உள்ளடக்கத்துக்குச் செல்

கண்டுபிடிப்புக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவீன காலக் கடற்பயணங்களைக் காட்டுகின்ற, காலத்தால் மிக முந்திய உலக வரைபடம். ஆண்டு: 1502. வரைந்தவர் அல்பேர்ட்டோ கன்டீனோ. கிறிஸ்டோபர் கொலம்பஸ் நடு அமெரிக்காவிலும், காஸ்பார் கோர்ட்டோ-ரேயால் நியூஃபண்ட்லாந்திலும், வாஸ்கோ ட காமா இந்தியாவிலும், பேத்ரோ ஆல்வாரெஸ் காப்ரால் பிரேசிலிலும் ஆய்வுச் செயல்பாடுகள் நிகழ்த்தியதை இப்படம் மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. காப்பிடம்: எஸ்தேன்சே நூலகம், மோதெனா, இத்தாலி.

கண்டுபிடிப்புக் காலம் (Age of Discovery) என்பது 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 17ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை ஐரோப்பியர்கள் உலகம் முழுவதையும் தீவிர ஆய்வுச் செயல்பாடுகளுக்கு உட்படுத்தி, ஆப்பிரிக்கா, அமெரிக்காக்கள், ஆசியா, ஓசியானியா ஆகிய பெருநிலப் பகுதிகளோடு நேரடி தொடர்புகள் ஏற்படுத்தி, பூகோளத்தின் வரைபடத்தை உருவாக்கிய வரலாற்று முதன்மை வாய்ந்த காலத்தைக் குறிக்கும்.

மறுபெயர்கள்

[தொகு]

"கண்டுபிடிப்புக் காலத்தை" "ஆய்வுச் செயல்பாடுகள் காலம்" (Age of Exploration) என்றும் "பெரும் கடற்பயணங்களின் காலம்" (Great Navigations) என்றும் அழைப்பதுண்டு.

வரலாற்று ஆசிரியர்கள் "கண்டுபிடிப்புக் காலம்" என்னும் பெயரைச் சற்றே வேறுபட்ட விதத்தில் புரிந்துகொள்வதும் உண்டு.[1][2] அதன்படி, பொன், வெள்ளி, வாசனைப் பொருள்கள் போன்றவற்றை வாங்கவும் விற்கவும் ஐரோப்பாவுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியா மற்றும் இந்தியக் கலாச்சார வீச்சுக்கு உட்பட்ட நாடுகளுக்கு (Indies) மாற்றுவழிகளாகக் கடல் வழிகளைக் கண்டுபிடிக்க போர்த்துகல் மற்றும் எசுப்பானியா ஆகிய நாடுகள் மேற்கொண்ட முதன்முயற்சிகள் நிகழ்ந்த காலம் "கண்டுபிடிப்புக் காலம்" ஆகும்.[3]

நடுக்காலத்திற்கும் நவீன காலத்திற்கும் பாலம்

[தொகு]

"கண்டுபிடிப்புக் காலம்" என்பது நடுக்காலத்துக்கும் நவீன காலத்துக்கும் பாலம் போல அமைகின்றது. அதுவும் மறுமலர்ச்சிக் காலமும் சேர்ந்து நவீன காலத்தின் தொடக்க கட்டத்திற்கும், ஐரோப்பிய நிலங்கள் "சுதந்திர நாடுகள்" (nation states) என்னும் நிலையடையவும் இட்டுச் சென்றன. புதிதாகக் "கண்டுபிடிக்கப்பட்ட" நாடுகள் பற்றிய சுவையான தகவல்களும் அவற்றின் வரைபடங்களும் அச்சு இயந்திரக் கண்டுபிடிப்பின் உதவியோடு மக்களுக்கு எளிதாகக் கிடைத்தன. தொலை நாடுகள் பற்றிய தகவல்களை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் மக்களிடையே முகிழ்த்தது. மனித நலவியல் (humanism) வளர்ந்தது. அதோடு அறிவியல் மற்றும் அறிவு வளர்ச்சி செயல்பாடுகள் விரிவடையத் தொடங்கின.

பழைய உலகு, புதிய உலகு தொடர்பு கொள்ளல்

[தொகு]

ஐரோப்பிய நாடுகள் கடல்கடந்து பயணம் சென்று உலகின் பல பகுதிகளில் வாணிகம் செய்ததோடு நிற்காமல், அங்கு குடியேற்றங்களையும் அமைத்தன; குடியேற்ற ஆதிக்கப் பேரரசுகளையும் நிறுவின. இவ்வாறு "பழைய" உலகாகிய ஆசியா, ஐரோப்பா ஆகிய பெரும் நிலப்பகுதிகள் "புதிய" உலகாகிய அமெரிக்க கண்டங்களோடு கொடுக்கல் வாங்கல் வகையாகத் தொடர்புகொண்டதால் "கொலம்பிய பரிமாற்றம்" (Columbian Exchange) நிகழ்ந்தது. தலைசிறந்த கடல்பயணியும் கடல்வழிக் கண்டுபிடிப்பாளருமான கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்பவரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது "கொலம்பிய பரிமாற்றம்" என்னும் சொற்பயன்பாடு ஆகும்.

பலவகையான செடிகொடிகள், விலங்குகள், உணவுகள், அடிமைகள் உட்பட்ட மக்கள் குழுக்கள், தொற்று நோய்கள், "பழைய" உலகிலிருந்து "புதிய" உலகுக்கும் "புதிய" உலகிலிருந்து "பழைய" உலகுக்கும் கொண்டுசெல்லப்பட்டன. உலகின் கிழக்குப் பகுதிக்கும் வடக்குப் பகுதிக்கும் இடையே கலாச்சாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. வரலாற்றிலேயே சிறப்புமிக்க வகையில் "உலகுமயமாக்கலும்" சூழமைவுத் தாக்கம் கொணர்ந்த மேற்கூறிய செயல்பாடுகளும் "கொலம்பிய பரிமாற்றத்தின்" போது நடைபெற்றன.

இவ்வாறு உலக நாகரிகங்கள் ஒன்றையொன்று அறிந்திடவும் ஏற்றிடவும் வழிபிறந்தது.

முக்கிய கண்டுபிடிப்புப் பயணப் பட்டியல்

[தொகு]
கண்டுபிடிப்புக் காலத்தில் (1482-1524) மேற்கொள்ளப்பட்ட முக்கிய பயணங்கள். விவரங்களுக்கு விரிபட்டியலைச் சொடுக்குக:

போர்த்துகல் நாடு கடல்பயணத்தில் முதன்மை

[தொகு]

போர்த்துகல் நாட்டவர் 1418 தொடங்கி ஆப்பிரிக்க கண்டத்தின் அட்லான்டிக் கடலோரத்தை ஆய்வுச் செயல்பாடுகளுக்கு உட்படுத்தினார்கள். அவர்களுக்குப் புரவலராக இருந்தவர் பெயர் "கடல் பயணி ஹென்றி இளவரசர்" ஆகும். ஆப்பிரிக்கா கண்டத்தின் அட்லான்டிக் கடலோரமாகப் பயணம் மேற்கொண்ட பார்த்தலோமேயு தீயாஸ் என்னும் போர்த்துகேசியர் 1498இல் இந்தியப் பெருங்கடலைச் சென்றடைந்தார். அந்தக் கடல்வழியில் பயணம் மேற்கொண்டு பல கண்டுபிடிப்புகள் அடுத்த முப்பது ஆண்டுக் காலத்தில் நிகழ்ந்தன.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தல்

[தொகு]

ஐரோப்பிய அட்லான்டிக் கடல் ஓரத்தில் இருந்து மேற்கு நோக்கிக் கடல் பயணம் மேற்கொண்டு இந்திய நாட்டுப் பகுதிகளோடு வியாபரம் செய்ய கடல் வழி கண்டுபிடிக்கும் முயற்சி தொடங்கியது. எசுப்பானிய மன்னரின் ஆதரவின் கீழ் கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492இல் இத்தகைய பயணத்தை மேற்கொண்டார். ஆனால் ஆசியாக் கண்டத்தில் இந்திய நாட்டுப் பகுதிகளைச் சென்று அடைவதற்குப் பதிலாக கொலம்பஸ் ஒரு புதிய கண்டத்தைச் சென்றடைந்தார். அதை ஐரோப்பியர் "அமெரிக்கா" என்று அழைத்தனர்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்படுகின்ற நாடுகளில் யார் வணிக உரிமையும் பிற உரிமைகளும் கொண்டிருக்கலாம் என்பது குறித்து எசுப்பானியாவுக்கும் போர்த்துகல் நாட்டுக்கும் இடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு அந்த இரு நாடுகளும் பூகோளத்தை இரண்டாகப் பங்கீடு செய்து, ஒப்பந்தம் செய்துகொண்டன. அது "தோர்தேசீயாஸ் ஒப்பந்தம்" (Treaty of Tordesillas) என்று அழைக்கப்படுகின்றது.

வாஸ்கோ ட காமா இந்தியா சென்றடைதல்

[தொகு]

வாஸ்கோ ட காமா என்னும் போர்த்துகீசிய பயணி ஓர் ஆய்வுச் செயல்பாட்டுக் குழுவுக்குத் தலைமைதாங்கி, இந்தியாவுக்குக் கடல் பயணம் மேற்கொண்டார். ஆசிய கண்டத்தோடு நேரடி வணிகத்தில் ஈடுபடுவதற்குக் கடல்வழி கண்டுபிடிப்பதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. அக்கடல் பயணத்தின்போது வாஸ்கோ ட காமா, ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக் கடலோரமாகச் சென்று இந்தியா சென்றடைய எண்ணினார். அவருடைய கனவு 1498இல் நிறைவேறியது.

அதைத் தொடர்ந்து, விரைவிலேயே போர்த்துகீசியர்கள் இன்னும் கிழக்கு நோக்கிக் கடல்பயணம் சென்று, "வாசனைப் பொருள்கள் தீவுகள்" என்று அழைக்கப்பட்ட மலுக்கு தீவுகளை 1512இல் சென்றடைந்தனர். மறு ஆண்டு அவர்கள் சீனாவைச் சென்று சேர்ந்தார்கள்.

நாடுகள் கண்டுபிடித்தலின் தொடர்நிகழ்வு

[தொகு]

இவ்வாறு, பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி மற்றும் அதன் மேற்குப் பகுதி பற்றிய தகவல்கள் 1512ஆம் ஆண்டளவில் ஓராண்டுக்குள் ஐரோப்பாவைச் சென்று சேர்ந்தன. மேற்கு நோக்கிய கடல்பயணம் ஒருபக்கம், கிழக்கு நோக்கிய கடல்பயணம் மறுபக்கம் என்று இரு பயணப் பாதைகள் முதலில் பிரிந்து சென்றாலும், அவை 1522ஆம் ஆண்டு ஒன்றையொன்று சந்தித்தன. அதாவது, பெர்டினாண்ட் மகெல்லன் என்ற போர்த்துகீசிய கடல்பயணி மேற்கு நோக்கிய கடல்பயணத்தை எசுப்பானியா நாட்டு சார்பில் மேற்கொண்டு, கடல்வழியாக முதல்முறையாக பூகோளத்தைச் சுற்றிவந்தார். அதே சமயத்தில் எசுப்பானிய "ஆக்கிரமிப்பாளர்கள்" (Conquistadores) அமெரிக்காக்களின் உள்நாட்டுப் பகுதிகளையும், பிறகு தென் பசிபிக் தீவுகளையும் தங்கள் ஆய்வுச் செயல்பாடுகளுக்கு உட்படுத்தினார்கள்.

பிற ஐரோப்பியர் நாடுகள் கண்டுபிடித்தலில் ஈடுபடுதல்

[தொகு]

கடல்வழி ஆய்வுச் செயல்பாடுகளில் முதன்முதலாக ஈடுபட்ட ஐரோப்பியர் போர்த்துகீசியரும் எசுப்பானியருமே ஆவர். அவர்களுடைய ஆய்வுச் செயல்பாடுகள் ஐரோப்பாவில் பெரும் ஆர்வத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தின. 1495இலிருந்து பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடல்வழி வணிகப் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கின. சிறிது காலத்துக்குப் பின் ஒல்லாந்தியர் கடல்வழிப் பயணங்களில் ஈடுபடலாயினர். இவ்வாறு, தொடக்கத்தில் போர்த்துகீசியரும் எசுப்பானியரும் மட்டுமே கட்டுப்படுத்திவந்த கடல்வழி வாணிகம் பிற ஐரோப்பியரின் கைகளிலும் சென்று சேரத் தொடங்கியது. அவர்கள் புதிய கடல்வழிகளைக் கண்டுபிடித்தனர். முதலில் வடக்கு நோக்கியும், பின்னர் தென் அமெரிக்காவைச் சுற்றி, பசிபிக் பெருங்கடல் பகுதி நாடுகள் நோக்கியும் அவர்கள் வணிகப் பயணங்களும் குடியேற்றப் பயணங்களும் மேற்கொண்டனர்.

பின்னர், போர்த்துகீசியரின் கடல்வழியைப் பின்தொடர்ந்து, ஆப்பிரிக்காவைச் சுற்றிச் சென்று, இந்தியப் பெருங்கடலைச் சென்றடைந்தார்கள். இவ்வாறு, ஆசுத்திரேலியா 1606இல் கண்டுபிடிக்கப்பட்டது. நியூசிலாந்து 1642இல் கண்டுபிடிக்கப்பட்டது. ஹவாய் தீவுகள் 1778இல் கண்டுபிடிக்கப்பட்டன.

உருசியா சைபீரியாவைப் பிடித்தல்

[தொகு]

இதற்கிடையே, 1580-1640 ஆண்டுக் கால கட்டத்தில் உருசியா நாடு சைபீரியா பகுதியை முற்றிலுமாக ஆய்வுச் செயல்பாடுகளுக்கு உட்படுத்தி, தன் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தது.

கண்டுபிடிப்புக் காலத்தின் பின்புலம்

[தொகு]

நடுக்கால புவியியல்

[தொகு]
தாலமி (2ஆம் நூற்றாண்டு) உருவாக்கிய உலக வரைபடம். இங்கு 15ஆம் நூற்றாண்டில் சீரமைத்த படம்

மகா அலெக்சாந்தர் (கிமு 356-323) என்ற பேரரசனும் அவரைப் பின்தொடர்ந்தவர்களும் போரெடுப்புகள் வழியாகப் பண்டைக்காலத்தில் ஆசியாப் பெருநிலப் பகுதியோடு தொடர்புகள் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் ஐரோப்பிய வரலாற்றின் நடுக்காலத்தின்போது, கிரேக்க கலாச்சார வீச்சுக்குள் வந்திருந்த பிசான்சியப் பேரரசுக்கு (Byzantine Empire) அப்பால் கிழக்கே என்ன இருந்தது என்பது குறித்துத் துல்லியமான செய்திகள் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்த தகவல்களும் தெளிவின்றியே இருந்தன[4]

கிபி 870ஆம் ஆண்டளவிலான யூரோ-ஆசிய, வட ஆப்பிரிக்க நாடுகள் அடங்கிய வரைபடம். ஆதாரம்: பாரசீக நிலவியல் அறிஞர் (கிபி சுமார் 820-912) இபன் கோர்தாத்பே என்பவர் எழுதிய "சாலைகளும் அரசுகளும் அடங்கிய நூல்" என்னும் ஏடு. ராதானிய யூத வணிகர்கள் வணிகம் செய்த பாதைகள் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. பிற வணிக வழிகள் ஊதா நிறத்தில் உள்ளன. கணிசமான யூத மக்கள் தொகை இருந்த நகரங்கள் பழுப்பு நிறத்தில் உள்ளன. சில வழிப்பாதைகள் ஊகத்தின் அடிப்படையிலானவை.
ராதானிய யூத வணிகர்கள்

ஐரோப்பாவுக்கும் பிற பெருநிலப்பகுதிகளுக்கும் இடையே நிகழ்ந்த வணிகத் தொடர்புகள் பற்றித் தகவல் தருகின்ற முக்கியமான பண்டைக்கால ஆதாரம் "ராதானிய (Radhanite) யூத வணிக இணையங்கள்" ஆகும். கிபி 500 முதல் 1000ஆம் ஆண்டு வரையிலும் அதற்குப் பின்னரும் "ராதானியர்" என்று அழைக்கப்பட்ட யூத வணிகர்கள் ஐரோப்பாவுக்கும் இசுலாமிய நாடுகளுக்கும் இடையே வாணிகம் நடத்திய "இடைத்தரகர்களாக" செயல்பட்டார்கள். பண்டைக்கால உரோமைப் பேரரசு ஏற்படுத்தியிருந்த விரிவான வாணிக சாலை வழிகளை, அப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, வணிகத்துறை சார்ந்த செயல்பாடுகளுக்காகத் தொடர்ந்து பயன்படுத்தியது இந்த "ராதானிய" யூத வணிகர்களே ஆவர்.

அவர்களைப் பற்றிய குறிப்புகள் "சாலைகளும் அரசுகளும் அடங்கிய நூல்" என்னும் பண்டைய அரபி ஏட்டில் உள்ளது. அந்த நூலை எழுதியவர் பாரசீக நிலவியல் அறிஞராகத் திகழ்ந்த இபன் கோர்தாத்பே (Ibn Khordadbeh ) என்பவர் ஆவார். கிபி சுமார் 820-912இல் வாழ்ந்த அவர் தம் நூலில் பல நாடுகள் பற்றித் தகவல்கள் தருகிறார். தெற்கு ஆசியாவில் பிரம்மபுத்திரா நதிவரையுள்ள மக்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் பற்றிய தகவல்கள் அந்நூலில் உள்ளன. மேலும், அந்தமான் தீவுகள், மலேசிய தீபகற்பம், ஜாவா பற்றிய விவரங்களும் ஆங்கு உள்ளன. சீனா, கொரியா மற்றும் ஜப்பான் பற்றிய குறிப்புகளும் அந்நூலில் காணக்கிடக்கின்றன.

அரபு நிலவியல் வரைபடங்கள்

கிபி 1154ஆம் ஆண்டில் முகமது அல்-இத்ரீசி (Muhammad al-Idrisi) என்னும் அரபு நிலவியல் அறிஞர் உலகப் படம் ஒன்றை உருவாக்கினார். அவர் அரசவை அறிஞராகப் பணிசெய்தது சிசிலி மன்னன் இரண்டாம் ரோஜர் என்பவரின் காலத்தில் என்பதால் அந்த உலகப் படத்திற்கு "ரோஜர் பட்டியல்" (Tabula Rogeriana) என்றும் பெயர் உண்டு.[5] அக்கால கட்டத்தில் கூட, ஜேனொவா மற்றும் வெனிசு அரசுகளைச் சார்ந்த கிறித்தவர்களும் சரி, அராபிய கடல்பயணிகளும் சரி, வடக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளைத் தவிர அப்பெருநிலப் பகுதியின் தெற்கு விரிவு பற்றி அறவே தெரிந்திருக்கவில்லை. சகாரா பாலைநிலத்திற்குத் தெற்குப் பகுதியில் புகழ்மிக்க ஆப்பிரிக்க அரசுகள் இருந்தனவென்று செவிவழிச் செய்தி நிலவியதே தவிர, அந்த நாடுகள் பற்றிய நேரடி அறிவு யாருக்கும் இருக்கவில்லை. அராபியர்கள் ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியை ஆய்வுசெய்ய யாரையும் அனுமதிக்கவில்லை. எனவே, மத்தியதரைக் கடலின் கரைப் பகுதிகள் மட்டுமே கடல்வழிப் பயணத்திற்கு உட்பட்டன.

பண்டைய கிரேக்க-உரோமைக் கடல் அறிவு

பண்டைக்கால கிரேக்க மற்றும் உரோமை அறிஞர்கள் வரைந்த நிலப்படங்கள் வழி சிறிது அறிவு கிடைத்தது. வடக்கு ஆப்பிரிக்காவில் உரோமைப் பேரரசு தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தது. அங்கு, கார்த்தேஜ், மவுரித்தானியா போன்ற உரோமை வட ஆப்பிரிக்க ஆய்வுச் செயல்பாடுகள் தவிர வேறு செய்திகள் ஆப்பிரிக்க அட்லான்டிக் கரை பற்றி அதிகம் இருக்கவில்லை. செங்கடல் பற்றிய அறிவும் மிகக் குறைவாகவே இருந்தது. கிபி 7ஆம் நூற்றாண்டிலிருந்து வெனிசு குடியரசு கடல்வழிப் பயணங்கள் வழியாகப் பெற்ற தகவல்களை வழங்கியது.[6]

சீனர்களின் கடல்வழிப் பயணங்கள்

இந்தியப் பெருங்கடல் வாணிபத்தில் அராபிய வணிகர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். கிபி 1405-1421 ஆண்டுக் கட்டத்தில் மூன்றாம் மிங் பேரரசரான யோங்கில் என்னும் சீன மன்னர் செங் ஹே என்னும் கடற்படைத் தளபதியின் தலைமையில் பல கடல்வழி ஆய்வுச் செயல்பாடுகள் நடைபெற ஏற்பாடு செய்தார். செங் ஹே 1405-1433 ஆண்டுக் கட்டத்தில் 7 கடற்பயணங்கள் மேற்கொண்டு, சம்பத்தீவு, ஜாவா, மலாக்கா, இலங்கை, கொல்லம், கொச்சி, கோழிக்கோடு, கோயம்புத்தூர், சியாம், சுமத்திரா, காயல், மாலத்தீவுகள், மொகதீசு, ஏடென், மஸ்கட், டாபுர், ஓர்மசு, கிழக்கு ஆப்பிரிக்கா, அராபிய தீபகற்ப நாடுகள் போன்றவற்றிற்குக் கடல்வழி சென்று ஆய்வுச் செயல்பாடுகள் நிகழ்த்தினார்.[7] செங் ஹேயோடு பயணம் செய்து, பயணக் குறிப்புகளை எழுதிய மா ஹுவான் (Ma Huan) என்பவர் கூற்றுப்படி, யோங்கில் பேரரசரின் இறப்புக்குப் பின் சீனாவின் கடற்பயணத் திட்டம் கைவிடப்பட்டது.[8] பின்னர் பதவியேற்ற மிங் வம்சாவளி மன்னர்கள் கடல் வாணிகத்தைக் குறைத்துக்கொண்டு, "தனித்தியங்கும் கொள்கையை" (isolationism) கடைப்பிடிக்கலாயினர்.

தாலமியின் "நிலவியல் நூல்" இலத்தீனில் மொழிபெயர்க்கப்படல்

எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் கிபி 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்னும் உரோமைய-கிரேக்க அறிஞர் அக்காலத்தில் தெரிந்த நாடுகளை உள்ளடக்கிய நிலப் படத்தை உருவாக்கியிருந்தார். அதில் ஆசியாக் கண்டத்தில் இந்தியா, இலங்கை ("தப்ரொபானே தீவு") மற்றும் சீனாவின் ஒரு பகுதி அடையாளம் காட்டப்பட்டது. அந்த வரைபடம் அடங்கிய நூல் கிபி 1400 அளவில் இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது. இவ்வாறு காண்ஸ்டாண்டிநோபுளிலிருந்து இத்தாலி வந்து சேர்ந்த நிலவியல் நூலில் அடங்கியிருந்த செய்திகள் ஐரோப்பியருக்கு ஒரு புதுமையான அனுபவமாக அமைந்தது.[9] தாலமி எண்ணியதுபோலவே அவர்களும் இந்தியக் கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டிருந்ததாகக் கருதினார்கள். ஆனால் நில வரைபடம் உருவாக்கவும், உலகப் பார்வை பெறவும் தாலமியின் நூல்கள் ஐரோப்பியருக்கு உதவியாயிருந்தன.[10]

நடுக்காலக் கடல்பயணங்கள் (1241-1438)
பட்டுப் பாதை மற்றும் வாசனைப் பொருள் பாதை. இவற்றை ஓட்டோமான் பேரரசு மூடிவிட்டதைத் தொடர்ந்து (1453) மாற்றுப் பாதைகளாகக் கடல்வழிப் பாதைகள் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மார்க்கோ போலோவின் பயணங்கள் (1271–1295)
மத்தியதரைக் கடலிலும் கருங்கடலிலும் உருவாக்கப்பட்ட கடல்வழிகள். ஜேனொவா குடியரசு வழி (சிவப்பு), வெனிஸ் குடியரசு வழி (பச்சை)

ஐரோப்பாவின் நடுக்காலப் பிற்பகுதியில் ஈரோ-ஆசியா நிலப்பகுதியில் வணிகம் தொடர்பான பல நிலவழிப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.[11] மங்கோலியர்கள் ஐரோப்பாவை ஆக்கிரமித்துப் பெரும் அழிவைக் கொணர்ந்தார்கள். அதே சமயத்தில் ஈரோ-ஆசியப் பகுதிகளை ஒரே ஆட்சியின் கீழ் கொணரவும் அது வழியாயிற்று. அத்தகைய ஆட்சி ஒருங்கிணைப்பு இருந்ததால் 1206இலிருந்து மேற்கு ஆசியாவிலிருந்து சீனா வரையிலும் வணிகப் பாதைகள் திறக்கப்படலாயின. இதனால் "பட்டுப் பாதை" என்று அழைக்கப்படுகின்ற வணிகப் பாதையில் வணிகம் தழைத்தது.[12][13]

இந்த வணிகப் பாதையைப் பயன்படுத்தி பல ஐரோப்பியர்கள் கிழக்கு நோக்கிச் சென்று ஆசியாவில் ஆய்வுச் செயல்பாடுகளை மேற்கொண்டார்கள். அவர்களில் பலர் இத்தாலி நாட்டினர். கடற்கரையோரமாக அமைந்த இத்தாலியப் பெருநகர்கள் பல இந்த வணிகத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. இத்தாலியின் கடற்கரை அரசுகள் ஏற்கெனவே மேற்கு ஆசியாவோடு வணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் ஆசியாவில் மேலும் கிழக்கு நோக்கிச் சென்று வணிகம் செய்யவும் ஆய்வுச் செயல்பாடுகள் நிகழ்த்தவும் அவர்களிடத்தில் ஆர்வம் எழுந்ததில் வியப்பில்லை.

மங்கோலியருக்கும் ஐரோப்பாவுக்கும் தொடர்புகள்

13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் சிரியாவைப் பலமுறை தாக்கி ஆக்கிரமித்தார்கள். அப்போது கிறித்தவர்கள் பல தடவைகளில் தூதுக் குழுக்களாகவும், கிறித்தவ மறைப் போதகர்களாகவும் மங்கோலியத் தலைநகராகிய காரகோரம் என்னும் நகருக்குப் பயணமாகச் சென்றார்கள். இவ்வாறு தூதுவர்களாகச் சென்ற பயணிகளுள் முதல்வராகக் கருதப்படுபவர் புனித பிரான்சிசு சபையைச் சார்ந்த ஜொவான்னி தா பியான் தெல் கார்ப்பினே (Giovanni da Pian del Carpine) ஆவார். இவரைத் திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட் என்பவர் மங்கோலிய பேரரசராகிய மகா கான் ஒகோடி கான் என்பவரிடம் தம் தூதுவராக அனுப்பினார். மங்கோலியப் பேரரசனுக்கு இன்னோசென்ட் கொடுத்தனுப்பிய மடல் மங்கோலியம், அரபி, இலத்தீன் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.

ஜொவான்னி 1245இல் மங்கோலியாவில் மகா கானின் அரசவைக்குப் பரிசுகளோடு புறப்பட்டுச் சென்று, கிறித்தவ சமயத்தைத் தழுவ அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் செங்கிஸ் கானின் மகனான ஒகோடி கான் கிறித்தவ சமயத்தைத் தழுவவில்லை. அவரும் உடன் பயணிகளும் 106 நாள்கள் குதிரைப் பயணம் செய்து சுமார் 3000 மைல் தூரம் சென்றிருந்தார்கள். அதன் பின் 1247இல் ஐரோப்பா திரும்பிய ஜொவான்னி, தாம் ஐரோப்பாவிலிருந்து மங்கோலியாவுக்குச் சென்றபோது கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் நூலாக எழுதி வெளியிட்டார். கிறித்தவ சமயத்துக்கும் சீனா மற்றும் மங்கோலிய பகுதிகளுக்கும் இடையே நிகழ்ந்த தொடர்புகளுக்குச் சின்னமாக அவர் எழுதிய "மங்கோலியரின் வரலாறு" என்னும் மிகப் பழைய நூல் விளங்குகிறது.[12]

சுமார் 1400இல் உருவாக்கப்பட்ட சகாரா வர்த்தகப் பாதைகள். நவீன கால நைஜர் நாடு அழுத்திக் காட்டப்பட்டுள்ளது.
கடல் ஆய்வுக் செயல்பாடுகளுக்காக அறிமுகமான காராவெல் கப்பலின் மாதிரி உரு
கிறிஸ்தோபர் கொலம்பஸ் மேற்கொண்ட நான்கு கடற்பயணங்கள். காலம்: 1492–1503
1497-1499 ஆண்டுக்காலத்தில் வாஸ்கோ ட காமா இந்தியா சென்ற பாதை (கருப்பு). அதற்கு முன் பேரோ தா கொவீல்யா மேற்கொண்ட பயணம் இளஞ்சிவப்பிலும், அபோன்சோ தே பாய்வாவின் பயணப் பாதை நீலத்திலும், அவர்களின் பொதுப் பாதை பச்சையிலும் காட்டப்பட்டுள்ளன

குறிப்புகள்

[தொகு]
  1. Mancall 1999, pp. 26–53.
  2. Parry 1963, pp. 1–5.
  3. Arnold 2002, p. 11.
  4. Arnold 2002, p. xi.
  5. Harley & Woodward, 1992, pp. 156-161.
  6. Abu-Lughod 1991, p. 121.
  7. Arnold 2002, p. 7.
  8. Mancall 2006, p. 17.
  9. Arnold 2002, p. 5.
  10. Love 2006, p. 130.
  11. silk-road 2008, web.
  12. 12.0 12.1 DeLamar 1992, p. 328.
  13. Abu-Lughod 1991, p. 158.

நூல் பட்டியல்

[தொகு]

முதன்மை ஆதாரங்கள்

[தொகு]

நூல்கள்

[தொகு]

இணையத்தள ஆதாரங்கள்

[தொகு]

மேல் ஆய்வுக்கு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டுபிடிப்புக்_காலம்&oldid=3848754" இலிருந்து மீள்விக்கப்பட்டது