குருவாயூர் கேசவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருவாயூர் கேசவன் சிலை

கஜராஜன் குருவாயூர் கேசவன் (1904 - டிசம்பர் 2, 1976) தென் இந்தியாவில், குறிப்பாக கேரளாவில், மிகவும் புகழ் பெற்ற மற்றும் மக்களால் போற்றப்பட்ட கேரளத்து குருவாயூர் கிருஷ்ணர் கோயில் யானை.

பரம்பரையாக காணப்படும் வழக்கம்[தொகு]

நீலாம்பூர் நாட்டு ராஜவம்ச குடும்பத்தினர் இந்த கேசவன் என்ற பெயருடன் கூடிய யானையை 1916 ஆம் ஆண்டில் ஹிந்துக்களின் குருவாயூர் கோவிலுக்கு நன்கொடையாக அளித்தனர்.[0]இதுபோன்று கேரள நாட்டில் கோவில்களுக்கு யானையை நன்கொடையாக, ஒரு வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக, அளிப்பது பரம்பரையாக காணப்படும் ஒரு வழக்கமாகும். நிலம்பூர் பெரிய ராஜாவால், மலபார் சச்சரவிலிருந்து தனது பொருள்கள் மீண்டும் கிடைத்ததற்கு காணிக்கையாக குருவாயூரப்பனுக்கு கேசவன் தரப்பட்டது.

யானைகள் சரணாலயம்[தொகு]

குருவாயூர் கோவிலில் யானைகளுக்கென்றே ஒரு சரணாலயம் உருவக்காப்பட்டு அங்கே யானைகள் நன்கு பராமரிக்கப்பட்டு வருவதோடல்லாமல், அவை நன்கு வளர்க்கப்பட்டும் பயிற்சிகள் அளிக்கப்பட்டும் வருகின்றன, மேலும் புன்னத்தூர்கோட்டையில் அமைந்த இந்த சரணாலயத்தில் தற்பொழுது நூற்றுக்கும் மேலான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கம்பீரமான தோற்றம் கொண்ட கேசவன்[தொகு]

3.2 மீட்டர் உயரத்துடன் கம்பீரமான தோற்றம் கொண்ட கேசவன், மிகவும் கனிவான, பணிவான யானையாக மட்டும் அல்லாமல், குருவாயூரப்பனிடம் மிகவும் பக்திகொண்டவனாகவும் காணப்பட்டான்.

பத்மநாபன் யானை புகழின் உச்சியில் இருந்த போதுதான் கேசவன் யானை குருவாயூர் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. பத்மநாபனின் நற்குணங்களை எல்லாம் கேசவன் பாடமாக்கிக் கொண்டான். அதுபோக பத்மநாபன் யானையையும் மிஞ்சியது கேசவன் யானையின் கெளரவமான பழக்கவழக்கங்கள். அத்துடன் தனக்கே உரிமையான சில உயர் பண்புகளையும் பெற்றிருந்தான். குருவாயூரப்பன் திடம்பை ஏந்தி தன் மேல் அமர வருபவர்களுக்கு மட்டுமே கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவுவான். ஆலவட்டம்,குடை,செளரி போன்றவற்றை ஏந்தி நிற்போர், பின்னங்கால் துணை கொண்டே ஏற உதவுவான். தனி மனிதனாக தன் பாகன் கூட தன் மேல் ஏறி அமர அனுமதித்ததில்லை கேசவன்.

குருவாயூருக்கு வந்த புதிதில் கேசவன் யானை அழகு இல்லாததும், குறும்புத்தனம் கொண்டதும், யானைப்பாகன் ஆணைக்குப் பணியாமல் இருப்பதில் விருப்பமுள்ளதாகவும் இருந்தது. அக்காலத்தில் அதனை பயித்தியம் பிடித்த யானை என்றே வழங்கி வந்தனர். அந்த நாளில், 41 நாட்கள் குருவாயூரப்பன் கையில் வெண்ணெய் வைத்து மந்திரம் சொல்லி மருந்தாக மேல்சாந்தி கொடுத்து, அதோடு பஜனைக்காக மூன்று வேளை சீவேலிக்கும் கேசவனையே பயன்படுத்தினர். கோயில் மருந்தும் சேவையும் கேசவன் ஓர் இணையற்ற சிறந்த யானையாக வளர உதவியது .

ஏகாதசி விரதம்[தொகு]

1976 டிசம்பர் 2 இல் நவமி அன்று தங்கத்திடம்பு ஏற்றப்பட்ட கேசவன் யானை உடல் நடுக்கம் கண்டது. கால் நடை மருத்துவர்கள் விரைந்து வந்து மருந்து கொடுத்த பின்னரும் எதுவும் உண்ண மறுத்தான் கேசவன். மறுநாள் தசமி அன்றும் நின்றவாறே இருந்தது. தசமி இரவு விளக்கு ஆரம்பித்த மேள சப்தம் கேட்டதும் தண்ணீரைத்தன் துதிக்கையில் ஏந்தி குளித்தது. யானையின் பக்தியை மெச்சும் வகையில், "குருவாயூர் ஏகாசசி" என போற்றப்படும் தலை சிறந்த வழிபாட்டு நாள் அன்று, குருவாயூர் கேசவனின் உயிர், உடலை விட்டு கோவில் வளாகத்தில் பிரிந்தது. பக்தர்கள் ஏகாதசி விரதம் அன்று உண்ணாமல் இருப்பது போலவே, அன்றைய நாள் முழுவதும் கேசவன் உணவு எதுவும் உட்கொள்ளவில்லை, மேலும் மாலை வேளையில் இறக்கும் தருவாயில் கோவிலின் நடையை நோக்கி தும்பிக்கையை உயர்த்திக்கொண்டு இறைவனிடம் தனது வணக்கத்தை சமர்பித்துக் கொண்டு, நமஸ்கரிக்கும் பாணியில் தனது உடலை புவியில் அர்ப்பணம் செய்துகொண்டே, கேசவனின் உயிர் பிரிந்தது.

குருவாயூர் கேசவனின் நினைவு நாள்[தொகு]

இதன் நிமித்தமாக குருவாயூர் கேசவனின் நினைவு நாள் ஆண்டுதோறும் குருவாயூர் ஏகாதசியன்று கொண்டாடப்படுகிறது. நூற்றுக் கணக்கான யானைகளில் ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டு, குருவாயூர் கேசவன் யானையின் சிலைக்கு, தலைமை யானை மலர் மாலை அணிவிக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும்.

கஜராஜன் (யானைகளின் ராஜா)[தொகு]

குருவாயூர் தேவஸ்வம் குருவாயூர் கேசவனின் சேவைகளை மெச்சியபடி, கேசவனுக்கு "கஜராஜன்" (யானைகளின் ராஜா) என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.1973 இல் கேசவனது 60 ஆவது வயதில் கேசவன் கஜராஜன் என்ற பட்டம் பெற்றது.

இங்கே உறையும் இறைவன் குருவாயூரப்பனுக்கான பல வேள்விகளிலும், உறசவங்களிலும் மற்றும் நித்ய பூஜைகளிலும் கலந்து கொண்டு, இன்றி அமையாத சேவைகள் புரிந்தமைக்காக, குருவாயூர் கேசவனின் சிலை ஒன்று போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இன்று கோவில் வளாகத்திலேயே குருவாயூர் தேவஸ்வத்தினரால் நிறுவப்பட்டுள்ளது. குருவாயூர் கேசவனின் நீண்ட அழகான கொம்புகள் மற்றும் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய படம் ஒன்று, இன்றும் பிரதான கோவிலின் கதவுக்கு மேல் அலங்கரிப்பதை நாம் இன்றும் காணலாம்.

மலையாள திரைப்படம்[தொகு]

மேலும் குருவாயூர் கேசவனின் வாழ்கையை பின்பற்றி, "குருவாயூர் கேசவன்" என்ற பெயரில் ஒரு மலையாள திரைப்படமும் எடுக்கப்பட்டது, இப்படம் கேரளத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாகும்.

குறிப்புதவிகள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  • [0] தி இந்து : தேசீயம் : `குருவாயூர் கேசவன்' நினைவு கூர்ந்தது

மேலும் பார்க்க[தொகு]

  • கேரளத்தின் பாரம்பரியத்தில் யானைகள்
  • குருவாயூர் கோவில்
  • 1904 விலங்குகள் பிறப்பு
  • 1976 விலங்குகள் இறப்பு
  • புகழ் பெற்ற யானைகள்

கருவிநூல்[தொகு]

குருவாயூர் பூலோகவைகுண்டம் (தமிழ்), குருவாயூர் தேவஸ்தான வெளியீடு, முதற் பதிப்பு 2003

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவாயூர்_கேசவன்&oldid=2197024" இருந்து மீள்விக்கப்பட்டது