கித்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிட்டார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கித்தார்
Guitar
ஒரு டி சியார்ச்சியோ (Di Giorgio) செவ்விசைக் கித்தார்
ஒரு டி சியார்ச்சியோ (Di Giorgio) செவ்விசைக் கித்தார்
ஒரு டி சியார்ச்சியோ (Di Giorgio) செவ்விசைக் கித்தார்
நரம்பிசைக்கருவி
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை321.322
(Composite chordophone)
வரிசை
(ஓர் ஒழுங்காக டியூன் செய்யப்பட கித்தாரின் மீட்டல் அளவு)
தொடர்புள்ள கருவிகள்
கித்தார் இசைக்கீற்று

கிற்றார் அல்லது கித்தார் அல்லது கிட்டார் (Guitar) என்பது அதிர்கம்பிகள் (strings) கொண்ட ஒரு நரம்பு இசைக்கருவி ஆகும். கித்தார் மிகவும் பிரபலமான இசைக்கருவியாகும். கித்தாரில் உள்ள வெவ்வேறான தடிமன் கொண்ட நரம்புகளை மீட்டுவதன் மூலம் இசை பிறக்கின்றது. மரபுவழி செவ்விசைக் கித்தார்கள் மற்றும் அக்குஸ்டிக் கித்தார்கள் (ஒலிமப்பெட்டிக் கித்தார்கள்) மரத்தினால் செய்யப்படுகின்றன. அதில் உள்ள நரம்புகள் பெரும்பாலும் நைலான் அல்லது இரும்பு எஃகினால் (steel) தயாரிக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் நான்கு தொடக்கம் பதினெட்டு வரையிலான தந்திகளைக் (கம்பிகள்) கொண்டுள்ளன. ஆனால் பொதுவான கித்தார் ஆறு தந்திகள் உடையது.[1] அடித்தொனிக் கித்தார்கள் (பேஸ் கித்தார்) நான்கு தந்திகளைக் கொண்டன.

ஒலிமப்பெட்டிக் கித்தார்களது தந்திகள் மீட்டப்படும்போது, அவை அதிர்வடைவதால் வளியில் கலந்து ஏற்படும் ஒலி, பெரும் துவாரம் கொண்ட மரப்பெட்டியின் மூலம் பெரிதுபடுத்தப்படுகின்றது. இதற்கு மாறாக, மின்மக் கித்தார்களது (எலக்ட்ரிக் கித்தார்) ஒலி மின்னணு மூலம் பெரிதுபடுத்தப்படுகின்றது. ஒருகை விரல்கள் விரற்பலகையில் தந்திகளை அழுத்த மற்றைய கைவிரல்கள் ஒலித்துவாரத்தின் முன்னே வெறும் விரல்களால் பறித்தெடு அசைவு மூலம் தட்டப்பட்டு அல்லது கித்தார் மீட்டுமியைப் பயன்படுத்தித் தட்டப்பட்டு அக்குஸ்டிக் கித்தார் வாசிக்கப்படுகின்றது.

கித்தாரின் வரலாறு[தொகு]

கித்தார் இசைக்கருவி கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பா கண்டங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதன் பின் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டுள்ளன[2].இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் சித்தார் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்தில் கித்தார்கள் ஆசிய நாடுகளில் பரவத் தொடங்கின. மூவாயிரத்து முன்னூறு வருடங்கள் பழமையான கற்சிற்பங்களில் மூன்று தந்திகளை உடைய கித்தார் போன்ற சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நவீன கித்தார்களின் வரலாறுகள் இடைக்கால இசுப்பெயினின் வரலாறுகளுக்கு முன் கிடைக்கப்பெறவில்லை.

சொற்பிறப்பியல்[தொகு]

கித்தார் எனும் ஆங்கில வார்த்தை, கித்தாரே எனும் செருமன் மொழியிலிருந்து வந்துள்ளது. பிரெஞ்சு கித்தார் எனும் வார்த்தை ஸ்பானிய கித்தாரா என்பதிலிருந்து வந்துள்ளது, இது அரபு மொழியில் உள்ள கிட்டார (قيثارة) என்பதிலிருந்தும், இது லத்தினில் உள்ள சித்தாராவிலிருந்தும்,[3] இது பண்டைய கிரேக்க மொழியில் இருந்த கிதாராவிலிருந்தும் ( κιθάρα) வந்துள்ளது.[4]

வகைகள்[தொகு]

கித்தார்களை இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம், அவையாவன அக்குஸ்டிக் கித்தார்கள் மற்றும் எலக்ட்ரிக் கித்தார்கள். இவை ஒவ்வொன்றும் தன்னகத்தே மேலும் உப பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர பண்டைய கால மரபு வழி வந்த செவ்விசைக் கித்தார் வகையும் உள்ளது, இது கிளாசிக்கல் கித்தார் (classical guitar) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. கித்தார் அதனது வடிவம், இசையின் வகை போன்ற காரணிகளைக் கொண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.


செவ்விசைக் கித்தார்[தொகு]

இவை எசுப்பானியக் கித்தார்கள் எனவும் அழைக்கப்படுகின்றது. பொதுவாக இவை நைலான் தந்திகளைக் கொண்டுள்ளன. மேல்நாட்டுச் செந்நெறி இசை இத்தகைய கித்தார்களைக் கொண்டு உட்கார்ந்த நிலையில் வாசிக்கப்படுகின்றது. கிளாசிக்கல் கித்தார்களின் பரந்த தட்டையான கழுத்து பல்வகை இசை நுட்பங்களை மற்றும் இசை நிரல்களை வாசிப்பதற்கு உதவி புரிகிறது. மெக்சிகோவில் மரபுவழி இசையைக் கித்தார் கொண்டு மீட்டுபவர்களை மரியாச்சி என்று அழைப்பர்.

எலக்ட்ரிக் கித்தார்[தொகு]

எலக்ட்ரிக் பேஸ் கித்தார்

மின் ஆற்றலால் இயக்கப்படுகின்ற கித்தார்கள் 1930 களிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.இதில் மின்காந்த ஆற்றலின் மூலமாக இசை பெருக்கப்படுகின்றது.பழங்காலத்தில் கித்தாரின் உடல் பகுதி வெற்றிடமாக்கப்பட்டிருக்கும். அதில் இசை அதிர்வலைகளின் மூலம் பெருக்கமடையும்.ஆனால் வெற்றிடம் இருப்பதைக் காட்டிலும் முழுமையான உடல் அமைப்பினை கொண்ட கித்தார்கள் வசதியானவை என்பதனால் எலக்ட்ரிக் கித்தார்களில் துளையிடுவதை தவிர்த்தனர்.மேலும் இவ்வகை கித்தார்கள் நவீன காலத்திற்கு ஏற்புடைய இசையைத் தருவிப்பதால், மேற்கத்திய இசைகளான புளூஸ், ஜாஸ்,சோலோ,ராக், பாப் போன்றவற்றில் அடிப்படை கருவியாக , இன்றியமையாத இடத்தை இவை பிடித்துள்ளன.

மின்காந்த தூண்டல்கள் கம்பிகளில் உருவாகும் அதிர்வுகளைச் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன.பின் அந்தச் சமிக்ஞைகள் மின்காந்த முறையில் செறிவூட்டப்பட்டு இசையாக வெளிவருகின்றன.வெற்றிட குழாய்களின் (vacuum tubes) மூலமாக இசையின் அலைவெண்கள் செறிவூட்டப்படுகின்றன.முதன் முதலில் மேற்கத்திய இசையான ஜாஸில் எலக்ட்ரிக் கித்தார்கள் இடம்பிடித்திருந்தன.1880 முதல் 1990 வரை இவை மிகவும் பிரபலமான இசைக்கருவியாக உருப்பெற்றிருந்தது.

அக்குஸ்டிக் கித்தார்[தொகு]

பண்டைய முறை கித்தார்களின் நவீன வடிவமே அக்குஸ்டிக் கித்தார்கள் ஆகும்.இதில் நைலான் தந்திகளுக்குப் பதிலாக எஃகு தந்திகள் பயன்படுத்தப்படுகிறது.எஃகு தந்திகள் ஒலியினை அதிக படுத்துவதாக உள்ளதால் இவை பயன்படுத்தப்படுகின்றது.இதில் மின்சாரத்தை பயன்படுத்தி ஒலி பெருக்கும் வகையும் உள்ளது.

மேல் வளைவு கித்தார்[தொகு]

மேல் வளைவு கித்தார் (archtop guitar) எஃகுத் தந்திகளைக் கொண்டது. இதன் மேற்பகுதி குடைந்து எடுக்கப்பட்டு ஒரு வளைவைக் கொண்டிருக்கும். வயலின்களைப் போன்ற இந்த அமைப்பை ஓர்வில் கிப்சன் (1856–1918) என்பவர் அறிமுகப்படுத்தினார். இது மேற்கித்திய இசையான ஜாஸ் இசைக்கு ஏற்ற இசைக்கருவியாகும்.

ஒத்ததிர்வுமி அல்லது தோப்ரோ கித்தார்[தொகு]

ஒத்ததிர்வுமி கித்தார் ( Resonator guitar) சிலாவாக்கிய-அமெரிக்க ஜோன் தோபையேரா (1893–1988) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தோபையேரா சகோதரர்கள் (Dopyera Brothers) எனும் சொல்லில் இருந்து தோப்ரோ பிறந்தது. இக் கித்தார் உருவாக்கத்தின் முக்கிய நோக்கம் மிகையான ஒலியை உண்டாக்குவதாகும். எலெக்ட்ரிக் கித்தார் வந்ததன் பின்னர், நோக்கத்தைப் பொறுத்தவரையில் இதன் பயன்பாடு மங்கியது. எனினும் இதனது தனித்துவமான ஒலி காரணமாக இன்றும் இது உபயோகத்தில் உள்ளது.

பன்னிரண்டு தந்திக் கித்தார்[தொகு]

இது எஃகுத் தந்திகளைக் கொண்டது. நாடோடிப் பாடல்கள், புளூஸ், ராக் அண்டு ரோல் இசைகளுக்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

அடித்தொனிக் கித்தார்கள்[தொகு]

அடித்தொனிக் கித்தார்கள் (பேஸ் கித்தார்) ஒலிமப்பெட்டிக் கித்தார்களாகவோ அல்லது மின்மக் கித்தார்களாகவோ காணப்படலாம். பொதுவாக நான்கு தந்திகளைக் கொண்டுள்ளன. இவை க-த-ரி-ப (E-A-D-G) எனும் தந்திகளை மேலிருந்து கீழாகக் கொண்டுள்ளன. சாதாரண ஆறு தந்திக் கித்தார்களது நி-க (B-E) எனும் கீழிரண்டு மெல்லிய தந்திகள் இவ்வகையான அடித்தொனிக் கித்தார்களில் இருப்பதில்லை.

ரெசிஃப்பின் பிரேசிலிய நாட்டுப்புற இசையை வாசிக்கும் மனிதன்

அமைப்பு[தொகு]

 1. தலை
 2. Nut
 3. பிரடை
 4. மெட்டு (Frets)
 5. தாங்கு கோல் (Truss rod)
 6. Inlays
 7. கழுத்து
 8. குதி (acoustic) / கழுத்து மூட்டு (electric)
 9. உடல்
 10. அதிர்வுணறி (Pickups)
 11. மின் சாதனங்கள்
 12. பாலம்
 13. மீட்டுமிப் பாலனம் (Pickguard)
 14. முதுகு
 15. ஒலிப்பலகை
 16. Body sides (ribs)
 17. ஒலித் துவாரம்
 18. தந்திகள்
 19. Saddle
 20. விரற்பலகை (Fretboard)

பெரும்பாலான கித்தார்கள் மரத்தினால் செய்யப்படுகின்றன. இது தவிர நெகிழி, உலோகங்கள் போன்றனவற்றாலும் கித்தார்கள் உருவாக்கப்படுகின்றன. அதில் உள்ள நரம்புகள் பெரும்பாலும் நைலான் அல்லது இரும்பு எஃகினால்(steel) தயாரிக்கப்படுகின்றது. கித்தாரில் நரம்புகளை அதிர்வுரச் செய்வதின் மூலம் இசை உருவாக்கப்படுகின்றது. நரம்புகளிலிருந்து வரும் அதிர்வு ஒலியினை கித்தாரின் உடல் பாகம் ஒலிபெருக்கி போல் செயல்பட்டு ஒலியினை மிகைப்படுத்துகின்றது.

இடது அல்லது வலது கைப்பழக்கம் உடையோருக்கு ஏற்றவாறு கித்தார்கள் வடிவமைக்கப்படுகின்றன. பெரும்பான்மையான மனிதர்கள் வலது கையைப் பயன்படுத்தித் தட்டுவார்கள். சில சந்தர்ப்பங்களில் வலதுகைக் கித்தார்களது மேலிருந்து கீழான தந்திகள், கீழிருந்து மேலாக மாற்றி அமைக்கப்படும்போது இடதுகை ஆதிக்கம் கொண்டவர்கள் வலதுகைக் கித்தார்களை இலகுவில் வாசிக்கமுடிகின்றது.

உறுப்புகள்[தொகு]

ஒரு கித்தாரில் தலை, கழுத்து, உடல் எனும் பிரதான பாகங்கள் உள்ளன.

தலை[தொகு]

தலைப்பகுதியில் பிரடை அல்லது பிருடை எனும் கித்தார்த் தந்தியின் சுருதியைச் சரிசெய்யும் சுழலி உள்ளது. அடித்தொனிக் கித்தார்களில் நான்கு பிரடைகளும் ஆறு தந்தி உள்ள கித்தார்களில் ஆறு பிரடைகளும் உள்ளன. இவை "3+3" எனும் அமைப்பில் அல்லது "4+2" எனும் அமைப்பில் அமைந்திருக்கலாம். Steinbergers போன்ற சில கித்தார்கள் தலையைக் கொண்டிருப்பதில்லை. இவற்றின் சுருதி சேர்க்கும் பகுதி உடலில் அல்லது பாலத்தில் உள்ளது.

தலைப்பகுதி நேராகவோ அல்லது சாய்வாகவோ அமைந்திருக்கலாம். இவற்றின் கோணம் 3° தொடக்கம் 25° வரை வேறுபடுகின்றது. கித்தார் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை அல்லது கித்தாரது வகையைப் பொறுத்து தலைக்கும் கழுத்துக்கும் இடையேயான கோணம் வேறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக, கில்ட் நிறுவனத்தின் கித்தார்கள் 4°, மார்ட்டின் நிறுவனத்தின் கித்தார்கள் 11° சாய்வைக் கொண்டன. [5]

விரற்பலகையும் தலையும் சந்திக்கும் இடத்தில் மேரு (nut) அமைந்துள்ளது. இது நெகிழி, பித்தளை, உருக்கு போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருக்கலாம். இதில் காணப்படும் வெட்டுக்களின் ஊடாக பிரடையில் பிணைக்கப்பட்ட தந்திகள் செல்கின்றன. இதுவே ஒரு தந்தியின் அழுத்தப்படாத நிலையில் உள்ள சுருதியைத் தீர்மானிக்கின்றது.

கழுத்து[தொகு]

ஒரு கித்தாரது மெட்டு, தாங்கு கோல், விரற்பலகை அனைத்தும் சேர்ந்து கழுத்து என அழைக்கப்படுகின்றது. விரற்பலகை சிறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பிரிக்கும் உலோகத்தாலான புடைப்பு மெட்டு என அழைக்கப்படுகின்றது. இரண்டு மெட்டுகளுக்கிடையே உள்ள பகுதியில் உள்ள தந்தியை அழுத்தும் போது சுருதி மாறுகின்றது. சாதாரண கித்தார்களில் 19 மெட்டுகள் அமைந்திருக்கும்.

தாங்கு கோல் என்பது உடற்பகுதி விரற்பலகையில் இருந்து தொடங்கி தலைப்பகுதி விரற்பலகையில் முடிவுறும் உள்ளே அமைந்துள்ள ஒரு நீண்ட கம்பியாலான அமைப்பாகும். ஈரப்பதன் வேறுபாடு, மரம் பழமையடைதல் போன்றனவற்றால் கழுத்தின் வளைவு காலப்போக்கில் மாறுபடும், இதனால் தந்திக்கும் விரற்பலகைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கும். இது விரலைத் தந்தி மீது அழுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும். விரற்பலகையின் உள் விளிம்பில் தாங்கு கோலைச சீர் செய்ய ஒரு திருகாணி காணப்படுகின்றது. ஒலித் துவாரம் ஊடாக இதனைச் சீர் செய்யலாம். கடிகாரத் திசையில் திருப்புவதன் மூலம் இது இறுக்கப்பட்டு கழுத்தின் வளைவு சீர் செய்யப்பட்டு கித்தார் இயல்புநிலைக்குத் திரும்பும்.

உடல்[தொகு]

கித்தாரின் தாங்கு கோல் - விரற்பலகையின் உள்ளே அமைந்துள்ள ஒரு நீண்ட கம்பியாலான அமைப்பாகும்.

அக்குஸ்டிக் கித்தார்கள் உடற்பகுதியில் ஒலித்துவாரம் உள்ளது. இப்பகுதியில் விரல்களால் அல்லது கித்தார் மீட்டுமியைப் பயன்படுத்தித் தட்டப்பட்டு கித்தார் வாசிக்கப்படுகின்றது. ஒரு கித்தாரின் இசையின் தரத்தைத் தீர்மானிப்பது உடற்பகுதியாகும்.

சுருதி[தொகு]

இயல்பான ஆறு தந்திக் கித்தாரில் கீழிருந்து மேலாக தந்திகள் எண்ணப்படுகின்றன. இதன்படி, ஆறாவது தந்தியில் இருந்து முதலாவது தந்தி வரை ஒவ்வொரு தந்தியின் இயல்பான சுருதி க-த-ரி-ப-நி-க (E-A-D-G-B-E) எனும் சுர வரிசையில் அமைந்திருக்கும். இவை திறந்த ஒலித் தந்திகள் எனப்படுகின்றன. முதலாவது மற்றும் ஆறாவது தந்திகள் ஒரே சுரத்தைக் கொண்டிருந்தாலும் அவை உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலையில் ஒலிக்கின்றன. இதற்கு அவற்றின் தந்தியின் தடிப்பு காரணமாகின்றது.

சுருதி சேர்த்தல்[தொகு]

வழமை முறையில் சுருதி சேர்த்தல்
வழமை முறையில் சுருதி சேர்த்தல்.

கித்தாருக்குச் சுருதி சேர்ப்பதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. வழமையான முறையில் கித்தாரின் முதலாவது தந்தி (E) பியானோ அல்லது கிளபம் இசைக்கருவிகளில் உள்ள "E" உடன் ஒத்துப்போகும்படி பிரடையைத் திருப்பிச் சரிசெய்யப்படுகின்றது. பின்னர் இரண்டாம் தந்தியின் ஐந்தாவது மெட்டுப்பகுதியும் (E) முதலாவது தந்தியின் திறந்த ஒலியும் ஒன்றாக இருக்குமாறு தந்தி "B"யின் பிரடை திருப்பப்படுகின்றது. இவ்வாறு படத்தில் காட்டப்பட்டவாறு ஏனைய தந்திகளுக்கும் சுருதி சேர்க்கப்படுகின்றது.

கித்தாரில் ஒரு உபகரணம் இணைக்கப்பட்டு கித்தாரின் ஒவ்வொரு தந்திகளும் தட்டப்படுகையில் அந்த உபகரணம் அது எந்தச் சுரத்தில் அந்தத் தந்தி உள்ளது எனும் தகவலைத் தரும். இது முற்றிலும் சுருதியை இழந்த நிலையில் உள்ள கித்தாருக்கு மிகவும் உபயோகமான முறையாகும். எனினும், எளிதில் கிடைக்கக்கூடிய செலவற்ற இன்னுமொரு முறை ஆண்ட்ராய்டு இயங்குதள செல்லிடப்பேசிகள் போன்றனவற்றில் இதற்கென பிரத்தியேகமாக அமைந்துள்ள மென்பொருட்களைப் பயன்படுத்திச் சுருதி சேர்த்தல் ஆகும்.

சுருதி சேர்க்கும் போது மெல்லிய தந்திகள் அறுந்துவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என்பதால் எச்சரிக்கையாக பிரடையைத் திருப்புதல் தேவையானது. சுருதி சேர்த்த பிற்பாடு அது சரியாக அமைந்துள்ளதா என்று பரீசீலிக்க ஏற்கனவே பரிச்சயமான பாடலை அல்லது ச-ரி-க-ம-ப-த-நி-ச எனும் சுர வரிசையை வாசித்துப்பார்க்கலாம்.

வாசிக்கும் முறை[தொகு]

வலிக்கட்டுப்பலகையை அழுத்தும்போது தந்தியின் நீளம் மாறுவதால், அதன் சுருதியும் மாறும். வாசிப்பவர்கள் தங்கள் வலது கையில் தந்தியை/தந்திகளைக் கிள்ளியவாறு இடது கையில் வலிக்கட்டுக்களை அழுத்தி இசைப்பர். ஒரு தந்தியினை அழுத்தாது வாசித்தால் அதன் இயல்பான சுருதியைத் தருகின்றது. இதன் அடிப்படையில் E-A-D-G-B-E எனும் ஆறு தந்திகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு தந்தியும் கீழ்காணும் ஒழுங்கில் சுரத்தைக் கொண்டுள்ளன.

C C# D D# E F F# G G# A A# B

இந்த ஒழுங்கின்படி, E யைத் திறந்த ஒலியாகக் கொண்ட முதலாவது தந்தியின் முதலாவது (வலிக்கட்டுப்பலகை) மெட்டுப் பலகையின் சுரம் "F" ஆகும், அதற்கு அடுத்தது "F#" ஆகும். இவ்வாறு கீழ்க்காணும் படத்தில் காட்டப்பட்டவாறு அமைந்துள்ளன.

படங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Kasha, Dr. Michael (August 1968). "A New Look at The History of the Classic Guitar". Guitar Review 30,3-12
 2. Wade, Graham A Concise History of the Classic Guitar Mel Publications, 2001
 3. Farmer, Henry George (1988), Historical facts for the Arabian Musical Influence, Ayer Publishing, p. 137, ISBN 0-405-08496-X
 4. Kithara appears in the Bible four times (1 Cor. 14:7, Rev. 5:8, 14:2 and 15:2), and is usually translated into English as harp. Strong's Concordance Number: 2788 BibleStudyTools.net
 5. "UG Community @". Ultimate-guitar.com இம் மூலத்தில் இருந்து 2007-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930031645/http://www.ultimate-guitar.com/forum/showthread.php?p=6052023. பார்த்த நாள்: 2010-08-10. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Guitar
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கித்தார்&oldid=3581004" இருந்து மீள்விக்கப்பட்டது