கழுகுமலைக் கலவரம் 1895

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழுகுமலைக் கலவரம் 1895
சாணார் - மறவர் இடையே மோதல்
Location in Tamil Nadu
Location in Tamil Nadu
இடம்கழுகுமலை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
நாள்1895 (UTC+5:30)
தாக்குதல்
வகை
சாதிக்கலவரம்
இறப்பு(கள்)10

கழுகுமலைக் கலவரம் 1895 (Kalugumalai riots of 1895 அல்லது Kalugumalai riots) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தில், கழுகுமலையில் 1895 ஆம் ஆண்டு நாடார் (சாணார் என்றும் அழைக்கப்பட்டனர்) மற்றும் மறவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு மோதலாகும். இந்தக் கலவரத்தில் மொத்தம் பத்து பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர். மேலும் இந்தக் கலவரத்தால் கழுகாசலமூர்த்தி கோயில் தேர் எரிந்தது. கோயிலின் தேரோடும் வீதியை, நாடார்கள் பயன்படுத்தப் பிறசாதியினர் புனிதத்தன்மையைக் காரணம்காட்டி எழுப்பிய எதிர்ப்பும், அதற்கு நாடார்களின் எதிர்வினையுமே, இக்கலவரத்துக்குக் காரணமாக அமைந்தது.

கோயில் வீதியை நாடார்கள் பயன்படுத்துதல் போன்ற உரிமைகள் குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வந்தன. இந்த வழக்குகளில் எதிர் மனுதாரராக எட்டயபுரம் சமீன்தார் இருந்தார். நாடார்களின் அனைத்து முறையீடுகளும் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டன. கல்வியாலும், வணிகத்தாலும் புதிய அந்தஸ்தை அடைந்திருந்த கழுகுமலை நாடார்கள் சமூக அந்தஸ்தை பெற விரும்பினர். ஆனால் தங்களுக்கான மரியாதை இல்லாததால் நாடார்கள் கிருத்துவத்துக்கு மாற முடிவெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாடார், மறவர் இடையே உரசல்கள் தோன்றின. பின்னர் இது 1895 இல் அதன் உச்சத்தை எட்டி, தொடர் கலவரங்களுக்கு வழிவகுத்தது.

கலவரத்துக்குப் பிறகு அமர்வு நீதிமன்றமானது மகாலிங்க நாடார் மற்றும் கருத்த நாடார் ஆகிய இருவருக்கும் மரண தண்டனையையும், வேறு சிலருக்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையும் சிறை தண்டனையை விதித்தது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் பிரஞ்சு மிசனரியின் மேல்முறையீட்டில், நாடார்களுக்கு ஆதரவான ஆதாரங்கள், செசன்சு நீதிமன்றத்தால் கவனிக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது. உயர்நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது. இந்த கலவரங்களுக்குப் பின் 1899இல் சிவகாசி கலவரம் நடந்தது.

பின்னணி[தொகு]

1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு முன்பு பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமமாக கழுகுமலை இருந்தது. நவீன காலத்தில் இந்தக் கிராமம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மலையானது வெட்டுவான் கோயில், கழுகுமலை சமணர் படுகைகள் மற்றும் கழுகாசலமூர்த்தி கோவில் ஆகிய வரலாற்றுச் சின்னங்களுக்காக அறியப்படுகிறது. இந்த வரலாற்றுச் சின்னங்களில் முதல் இரண்டு சின்னங்கள் 8 ஆம் நூற்றாண்டில் ஆண்ட பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் (768-800 CE) ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டவை ஆகும். கழுகாசலமூர்த்தி கோயில் என்பது ஒரு குடைவரைக் கோயில் ஆகும். இது 18 ஆம் நூற்றாண்டில் விரிவுபடுத்தப்பட்டது.[1]

கழுகாசலமூர்த்தி கோயிலானது 1954 ஆம் ஆண்டுவரை எட்டையபுரம் ஜமீன்தாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தென்னிந்திய கிராமங்களில் உள்ள கோயில்களைச் சுற்றி தேரோட்டம் நடப்பது வழக்கமாதலால் அதற்கேற்ப கோயிலைச் சுற்றி தெருக்கள் இருக்கும். கோயிலுக்கு ஏற்ப தங்கம், வெள்ளி, மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கோயில் தேர்கள் இருக்கும். அவை திருவிழாக் காலங்களில் அந்த மாடவீதிகளில் இழுத்துச் செல்லப்படும். மன்னர்கள் கோயிலுக்கு கிராமங்களைப் பரிசாக அளித்தனர். கோயிலைச் சுற்றி நான்கு தெருக்கள் அமைக்கப்பட்டன. இந்த தெருக்களின் வழியாக கோயில் தேர்கள் எளிதாக செல்லவசதியாக அமைக்கப்பட்டன. கழுகுமலையைப் பொறுத்தவரை முக்கிய திருவிழாக்களின் போது, கோவில் தேரானது கழுகுமலைக் குன்றைச் சுற்றி இழுத்துவரப்பட்டது.

அதிகாரப்பூர்வ கணக்கீட்டின்படி 1890 ஆம் ஆண்டில் கழுகுமலைக் கிராமத்தின் மக்கள் தொகை 3,800 ஆகும். இதில் நாடார்களின் எண்ணிக்கை 500 பேராகவும், மறவர்களின் எண்ணிக்கை 475 ஆகவும் இருந்தது. இங்கு தென்னிந்தியாவில் உள்ள பிற கிராமங்களைப் போலவே, சாதிகளை அடிப்படையாகக் கொண்ட தெருக்களில் மக்கள் வாழ்ந்துவந்தனர். நாடார்களின் குடியிருப்பானது தெருவின் வடகிழக்குப் பகுதியில் இருந்தது, அவை தேர் வீதிக்கு வெளியே இருந்தன. ஆனால் கோயில் ஊர்வலமானது நீண்ட பாதையைக் கொண்டு இருந்தது.

சாதி அரசியல்[தொகு]

1800 களில், நாடார்கள் வணிக சமூகமாகத் தங்களை மாற்றிக்கொண்டனர், குறிப்பாகக் கழுகுமலை அவர்களின் வணிக தளங்களில் ஒன்றாக ஆனது. பொருளாதாரத்தில் உயர்ந்துவந்த சாணார்கள், உயர் சாதியினருக்கு இணையான சமூக அந்தஸ்தைப் பெறவேண்டுமென்று விரும்பினர். அவர்கள் தங்களைச் சாணார் என்று அழைக்கப்பட்ட நிலையில் இருந்து ஆளும் சமூகம் என்ற பொருள் கொண்ட நாடார்களாகத் தங்களை மாற்றிக் கொண்டனர். மேலும் இந்து சமூகத்தினரால் சம உரிமைகள் மறுக்கப்பட்டதால் மதுரை பகுதியில் பெருமளவிலான நாடார்கள் கிருத்துவர்களாக மாறத்துவங்கினர். 1890 ஆம் ஆண்டளவில் கிருத்துவத்துக்கு மாறிய 410,000 மக்களில் 150,000 பேர் நாடார்கள் என மதிப்பிடப்பட்டது. பிற சாதி இந்துக்கள் ஆதிக்கம் செலுத்திய கோயில்களுக்குள் நாடார்களை விட மறுப்பது தொடர்ந்து வந்தது. மற்ற சமூகங்கள் போட்டியிட முடியாத பிராந்தியங்களில் பருத்தி வர்த்தகத்தில் நாடார்கள் வெற்றி பெற்றதாக சில வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.[2]

19 ஆம் நூற்றாண்டின் முடிவில், நாடார்கள் ஒரு வணிக சமூகமாக விரைவாக உயர்ந்து வந்தனர். இந்த நிலையில் மறவர் மற்றும் நாடார் இடையேயான பரஸ்பர மோதல் அதன் உச்சத்தை அடைந்து, 1895 கலவரம் ஏற்பட வழிவகுத்தது.[3][4][5] பங்குனி உத்திரத் திருவிழா ஊர்வலத்தின்போது, இப்பகுதியில் நாடார், மறவர் ஆகிய இரண்டு சாதிகளுக்கு இடையே நீடித்துவந்த நீண்டகால மோதலானது கலவரமாக வெடித்தது. இதுவே பின்னர் கழுகுமலைக் கலவரம் என பிரபலமாக அறியப்படுகிறது.

சட்டப் போராட்டங்கள்[தொகு]

1851 ஆம் ஆண்டில், நாடார்கள் தங்கள் திருமண ஊர்வலத்தைத் தேர் வீதியாக உள்ள நான்கு தெருங்களில் நடத்த முயன்றனர். ஆனால் இது மற்ற சாதிகளால் தடை செய்யப்பட்டது. பிள்ளையார் கோயில் உள்ள கிழக்கு கிரி தெருவில் நாடார்கள் சென்று கொள்ளளாலாம் என்று எட்டையபுரம் ஜமீன்தார் கூறினார். 1866 ஆம் ஆண்டில் நாடார்கள் மீண்டும் மற்றொரு முயற்சியை மேற்கொண்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, நாடார்களின் பல்லக்குகளைப் பிள்ளையார் கோவில்வரை செல்ல அனுமதித்தார்.

1885 இல் நாடார்கள் மீண்டும் முயன்றபோது சமீந்தார் சட்ட நடவடிக்கை எடுத்தார். அவர் அந்த வீதிகளானது கோவிலுக்குச் சொந்தமானது என்றும், அதனால் தெருக்களின் தூய்மையைப் பராமரிக்கவும் அதில் ஊர்வலங்களை அனுமதிக்கவும், மறுக்கவும் தங்களுக்கு உரிமை உள்ளதாக அவர் வாதிட்டார். தெருக்களில் பொதுமக்கள் எல்லோருக்கும் சமமான உரிமைகள் இருப்பதாக நாடார்கள் வாதிட்டனர். இந்தத் தெரு ஒன்றில் நாடார் ஒருவர் கடை உரிமையாளராக இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 1899 ஆம் ஆண்டு வீதியானது கோவிலுக்கு சொந்தமானது என்று முனிசிப் தீர்ப்பளித்தார். இதையடுத்து வழக்கானது நாடார்களால் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தச் சூழலில், சமீன்தார் இறந்துபோனார், அவரது வாரிசு சிறுவனாக இருந்த காரணத்தால் அவரது மேலாளர் வழக்கு விசயங்களை கவனித்து வந்தார். மேல்முறையீட்டு நீதிமன்றம், கிழக்குத் தேர்வீதியில் ஒரு வீட்டை வர்த்தகரான, காளிமுத்து கொண்டிருந்த நிலையையும், கோயிலின் உரிமைகளையும் அங்கீகரித்து, மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது தீர்ப்பளித்தது. இதையும் எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் சென்ற வழக்கில், தலைமை நீதிபதி 1899 ஆகத்து 7 அன்று அளித்தத் தீர்ப்பில் தேர்வீதியை கோயிலானது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கவில்லை என்று தீர்ப்பளித்தார். நாடார்கள் தங்கள் அனைத்து சட்டப் போராட்டங்களிலும் தோற்றதால், அவர்கள் கத்தோலிக்க சமயத்தைத் தழுவத் துவங்கினர்.

கலவரம்[தொகு]

கியூசானல் என்ற ஒரு பிரெஞ்சு மிஷனரி கிழக்குத் தேர்வீதியில் இருந்த அதே வீட்டை வாங்கி, ஒரு தேவாலயத்தைக் கட்டியெழுப்ப ஆரம்பித்தார். சில இடஞ்சல்களுக்குப் பிறகு, தேவாலயம் கட்டப்பட்டது. ஆனால் தேவாலயத்தின் முகப்பில் அமைக்கப்பட்ட பந்தலானது கோவிலின் பாதைக்கு இடஞ்சலாக இருந்ததாக நம்பப்படுகிறது. 1895 ஏப்ரல் 7 அன்று, ஆலயத்தின் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது, கோவில் தேரோட்டமானது கழுகுமலை வீதிகளில் சுற்றிவந்தது. அது தேவாலயத்துக்கு முன்பிருந்த பந்தல் அருகில் வந்து சேர்ந்தது. சமீன் மேலாளர் பந்தலை அகற்ற நாடார்களிடம் பேசி முயற்சித்தார். சில தரவுகளின்படி, தேர் நகர்வதற்கு போதுமான இடைவெளி இருந்தது, ஆனால் மற்ற சாதியைச் சேர்ந்தவர்கள் பந்தலை அகற்ற வேண்டும் என்று கோரினர். மோதலைத் தொடங்கியது யார் என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால் இதில் துரைசிபுரம் கிராம முனிசிப் இறந்தார், சமீன் மேலாளர் கடுமையாக காயமற்று சிறிது காலத்திற்குப்பின் இறந்தார். மேலும் சாதி இந்துக்கள் தேவாலயக் கூரைக்கு தீ வைத்தும், நாடார் குடும்பத்தினரையும் தாக்கினர். அவர்களின் வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் எரிக்கப்பட்டன, பெண்கள், குழந்தைகள் போன்றோர் தாக்கப்பட்டனர். பத்திரிகைகளில் இருபது நாடார்கள் கொல்லப்பட்டதாகக் கூறின என்றாலும் உத்தியோகபூர்வமாக ஏழு நாடார்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. மொத்தம் பத்துபேர் இதில் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் மற்றும் இப்பகுதியின் கோயில் தேர் மற்றும் இதர சொத்துக்கள் அழிக்கப்பட்டன.[2]

வழக்கு[தொகு]

பல நாடார்கள் கலவரத்துக்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த மேலாளர் அவர் இறப்பதற்கு முன்னர் ஒரு நாடாரால் குத்தப்பட்டதாக சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் தொடர்புடையதாக மொத்தம் 34 நாடார்கள் கைது செய்யப்பட்டனர். அமர்வு நீதிமன்றம் இருதரப்பு வாதங்களைக் கேட்டு 1895 ஆகத்து 17இல் மகாலிங்கம், கருத்தனன் ஆகியோருக்கு மரண தண்டனையும், மற்றவர்கள் 3 முதல் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையையும் அளித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கியூசனால் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. நாடார்களுக்கு ஆதரவான ஆதாரங்களை அமர்வு நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்று வாதிடப்பட்டது. உயர்நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது. இதன்பிறகு இப்பகுதி நாடார்களால் கியூசானல் வரவேற்கப்பட்டு, திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்விளைவு[தொகு]

இதன்பிறகு கழுகுமலையேச் சேர்ந்த நாடார்கள் அனைவரும் கத்தோலிக்கத்தைத் தழுவினர். மேலும் நாடார்களுக்கும் மறவர்களும் இடையே சாதிச் சண்டைகள் தொடர்ந்தன. இதையடுத்து 1899 இல் சிவகாசி கலவரம் என்ற இன்னொரு கலவரமும் ஏற்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sthala Varalaru". Hindu Religious and Endowment Board, தமிழ்நாடு அரசு. 2015. Archived from the original on 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
  2. 2.0 2.1 Good, Anthony. "The Car and the Palanquin: Rival Accounts of the 1895 Riot in Kalugumalai, South India". Modern Asian Studies (Cambridge University Press) 33 (1): 23–65. doi:10.1017/s0026749x99003200. 
  3. Hardgrave, Robert (1969). The Nadars of Tamil Nadu. University of California Press. பக். 118. https://books.google.com/books?id=KZ9mqiLgkdEC&pg=PA118&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CDYQ6AEwAA#v=onepage&q=sivakasi%20riots&f=false. 
  4. Clothey, Fred W. (2006). Ritualizing on the Boundaries: Continuity And Innovation in the Tamil Diaspora. University of South California. பக். 89–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781570036477. https://books.google.com/books?id=uRxAOJWnyEwC&pg=PA89&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CD0Q6AEwAQ#v=onepage&q=sivakasi%20riots&f=false. 
  5. Kent, Eliza F. (2004). Converting Women: Gender and Protestant Christianity in Colonial South India. New York: Oxford University Press. பக். 299. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-516507-1. https://books.google.com/books?id=HzlkWtM9IJYC&pg=PA299&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CEcQ6AEwAw#v=onepage&q=sivakasi%20riots&f=false. 
  6. "Current Topics". Star (Christchurch, New Zealand): p. 4. 1 August 1899. http://paperspast.natlib.govt.nz/cgi-bin/paperspast?a=d&d=TS18990801.2.67. பார்த்த நாள்: 2009-11-08. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுகுமலைக்_கலவரம்_1895&oldid=3747604" இலிருந்து மீள்விக்கப்பட்டது