நல்லழிசியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லழிசியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது காடல்கள் இரண்டு பரிபாடல் நூலில் இடம்பெற்றுள்ளன. 16ஆம் பாடல் வையை ஆற்றின்மீதும்,17ஆம் பாடல் செவ்வேள் முருகப்பெருமான் மீதும் பாடப்பட்டுள்ளன. இரண்டு பாடலுக்கும் நல்லச்சுதனார் என்பவர் இசை அமைத்து அவற்றை நோதிறம் என்னும் பண்ணில் பாடியுள்ளார். நல்லச்சுதனாரும் பரிபாடல் பாடிய புலவர்களில் ஒருவர்.

பரிபாடல் 16 வையை - செய்தி[தொகு]

வையையில் காதல் பரத்தையோடு நீராடிய தலைவன் தன் மனைவியாகிய தலைவியிடம் வருகிறான். தோழி அவன் விளையாடிய வையை ஆற்றைப்பற்றிக் கூறி வாயில் மறுக்கிறாள்.

  • மிளகு, சந்தனம், நுரை, முத்துவடம், தக்கோலமுத்து, பொன்னணி, மணி, குழந்தை தலையில் சூடும் முஞ்சம் என்னும் அணி முதலானவற்றைச் சுமந்துகொண்டு வந்து வீசுவதால் வையையாறு கொடை நல்கும் பாண்டியனை ஒத்ததாயிற்று.
  • அந்த நீர் வயலில் பாய்ந்து அணிகலன்களும் பூக்களும் சிதறிக் கிடத்தலால் நாடகம் ஆடிய களம் போல் வயல் காணப்பட்டது.
  • தனக்கு விருந்தளிக்கும் வையைக்குச் சோலைகள் எதிர்விருந்து தருவது போல மலர்களையும் தேனையும் சொரிந்தன.
  • காதல் பரத்தை ஒருத்தி நீராடினாள். அவளது தோழிமார் அவளைச் சுற்றி நின்றுகொண்டு மூங்கிலால் செயத பீச்சாங்குழாயால் அவள் மார்பில் செந்நீரைப் பீச்சினர். அவள் அந்த நீரைத் தன் துணியால் ஒற்றினாள். அது மார்பில் செந்நிறம் பூசியது போல் ஆயிற்று. (செந்நிறம் பூசித் தான் பூப்பெய்தியிருத்தலைப் புலப்படுத்துவது அக்கால வழக்கம்) அப்போது அவளது தலைவன் அங்கு வந்தான். தோழியர் 'பூப்பெய்தினாள்,செல்லாதே' என்றனர். அவன் அவள்மீதுள்ள மணத்தால் உண்மையை உணர்ந்துகொண்டான். அவளது மார்பகத்திலிருந்த செந்நிறத்தைத் துடைத்தான். அப்போது அவள் நாணினாள்.
  • மரங்களிலிருந்த மலர்களும், மக்கள் சூடிய மலர்களும் உதிர்ந்து மிதத்தலால் மீன் பூத்த வானத்திலிருந்து கங்கை இறங்கி வருவது போல வையை காணப்பட்டது.
  • நீராடியதாலும், மது அருந்தியதாலும், புலவியாலும் மகளிர் கண்கள் சிவந்திருந்தன.
  • தலைவன் தழுவிய பரத்தையின் மார்பிலிருந்த கத்தூரி நிறம் பனியால் வளைந்த மூங்கில் நிமிர்வது போல் காணப்பட்டது.
  • வையையே! நீ இந்த வளங்களைப் பெற மழைவளம் மாறாமல் இருக்கட்டும்.

பரிபாடல் 17 செவ்வேள் - செய்தி[தொகு]

  • பிறவி நீக்கித் துறக்க-வீடு தருமாறு இந்தப் படலில் புலவர் திருபரங்குன்றத்திலுள்ள முருகப் பெருமானிடம் வேண்டவில்லை. தாமும் தம் சுற்றத்தாரும் மக்களைப் பணிந்து ஒழுகாமல் முருகப் பெருமானைப் பாடிக்கொண்டே இருக்க அருள் புரிய வேண்டும் என்று வரம் வேண்டுகிறார்.
  • பட்டிமன்றம் போன்று குன்றத்தின் ஒருக்கம் யாழ் ஓசை எழ அதன் எதிர் வண்டின் ஓசை எழும். ஒருபக்கம் குழல் ஓசை எழ அதன் எதிர் தும்பி முரலும். ஒருபக்கம் முழவின் ஓசை எழ அதன் எதிர் அருவி முழங்கும். ஒருபக்கம் ஆடுமகளிர் அசைய அதன் எதிர் பூங்கொடிகள் வாடையில் ஆடும். ஒருபக்கம் பாடுமகளிர் பாட அதன் எதிர் மயிலின் அரிக்குரல் கேட்கும்.
  • மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் இடையிலுள்ள தூரம் கொஞ்சந்தான். என்றாலும் மைந்தரும் மகளிரும் நெருங்கி விளையாடிக்கொண்டே செல்வதால் நெடுந்தொலைவு போல் தோன்றும். மைந்தர் குஞ்சியிலிருந்தும் மகளிர் கூந்தலிலிருந்தும் விழுந்த மாலைகள் கிடப்பதால் வழி தூர்ந்து காணப்படும். பூசனைப் புகையால் சூரிய மண்டலம் மறையும். இமைக்காத தேவர்கள் புகைபட்டு இமைப்பர்.
  • சுனையில் மைந்தரும் மகளிரும் விளையாடுவதால் சுனைப் பூக்களை வண்டு மொய்ப்பதில்லை.
  • அருவியில் விளையாடுவோரின் சிதைந்த மணிகள் அருவிநீர் பாயும் வயலைச் சிதைக்கும்.
  • விருந்தூட்டும் இடங்களும் விழா நிகழும் இடங்களும் இடையிடையே இருப்பதால் செல்லும் மக்களுக்கு வழி தடுமாற்றம் ஏற்படும்.
  • தீச்சட்டி, சந்தனம், அகில்புகை, கொடி முதலானவற்றைச் சுமந்துகொண்டு இசை முழக்கத்துடன் வந்து கடம்பமர் செல்வனை மக்கள் வழிபடுவர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லழிசியார்&oldid=2718091" இலிருந்து மீள்விக்கப்பட்டது