சகப் பிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐதரசன் மூலக்கூறில் H - H இடையிலான சகப்பிணைப்பு

சகப்பிணைப்பு அல்லது பங்கீட்டு வலுப்பிணைப்பு (Covalent Bond) என்பது இரு அணுக்கள் எலக்ட்ரான்களை சமமாக வழங்கி, சமமாகப் பகிர்ந்து கொள்வதால் உருவாகும் ஒருவகை வேதிப்பிணைப்பு ஆகும்.

இரண்டு அணுக்கள் எதிரெதிர் சுழற்சிஎண் (spin) கொண்ட இணையான எலக்ட்ரான்களைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் சகப்பிணைப்பு உண்டாகிறது. இப்பிணைப்பில் பங்குகொள்ளும் இரு அணுக்களுமே எலக்ட்ரான்களை தங்கள் அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் நேர்மின்விசைகளால் கவர முயலும். இதனால் உருவாகும் நிகர விசை, சகப்பிணைப்பை உண்டாக்குகிறது.

ஹைட்ரஜன் மூலக்கூறில் உள்ள இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுமே ஒரே மாதிரியான எலக்ட்ரான்கவர்தன்மையைக் கொண்டவை. எனவே எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) உண்மையிலேயே இரு அணுக்களுக்கும் பொதுவாக இருக்கின்றன (இயங்குகின்றன). எனவே இங்கு சகப்பிணைப்பு உருவாகியுள்ளது.

மேலும் ஒரு எடுத்துக்காட்டை (குளோரின் மூலக்கூற்றினை) நோக்குவோம்.

Cl + Cl → Cl2

இதில் குளோரின் அணு ஒவ்வொன்றும் 2, 8, 7 என்ற எண்ணிக்கையில் எலக்ட்ரான்களை மூன்று வட்டப்பாதைகளில் முறையே பெற்றுள்ளன. தங்களது கடைசி வட்டப்பாதையில் உள்ள 7 எலக்ட்ரான்களில் ஒன்றை ஒவ்வொரு குளோரின் அணுவும் வழங்குவதால், அவ்விரு எலக்ட்ரான்களும் இரண்டு குளோரின் அணுக்களால் சமமாகப் பகிர்ந்து கொண்டு எண்ம அமைப்பைப்பெற்று நிலைத்தன்மையை வாய்ந்த குளோரின் மூலக்கூறு, சகப்பிணைப்பால் உருவாகிறது. ஆனால் ஓர் அணு எலக்ட்ரானை முழுமையாகத் தன்பக்கமே இழுத்துக் கொள்ளுமாயின், அது அயனிப் பிணைப்பு (Ionic Bond) எனப்படும். எடுத்துக்காட்டு: சோடியம் குளோரைடு

சகப்பிணைப்பு (பங்கீட்டுப் பிணைப்பு) சேர்மங்களின் இயற்பியல் பண்புகள்[தொகு]

இயற்பியல் பண்புகள் சகப்பிணைப்புச் சேர்மங்களின் இயல்பு
அறை வெப்பநிலையில் இயற்பியல் நிலை திண்மம், திரவம், வாயு.
மின்கடத்துதிறன் பொதுவாக மின்சாரத்தைக் கடத்தாது.
உருகுநிலை, கொதிநிலை வேறுபடும். பொதுவாக அயனிச்சேர்மங்களை விடக் குறைவு
நீரில் கரைதிறன் மாறுபடும். பொதுவாக அயனிச்சேர்மங்களை விடக் குறைவு
வெப்பக் கடத்துதிறன் பொதுவாகக் குறைவு

சகப்பிணைப்புகளில் முனைவாக்கம்[தொகு]

சகப்பிணைப்பில் ஈடுபடும் அணுக்களின் மின்னெதிர்த்தன்மையைப் பொறுத்து மூலக்கூறுகள் முனைவாக்கமுடையனவாகவோ, முனைவாக்கமற்றதாகவோ காணப்படலாம். H-H பிணைப்பு போல அணுக்களிடையே மின்னெதிர்த்தன்மை சமமாக இருந்தால், அது முனைவாக்கமற்ற சகப்பிணைப்பு (Non-polar Covalent Bond) ஆகும். H-Cl பிணைப்பு போல அணுக்களின் மின்னெதிர்த்தன்மை சமமற்றதாக இருந்தால், அது முனைவாக்கமுடைய சகப்பிணைப்பு (Polar Covalent Bond) ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகப்_பிணைப்பு&oldid=3196749" இருந்து மீள்விக்கப்பட்டது