வைரோசன புத்தர்
வைரோசனர் (அல்லது மஹாவைரோசனர்) மஹாயான பௌத்தத்தின் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவரான் இவர், ஒரு தர்மகாய(தர்மத்தையே உடலாக கொண்டவர்) புத்தர் ஆவார். சீன-ஜப்பானிய பௌத்தத்தில், மஹாவைரோசன புத்தர், சூன்யத்தன்மை என்ற பௌத்த சித்தாந்தத்தின் உருவகமாக கருதப்படுகிறார்.[1][2]
ஐந்து தியானி புத்தர்களுள், இவர் நடுநாயகமான இடத்தைக் கொண்டவர். ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களால் அழிக்கப்பட்ட சிலைகளுள் ஒன்று வைரோசன புத்தருடையது ஆகும்.
மஹாவைரோசன புத்தர் குறித்த நம்பிக்கைகள் அனைத்தும் பெரும்பாலும் மஹாவைரோசன சூத்திரத்திலிருந்து பெறப்பட்டது. சில வஜ்ரசேகர சூத்திரத்தில் இருந்தும் பெறப்பட்டவை. வைரோசனர் சீன ஹுவா-யென் பௌத்த பிரிவினராலும், ஜப்பானிய கெகோன் மற்றும் ஷிங்கோன் பிரிவினராலும் அதிகமாக வணங்கப்படுகிறார். ஷிங்கோன் பௌத்தத்தில் இவர் ஒரு மிக முக்கியமான புத்தர் ஆவார்.
சீன - ஜப்பானிய பௌத்தத்தில் வைரோசனரின் வழிபாடு, அமிதாப புத்தரின் வழிபாட்டால் வழக்கிழந்தது. இதற்கு காரணம் சுகவதி பௌத்தம், சீனத்தில் பிரபலமைடந்ததே ஆகும். ஆனால் இன்றும் வைரோசனர், ஷிங்கோன் பௌத்தர்களால் வணங்கப்படுகிறார்.
நம்பிக்கைகள்
[தொகு]ரிக்வேதத்தில் 'வைரோசன' என்ற சொல், பிரகாசமான, 'தேஜஸ்'மயமான சூரியனைக் குறிக்கக்கூடியது. எனவே தான் இவரை ஜப்பானிய மொழியில் டைனிச்சி என அழைக்கின்றனர்.
மஹாவைரோசன சூத்திரத்தில், வைரோசனர் தர்மத்தை வஜ்ரசத்துவருக்கு உபதேசம் செய்கின்றார். ஆனால் அது முழுவது புரிந்துகொள்ளாத தன்மையுடன் விளங்குகிறது. எனவே வைரோசனர், தர்மத்தை எளிதாக புரிந்து கொள்வதாக பல்வேறு தந்திரங்களையும், சடங்குகளையும் விவரிக்கிறார். இதில் இருந்தே தந்திரயான பௌத்தம் தோன்றியதாக கருதப்படுகிறது.
வைரோசனர் தர்மசக்கர முத்திரையுடன் காணப்படுகிறார். அமிதாபர் கருணையின் உருவகமாக கருதுவது போல, வைரோசனர் புத்தியின் உருவகமாக கருதப்படுகிறார்.
ஷிங்கோன் பௌத்தத்தில் இவரை மஹாவைரோசன ததாகதா என அழைக்கின்றனர். இப்பிரிவின் ததாகதகர்ப தத்துவத்தில், மஹாவைரோசனரே அனைத்து உயிர்களிடத்தும் காணப்படுகிறார். எப்போது ஒருவர் தன்னுள் உள்ள வைரோசனரை அறிந்து கொள்கின்றனரோ அப்போது அவர்கள் புத்தத்தன்மை அடைகிறார்.
சித்தரிப்பு
[தொகு]வைரோசனார், அனைத்து தியானி புத்தர்களின் ஒட்டுமொத்த உருவமாக கருதப்படுவதால், இவர் வெண்மை நிறத்துடன் சித்தரிக்கப்படுகிறார். மேலும், வெண்மை தூய்மையையும் குறிக்கக்கூடியது.
இவருடைய ஆசனம் பத்மாசனம். இந்த ஆசனத்தை இரண்டு சிங்கங்கள் தாங்குகின்றன. இந்த சிங்கங்கள், புத்தரின் கர்ஜனையை ஒத்த தர்ம உபதேசத்தை குறிப்பன. மேலும் வைரோசனரின் தியான உருவம், ஒருவரின் அறியாமையை நீக்கி தர்மத்தை உணர்த்தக்கூடியது. மஹாவைரோசனரின் மிகப்பெறிய சிலைகள் சூன்யத்தன்மையை குறிப்பன. இவருடைய மிகப்பெறிய சிலைகள்,நிலையில்லாத்தன்மையை விவரிக்கிறது. எப்படி இச்சிலைகள் நிலையில்லாதவையே, அவ்வாறே வாழ்க்கையிம் நிலையில்லாதது, சூன்யமயமானது.
வைரோசனரின் சின்னம் தங்க அல்லது சூர்ய சக்கரம்.
மந்திரம்
[தொகு]இவருடைய மந்திரம், ஓம் வைரோசன ஹூம் ஆகும்.
இவருடைய இன்னொரு மந்திரம் ஜுவால(ஜ்வால) மந்திரம் ஆகும். அமோகபாஷாகல்பராஜ சூத்திரத்தில் இருந்து தருவிக்கப்பட்ட இம்மந்திரம், ஷிங்கோன் பௌத்தத்தில் மிக முக்கியம் வாய்ந்தது. அந்த மந்திரம் பின் வருமாறு
ஓம் அமோக வைரோசன மஹாமுத்ரா மணி பத்ம ஜ்வால ப்ரவர்த்தய ஹூம்
ॐ अमोघ वैरोचन महामुद्रा मणि पद्म ज्वाल प्रवर्त्तय हूँ
இவருடைய பீஜாக்ஷரம் 'அ'. 'அ' ததாகதகர்ப தத்துவத்தின் உருவகம். 'அ' என்பது அனைத்து எழுத்துகளிலும் இருந்தாலும், அது வெளியே தெரிவதில்லை(பிராமியிலிருந்து பிரிந்த அனைத்து எழுத்துமுறைகளிலும் 'அ'கரம் சேர்ந்த மெய்களுக்கு தனி வடிவம் இல்லை. 'அ' எனபது இயல்பாக அனைத்து மெய்யெழுத்து வடிவங்களிலும் உள்ளது. எ.டு க,ங,ச,ஞ முதலியன. இவற்றில் இருந்தே பிற வடிவங்கள் தோன்றுகின்றன). அது போல் மஹாவைரோசனர் அனைவரிடத்திலும் இயல்பாக மறைந்துக் காணப்படுவதை இவருடைய 'அ' பீஜாக்ஷரம் குறிக்கிறது
மூல நூல்கள்
[தொகு]- Hua-Yen Buddhism: The Jewel Net of Indra (Pennsylvania State University Press, December 1977) by Francis H. Cook
- Meeting The Buddhas by Vessantara. Birmingham : Windhorse Publications 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-904766-53-5.