ஓர்ச்சா கோட்டை வளாகம்
ஓர்ச்சா கோட்டை வளாகம் Orchha Fort complex | |
---|---|
ஓர்ச்சா, மத்தியப் பிரதேசம், இந்தியா | |
கோட்டை வளாகம் மற்றும் பாலம் | |
ஆள்கூறுகள் | 25°21′N 78°38′E / 25.35°N 78.64°E |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | கைவிடப்பட்டது |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 16–17 ஆம் நூற்றாண்டு |
கட்டிடப் பொருள் |
கல் மற்றும் செங்கல் |
கோட்டை, அரண்மனைகள், கோயில் மற்றும் பிற மாளிகைகளையும், ஏராளமான பழங்கால நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கிய ஓர்ச்சா கோட்டை வளாகம், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓர்ச்சா நகரில் அமைந்துள்ளது. கோட்டை மற்றும் அதற்குள் உள்ள பிற கட்டமைப்புகள் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த பண்டெலா ராசபுத்திரரான ஓர்ச்சா மாநில மன்னர் ருத்ரா பிரதாப் சிங் மற்றும் அவருக்குப் பின்வந்த மன்னர்களாலும் கட்டப்பட்டது.
கோட்டை வளாகம், ஒரு வளைந்த படுகைப் பாலத்தில் இருந்து ஒரு பெரிய நுழைவாயிலுக்கு வழிவகுக்கிறது. இதைத் தொடர்ந்து அரண்மனைகளால் சூழப்பட்ட ஒரு பெரிய நாற்புற திறந்தவெளி உள்ளது. இதில் ராஜா மகால் அல்லது ராஜா மந்திர், சீஷ் மகால், ஜகாங்கிர் மகால், ஒரு கோயில், தோட்டங்கள் மற்றும் அரங்குகள் உள்ளன. கோட்டை வளாகம் திட்டமிடப்பட்ட பால்கனிகள், திறந்த தட்டையான பகுதிகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட அச்சுவேலை ஜன்னல்கள் மற்றும் போர்க்களங்கள் ஆகிய குறிப்பிடத்தக்க கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டுள்ளது.
அமைவிடம்
[தொகு]கோட்டை வளாகம் மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் மாவட்டத்தில் ஓர்ச்சா நகரில் அமைந்துள்ளது. கோட்டை வளாகம் ஓர்ச்சா நகரில் உள்ள பேட்வா ஆறு மற்றும் ஜாம்னி நதியின் சங்கமத்தால் உருவான ஒரு தீவுக்குள் உள்ளது. கிரானைட் கற்களில் கட்டப்பட்ட 14 வளைவுகளுடன் கூடிய வளைந்த பாலம் வழியாக நகரத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து இந்த வளாகத்தை அடையலாம். [1] [2] [3] [4]
மாவட்ட தலைமையகமாக விளங்கும் திகம்கர் நகரத்திலிருந்து ஓர்ச்சா நகரம் சுமார் 80 கிலோமீட்டர்கள் (50 mi) தொலைவிலும், ஜான்சி நகரம் 15 கிலோமீட்டர்கள் (9.3 mi) தொலைவில் உள்ளது. ஓர்ச்சா என்பது ஜான்சி-மணிக்பூர் பிரிவில் உள்ள மத்திய இரயில்வேயின் இரயில் நிலையமாகும். [4]
வரலாறு
[தொகு]கி.பி 1501 இல் பண்டெலா ராசபுத்திர மன்னரான ருத்ரா பிரதாப் சிங் (1501–1531), என்பவரால் ஓர்ச்சா மாநிலம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கோட்டை கட்டப்பட்டது.[1] கோட்டை வளாகத்திற்குள் உள்ள அரண்மனைகள் மற்றும் கோயில்கள் ஓர்ச்சா மாநிலத்தின் அடுத்தடுத்த மகாராஜாக்களால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் கட்டப்பட்டன. இவற்றில், ராஜா மந்திர் அல்லது ராஜா மகால் 1554 லிருந்து 1591 வரை ஆண்ட மதுகர் ஷாவால் கட்டப்பட்டது. ஜஹாங்கிர் மஹால் மற்றும் சவான் பதான் மகால் ஆகியவை வீர் சிங் தியோ (1605-1627) ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டன.[5] [2] [6] கோட்டை வளாகத்தில் காணப்படும் "மிளகு பானைகள் மற்றும் குவிமாடங்கள்" [7] பிரித்தானிய கட்டிடக் கலைஞர் எட்வின் லூட்டியன்சு புதுதில்லியில் கட்டிய கட்டமைப்புகளின் உந்துதலில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. [7]
நினைவுச்சின்னங்கள்
[தொகு]ராஜா மகால்
[தொகு]1783 ஆம் ஆண்டில் கைவிடப்படும் வரை மன்னர்களும் ராணிகளும் தங்கியிருந்த ராஜா மகால் (கிங்ஸ் பேலஸ்)[6] 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. அதன் வெளிப்புறம் எந்த அலங்காரமும் இல்லாமல் எளிமையானது. ஆனால் அரண்மனையின் உட்புற அறைகள் அரசவை, தெய்வங்கள், புராண விலங்குகள் மற்றும் மக்களின் சமூக மற்றும் மத கருப்பொருள்களின் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அரண்மனையின் மேல் தளத்தின் கூரையிலும், சுவர்களிலும் கண்ணாடியின் தடயங்கள் உள்ளன.[1] [2] அதன் ஜன்னல்கள், வில்வளைவு நடை பாதை மற்றும் தளவமைப்பு சூரிய ஒளி மற்றும் அதன் நிழல், நாள் முழுவதும் வெவ்வேறு நிலைகள் மற்றும் வெப்பநிலை பகுதிகளை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. [2] மகாலின் உட்புற சுவர்களில் விஷ்ணுவின் சுவரோவியங்கள் உள்ளன. மகால் பல இரகசிய பாதைகளைக் கொண்டுள்ளது. [2] [8]