சிவகாசி கலவரம் 1899

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவகாசி கலவரம் 1899 (Sivakasi riots of 1899) என்பது தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்திலுள்ள, சிவகாசியில் 1899 சூன் 6 அன்று தொடர்ந்து நடந்த சாதிக் கலவரங்களைக் குறிப்பிடுவது ஆகும்.

பின்னணி

நாடார்கள் பண்டைய பாண்டிய நாட்டின் மன்னர்களான பாண்டியரின் வாரிசுகள் என்றும், நாயக்கர்கள்  பாண்டிய நாட்டைக் கைப்பற்றியபோது, பாண்டிய ​​நாட்டைப் பல பாளையங்களாக (பகுதிகள்) பிரித்து, அவற்றின் ஆட்சியாளர்களாகப் பாளையக்காரர்களை நியமித்தனர் என்றும்  நாடார் வரலாற்று ஆய்வாளர் சாமுவேல் சற்குணர் கூறுகிறார்.[1][2][3][4][5] இந்த நம்பிக்கையே, 19 ஆம் நூற்றாண்டில் நாடார் சமூகத்தின் கொள்கை ஆனது.[6] நாடார் சமூகமானது பெரும்பாலும் பனை மரமேறுதல் சார்ந்த  தொழிலில் ஈடுபட்டுவந்தனர், இதில் கள் உற்பத்தியும் அடங்கும், இத்தொழில் பிற இடைநிலைச் சாதிகளை விடவும் தாழ்ந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட சாதிகளை விட ஒப்பீட்டளவில் சற்று உயர்ந்த நிலையில் இவர்கள் இருந்தனர். நாடார்களில்  நாடான் அல்லது நிலமைக்காரர் என அறியப்படும் உள்சாதியைச் சேர்ந்த ஒரு சிறிய குழுவினர், செல்வந்த நிலப்பிரபுக்களாக இருந்தனர்.[7][8]

சில நாடார் வணிகர்கள்  தங்கள் பகுதியில் இருந்து வடக்கு திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். காலப்போக்கில், இந்த நாடார்கள் (வடக்கு நாடார்கள்) வணிக ரீதியாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செழிப்படைந்து மேல் நிலைக்கு வந்தனர். வணிகத்தால் வடக்கு நாடார்களின் செல்வம் அதிகரித்ததால், அவர்கள் தங்கள் சமூக நிலைமையை மேம்படுத்திக்காட்ட வட இந்திய சத்ரியர்களின் பழக்கவழக்கங்களை படிப்படியாக மேற்கொள்ளத் தொடங்கினர். இந்த வழிமுறையானது சமசுகிருதமயமாக்கம் என அறியப்படுகிறது. ஆனால் நாடார்களை ஏறத்தாழ அனைத்து இடநிலைச் சாதியினரும் ஒதுக்கித் தள்ள முயற்சித்தனர். இந்தச் சமயத்தில் தான் பலர் 'நாடன்' என்று தங்களை அழைக்கத்துக்கொண்டு தங்கள் பெயரில் பின்னொட்டாக ஆக்கத் தொடங்கினர். இந்தப் பட்டத்தை இதற்கு முன்பு நாடார்களில் ஒரு சிறிய உட்பிரிவினரும், நிலப்பிரபுக்களுமான நிலமைக்கார்கள் மட்டுமே பூண்டிருந்தனர். சமுதாயத்தில் செல்வந்தர்களாகவும், சக்திவாய்ந்தவர்களாகவும் இருந்த சிவகாசி நாடார்கள்,  அவர்களின் பல்லக்குத் தூக்கிகளாக மறவர்களைப் பணியமர்த்தியிருந்தனர்.[9] இராமநாதபுரத்தின் ஆறு நகரங்களில் நாடார்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தங்களை சத்திரியர் என அழைத்துக்கொள்வது போன்றவை, அவர்களுக்கு மேலே உள்ள சாதியினரான, வெள்ளாளர்கள் மற்றும் குறிப்பாக மறவர்கள் போன்றோருக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.[10][11] நாடார் சமுதாயத்தின் ஒரு பகுதியினரில் சிலர் கத்தோலிக்கம் மற்றும் புராட்டஸ்டன்டிசம் ஆகிய இரண்டுகிறித்தவ மதத்திற்கும் மாறினர். இருப்பினும், கிட்டத்தட்ட 90% பெரும்பான்மையினர் இந்துக்களாகவே இருந்தனர்.[12]

கலவரம்

சிவகாசியில் நாடார்களுக்கும் இதர மேல்சாதியினருக்குமான விரிசலானது 1895 ஆண்டில் துவங்கியது. அந்த ஆண்டு விசுவநாத சுவாமி கோயில் என்னும் சிவன் கோயிலின் அறங்காவலர் குழுவில் நாடார் ஒருவரையும் உறுப்பினராக்க வேண்டும் என்று நாடார்கள் கோரினர். இதன்பிறகு நாடார்கள் 1897 இல் அவர்களின் மாரியம்மன் கோயில் பூசாரியை (பண்டாரம்) நீக்கிவிட்டு சிதம்பரத்தில் இருந்து ஒரு பிராமணரை அழைத்துவந்து பூசாரியாக்கினர். அந்தப் பிராமணர் நாடார்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் சமயச் சடங்குகளைச் செய்துவந்தார். நாடார்களின் இந்த மேல்நிலையாக்கச் செயல்கள் பிற மேல்சாதியினருக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. 1898 சூலை 16 அன்று சில நாடார்கள் சிவன் கோயிலின் பூட்டை உடைத்து நுழைந்துவிட்டதாகச் செய்தி பரவியது, இதற்குப் பதிலடியாக மேல்சாதியினர் அன்று இரவு நாடார்களின் பத்திரக்காளியம்மன் கோயில் நந்தவனத்துக்குத் தீவைத்தனர். அதற்கு எதிர்ப்பாக நாடார்கள் சூலை 17 அன்று சிவன் கோயில் நுழைவாயில் கதவை உடைத்தனர். அத்துமீறி கோயிலுக்குள் நுழைந்ததாக ஒன்பது நாடார்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் பொய்வழக்கு எனத் தீர்ப்பாகிக் கைதானவர்கள் விடுதலையாயினர். அதன்பிறகும் அவ்வப்போது இரு சமூகத்தினருக்கும் இடையில் உரசல்கள் தோன்றியபடி இருந்தன. இதனையடுத்து சாதி உணர்வுமிக்க சுற்றுவட்டார மறவர்கள் சிவகாசியைத் தாக்கி நாடார்களுக்குத் தக்கபாடம் புகட்ட முடிவெடுத்து ஆட்களைத் திரட்டினர். 1899  ஆண்டு சூன் 6 ஆம் தேதி, 5,000 கொண்ட மறவர்களின் குழுவானது ஒன்று திரட்டப்பட்டது.

இந்த விசயத்தை முன்பே அறிந்த நாடார்கள் தயாராக இருந்தனர். இதையடுத்து தாக்கவந்த மறவர்களை சுமார் 1500 நாடார்கள் எதிர்த்து சண்டையிட்டனர். வணிகப் பகையின் காரணமாக சிவகாசி முசுலீம்களும் நாடார்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்  கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது. சூறையாடலை நிகழ்த்திய மறவர்கள் பின்னர் பின்வாங்கிச் சென்றனர். இக்கலவரத்தில் நாடார்களின் எண்ணுற்று என்பத்தாறு வீடுகள் எரிக்கப்பட்டன. மொத்தம் 21 பேர் கொல்லப்பட்டனர். இதில் காயமடைந்த மூன்று நாடார்கள் பின்னர் இறந்தனர். 1899 சூலை நடுப்பகுதியில் இராணுவ தலையீட்டிற்கு பின்னர் கலகங்கள் முடிவுக்கு வந்தன.[13][14][15]

மேற்கோள்கள்

 1. "www.hindu.com". மூல முகவரியிலிருந்து 2007-11-23 அன்று பரணிடப்பட்டது.
 2. [1] Gazetteers of India Tamil Nadu state: Thoothukudi district by Sinnakani: Copyrighted by the Government of Tamil Nadu,Commissioner of archives and Historical Research Page 233-242
 3. Robert Hardgrave. The Nadars of Tamil Nadu. University of California Press. பக். 80–90. 
 4. History of Tamil Nadu, 1565-1982 Page 277 By K. Rajayyan
 5. [2] Deccan Chronicle March 1st 2007
 6. Robert Hardgrave. The Nadars of Tamil Nadu. University of California Press. பக். 87. 
 7. Robert L. Hardgrave, Jr.(1969) The Nadars of Tamilnad
 8. Bishop Stephen Neill: from Edinburgh to South India By Dyron B. Daughrity
 9. Robert Hardgrave. The Nadars of Tamil Nadu. University of California Press. பக். 105–109. 
 10. [3] Society in India: Change and continuity By David Goodman Mandelbaum
 11. [4] State and Society in India By A.R.
 12. Clothey, Fred W. (2006). Ritualizing on the boundaries: continuity and innovation in the Tamil diaspora. University of South Carolina Press. பக். 88–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57003-647-7. இணையக் கணினி நூலக மையம்:255232421. https://books.google.com/?id=uRxAOJWnyEwC&lpg=PA89&dq=Sivakasi%20riots%2C%201899&pg=PA89#v=onepage&q=Sivakasi%20riots,%201899&f=false. பார்த்த நாள்: 2009-11-08. 
 13. Robert Hardgrave. The Nadars of Tamil Nadu. University of California Press. பக். 118. 
 14. Caste in Indian politics By Rajni Kothari
 15. "Current Topics". Star (Christchurch, New Zealand). August 1, 1899. p. 4. http://paperspast.natlib.govt.nz/cgi-bin/paperspast?a=d&d=TS18990801.2.67. பார்த்த நாள்: 2009-11-08. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகாசி_கலவரம்_1899&oldid=3244757" இருந்து மீள்விக்கப்பட்டது