இரிங்கி பட்டாச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரி்ங்கி ராய் பட்டாச்சார்யா
பிறப்புRinki Roy
1942 (அகவை 80–81)
கொல்கத்தா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர், பத்தி எழுத்தாளர், ஆவணத்திரைப்பட தயாரிப்பாளர்

இரிங்கி ராய் பட்டாச்சார்யா (Rinki Roy Bhattacharya) [1] (பிறப்பு 1942) ஒரு இந்திய எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் திரைப்பட இயக்குனர் பிமல் ராயின் மகளும், பாசு பட்டாச்சார்யாவின் மனைவியும் ஆவார். பாசு பட்டாச்சார்யா இவரது படங்களில் ஒத்துழைத்துள்ளார். இவர் 'பிமல் ராய் மெமோரியல் & பிலிம் சொசைட்டி'யின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் உள்ளார்.[2] ஒரு சார்பிலா பத்திரிகையாளராக, டைம்ஸ் குழு, த தந்தி, தி இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளில் திரைப்படங்கள், நாடகங்கள், கலை மற்றும் பெண்ணியப் பிரச்சினைகள் குறித்து அவர் விரிவாக எழுதி வருகிறார்.[3]

வாழ்க்கை வரலாறு[தொகு]

கொல்கத்தாவைச் சேர்ந்த ரிங்கி 1942 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் பிமல் ராயின் மூத்த மகள். இவரது குழந்தைப் பருவம் பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களைச் சுற்றிக் கழிந்தது. இத்தகைய பிரபலங்கள் அடிக்கடி இவரது வீட்டுக்கு வந்து சென்றனர். இவர்களது வீடு அதன் அருமையான வங்காள உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது .

இவர் 1966 ஆம் ஆண்டில் சார்பிலா பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், தி எகனாமிக் டைம்ஸ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் பல இதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டார். இவர் ஆண்கள் தங்கள் மனைவியை அடிப்பது தொடர்பான ஆவணப்படமான சார் திவாரி [4] மூலம் ஆவணப் படங்களைத் தயாரிப்பதில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் ஆவணப்படங்களைத் தொடர்ச்சியாகத் தயாரித்தார். இவர் அனுபவ், கிரிஹ பிரவேஷ்,ஆவிஷ்கார் ஆகிய திரைப்படங்களில் கலை, உள்ளரங்க அலங்காரம் ஆகிய பணிகளைக் கவனித்துக் கொண்டார்.

இவர் இந்தியாவில் பெண்கள் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பிகைன்ட் குளோஸ்டு டோர்ஸ் டொமெஸ்டிக் வயலன்ஸ் இன் இன்டியா (மூடிய கதவுகளுக்கு பின்னால்: இந்தியாவில் உள்நாட்டு வன்முறை), பிமல் ராய் - ஒரு அமைதியான மனிதர், அழியாத முத்திரைகள், நிச்சயமற்ற தொடர்புகள் மற்றும் பல சமையல் புத்தகங்கள் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.[5] மதுமதி (1958), பிமல் ராயின் மதுமதி: அன்டோல்ட் ஸ்டோரீஸ் ஃப்ரம் பிஹைண்ட் தி சீன்ஸ் (2014) ஆகிய படங்களை உருவாக்கப்பட்ட புத்தகத்தையும் வெளியிட்டார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இரிங்கி திரைப்பட இயக்குநர் பாசு பட்டாச்சார்யாவை (1934-1997) மணந்தார். இருப்பினும், குடும்ப துன்புறுத்தல்களுக்குப் பிறகு, இவர் 1982 ஆம் ஆண்டில் தனது வீட்டை விட்டு வெளியேறினார். பகிரங்கமாக, 1984 ஆம் ஆண்டில் மனுஷியில் பத்திரிகையாளர் மது கிஷ்வருடன் ஒரு நேர்காணல் மூலம் வெளியே வந்தார். 1990 ஆம் ஆண்டில் இந்த இணை முறையாக விவாகரத்து பெற்றது.[7] இவர் தன் தந்தையின் சொத்தில் தன் பங்குக்காக தன் தாய் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எதிராக வெற்றிகரமாக வழக்கு தொடர்ந்தார்.

இவர் மும்பையின் பாந்த்ராவில் வசிக்கிறாள்.[8] இவருக்கு திரைப்பட இயக்குனர் ஆதித்யா பட்டாச்சார்யா என்ற மகனும், எழுத்தாளரான சிம்மு மற்றும் அன்வேஷா ஆர்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]