மூன்று ஊற்று புனித பவுல் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்று ஊற்று புனித பவுல் கோவில்
San Paolo alle Tre Fontane (இத்தாலியம்)
மூன்று ஊற்று புனித பவுல் கோவிலின் முகப்புத் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இத்தாலி உரோமை, இத்தாலியா
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன்
நிலைகார்த்தூசிய சபைப் பொறுப்பிலுள்ள கோவில்

மூன்று ஊற்று புனித பவுல் கோவில் (San Paolo Alle Tre Fontane) என்பது உரோமையில் திருத்தூதர் புனித பவுல் கிறித்தவ நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்து மறைச்சாட்சியாக உயிர்துறந்த இடத்தில் கட்டி எழுப்பப்பட்ட உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும்[1]. இது சிஸ்தேர்சிய சபைத் துறவியரின்[2] துறவு இல்லமாக விளங்குகின்ற "மூன்று ஊற்று ஆதீனத்தின்"[3] பொறுப்பில் உள்ளது.

மூன்று ஊற்று: பெயர்க் காரணம்[தொகு]

உரோமை நகரில் மூன்று ஊற்று (Three Fountains; இத்தாலியம்: Tre Fontane) என்னும் இடம் "அர்தெயாத்தீனோ" என்னும் பகுதியில் உள்ளது. இங்கு சிஸ்தேர்சிய சபையைச் சார்ந்த துறவியருக்கு உடைமையான பழமையான ஆதீனம் உள்ளது. அந்த ஆதீனத்தின் கண்காணிப்பில் உள்ள மூன்று கோவில்களுள் ஒன்று புனித பவுலுக்கு நேர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மற்ற இரு கோவில்கள் "விண்ணகப் படிக்கட்டு மரியா கோவில்" (Santa Maria Scala Coeli) மற்றும் "புனிதர்கள் வின்செண்டு, அனஸ்தாசியுசு கோவில்" (Santi Vincenzo e Anastasio) என்று அழைக்கப்படுகின்றன.

சிஸ்தேர்சிய சபை ஆதீனமும் அதைச் சார்ந்த கோவில்கள், துறவியர் இல்லம், தோட்டங்கள் போன்றவையும் அமைந்திருக்கும் இடம் பண்டைக்காலத்தில் "சால்வியே நீர்ப்பரப்பு" (Aquae Salviae) என்று அழைக்கப்பட்டது. அது லவுரெந்தீனா பெருஞ்சாலை என்னும் உரோமை வழியில் அமைந்த ஒரு சிறு பள்ளத்தாக்கு. கிறித்தவ மறையின் தொடக்க காலத்தோடு நெருங்கிய தொடர்புடைய இடமாக அது மாறியதற்குக் காரணம் அங்குதான் புனித பவுல் கி.பி. 67ஆம் ஆண்டு, சூன் 29ஆம் நாள் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

மரபின்படி, நீரோ மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்திய காலத்தில் புனித பேதுருவும் புனித பவுலும் கிறித்தவ மறையை அறிக்கையிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். பேதுரு தலைகீழாகச் சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் எனவும், பவுல் வாளால் தலைவெட்டுண்டு இறந்தார் எனவும் கிறித்தவ மரபு கூறுகிறது. மேலும், வரலாற்றின்படி, புனித பவுல் இன்று "மூன்று ஊற்று" என்று அழைக்கப்படும் இடத்தில் கொல்லப்பட்டார். அவரது தலை வெட்டப்பட்டதும் அது உடலினின்று பிரிந்து மூன்று முறை தரையில் விழுந்து எழுந்ததாம். தலை விழுந்த மூன்று இடங்களிலும் மூன்று நீரூற்றுகள் புறப்பட்டனவாம். அவற்றுள் முதல் நீரூற்றிலிருந்து வெப்ப நீரும், இரண்டாம் ஊற்றிலிருந்து மித வெப்ப நீரும், மூன்றாம் ஊற்றிலிருந்து குளிர்ந்த நீரும் புறப்பட்டதாக மரபு.

புனித பவுல் பண்டைய உரோமை நகருக்கு வெளியே ஓஸ்தியா பெருஞ்சாலை அருகே தலைவெட்டுண்டு இறந்ததாகவும் வரலாறு உண்டு. அங்கே அவரைப் புதைத்த இடத்தில் பின்னர் ஒரு நினைவுக் கோவில் கட்டப்பட்டு, அதன்மேல் இன்றைய புனித பவுல் பெருங்கோவில் எழுந்தது. இக்கோவில் புனித பவுலுக்கு வணக்கம் செலுத்தும் தலையாய வழிபாட்டிடம் ஆகும்.

மூன்று ஊற்று ஆதீனம்: அமைதிப் பூங்கா[தொகு]

சிஸ்தேர்சிய சபையினரின் பொறுப்பிலுள்ள மூன்று ஊற்று ஆதீனம் ஓர் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. சார்லிமேன் வளைவைத் தாண்டி ஆதீன வளாகத்தில் நுழைந்ததும் இடது புறம் துறவியர் அடைப்பிடமும் இல்லமும் உள்ளன. முன்புறத்தில் புனித வின்செண்டு மற்றும் அனஸ்தாசியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் பெரிய மாற்றங்களின்றி அன்றிருந்தவாறே இன்றும் உள்ளது. அதற்குமுன் திருத்தந்தை முதலாம் ஹோனோரியஸ் அப்புனிதர்களின் நினைவாக 626இல் ஒரு கோவில் கட்டி அதைப் புனித ஆசீர்வாதப்பர் சபைத் துறவியரின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தார்.

மூன்று ஊற்று சிஸ்தேர்சிய சபைத் துறவியர் ஆதீனம்; உரோமை

இடது புறம் "விண்ணகப் படிக்கட்டு மரியா கோவில்" உள்ளது. இதுவே மூன்று ஊற்றிலுள்ள மூன்று கோவில்களிலும் சிறியது. இக்கோவில் "மறைச்சாட்சியரின் அன்னை மரியா கோவில்" என்றும் அழைக்கப்பட்டது. 299இல் தியோக்ளேசியன் மன்னன் காலத்தில் கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்டபோது புனித ஸீனோ என்பவரும் அவரோடு ஆயிரக்கணக்கான பிறரும் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் நினைவாக அங்கு ஒரு கோவில் எழுந்ததாகவும் வரலாறு.

இரு ஓரங்களிலும் உயர்ந்து வளர்கின்ற மரங்களைக் கொண்ட ஒரு நடைபாதை வழியே சிறிது தூரம் சென்றதும் புனித பவுல் கோவிலைக் காணலாம். இக்கோவில்தான் மூன்று ஊற்று பகுதிக்கே சிறப்புக் கொணரும் சின்னமாக உள்ளது.

மரியா கோவிலும் பவுல் கோவிலும் ஏற்கனவே இருந்த கட்டடங்களின்மீது எழுந்தவை. அவற்றின் இன்றைய கட்டட அமைப்பு 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

7ஆம் நூற்றாண்டின் நடுக்காலத்தில் கீழைத் திருச்சபைத் துறவியர் அடைக்கலம் தேடி உரோமைக்கு வந்த போது அவர்களிடம் மூன்று ஊற்று ஆதீனத்தைத் திருத்தந்தை ஒப்படைத்தார். சார்லிமேன் மன்னர் அந்த ஆதீன வகையாக ஓர்பெத்தெல்லோ நகரையும் வேறு பதினொரு நகர்களையும் கொடுத்தார்.

10ஆம் நூற்றாண்டில் புனித ஆசீர்வாதப்பர் துறவிகளான குளூனி சபையினரிடம் மூன்று ஊற்று ஆதீனம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் திருத்தந்தை இரண்டாம் இன்னசெண்ட் இந்த ஆதீனத்தை 1140இல் புனித பெர்னார்து கிளேர்வோ (Saint Bernard of Clairvaux) என்பவரிடம் ஒப்படைக்க, அவர் கிளேர்வோ என்னுமிடத்திலிருந்து அழைத்துவந்த சிஸ்தேர்சிய சபைத் துறவியரிடம் அதைக் கொடுத்தார். அப்போது ஆதீனத் தலைவராக பீட்டர் பெர்னார்து பகானெல்லி என்பவர் நியமிக்கப்பட்டார். இவரே 1145இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்றாம் யூஜின் என்னும் பெயரை ஏற்றார்.

திருத்தந்தை இரண்டாம் இன்னசெண்ட் சிஸ்தேர்சிய சபையினரிடம் ஆதீனத்தை ஒப்படைத்தபோது அதைப் பழுதுபார்த்து சீர்ப்படுத்தினார். இந்த ஆதீனத்தில் துறவிகளாய் இருந்த பலர் வரலாற்றில் கர்தினால், ஆயர், தூதுவர் போன்ற பல உயர் பதவிகளை வகித்துள்ளனர். திருத்தந்தை மூன்றாம் ஹோனோரியஸ் புனித வின்செண்ட், அனஸ்தாசியா கோவிலைச் சீரமைத்து அதைத் தாமே 1221இல் அர்ச்சித்தார்.

கி.பி. 1625இலிருந்து இந்த ஆதீனம் இத்தாலிய சிஸ்தேர்சிய துறவிகளின் பொறுப்பில் இருந்தது. 1812இல் நெப்போலியனின் படையெடுப்பைத் தொடர்ந்து ஆதீனம் சீரழியத் தொடங்கியது. மூன்று ஊற்றுப் பகுதி சதுப்பு நிலமாக இருந்ததால் அங்கு மலேரியா ஏற்படுவது வழக்கமாயிருந்தது. அதற்குத் தீர்வுகாண முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. சுகாதார நிலை குறைவுபட்டதால் அப்பகுதி "உரோமை நாட்டுப் புறக் கல்லறை" என்றே அழைக்கப்பட்டது.

இப்பின்னணியில் 1868ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் "லா கிராந்த் ட்ராப்" (La Grande Trappe) என்னும் துறவற இல்லத்திலிருந்து "ட்ராப்பிஸ்ட்" என்னும் சிஸ்தேர்சிய சபைத் துறவியர் மூன்று ஊற்று ஆதீனத்தின் பொறுப்பை ஏற்றனர்.

1870இல் இத்தாலிய அரசு இந்த ஆதீனத்தைத் திருத்தந்தையிடமிருந்து கைப்பற்றிக்கொண்டது. பின்னர் துறவியர் 1886இல் அதை அரசிடமிருந்து விலைக்கு வாங்கி விரிவுபடுத்தினர். மலேரியாவை ஒழிக்க துறவியர் நவீன முறைகளைக் கையாண்டனர். யூகலிப்டசு மரங்களையும் பிற மரங்களையும் வளாகம் முழுவதிலும் நட்டு கொசுத்தொல்லையை ஒழித்தனர். இன்று மூன்று ஊற்றுப் பகுதி நலமான இடமாக மாறியுள்ளது.

புனித பவுல் கோவிலின் சிறப்புக் கூறுகள்[தொகு]

புனித பவுல் கிறித்தவ நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்து, கொலையுண்டு இறந்த இடம் மூன்று ஊற்று என்னும் மரபின் அடிப்படையில் அங்கு ஒரு சிறுகோவில் பண்டைக்காலத்திலிருந்தே இருந்துவந்தது. 1599ஆம் ஆண்டு கர்தினால் பியேத்ரோ ஆல்டோப்ராண்டீனி என்பவரின் ஆதரவில் ஜாக்கொமே தெல்லா போர்த்தா என்னும் கட்டடக் கலைஞர் புதிய கோவிலைக் கட்டினார்.

புனித பவுல் கட்டிவைக்கப்பட்ட தூண்

கோவிலின் முகப்பு எளிமையும் அழகும் கொண்டு மிளிர்கின்றது. அங்கு புனித பேதுரு, புனித பவுல் ஆகிய இருவரின் சிலைகளும் நுழைவு வாயிலின் இரு பக்கங்களிலும் உள்ளன. கோவிலின் உள்ளே இரு பக்கங்களிலும் அத்திருத்தூதர் இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பீடங்கள் உள்ளன. தரையில் பண்டைக்கால கற்பதிகை ஓவியங்கள் வசந்தம், கோடை, இலையுதிர் மற்றும் குளிர் காலங்களைச் சித்தரிக்கின்றன. அவை பழைய ஓஸ்தியா (Ostia Antica) என்னும் பகுதியிலிருந்து வந்தவை. அவற்றை இக்கோவிலுக்குக் கொடையாக திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அளித்தார்.

கோவில் முகப்பில் மேல் பக்கத்தில் "இங்கு புனித பவுல் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். இதே இடத்தில் மூன்று ஊற்றுகள் அதிசயமாகச் சுரந்தன" என்னும் வாசகம் இலத்தீனில் பொறிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஊற்று புனித பவுல் கோவில் தரையில் உள்ள பண்டைய உரோமைக் கற்பதிகை ஓவியம்: "இலையுதிர் காலம்"

கோவிலின் உள்ளே புனித பவுல் கொலைசெய்யப்படுவதற்கு முன் கட்டிவைக்கப்பட்டிருந்த தூண் உள்ளது.

மூன்று ஊற்றுகள் சுரந்த இடத்தில் மூன்று சிறு பீடங்கள் கட்டப்பட்டுள்ளன. தண்ணீர் தூய்மையாக இல்லை என்பதால் அந்த ஊற்றுகள் 1950இல் மூடப்பட்டன.

ஆதாரங்கள்[தொகு]