உள்ளடக்கத்துக்குச் செல்

கு. முத்துக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்துக்குமார்

குமரேசன் முத்துக்குமார் (K. Muthukumar)(இறப்பு: சனவரி 29, 2009, அகவை 28) ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்டவர் ஆவார். இவர் சென்னையில் பெண்ணே நீ இதழில் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தவர். அதற்கு முன்னர் உதவி இயக்குநராகவும் வேலை செய்தவர்.

தீக்குளிப்பு

[தொகு]

தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞ‌ர் சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு சனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்ணெ‌‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றித் தீயை பற்ற வைத்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கான பிரசுரங்கள் காற்றில் பறந்தன. உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமர‌ன் ஓர் இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர்மீது எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரைக் காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அ‌ங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்ப‌ட்டும் பயனின்றி இறந்தார்.

இறக்கும் முன் முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், "இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களைத் திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் ஒன்றிய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது." என்று குறிப்பிட்டார்[1].


தமிழகத்த்தில் ஏற்பட்ட பின் விளைவுகள்

[தொகு]

கு.முத்துக்குமாரின் மரணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகம் முழுக்க மாணவர்கள், பெண்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்குரைஞர் எனப் பொதுமக்கள் அலை அலையாக திரண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். சேலத்தில் அனைத்து அமைப்பினரும் சேர்ந்து 30.01.2009 நடத்திய வீர வணக்க ஊர்வலம் மாலை 4 மணிக்கு அஸ்தம்பட்டியில் தொடங்கி ஊர்வலம் பழைய பேருந்து நிலையத்தில் முடிந்தது.

திரளான திருநங்கைகள், விடுதலை சிறுத்தைகள் பாட்டாளி மக்கள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி[1] மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

'முடிந்தவரை போராடுங்கள்'

[தொகு]

'என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்'; என்று அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதனால் அவரது இறுதி மரியாதை நிகழ்வில் தாமதம் ஏற்பட்டது. அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்யமாட்டோம் என்று மாணவர்கள் பிடிவாதமாக இருந்தனர்.

முத்துக்குமாருக்கு மணிமண்டபம்

[தொகு]

முத்துக்குமாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என “இளந்தமிழர் இயக்கம்“ என்ற அமைப்பு அறிவித்து, அதற்கான பணிகளைச் செய்து வந்தது. இது தொடர்பாக உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முத்துக்குமாரின் தந்தை ஒரு கடிதமும் எழுதியிருந்தார்.[2].

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சாஸ்திரி பவன் முன்பு பத்திரிக்கை ஊழியர் தீக்குளித்து தற்கொலை (தட்ஸ்தமிழ் செய்தி)". Archived from the original on 2010-12-22. பார்க்கப்பட்ட நாள் 2009-01-30.
  2. முத்துக்குமார் மணிமண்டபம் - உலகத் தமிழர்களுக்கு முத்துக்குமாரின் தந்தை எழுதிய கடிதம்

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._முத்துக்குமார்&oldid=3941620" இலிருந்து மீள்விக்கப்பட்டது