவிய போர் வீரர்களுக்குத் தாரும், கண்ணியும் வழங்கிப் பாராட்டுவது அரசன் வழக்கம். [25]
 • வயவர் (படை வீரர்கள்) அம்பின் கூர்முனையில் மயிற்பீலி - மயில் ஆடும்போது அதன் பீலி தானே உதிரும். அந்தப் பீலியின் அடிநுனிகளை வெட்டிச் செருகி தம் அம்புகளைச் செய்துகொள்வர். [26]

பரத்தை[தொகு]

பரத்தையரில் நயப்புப் பரத்தை இற்பரத்தை என்னும் பிரிவுகள் இருந்தன பாவைக்கொட்டிலாரின் [27] [28]

இற்பரத்தை என்பவள் ஆண்மகனின் இரண்டாவது மனைவி. தனி இல்லம் ஒன்றில் தலைவன் ஒருவனுக்காகவே வாழ்பவள். சிலப்பதிகாரக் காப்பியத்தில் வரும் மாதவி இற்பரத்தை.

நயப்பு என்பது விருப்பம். "நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ பிற" - திருக்குறள் 1181; "நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும், பசந்து பனி வாரும் கண்" - திருக்குறள் 1232; என்னும் பாடல்களில் நயப்பு என்னும் சொல் விருப்பம் என்னும் பொருள் தருவதைக் காணலாம். ஆணும் பெண்ணும் விரும்பிக் காம உணர்வு தீர உடலுறவு கொள்ளும்போது அமையும் பரத்தை நயப்புப்பரத்தை.

பொதுமக்கள் பழக்க வழக்கம்[தொகு]

 • (தாலி) நேரிழை; ஒருவனுக்கு நேரப்பட்டவள் என்பதைக் காட்டும் அணி நேரிழை. கணவன் தன் மனைவியை நேரிழை என்று குறிப்பிடுவது வழக்கம். [29]
 • மகப்பேறு நிகழும் காலத்தில் ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய் ஊற்றி வயிரக் கட்டைகளை எரியவிடுவர். ([30]
 • பொதியில் என்னும் ஊர்ப் பொதுவிடத்தில் உள்ள கோயில் சுவரில் கடவுள் ஓவியம் எழுதியிருப்பர். அதற்குப் பலிப் படையல் செய்வர். [31]
 • மகளிர் தம் பாதத்துக்கு மேல் உள்ள விளிம்புகளில் சிவப்புச்சாயம் ஏற்றி ஒப்பனை செய்துகொள்வர். அழகணம் என்றும் மருதாணி என்றும் சொல்லப்படும் மருத்தோன்றி இலையை அரைத்துப் பூசி அப்பகுதியில் சிவப்புச்சாயம் ஏற்றுவர். உள்ளங்கைகளிலும் இந்த வகையில் சாயம் ஏற்றிக்கொள்வர். இப்படிச் சாயம் ஊட்டிக்கொள்ளும் பழக்கம் சங்ககாலத்திலும் இருந்தது. இதனை 'ஊட்டி' என்னும் சொல்லால் வழங்கினர். [32]
 • 'புதுநாண்' என்று தாலியைக் குறிப்பிட்டனர். அதனை ஒரு காப்பீடாகவும் கருதினர். 'புதுநாண் நுழைப்பான் நுதி மாண் வல் உகிர்ப் பொலங்கல ஒரு காசு' போல் வேப்பம்பழம் போல இருக்குமாம். [33]
 • வாலிழை என்பது தாலியைக் குறிக்கும். சங்ககாலத் திருமணச் சடங்கு - உழுத்தம்பருப்பு வடையுடன் பெருவிருந்து அளிக்கப்படும். பந்தல் போட்டுப் புதுமணல் பரப்பப்படும். மணப்பந்தலில் விளக்கு வைத்து மாலைகள் தொங்கவிடப்படும். நிறைமதி நாளில் விடியற்காலத்தில் திருமணம் நடைபெறும். பொதுமக்களின் ஆரவாரத்துடன் வயது முதிர்ந்த பெண்களில் சிலர் தலையில் நிறைகுடத்துடன் முன்னே வருவர். சிலர் புதிய அகல் விளக்குடன் பின்னே வருவர். இடையில் மணப்பெண் அழைத்துவரப்படுவாள். மக்களைப் பெற்றவரும், மங்கலநாண் எனப்படும் வாலிழை அணிந்தவருமாகிய மகளிரில் நான்கு பேர் மணப்பெண் தலையில் நீரில் நனைத்த பூக்களையும், நெல்லையும் தூவி வாழ்த்துவர். 'கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆகு' என்பர். கற்பு நெறியில் வழுவாமல் வாழ்க. நல்ல குழந்தைகளாலும், பொருளாலும் பலவாறாகப் பலருக்கும் உதவி புரிக. உன்னைப் பெற்ற கணவனை விரும்பும் பிணையலாக (பெண்மானாக) நடந்துகொள்க - என்பர். [34]
 • தாயும் மகனும் விளையாடியபோது மகனாகிய சிறு குழந்தை பொன்னாலாகிய தாலி அணிந்திருந்தான் [35]
 • கணவனை இழந்த பெண்ணின் தலைமயிர் கொய்யப்படும். கை வளையல்கள் களையப்படும். அல்லி இலையில்தான் அவர்கள் உணவு உண்ணவேண்டும். [36]

நம்பிக்கை[தொகு]

காட்டில் வாழும் ஆண் ஓதி (ஓதி = ஓணான் வகையில் ஒன்றான பச்சோந்தி) தன் பெண் ஓதியை அழைக்கப் போடும் சத்தத்தைக்கூட நல்ல புள் (நல்ல சகுனம்) என்று கருதினர். [37]

சகுனம்[தொகு]

சகுனம் என இக்காலத்தில் வழங்கும் பொதுச்சொல் சங்ககாலத்தில் புள், நாள், ஓரை, நிமித்தம் போன்ற சொற்களால் உணர்த்தப்பட்டது. அவற்றின் பொருள் தனித்தனிக் கருத்துகளை உணர்த்தின.

 • சாகக் கிடப்பவன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சுடர் ஆடினால் இறந்துபோவான். [38]
 • குராஅல் என்னும் கோட்டான் கத்தினால் சாவு [39]
 • பிறர் தற்செயலாகப் பேசிக்கொள்ளும் ஒலியை வாய்ப்புள் என்று எடுத்துக்கொள்வது
 • தற்செயலாக நிகழும் காட்சிகளை விரிச்சி என எடுத்துக்கொள்வது.
 • எரிமான் வழுந்தால் அரசனுக்குக் கேடு என்பது [40]
புள்[தொகு]
 • பல்லி படும் ஒலியையும், மயில் அகவும் ஒலியையும் 'புள்' சகுனமாக எடுத்துக்கொண்டனர். (காப்பியஞ் சேந்தனார் - நற்றிணை 246)
நாள்[தொகு]

'மறைந்த ஒழுக்கத்து நாளும் ஓரையும் துறந்த ஒழுக்கம் கிழவோர்க்கு இல்லை' (தொல்காப்பியம் களவியல் 44)

ஓரை[தொகு]

ஓரையை இக்காலத்தில் முகூர்த்தம் என்கிறோம். ஒரு நாளைப் பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை என்று பகுத்துக் காண்பது அக்காலத் தமிழர் வழக்கம். இந்த 60 நாழிகையைப் பகல் 12 ஓரைகளாகவும், இரவு 12 ஓரைகளாகவும் பகுத்துப் பார்த்தனர். இதன்படி 2½ நாழிகை ஒரு ஓரை என அமையும்.

ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும் பகுத்துக் காண்பது மேலை நாட்டு முறைமை. அதே நாளை முதலில் 60ஆல் வகுத்து நாழிகை என்று பெயரிட்டு அந்த நாழிகையைப் பின்னர் 24ஆல் வகுத்துக் காண்பது இந்தியக் கணியம்.

நிமித்தம்[தொகு]
 • நாளும் புள்ளும் பிவற்றின் நிமித்தமும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 26)
 • புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (தொல்காப்பியம் அகத்திணையியல் 16)
 • தன்னும் அவளும் சுட்டி மன்னும் நிமித்தம் (தொல்காப்பியம் அகத்திணையியல் 39)

விளையாட்டுகள்[தொகு]

 • மகளிர் மணலில் கழங்கு விளையாடுவர். கழங்குக் காய்கள் முத்தாகவோ, முத்துப் போன்ற வண்ணிறக் கூழாங் கற்களாகவோ இருக்கும். மகளிர் அந்தக் கழங்குக் காய்களை மணலில் பாவி ஒன்றை ஒன்று தொடும்படி சுண்டி விளையாடுவர். இக்காலத்தில் இந்த விளாயாட்டை 'ஒண்ணாங்கல் இரண்டாங்கல்' என்றும், 'பாண்டி' என்றும் பெயர் கொண்ட விளையாட்டாக விளையாடுவர்.

அறிவியல்[தொகு]

 • 'மிசைப் பெய்த நீர் கடற் பரந்து முத்தாகுந்து' என்னும் தொடரில் மழைநீர் கிளிஞ்சலில் நுழைந்து முத்தாகும் அறிவியல் உண்மை வெளிப்படுகிறது. [41]

வாணிகம்[தொகு]

கடல் வாணிகம்[தொகு]

 • கலம்

தமிழ்நாட்டு மக்கள் மரக்கலக் கப்பலைச் சூறாவளியிலிருந்து காப்பாற்றும் பாங்கை நன்கு அறிந்திருந்தனர். இதை என்பது கப்பல் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் பாய். பயின் என்பது நங்கூரம். பாயும், பாயைக் கட்டிய கயிறும் அறுந்து சிதைந்த பொழுது நங்கூரம் பாய்ச்சி நிறுத்தும் பாங்கைத் தமிழர் அறிந்திருந்தனர். [42]

 • சேர மன்னர்களின் வாணிக நாவாய்

குட்டுவன் என்னும் சேரன் மேலைக் கடலில் கப்பல் ஓட்டிப் பொன்னைக் கொண்டுவந்த காலத்தில் பிற அரசர்களின் கப்பல்கள் மேலைக்கடல் வழியாகச் செய்த கடல் வாணிகம் தடைபட்டுக் கிடந்தது. [43]

 • யவனர்

யவனரின் மரக்கலக் கப்பல்கள் சேரநாட்டில் பாயும் பெரியாறு வழியாக உள்நாட்டுக்குள் புகுந்து தாம் கொண்டுவந்த பொன்னைக் கொடுத்துவிட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தம் நாட்டுக்குத் திரும்பும். [44]

விழாக்கள்[தொகு]

 • ஊரில் விழா நடக்கும் காலத்தைக் குயவன் தெருத்தெருவாகச் சென்று அறிவிப்பான் [45]
 • வெறியாட்டு நிகழும்போது வெறியாட வைக்கும் பெண்ணுக்கு அரலை மாலை (அரலிப் பூ மாலை) சூட்டுவர். [46]

மேற்கோள் அடிக்குறிப்பு[தொகு]

 1. பதிப்பு-ஆசிரியர் குழு, பாட்டும் தொகையும், எஸ். ராஜம் 5 தம்பு செட்டித் தெரு சென்னை வெளியீடு, (மர்ரே அண்டு கம்பெனி) சென்னை வெளியீடு, 1958
 2. கோள் வல் முதலைய குண்டு கண் அகழி - பதிற்றுப்பத்து 53
 3. கராஅம் கலித்த குண்டு கண் அகழி, -புறம் 37
 4. அசுணம் கொல்பவர் கை போல், நன்றும், இன்பமும் துன்பமும் உடைத்தே, தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே. - நற்றிணை 304
 5. ஏதிலாளர் சுடலை போலக், காணாக் கழிபமன்னே-நாண் அட்டு, நல் அறிவு இழந்த காமம் -குறுந்தொகை 231
 6. வால் அரிசிப் பலி சிதறி, (165) பாகு உகுத்த, பசு மெழுக்கின், - பட்டினப்பாலை
 7. புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் ( 225) அவல் எறி உலக்கைப் பாடு விறந்து, அயல , கொடு வாய்க் கிள்ளை படு பகை வெரூஉம், - பெரும்பாணாற்றுப்படை
 8. அறம் நிலைஇய அகன் அட்டில் , சோறு வாக்கிய கொழுங் கஞ்சி - பட்டினப்பாலை
 9. ‘மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை (15) வௌவிக் கொளலும் அறன்’ எனக் கண்டன்று - கலித்தொகை 62
 10. அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி, செற்றமும் உவகையும் செய்யாது காத்து, (490) ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி, சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும் - மதுரைக்காஞ்சி
 11. (குறுந்தொகை 295)
 12. உறையூர்ப் பொன்வாணிகனார் - புறம் 264
 13. (நல்லழிசியார் - பரிபாடல் 16)
 14. உழுந்தினைம் புலவர் - குறுந்தொகை 333
 15. (இளந் தேவனார் அகநானூறு 58)
 16. (ஈழத்துப் பூதன்தேவனார் அகநானூறு 88)
 17. (உம்பற்காட்டு இளங்கண்ணனார் - அகம் 264)
 18. (அகநானூறு 280)
 19. (அகநானூறு 280)
 20. (கணக்காயன் தத்தனார் குறுந்தொகை 304)
 21. (அகநானூறு 280)
 22. (அகநானூறு 140)
 23. (நற்றிணை 219)
 24. (கண்ணம் புல்லனார் - அகநானூறு 63)
 25. கடுவன் இளமள்ளனார் - நற்றிணை 150
 26. உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் - அகம் 69
 27. அகநானூறு 336ஆம் பாடலுக்குத் தரப்பட்டுள்ள கொளுக்குறிப்பு
 28. "நயப்புப்பரத்தை இற்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது" - இதுதான் அந்தக் கொளுக்குறிப்பு.
 29. (உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் - நற்றிணை 370)
 30. உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் - நற்றிணை 370)
 31. (அகநானூறு 167)
 32. (ஊட்டியார் - அகநானூறு 68)
 33. (அள்ளூர் நன்முல்லையார் - குறுந்தொகை 67)
 34. (நல்லாவூர் கிழார் - அகநானூறு 86)
 35. (கொற்றங் கொற்றனார் - அகம் 54)
 36. (தாயங்கண்ணியார் - புறநானூறு 250)
 37. (அள்ளூர் நன்முல்லையார் - குறுந்தொகை 140)
 38. புறநானூறு 280
 39. புறநானூறு 280
 40. புறநானூறு 229
 41. (கதப் பிள்ளையார் - புறநானூறு 380)
 42. 'இதையும் கயிறும் பிணையும் இரியச், சிதையும் கலத்தைப் பயினால் திருத்தும் சிசையறி மீகானும் போன்ம்' (கரும்பிள்ளைப் பூதனார் - பரிபாடல் 10)
 43. 'வானவன் குடகடல் பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப் பிற கலம் செல்கலாது' (மாறோக்கத்து நப்பசலையார் - புறநானூறு 126)
 44. 'சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் முசிறி' (தாயங்கண்ணனார் - அகநானூறு 149)
 45. (நற்றிணை 200)
 46. (குறுந்தொகை 214)