கங்கதேவன்
கங்கதேவன் | |
---|---|
மிதிலையின் அரசன் | |
ஆட்சி | பொது ஊழி 1147-1187 |
முன்னிருந்தவர் | நான்யதேவன் |
பின்வந்தவர் | நரசிம்மதேவன் |
மரபு | கர்னாட் வம்சம் |
கங்கதேவன் (Gangadeva) அல்லது கங்கேயதேவன் என்றும் அழைக்கப்படும் இவர், மிதிலைப் பிரதேசத்தின் கர்னாட் வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளர் ஆவார். இவர் தனது தந்தை நான்யதேவனுக்குப் பிறகு 1147 இல் மன்னரானார். பொது ஊழி 1187 வரை ஆட்சி புரிந்தார். [1]
ஆட்சி
[தொகு]நான்யதேவனின் மரணத்தைத் தொடர்ந்து மிதிலை சிம்மாசனத்தின் வாரிசு சர்ச்சை ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் நான்யதேவனுக்கு மல்லதேவன் மற்றும் கங்கதேவன் என்ற இரண்டு மகன்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான கல்வெட்டுகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் கங்கதேவனின் ஆட்சியை மட்டுமே விவரிக்கின்றன. காட்மாண்டுவின் பிரதாப் மல்லனின் கல்வெட்டு, கங்கதேவன் கி.பி. 1147 இல் அரியணைக்கு வந்ததையும், மிகவும் துணிச்சலான அரசராகக் கருதப்பட்டதையும் விவரிக்கிறது. இவர் அண்டை நாடான வங்காளத்தின் பால மன்னர் மதன்பாலனின் சமகாலத்தவராக இருந்தார் . மேலும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்தினார். நன்யதேவனின் ஆட்சியின் போது இழந்த சில பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றினார். நான்யதேவன் மற்றும் கங்காதேவன் இருவரும் கௌடாவில் ஒருவித அரசியல் அதிகாரம் பெற்றதாக ராமசரிதம் விவரிக்கிறது. ஏனெனில் இவர் கௌடத்வாஜ் என்று அறியப்பட்டார். பாலர்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அண்டை நாடான வங்காளத்தில் சென் பேரரசு ஆட்சிக்கு வந்தது. பல்லால சேனாவும் கங்கதேவனின் சமகாலத்தவர். ஆனால் மிதிலை மீது எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை.[1][2]
கங்கதேவன் தனது நிர்வாக சீர்திருத்தங்களுக்காகவும் குறிப்பிடத்தக்கவர் . மேலும், தர்பங்காவை கர்னாட் வம்சத்தின் கூடுதல் தலைநகராக சிம்ரௌங்காத்துடன் சேர்த்தார். பீகாரின் மதேபுரா மாவட்டத்தில் உள்ள கங்காபூர் ராஜ்னி கிராமம் கங்கதேவனின் பெயரால் அழைக்கப்படுகிறது.[1]