உறவுமுறைச் சொற்கள்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு தனிக்குடும்பத்திலிருந்து தொடங்கித் தலைமுறை தலைமுறையாகவும், கிளைவழியாகவும் பரந்து விரிந்து செல்கின்ற பலவகையான உறவுகள் உருவாகின்றன. இவ்வாறான உறவுமுறைகளைக் குறிக்கும் சொற்களே உறவுமுறைச் சொற்கள் எனப்படுகின்றன.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தொடர்பு, உடன் பிறந்தோருக்கு இடையிலான தொடர்பு, உடன்பிறந்தோர் பிள்ளைகளுக்கு இடையிலான தொடர்பு என ஏராளமான உறவுமுறைத் தொடர்புகள் மனிதருக்கிடையே ஏற்படுகின்றன. இவ்வாறான தொடர்புகளின் தன்மை மனித சமுதாயங்கள் எல்லாவற்றிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. வெவ்வேறு சமுதாயங்களின் உலக நோக்கு, பண்பாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இவ்வாறான தொடர்புகளின் முக்கியத்துவங்கள் வேறுபடுகின்றன. இத்தகைய வேறுபடுகின்ற உறவுமுறைத் தொடர்புகளின் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு உறவுமுறைச் சொற்கள் பற்றிய ஆய்வுகள் பெரிதும் உதவுகின்றன.
உறவுமுறைச் சொற்களின் இயல்புகள்
[தொகு]உறவுமுறைகளைக் குறிப்பிடப் பயன்படும் சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன எனினும், அச் சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பண்பாட்டு அம்சங்கள், மொழிக்கு மொழி, சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபடுகின்ற காரணத்தால் குறிப்பிட்ட உறவுகளைக் குறிக்கின்ற சொற்களும் பல வழிகளில் ஒன்றுடன் ஒன்று வேறுபடுகின்றன. பொதுவாக உறவுமுறைச் சொற்களின் ஆய்வில் பின்வரும் அம்சங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுகின்றன.
- பயன்பாட்டு அடிப்படையில் உறவுமுறைச் சொற்களின் வேறுபாடுகள்
- உறவுமுறைச் சொற்களில் மொழியியல் அமைப்பு
- உறவுமுறைச் சொற்களின் வீச்சு.
பயன்பாட்டு அடிப்படையில் உறவுமுறைச் சொற்கள்
[தொகு]பயன்பாட்டு அடிப்படையில் நோக்கும்போது, இருவகையான உறவுமுறைச் சொற்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, ஒருவர் அம்மா என்ற சொல்லைத் தனது தாயை அழைப்பதற்குப் பயன்படுத்தலாம். ஆனால் நடைமுறையில் தாய் என்ற சொல் அவ்வாறு பயன்படுத்தப் படுவதில்லை. தாய் என்ற சொல் உறவுமுறையைக் குறிப்பிட்டுப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. எனவே உறவினரை விளிக்கப் பயன்படும் சொற்கள், உறவுமுறையைக் குறிப்பிடப் பயன்படும் சொற்கள் என இரண்டு வகை உறவுச் சொற்களை அடையாளம் காண முடியும். முதல் வகை விளிச் சொற்கள் எனவும், இரண்டாம் வகை குறிக்கும் சொற்கள் எனவும் அழைக்கப்படும்.
உறவுமுறைச் சொற்களின் அமைப்பு
[தொகு]தமிழ் மொழியில் தாய், தந்தை, அண்ணன், தம்பி போன்ற உறவுமுறையைக் குறிக்கும் சொற்கள் வேறெந்த உறவுமுறைச் சொல்லிலிருந்தும் உருவாக்கப்படாத தனித்துவமான சொற்களாகும். இவ்வகையான சொற்களைத் தனிமச் சொற்கள் அல்லது ஆரம்பநிலைச் சொற்கள் எனக் கூறலாம். பொதுவாக மிக நெருக்கமான உறவுமுறைகளைக் குறிக்கவே தனிமச் சொற்கள் உள்ளன. வேறு சில உறவுமுறைச் சொற்கள் தனிமச் சொற்களுடன் பொருள் வேறுபாட்டை ஏற்படுத்தும் விதமான உறவுமுறை சாராத முன்னொட்டுக்களையோ, பின்னொட்டுக்களையோ சேர்ப்பதன் மூலம் பெறப்படுகின்றன. இத்தகைய ஒட்டுக்கள் பொதுவாக வயது வேறுபாடு, தலைமுறை வேறுபாடு முதலியவற்றைத் தனிமச் சொற்களுக்கு அளிப்பதன் மூலம் வெவ்வேறு உறவுகளைக் குறித்து நிற்கின்றன. பெரிய, சிறிய, மூத்த, இளைய போன்ற பண்புச் சொற்கள் தனிமச் சொற்களுடன் சேர்ந்து பெரிய தந்தை, சிறிய தாய், மூத்த அம்மான், இளைய தம்பி போன்ற வயது வேறுபாடு குறிக்கும் உறவுச் சொற்களை உருவாக்குகின்றன. அதேபோல, கொள்ளு போன்ற முன்னொட்டுக்கள் பாட்டன், கொள்ளுப் பாட்டன் என்னும் உறவுச் சொற்களிடையேயான தலைமுறை வேறுபாட்டைக் குறிக்கின்றன. சிலசமயங்களில் ஒரேவகையான உறவுகளிடையே வேறுபாடு காண்பிப்பதற்காக முன்னொட்டுச் சொற்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாகத் தமிழர் வழக்கப்படி, சொந்த மகனையும், உடன்பிறந்த ஒத்த பாலினர் மகன்களையும், மகன் என்ற உறவுச் சொல்லே குறிக்கின்றது. எனினும் தேவை ஏற்படும்போது பெறா மகன் என்ற முன்னொட்டுடன் கூடிய தனிமச் சொல் பயன்படுத்தப் படுகின்றது. இது போலவே ஒன்றுவிட்ட அண்ணன், ஒன்றுவிட்ட தங்கை போன்ற சொல் வழக்குகளையும் குறிப்பிடலாம்.
சிலவேளைகளில் இரண்டு உறவுமுறைச் சொற்களைச் சேர்த்துப் புதிய உறவுமுறைச் சொல் உருவாக்கப்படுவதுண்டு. பெற்றோருடைய பெற்றோரைத் தாய்வழி தந்தைவழி வேறுபாடின்றிக் குறிக்கும் பாட்டன், பாட்டி போன்ற சொற்களுக்குப் பதிலாக இக்காலத்தில், தாயின் பெற்றோரை அம்மம்மா, அம்மப்பா என்றும், தந்தையின் பெற்றோரை அப்பம்மா, அப்பப்பா என்றும் அழைப்பதைக் காணமுடிகின்றது.
உறவுமுறைச் சொற்களின் வீச்சு
[தொகு]சில உறவுமுறைச் சொற்கள் ஒருவகை உறவினரை மட்டுமே குறிக்க, வேறு சில சொற்கள் வெவ்வேறு வகையில் உறவினராவோரைச் சேர்த்துக் குறிப்பிடுவதற்குப் பயன்படுகின்றன. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட உறவுமுறைச் சொல் உள்ளடக்கும் வெவ்வேறு வகை உறவு முறைகளின் தொகுதி அச் சொல்லின் வீச்சு எனலாம். தனியொரு வகை உறவினரை மட்டுமே குறிக்கும் சொற்கள் குறித்துக் காட்டும் சொற்கள் (Denotative Terms) எனவும், பல வகை உறவுகளை உள்ளடக்கும் சொற்கள் வகைப்பாட்டுச் சொற்கள் (Classificatory Terms) எனவும் குறிப்பிடப்படுகின்றன. தமிழிலுள்ள தாய், கணவன் போன்ற சொற்கள் குறித்துக்காட்டும் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். மச்சான் அல்லது மைத்துனன் என்னும் சொல், தாய்மாமனுடைய மகன், தந்தையின் சகோதரியுடைய மகன், மனைவியுடைய சகோதரன் என்னும் உறவுமுறைகள் அனைத்தையும் குறிப்பிடுகின்றது. இதனால் இச்சொல் ஒரு வகைப்பாட்டுச் சொல் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- பக்தவச்சல பாரதி. பண்பாட்டு மானிடவியல். மெய்யப்பன் பதிப்பகம். சென்னை. 2003
- மார்கன், லெவிஸ் ஹென்றி. பண்டைய சமூகம் (Ancient Society) (ஆங்கிலம்). 1827.
வெளியிணைப்புகள்
[தொகு]- உறவுமுறையும் சமுதாய நிறுவனங்களும் பரணிடப்பட்டது 2005-11-27 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)