இயேசு கோவில்

ஆள்கூறுகள்: 41°53′45″N 12°28′47″E / 41.89583°N 12.47972°E / 41.89583; 12.47972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயேசு கோவில் (Church of the Gesù)
Chiesa del Santissimo Nome di Gesù all'Argentina
இயேசு கோவில் முகப்புத் தோற்றம். பரோக்கு கலைப்பாணி முன்னோடி. கலைஞர்: ஜாக்கமோ தெல்லா போர்த்தா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இத்தாலி உரோமை, இத்தாலியா
புவியியல் ஆள்கூறுகள்41°53′45″N 12°28′47″E / 41.89583°N 12.47972°E / 41.89583; 12.47972
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1584
நிலைகோவில் கட்டடப் பாணி
தலைமைதனியேலே லிபனோரி, சே.ச.
இணையத்
தளம்
[1]

இயேசு கோவில் (Church of the Gesù) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டிடங்களுள் முக்கியமான ஒன்றாகவும், இயேசு சபையின் மையக் கோவிலாகவும் விளங்குகிறது[1]. இக்கோவிலுக்கு "அர்ஜெந்தீனா பகுதியில் அமைந்த இயேசுவின் திருப்பெயர்க் கோவில்" (இத்தாலியம்:Chiesa del Santissimo Nome di Gesù all'Argentina) என்னும் நீண்ட பெயரும் உண்டு.

இக்கோவிலின் முகப்பு "பரோக்கு" கலைப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இப்பாணியில் பல கோவில்கள் உலகெங்கும் கட்டப்பட்டன. குறிப்பாக, இயேசு சபைத் துறவியர் தாம் கிறித்தவ மறையைப் பரப்பச் சென்ற நாடுகளில் இக்கலைப் பாணியில் கோவில்கள் கட்டியெழுப்பினர்.

இயேசு கோவிலின் உட்தோற்றம்

இயேசு சபையின் நிறுவுநரான புனித லொயோலா இஞ்ஞாசியார் இக்கோவிலைக் கட்டுவதற்கான கருத்தை 1551ஆம் ஆண்டு முன்வைத்தார். புரடஸ்தாந்து சீர்திருத்தத்தின் போதும் அதைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையில் நிகழ்ந்த சீர்திருத்தத்தின் போதும் இக்கோவில் செயல்பாட்டு மையமாயிருந்தது. மேலும், இயேசு சபை 1773இல் முடக்கப்பட்ட ஆண்டு வரை இக்கோவில் இயேசு சபைத் தலைமையிடமாகவும் திகழ்ந்தது.

கோவிலின் வரலாறு[தொகு]

எசுப்பானியக் கர்தினால் பார்த்தொலோமேயோ தெ லா குஏவா என்பவர் உலகப் புகழ் பெற்ற மைக்கலாஞ்சலோ என்னும் கலைஞரை அணுகி, இயேசு கோவிலுக்கான கட்டட வரைவை ஆக்கித் தருமாறு கேட்டார். மைக்கலாஞ்சலோ இறைப்பற்றின் காரணமாக இக்கோவில் பணியை ஊதியமின்றிச் செய்துதருவதாகக் கூறியபோதிலும், கட்டடத்திற்கான நிதியை வழங்கியவர் கர்தினால் அலெஸ்ஸாண்ட்ரோ பர்னேசே என்பவராவார். இவர் இயேசு சபை நிறுவப்படுவதற்கு அதிகாரப்பூர்வமாக இசைவு வழங்கிய திருத்தந்தை மூன்றாம் பவுல் என்பவரின் பேரன் ஆவார்.

இறுதியில் இயேசு கோவிலைக் கட்டியெழுப்பிய முதன்மைக் கட்டடக் கலைஞர்கள் ஜாக்கமோ பரோத்ஸி தா விஞ்ஞோலா, மற்றும் ஜாக்கமோ தெல்லா போர்த்தா என்போர் ஆவர். இவர்களுள் முதலில் குறிப்பிட்டவர் பர்னேசே குடும்பத்திற்கான வேறு கட்டடப் பணிகளையும் செய்தவராவார்.

இயேசு கோவில் கட்டப்பட்ட அதே இடத்தில் வழியோர மரியா கோவில் (Santa Maria della Strada) என்றொரு வழிபாட்டிடம் இருந்தது. அங்கிருந்த மரியா படிமத்திற்கு முன் அமர்ந்து புனித லொயோலா இஞ்ஞாசியார் இறைவேண்டல் செய்திருந்தார். அந்த ஓவியப் படிமம் விலையுயர்ந்த கற்களால் அணிசெய்யப்பட்டு, இன்றைய இயேசு கோவிலில் புனித இஞ்ஞாசியார் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

கோவில் கட்டடப் பணி விஞ்ஞோலா ஆக்கிய வரைவின்படி 1568 சூன் திங்கள் 26ஆம் நாள் தொடங்கியது. விஞ்ஞோலாவுக்குத் துணைவராகச் செயல்பட்டவர் இயேசு சபையைச் சார்ந்த ஜொவான்னி த்ரிஸ்தானோ என்பவர். இவர் விஞ்ஞோலாவின் பணியை 1571இலிருந்து தொடர்ந்தார். இவர் 1575இல் இறந்தபின் ஜொவான்னி தே ரோசிஸ் என்னும் இயேசு சபை உறுப்பினர் கட்டடப் பணியை முன்னெடுத்துச் சென்றார். ஜாக்கமோ தெல்லா போர்த்தா என்னும் கட்டடக் கலைஞர் இயேசு கோவிலின் குறுக்கு மேல் கூரை, குவிமாடம், மற்றும் பீடக் கூரைப் பகுதி ஆகியவற்றைக் கட்டுவதில் பங்கேற்றார்.

இயேசு கோவிலின் முகப்பும் குவிமாடமும் - பக்கத் தோற்றம்

இயேசு கோவிலின் முகப்பு வரைவு முதலில் விஞ்ஞோலாவால் ஆக்கப்பட்டது. அவர் கோவில் முகப்பை ஒன்றன்மேன் ஒன்றாக அடுக்கிய மூன்று தளங்களை இணைப்பதுபோல் வரைந்தார். அவ்வரைவை ஜாக்கமோ தெல்லா போர்த்தா திருத்தியமைத்தார். அதன்படி, செங்குத்துப் பகுதி திடமாகவும் மேல்பகுதி குறுக்குவெட்டாக இழுநிலைப் பொருத்தமாக இணைவதும் தெரிகிறது. கட்டடக் கலை வரலாற்றாசிரியர்கள் இவ்விரு வரைவுகளையும் ஒப்பிட்டு ஆய்ந்துள்ளனர்.

கோவிலின் முகப்பில் பெரிய நடுவாயிலும் இரு பக்க வாயில்களும் உள்ளன. நடுவாயிலுக்கு மேலே இயேசு சபையினர் தேர்ந்துகொண்ட "IHS" என்னும் கிறிஸ்து பெயராக்கம் உள்ளது. அதன் இரு பக்கங்களிலும் இயேசு சபையோடு நெருங்கிய தொடர்புடைய இருவர் சிலைகள் உள்ளன. இடது புறம் இயேசு சபை நிறுவுனர் புனித இஞ்ஞாசியார் சிலையும் வலது புறம் இயேசு சபையின் தொடக்க கால உறுப்பினரும் அதன் புகழ்பெற்ற மறையறிவிப்பாளருமான புனித பிரான்சிசு சவேரியாரின் சிலை உள்ளது.

இயேசு கோவில் கலைப் பாணியை இயேசு சபையினர் உலகின் பல இடங்களில் தாம் கட்டிய கோவில் அமைப்புகளில் இன்றுவரை பயன்படுத்திவந்துள்ளனர். இயேசு சபையின் தாய்க்கோவிலாகிய இந்த இயேசு கோவிலின் கலைப் பாணி கத்தோலிக்க சீர்திருத்தத்துக்கு வழிவகுத்த திரிதெந்தீன் பொதுச்சங்கம் (1545-1563) அளித்த வழிமுறைகளின்படி அமைந்தது.

கோவிலின் சிறப்புக் கூறுகள்[தொகு]

இக்கோவில் கட்டடப் பாணியின் சிறப்புக் கூறுகள் இவை:

 • கோவிலின் தலைவாயிலைக் கடந்து உள்ளே காலெடுத்து வைத்ததும் "மக்கள் கூடுமிடம்" (narthex) என்னும் பகுதி இராது. மாறாக, பக்தர் அல்லது பயணி நேரே கோவிலின் உள் நுழைவார். உட்பகுதியும் பரந்து விரிந்த ஒரே நீள்பகுதி (nave) கொண்டிருக்குமே ஒழிய, பக்கவாட்டில் நீள்பகுதிகள் இருப்பதில்லை. நடு நீள்பகுதியில் நடந்து செல்லும் பக்தர் அல்லது பயணியின் கண்கள் நேரெதிரே இருக்கும் மைய பீடத்தைக் காணும்.
 • பக்கவாட்டு நீள்பகுதிகளுக்கு மாறாக கோவிலின் இருபுறமும் வரிசையாக ஒரே வடிவிலான சிற்றாலயத் துணைப் பீடங்கள் அமைந்திருக்கும். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வளைவாயில் இருக்கும். நுழைவிடத்தில் அணிசெய்யப்பட்ட குறுமதில் பிரிப்போடு துணைவாயிலும் இருக்கும். ஒவ்வொரு சிற்றாலயத்திலும் பீடமே சுவரையொட்டி எழுந்து நிற்கும்.
 • மறுமலர்ச்சிக்காலக் கட்டடப் பாணிக்கு ஏற்ப, பிரமாண்டமான குவிமாடம் (dome) கோவிலின் உயர்நிலையாக அமைந்தது.
 • கோவிலின் நடுநீள்பகுதி 13ஆம் நூற்றாண்டிலிருந்தே பிரான்சிஸ்கு சபை, சாமிநாதர் சபை ஆகிய அமைப்புகள் அறிமுகப்படுத்தியிருந்த வகையில் அமைந்தது. குழுமியிருக்கும் மக்களுக்கு விவிலிய அடிப்படையில் மறையுரை வழங்க வசதியாக அவ்வமைப்பு இருந்தது.
 • கோவில் முழுவதிலும் பல நிறங்களிலான பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டு, தங்க முலாம் கரைகொண்டு மிளிர்ந்தன.
 • கோவிலின் உட்கூரை முழுவதிலும் கிறித்தவ மறை தொடர்பான சுவர் ஓவியங்கள் எழுதப்பட்டன.
 • கோவிலின் துணைப் பீடங்களிலும் மையப் பீடப் பகுதியிலும் புனிதர்களின் பளிங்குச் சிலைகள் நிறுவப்பட்டன.
 • இயேசு கோவில் பாணி அதற்கு முற்பட்ட உரோமைக் கலைப் பாணியை முற்றிலுமாக மாற்றியமைக்காவிட்டாலும், பல மாற்றங்களைப் புகுத்தியது உண்மையே.
"வழியோர அன்னை மரியா" என்னும் பெயரில் வணக்கம் செலுத்தப்படும் 15ஆம் நூற்றாண்டு ஓவியம். 2006இல் நடந்த சீரமைக்குப் பிந்திய தோற்றம்

கோவிலின் உள் நடுநீள் பகுதி[தொகு]

இயேசு கோவில் "இலத்தீன் சிலுவை" வடிவம் கொண்டது. எனவே, அங்கு உள் நடுநீள் பகுதி தவிர பக்கவாட்டு நீள் பகுதிகள் இல்லை. மாறாக, நடுநீள் பகுதியின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு மூன்று என ஆறு சிறுகோவில்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று திருச்சிலுவைப் பீடமாகவும் மற்றொன்று கோவில் உடைக்காப்பகப் பகுதிக்குள் புகுவதாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இச்சிலுவைக் கோவிலின் குறுக்குப் பகுதியின் இடது புறம் புனித இஞ்ஞாசியார் பீடம் உள்ளது. வலப் புறம் முன்னோக்கி புனித பிரான்சிசு சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பீடம் உள்ளது. கோவிலின் குறுக்குப் பகுதிக்கு அப்பால், இரு வட்ட வடிவச் சிறுகோவில்கள் உள்ளன. அவற்றைக் கலைஞர் விஞ்ஞோலாவின் "இரட்டைப் பிள்ளைகள்" என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. அவற்றுள் இடது புறச் சிறுகோவிலில் புகழ்மிக்க "வழியோர அன்னை மரியா படிமம்" வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. வலது புறச் சிறுகோவிலில் இயேசுவின் திரு இதயப் படிமம் உள்ளது.

அலஸ்ஸாண்ட்ரோ தொர்லோனியா என்னும் இளவரசர் அளித்த நன்கொடையைக் கொண்டு 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இக்கோவிலின் உட்சுவர்களில் விலையுயர்ந்த பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டன.

கோவிலின் உட்கூரையை ஆக்கியவர் ஜொவான்னி கவுள்ளி என்னும் கலைஞர் ஆவார். அவருக்கு பச்சீச்சியா என்னும் பெயரும் உண்டு. தங்கமுலாம் பூசப்பட்ட சாந்துக் கரை கொண்ட கூரைப்பகுதியில் இயேசுவின் திருப்பெயரின் புகழ் எழில்மிகு சித்திரங்களாக வரையப்பட்டுள்ளது. அச்சித்திரங்கள் புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறும் சொற்களுக்கு விளக்கவுரை போல் அமைந்துள்ளன:

பழைய ஏற்பாட்டுப் பெருமக்களின் வாழ்வு நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மேற்கூரைக் குவிமாட ஓரங்களிலும், புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித பிரான்சிசு சவேரியார் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்ச்சிளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் குறுக்குப் பகுதியிலும் அணிசெய்கின்றன.

கோவிலின் உயர்ந்த குவிமாடத்தின் உட்பகுதியில் விண்ணகத்தின் மாட்சிமை ஒளிர்கின்றது. புனிதர்களும் வானதூதர்களும் வணங்கிநிற்கின்றனர். இக்குவிமாடத்தை உருவாக்கியவர் ஜொவான்னி கவுள்ளி என்னும் பச்சீச்சியா ஆவார்.

கோவிலின் நடுநீள்பகுதியின் இறுதியில் இயேசுவை மாட்சிமை மிக்க ஆட்டுக்குட்டியாக உருவகிக்கும் சித்திரம் உள்ளது. இந்த உருவகம் விவிலியத்தின் இறுதி நூலாகிய திருவெளிப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டது. தாம் கண்ட காட்சியை யோவான் இவ்வாறு விவரிக்கிறார்:

"வழியோர அன்னை மரியா படிமம்"[தொகு]

இயேசு கோவிலில் அமைந்துள்ள "வழியோர அன்னை மரியா படிமம்" (Madonna Della Strada) சிறப்பு வாய்ந்தது. 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்த ஓவியம் சிறப்பு வணக்கம் பெற்றுவந்துள்ளது.

புனித பிரான்சிசு சவேரியார் சிறுகோவில்[தொகு]

இயேசு கோவிலில் அமைந்துள்ள சிறுகோவில்களுள் சிறப்புமிக்க ஒன்று புனித பிரான்சிசு சவேரியாருக்கு (ஏப்ரல் 7, 1506 - திசம்பர் 3, 1552) அர்ப்பணிக்கப்பட்டதாகும். அதை வடிவமைத்தவர் பியேத்ரோ தி கொர்த்தோனா (1596-1669). இதன் புரவலராக இருந்தவர் ஜொவன்னி பிரான்செஸ்கோ நெக்ரோனி என்பவர். இவர் பின்னர் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

பல வண்ணங்களில் அமைந்த பளிங்குத் தூண்கள் கொண்ட சவேரியார் சிறுகோவிலில் பிரான்சிஸ் சவேரியார் விண்ணகத்திற்குச் செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல் ஒளிமயமாக ஒளிர்கின்றது.

பீடத்தின் உயரத்தில் அமைந்த ஓவியம் சவேரியாரின் இறப்பைச் சித்தரிக்கிறது. சீனாவுக்குச் சென்று கிறித்தவ மறைபரப்ப விழைந்த சவேரியார் சாஞ்சியான் என்னும் தீவில் நோய்வாய்ப்பட்டு திசம்பர் 3, 1552இல் உயிர்துறந்தார். இக்காட்சியை கார்லோ மராட்டி (1625-1713) என்னும் புகழ்மிக்க கலைஞர் வரைந்தார்.

இச்சிறு கோவிலில் உள்ள வேறு சிறப்புகள் இவை:

 • நடுப்பகுதியில் சவேரியார் விண்ண்க மாட்சியில் உள்ளார்.
 • சோழமண்டலக் கடலோரத்தில் கிறித்தவ மறைப்பணி நிகழ்த்தியபோது அவர் கையிலிருந்த சிலுவை கடலில் விழுந்துவிட்டது. சிறிது நேரத்திற்குப் பின்னர் அச்சிலுவையைத் தன் முதுகின்மேல் சுமந்துகொண்டு ஒரு கடல் நண்டு நீரில் மேலெழுந்து வந்தது. இந்த அதிசய நிகழ்ச்சி படமாக வரையப்பட்டுள்ளது.
 • இந்தியாவில் ஒரு பெண்மணிக்கு சவேரியார் திருமுழுக்கு வழங்கும் காட்சி ஓவியமாக உள்ளது.

மேற்குறிப்பிட்ட ஓவியங்களை ஜொவான்னி அந்திரேயா கார்லோனே (1639-1697) என்பவர் வரைந்தார்.

சவேரியாரின் கை திருப்பண்டமாகக் காக்கப்படல்[தொகு]

உரோமை இயேசு கோவிலில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ள புனித சவேரியாரின் திருக்கையும் அதை உள்ளடக்கிய அணிசெய்யப்பட்ட திருப்பேழையும்

இயேசு கோவிலில் அமைந்த சவேரியார் சிறுகோவிலின் சிறப்புகளுள் ஒன்று அங்கு சவேரியாரின் கை திருப்பண்டமாக (relic) அழியா நிலையில் காக்கப்படுவது ஆகும். வெள்ளியால் ஆன அலங்கரிக்கப்பட்ட திருப்பண்டப் பேழையில் (reliquary) சவேரியார் கை வந்தது பற்றி ஒரு வரலாறு உண்டு. சவேரியாரின் மரணத்திற்குப் பின் அவரது அழியா உடல் அவர் பல்லாண்டுகள் பணிசெய்த கோவா நகருக்குக் கொண்டுவரப்பட்டு இயேசு சபையினரின் கோவிலாகிய புனித பவுல் கோவிலில் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.

1614இல் இயேசு சபைத் தலைவராகப் பொறுப்பேற்ற க்ளவுடியோ ஆக்குவாவீவா என்பவர் சவேரியாரின் உடலிலிருந்து அவரது வலது கையைத் துண்டித்து அதை உரோமைக்கு அனுப்பித் தருமாறு பணித்தார். அக்கையால்தான் சவேரியார் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கியிருந்தார். இன்று சவேரியாரின் கை மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் இயேசு கோவிலில் உள்ளது.

புனிதர்களின் எலும்பு போன்றவற்றைப் பாதுகாத்து அவற்றிற்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் தொடக்க காலக் கிறித்தவத்திலிருந்தே நீடித்து வந்துள்ளது. கத்தோலிக்க திருச்சபை இப்பொருள் குறித்து தெளிவான வழிமுறைகளைத் தந்துள்ளது[2].

கோவில் நேர்ந்தளிப்பு[தொகு]

இயேசு கோவில் திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி ஆட்சிக்காலத்தில் அவர்தம் பதிலாள் கர்தினால் ஜூலியோ அந்தோனியோ சாந்தோரி என்பவரால் 1584, நவம்பர் திங்கள் 25ஆம் நாள் ஆடம்பரமாக நேர்ந்தளிக்கப்பட்டது.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயேசு_கோவில்&oldid=2916220" இருந்து மீள்விக்கப்பட்டது