காசி விசுவநாதர் ஆலயம், சிவகாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காசி விசுவநாதர் ஆலயம்
காசி விசுவநாதர் ஆலயம் is located in தமிழ் நாடு
காசி விசுவநாதர் ஆலயம்
காசி விசுவநாதர் ஆலயம்
அமைவிடம், தமிழ்நாடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர் மாவட்டம்
அமைவு:சிவகாசி
ஆள்கூறுகள்:9°27′01″N 77°47′44″E / 9.45028°N 77.79556°E / 9.45028; 77.79556ஆள்கூறுகள்: 9°27′01″N 77°47′44″E / 9.45028°N 77.79556°E / 9.45028; 77.79556
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

காசி விசுவநாதர் ஆலயம் (Kasi Viswanathar Temple) இந்தியாவின், தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரத்தில் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோவில் இந்துக் கடவுள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலானது, 16- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய அரசன் அரிகேசரி பராக்கிரமப் பாண்டியனால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் மதுரை நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன என நம்பப்படுகிறது. இக்கோவிலில் சிவபெருமான் விசுவநாதராகவும் அவர்தம் மனைவி பார்வதி விசாலாட்சியாகவும் வணங்கப்படுகிறார்கள். 1899 ஆம் ஆண்டு இக்கோவிலில் கோவில் நுழைவு இயக்கம் நடைபெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிவகாசி கலவரத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

இக்கோவிலின் அனைத்து சந்நிதிகளையும் உள்ளடக்கி கருங்கற் சுவர் அமைந்துள்ளது. இக்கோவிலானது காலையில் 6 மணி முதல் 12 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். முழுநிலவு அன்று மட்டும் நாள்முழுதும் திறந்திருக்கும். இங்கு தினந்தோறும் நான்கு வழிபாடுகளும் வருடத்திற்கு மூன்று திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. இத்திருவிழாக்களுள் தமிழ்மாதமாகிய வைகாசி மாதம் (மே - சூன்) நடைபெறுகின்ற பிரம்மோஸ்தவத் திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இக்கோவில் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.

புராண நிகழ்வு[தொகு]

முன் மண்டபம்

இந்து புராணத்தின்படி, இந்துக் கடவுளான சிவனுக்கு தென்காசியில் கோவில்கட்ட விரும்பிய பாண்டிய அரசன் அரிகேசரி பராக்கிரமப் பாண்டியன், அதற்குத் தேவையான, தென்னிந்தியாவில் சிவனுக்கு பொதுவான குறியீட்டு உருவமாக விளங்கும் லிங்கத்தினை கொண்டுவரும் பொருட்டு காசிக்குச் சென்றான். அவன் புனிதமான லிங்கத்தினை எடுத்துக் கொண்டு திரும்பும் வழியில் சிவனுக்கு மிகவும் விருப்பமான வில்வ மரமொன்றின் கீழ் ஓய்வெடுத்தான். அவ்விடத்திலிருந்து மீண்டும் புறப்பட்டபோது அந்த லிங்கத்தை சுமந்து வந்த பசுவானது அங்கிருந்து நகர மறுத்தது. இதனை சிவனின் மனவிருப்பம் என்று உணர்ந்துகொண்ட அரசன் பசுவானது நின்றுவிட்ட அதே இடத்தில் அந்த லிங்கத்தை நிறுவினான். காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட லிங்கம் நிறுவப்பட்ட அந்த இடம்தான் சிவகாசி என்றழைக்கப்பட்டது. அரசன் காசியிலிருந்து லிங்கத்தைக் கொண்டு வந்ததால் அக்கோவில் காசிவிசுவநாதர் ஆலயம் என்று அறியப்படுகிறது.[1][2]

வரலாறு[தொகு]

சந்நிதிக்கு முன்புள்ள தூண் மண்டபம்

சிவகாசி 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகும். கி.பி.1428 முதல் கி.பி.1460 வரையிலான காலத்தில், சிவகாசி உள்ளிட்ட மதுரை மண்டலத்தின் தெற்குப் பகுதிகளை பாண்டிய அரசன் அரிகேசரி பராக்கிரமப் பாண்டியன் ஆட்சி செய்தார். 16 ஆம் நூற்றாண்டில் சிவகாசி மதுரை மண்டலத்தின் ஒரு பகுதியாக ஆனது. 1559 ஆம் ஆண்டில் மதுரை விசயநகரப் பேரரசிடமிருந்து விடுபட்டு மதுரை நாயக்கர்களின் அரசான பின்பு நாயக்க அரசர்களிடமிருந்து இக்கோவிலுக்கு கொடைகள் கிடைக்கத் தொடங்கின.[3] 1736 ஆம் ஆண்டில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தபின்பு இக்கோவிலைப் பற்றியான வரலாற்று நிகழ்வுகள் ஏதும் இல்லை. மதுரையானது 18 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் சந்தா சாகிப் (1740 - 1754), ஆற்காட்டு நவாப்பு மற்றும் முகம்மது யூசூப் கான் (1725 - 1764) ஆகியோரால் மீண்டும் மீண்டும் பலமுறை கைப்பற்றப்பட்டது.[4] 1801 ஆம் ஆண்டு மதுரைப் பகுதியானது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[5]

1800 ஆம் ஆண்டுகளில் வணிக ஆர்வம் மிக்க நாடார் சமூகத்தினர் தமது வணிக தளத்தினை இந்த நகரில் அமைத்தனர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில், வணிகத் துறையில் நாடார்களின் அமோகமான வளர்ச்சியானது மறவர் சமூகத்தினருடனான மோதலுக்கு வழிவகுத்தது. நாடார்கள் இக்கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டனர். 1899 ஆம் ஆண்டில் அவர்கள் கோவிலுக்குள் நுழைய முயன்ற நிகழ்வு, சிவகாசி கலவரம் என அனைவராலும் அறியப்பட்ட தொடர் கலவரத்திற்கு வழிவகுத்தது. இக்கலவரத்தின்போது 22 பேர் கொல்லப்பட்டனர். 800 வீடுகளும் நகரின் மையப் பகுதியிலிருந்த பெரியத் தேரும் (திருவிழாக் காலங்களில் கோவிலால் பயன்படுத்தப்படுவது) தீக்கிரையாயின. இறுதியாக, இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பிறகு 1899 ஆம் ஆண்டு சூலை மாத நடுவில் இக்கலவரம் முடிவுக்கு வந்தது.[6][7][8][9] இந்தக் கோவிலானது தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டும் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.[10]

கட்டிடக்கலை[தொகு]

இந்தக் கோவிலானது சிவகாசியில் உள்ள கடைத்தெருவில் சுறுசுறுப்பான வணிகப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில் மூன்று நிலைகளுடைய கோபுரத்தினைக் கொண்டுள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலிலிருந்து கொடிமரம் அமைந்துள்ள மண்டபம் வரை தூண்களாலான மண்டபம் உள்ளது. கருவறையானது நுழைவாயிலுக்கு நேராக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. லிங்க வடிவிலான காசி விசுவநாதரின் சிலை கருவறையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் முன்பாக உள்ள மண்டபத்தின் இருபுறங்களிலும் விநாயகர் மற்றும் முருகனின் உருவங்கள் அமைந்துள்ளன. சிவகாமியின் கருவறையானது மூலவரின் கருவறைக்கு இணையாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கருவறைக்கு எதிராக உள்ள இரண்டாவது கொடிமரம், காசி விசுவநாதரின் சந்நிதிக்கு எதிராக உள்ள கொடிமரத்திற்கு இணயாக அமைந்துள்ளது. முக்கிய நுழைவாயிலின் வலது பக்கமாக சிவகாமி சந்நிதியின் எதிராக தெப்பக்குளம் அமைந்துள்ளது. மேலும் ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, ஆறுமுகர், துர்கை, ஒன்பது கிரகங்கள் மற்றும் நடராசர் ஆகிய தெய்வங்களின் சிறிய சந்நிதிகள் காசி விசுவநாதர் மற்றும் விசாலாட்சியின் சந்நிதிகளைச் சுற்றி அமைந்துள்ளன.[11]

திருவிழாக்கள்[தொகு]

கோவிலினுள் அமைந்த குளம்

இக்கோவில் சைவ மரபினைப் பின்பற்றுகிறது. கோவிலில் உள்ள பூசாரிகள் தினந்தோறும் மற்றும் திருவிழாக் காலங்களிலும் உரிய பூசைகளைச் செய்கின்றனர். இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் நான்கு முறை வழிபாடு நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு கால சாந்தியும், 11.30 மணிக்கு உச்சிக்காலப் பூசையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூசையும், 8.00 மணிக்கு அரவணைப் பூசையும் நடத்தப்படுகின்றன. வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை, இரு வாரத்திற்கொரு முறை நடத்தப்பட வேண்டிய வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. இக்கோவில் நாள்தோறும் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். திருவிழாக் காலங்களில் நாள்முழுதும் திறந்திருக்கும். இக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தமிழ் மாதமான வைகாசி மாதத்தில் (மே - சூன்) கொண்டாடப்படும் பிரம்மோஸ்தவத் திருவிழா இக்கோவிலின் முக்கியத் திருவிழாவாகும். ஆனி மாதத்தில் (சூன் - சூலை) நடராசர் திருமஞ்சன விழாவும், ஆடி மாதத்தில் (சூலை - ஆகத்து) விசாலாட்சி தபசுத் திருவிழாவும், ஆவணி மாதத்தில் (ஆகத்து - செப்டம்பர்) மூலத் திருவிழாவும், ஐப்பசி மாதத்தில் (அக்டோபர் - நவம்பர்) சூரசம்ஹாரத் திருவிழாவும் மேலும் கார்த்திகைத் திருநாள், திருவாதிரை, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியத் திருவிழாக்களும் இக்கோவிலில் கொண்டாடப்படுகின்றன.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sivakasi History". Sivakasi Municipality (2011). பார்த்த நாள் 2012-12-29.
 2. Subramaniam, Neela. Om Namah Shivaya. Chennai: Young Kids Press. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7478-510-8. https://books.google.com/books?id=TQAJ2NOx0EoC&pg=PA33&dq=sivakasi+temple&hl=en&sa=X&ei=GVToUPz5NYv88QT-moDIAQ&ved=0CEgQ6AEwBDgK#v=onepage&q=sivakasi%20temple&f=false. 
 3. V., Vriddhagirisan (1995) [1942], Nayaks of Tanjore, New Delhi: Asian Educational Services, p. 115, ISBN 81-206-0996-4
 4. Harman, William. P (1992). The sacred marriage of a Hindu goddess. Motilal Banarsidass. பக். 30–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0810-2. https://books.google.com/books?id=F_siW9T3ev4C&pg=PA36. 
 5. Markovits, Claude (2004). A History of Modern India, 1480–1950. London: Wimbledon Publishing Company. பக். 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84331-152-6. https://books.google.com/books?id=uzOmy2y0Zh4C&pg=PA253&lpg=PA253. 
 6. Hardgrave, Robert (1969). The Nadars of Tamil Nadu. University of California Press. பக். 118. https://books.google.com/books?id=KZ9mqiLgkdEC&pg=PA118&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CDYQ6AEwAA#v=onepage&q=sivakasi%20riots&f=false. 
 7. "Current Topics". Star (Christchurch, New Zealand): p. 4. 1 August 1899. http://paperspast.natlib.govt.nz/cgi-bin/paperspast?a=d&d=TS18990801.2.67. பார்த்த நாள்: 2009-11-08. 
 8. Clothey, Fred W. (2006). Ritualizing on the Boundaries: Continuity And Innovation in the Tamil Diaspora. University of South California. பக். 89–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781570036477. https://books.google.com/books?id=uRxAOJWnyEwC&pg=PA89&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CD0Q6AEwAQ#v=onepage&q=sivakasi%20riots&f=false. 
 9. Kent, Eliza F. (2004). Converting Women: Gender and Protestant Christianity in Colonial South India. New York: Oxford University Press. பக். 299. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-516507-1. https://books.google.com/books?id=HzlkWtM9IJYC&pg=PA299&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CEcQ6AEwAw#v=onepage&q=sivakasi%20riots&f=false. 
 10. "Property of the temple" (PDF). Hindu Religious and Endowment Board, Government of Tamil Nadu (1949). பார்த்த நாள் 2 November 2015.
 11. 11.0 11.1 "Sri Kasi Viswanathar temple" (2014). பார்த்த நாள் 2 November 2015.