ஙவென் கோயில், மத்திய சாவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடகிழக்கு மூலையில் இருந்து நாகவன் கோயிலின் தோற்றம்

நாகவன் கோயில் (Ngawen) (Candi Ngawen போன்ற உள்நாட்டில் அறியப்பட்ட) ஒரு 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது புத்த கோயிலாகும். இக்கோயில் இந்தோனேஷியாவில் மத்திய ஜாவாவில் மகேலாங் ரீஜன்சியில் முண்டிலன் துணை மாவட்டமான நாகவன் கிராமத்தில் அமைந்துள்ளது. 6 km (3.7 mi) மெண்டுட் கோயிலின் கிழக்கே 6 கி.மீ. (அல்லது 3.7 மைல்) தொலைவிலும், முண்டிலன் நகர மையத்தின் தெற்கே 5 கி.மீ. (அல்லது 3.1 மைல்) தொலைவிலும் அமைந்துள்ள, ஐந்து கோயில்களைக் கொண்ட வளாகமாகும். இருந்தாலும் அவற்றில் ஒன்று மட்டுமே வெற்றிகரமாக புனரமைக்கப்பட்டுள்ளது.

நாகவன் கோயில், அருகிலுள்ள போரோபுதூர், பாவோன் மற்றும் மெண்டட் ஆகிய மூன்று புத்தர் கோயில்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த கோயில்கள் சைலேந்திர வம்சத்தின் போது (8 – 9 ஆம் நூற்றாண்டுகள்) கட்டப்பட்டவை ஆகும். இந்த நான்கு கோயில்களும் இணைந்து ஒரு நேர் கோட்டில் அமைந்துள்ளன. மேற்கிலிருந்து கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இவை, சற்று ஓரமாக வடகிழக்கு திசையை நோக்கிய நிலையில் உள்ளன. அதன் கிழக்குப் பகுதி எல்லையின் முடிவானது மெராபி மலையின் உச்சியை நோக்கிய வகையில் காணப்படுகிறது. இந்த கோயில் செதுக்கல் அமைப்பு போன்றவை போரோபுதூரை விட பழமையான கோயில் என்பதை வெளிப்படுத்துகின்றன. இக்கோயில் ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகின்ற சிங்கங்களுக்காக சிறப்பு பெற்றவையாகும். 1874 ஆம் ஆண்டில் இக்கோயில் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொடங்கி பல முறை கொள்ளை மற்றும் திருட்டுகளால் பாதிக்கப்பட்டதாகும். [1]

கட்டிடக்கலை[தொகு]

இந்த கோயில் ஆண்டிசைட் கல்லிலிருந்து தயாரிக்கப்பட்டு வழக்கமான மத்திய ஜாவானிய பாணியில் கட்டப்பட்டதாகும். 3,556 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த கோயில் வளாகம் அமைந்துள்ளது, இது ஒரு கிராமத்திற்கும் அரிசி நெல் வயல்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. [1] கோயில் வளாகம் ஐந்து கோயில்களைக் கொண்டுள்ளது, இது வடக்கு முதல் தெற்கு வரை இரண்டு முதன்மைக் கோயில்களையும், மூன்று பெர்வாரா அல்லது துணைக் கோயில்களையும் கொண்டு அமைந்துள்ளது. அதன் வரிசை ஒன்றைவிட்டு ஒன்று என்ற நிலையில் காணப்படுகிறது.இந்தக் கோயில்களானவை அதன் எண்ணின் அடிப்படையில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அமைந்துள்ளன. இவ்வகையில் இரண்டாவது கோயிலும், நான்காவது கோயிலும் முதன்மைக் கோயிலைவிட பெரியனவாக உள்ளன. முதலாம், மூன்றாம் மற்றும் ஐந்தாம் கோயில்கள் சிறிய கோயில்களாகும். தற்போது வடக்குப் பகுதி முதன்மைக் கோயில் அல்லது இரண்டாவது கோயில் மட்டுமே வெற்றிகரமாக புனரமைக்கப்பட்டது, மற்ற நான்கு கோயில்களும் இன்னும் இடிந்து கிடக்கின்றன. கோயில்கள் கிழக்கு நோக்கிய நிலையில், ஒரு சதுர அடித்தளத்தில் நிற்கின்றன.

வடக்கு முதன்மைக் கோயில் 13 மீட்டர் முதல் 12 மீட்டர் அடித்தளம் மற்றும் 7 மீட்டர் உயரம் கொண்டது. முதன்மைக் கோயில்களின் ஒவ்வொரு மூலையிலும், சில அழகிய சிங்கங்களின் சிலைகள் பரவலாக உள்ளன. நாகவன் கோயிலின் சிங்கங்கள் மத்தியில் மிகவும் ஒரு தனிப்பட்ட அம்சம் மத்திய ஜாவாவில் உள்ள கோயில்களில் காணப்படுவதாகும். அடித்தளத்தின் சுவர்களில் கின்னரர்கள் உள்ளனர். படிக்கட்டுகள் கிழக்குப் பக்கத்தில் உள்ளன. படிக்கட்டுகளின் ஒவ்வொரு பக்கத்திலும், வாயில்களின் மேற்புறமும் கலா-மகரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது பொதுவாக உன்னதமான ஜாவானிய கோயில்களில் காணப்படுகின்ற பாணியாகும். உள் பகுதியில் சுவர்க்கலோகத்தில் [2] கடவுள்கள் செதுக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. கீழே காலாவின் தலை உள்ளது. நாகவன் முதன்மைக் கோயிலின் வெளிப்புறச் சுவர்கள் காலாவின் தலைகளாலும், சொர்க்கலோகக் காட்சிகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாடங்களில் தற்போது எந்த சிற்பமும் இல்லாமல் காலியாக உள்ளன. இப்பகுதிகளில் முன்புபோதிசத்துவர்கள் அல்லது தாராக்களின் சிலைகள் இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஒரு தலையில்லாத தியான புத்தர் கல் சிலை உள்ளது. முதன்மையான சதுர அறையில் உள்ளே ரத்தினசம்பவ புத்தர் வரமுத்ர நிலையில் உள்ளார். கூரைப் பகுதியின் உச்சி சிறிய ரத்னங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இருப்பினும் தற்போது கூரையின் மேல் பகுதிகள் காணவில்லை, இது முதன்மை அறையின் மேல் பகுதியில் ஒரு இடைவெளியை உண்டாக்குகிறது. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், கூரைப் பகுதி ரத்னாவால் அலங்கரிக்கப்பட்டுள்ளதே தவிர ஒரு ஸ்தூபியால் அலங்கரிக்கப்படவில்லை. இந்த கோயிலில் இந்து மற்றும் பௌத்தக் கோயில்களின் கலைக்கூறுகள் இக் கோயிலில் உள்ளன. ரத்னா உச்சங்கள் பொதுவாக ஜாவாவில் உள்ள இந்து கோவில்களில் காணப்படுகின்றன. இதன் மூலமாக இந்தக் கோயில் முன்னர் ஒரு இந்து கோயிலாக கட்டப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் பின்னர் அதன் விரிவாக்கம் மற்றும் புனரமைப்பின் போது ஒரு பௌத்தக் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பதை அறியமுடிகிறது. இந்த ஐந்து கோயில்களும் ஐந்து தியானி புத்தர்களைக் கொண்டு அமைந்துள்ளன. இவர்கள் பௌத்த பாதுகாவலர் ஆவர் என்று நிபுணர்கள் எண்ணுகின்றனர். அமிதாபா (மேற்கு), ரத்னசம்பவா (தெற்கு), அக்ஷோப்யா (கிழக்கு), வைரோசனா (உச்சிப்பகுதி) மற்றும் அமோகசித்தி (வடக்கு) என்ற நிலைகளில் ஒவ்வொரு திசையிலும் அமைந்துள்ளனர். இருப்பினும் கடைசி மூன்று சிலைகள் நாகவன் கோயில்களில் தற்போது காணப்படவில்லை. [1]

வரலாறு[தொகு]

1929 இல் நாகவன்.கோயில்

நாகவன் கட்டிடக்கலை, குறியீட்டு மற்றும் செதுக்குதல் ஆகியவற்றின் பாணியை ஆராய்ந்தால், இந்தக் கோயில் 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், போரோபுதூரை விட சற்று பழமையான, கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த புத்தர் கோயிலின் அசல் பெயர் என்னவென்று அறியமுடியவில்லை. "நாகவன்" என்பது பழைய ஜாவானிய சொல்லான அவி என்பதிலிருந்து உருவானதாகும். அதாவது அதற்கு "மூங்கில்" என்று பொருளாகும். பொ.ச. 824 தேதியிட்ட கரங்டெங்கா கல்வெட்டு, சைலேந்திர மன்னர் இந்திரன் வேணுவனா என்ற புனித கட்டிடத்தை கட்டியுள்ளார் என்று கூறுகிறது. அதாவது "மூங்கில் காடு" என்று பொருள். கரங்டெங்கா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கோயிலை மெண்டுட் கோயிலுடன் டச்சு தொல்பொருள் ஆய்வாளர் ஜே.ஜி டி காஸ்பரிஸ் இணைத்துப் பார்த்துள்ளார். ஆனால், சோக்மோனோ முன்வைத்த மற்றொரு பரிந்துரை, கரங்டெங்கா கல்வெட்டு நாகவன் கோயிலைக் குறிக்கின்றது என்பதேயாகும். [3] நாகவன் கிராமம் மற்றும் வேணுவனா என்ற பெயருக்கு இடையிலான சொற்பிறப்பியல் தொடர்பை அடிப்படையாகக் கொண்டது, ஏனெனில் இரண்டு சொற்களும் "மூங்கில்" என்பதைக் குறிக்கின்றன. கோயிலின் உண்மையான தளம் தற்போதைய தரைமட்டத்திற்கு இரண்டு மீட்டர் கீழே புதைக்கப்பட்டுள்ளதை நோக்கும்போது, இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மெராபி எரிமலை உமிழ்வு மலையால் மூடப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

உள்ளூர் ஜாவானிய கிராமவாசிகள் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கோயிலில் இடிபாடு காணப்படுவதை அறிந்திருக்கிறார்கள். முதல் அதிகாரப்பூர்வ தகவல் டச்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோல்பர்மண்ட் 1874 ஆம் ஆண்டில் வெளிக்கொணரப்பட்டது. 1911 ஆம் ஆண்டில், வான் எர்ப் தனது நாகவன் கோயில் மெராபி மலை வெடிப்பால் அழிக்கப்பட்டன என்று கூறியுள்ளார். மற்றொரு டச்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பி.ஜே. பெர்குயின் 1925 ஆம் ஆண்டில் இக்கோயிலைப் பற்றி ஆராய ஆரம்பித்ததோடு, ஐந்து கோவில்களில் ஒன்றான வடக்குப் பகுதியின் முதன்மைக் கோயிலை (கோயில் எண் 2).வெற்றிகரமாக மீட்டெடுத்தார்;

1970 களில் நடந்த திருட்டின்போது இரண்டு சிலையின் கொள்ளையடிக்கப்பட்டன. பிற கொள்ளை சம்பவங்கள் 1999 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளன. [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Ngawen temple victim of artifact theft". thejakartapost.com. The Jakarta Post. August 13, 2001. Archived from the original on December 3, 2013. பார்க்கப்பட்ட நாள் December 1, 2013.
  2. "Svarga", Wikipedia (in ஆங்கிலம்), 2019-10-26, பார்க்கப்பட்ட நாள் 2019-12-05
  3. "Candi Ngawen". magelangkab.go.id. Magelang Regency official site. 9 January 2012. பார்க்கப்பட்ட நாள் 1 December 2013.