கோபிநாத் கர்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபிநாத் கர்தா
பிறப்பு(1927-01-26)சனவரி 26, 1927
சேர்த்தலை, கேரளம், இந்தியா
இறப்புசூன் 18, 1984(1984-06-18) (அகவை 57)
தேசியம்இந்தியர்
துறைபடிகவியல்
பணியிடங்கள்டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்
கேவண்டிசு ஆய்வகம்
கனடிய தேசிய ஆராய்ச்சி மன்றம்
புரூக்ளின் பல்தொழில்நுட்ப நிறுவனம்
ரோசுவெல் பார்க் விரிவான புற்றுநோய் மையம்
கல்வி கற்ற இடங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
ஆந்திரப் பல்கலைக்கழகம்

கோபிநாத் கர்தா (Gopinath Kartha) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு முக்கிய படிகவியலாளர் ஆவார். 1927 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1967 ஆம் ஆண்டில், ரிபோநியூக்ளியேசு என்ற நொதியின் மூலக்கூறு அமைப்பை கோபிநாத் தீர்மானித்தார். அமெரிக்காவில் தெளிவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்ட முதல் புரத அமைப்பு இதுவாகும்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

கோபிநாத் கர்த்தா இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழாவுக்கு அருகில் உள்ள சேர்தலாவில் பிறந்தார். ஆலப்புழாவில் உள்ள சனாதனதர்ம வித்யாசாலாவில் பள்ளிக்குச் சென்றார். கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியலில் இளங்கலை பட்டயத்தை திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இருந்து பெற்றார். 1950 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். 1951 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் மற்றொரு இளநிலை பட்டமும் பெற்றார்.

1952 ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பட்டப்படிப்பைத் தொடங்கினார். ஆனால் ஆலோசகர் ஜிஎன் ராமச்சந்திரனைப் பின்பற்றி இவர் மீண்டும் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். பட்டதாரி மாணவராக இவரும் ராமச்சந்திரனும் கொலாசன் மூலக்கூறின் மூன்று சுருள் கட்டமைப்பில் பணிபுரிந்தனர்.[1]

தொழில்[தொகு]

1955 ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தை முடித்த பிறகு மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் 1956 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 1956 ஆம் ஆண்டு கேவென்டிசு ஆய்வகத்தில் பிந்தைய முனைவர் பட்டப் பணிகளையும் பின்னர் 1957 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை கனடாவின் தேசிய ஆராய்ச்சி மன்றத்திலும் பணி செய்தார்.

1959 ஆம் ஆண்டில் முனைவர் டேவிட் ஆர்கர் மற்றும் முனைவர் இயேக் பெல்லோவுடன் இணைந்து பணியாற்ற புரூக்ளின் பல்தொழில்நுட்ப நிறுவனத்திற்குச் சென்றார். பிறகு அதே ஆண்டில் முழு புரூக்ளின் பல்தொழில்நுட்ப நிறுவனத்தின் படிகவியல் குழு நியூயார்க்கில் உள்ள ரோசுவெல் பார்க் விரிவான புற்றுநோய் மையத்திற்கு மாற்றப்பட்டது.[2] தனது வாழ்க்கையின் இறுதி வரை ரோசுவெல் பார்க்கில் பணிபுரிந்தார். 1972 ஆம் ஆண்டு எட்டு மாதங்கள் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் உயிர் இயற்பியல் பேராசிரியராகவும் இருந்தார்.

ராமச்சந்திரன் மற்றும் கோபிநாத் கர்த்தாவால் முன்மொழியப்பட்ட கொலாசன் நொதியின் அமைப்பு ஆரம்பத்தில் பிரான்சிசு கிரிக் என்பவரால் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. உண்மையில், இலண்டனை தளமாகக் கொண்ட நேச்சர் இதழுக்கான இவர்களின் கட்டுரை ஐந்து மாதங்களாக வெளியிடப்படவில்லை. அதே சமயம் கொலாசன் கட்டமைப்பிற்கான கிரிக் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் வெளியிடப்பட்டது. இருப்பினும் இவர்களால் முன்மொழியப்பட்ட கொலாசன் அமைப்பு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1984 ஆம் ஆண்டு சூன் மாதம் 18 ஆம் தேதியன்று கோபிநாத் கர்தா இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Model scientist". தி இந்து. 30 April 2001.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Crystallographers" (PDF). Journal of Applied Crystallography.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிநாத்_கர்தா&oldid=3741712" இலிருந்து மீள்விக்கப்பட்டது