புனித பேதுரு சங்கிலிக் கோவில்
புனித பேதுரு சங்கிலிக் கோவில் San Pietro in Vincoli al Colle Oppio (இத்தாலியம்) S. Petri ad vincula (இலத்தீன்) | |
---|---|
புனித பேதுரு சங்கிலிக் கோவிலின் முகப்புத் தோற்றம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | உரோமை, இத்தாலியா |
புவியியல் ஆள்கூறுகள் | 41°53′37.94″N 12°29′35.05″E / 41.8938722°N 12.4930694°E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் |
நிலை | இளம் பெருங்கோவில் |
இணையத் தளம் | Official website |
புனித பேதுரு சங்கிலிக் கோவில் (Saint Peter in Chains) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க வழிபாட்டு இடங்களுள் ஒன்றாகும். இளம் பெருங்கோவில் என்னும் நிலை சார்ந்த இக்கோவிலில் உலகப் புகழ் பெற்ற மைக்கலாஞ்சலோ என்னும் கலைஞர் உருவாக்கிய மோசே பளிங்குச் சிலை உள்ளது. இச்சிலை இரண்டாம் ஜூலியஸ் என்னும் திருத்தந்தையின் கல்லறைக் கட்டடத்தின் ஒரு கூறாக அக்கோவிலில் அமைந்துள்ளது[1].
கோவிலின் வரலாறு
[தொகு]இக்கோவிலின் பெயர் குறித்துநிற்பதுபோல, அங்கு புனித பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலிகள் உள்ளன என்பது மரபு. விவிலிய நூல்களில் ஒன்றாகிய திருத்தூதர் பணிகள் என்னும் நூலில் புனித பேதுருவின் வாழ்வில் நிகழ்ந்த கீழ்வரும் நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.
“ | அக்காலத்தில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்பவிழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப்பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது.
ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, "உடனே எழுந்திடும்" என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. வானதூதர் அவரிடம், "இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக் கொள்ளும்" என்றார். தூதர் அவரிடம், "உமது மேலுடையை அணிந்து கொண்டு என்னைப் பின்தொடரும்" என்றார். பேதுரு வானதூதரைப் பின் தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரைவிட்டு அகன்றார். பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, "ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்" என்றார். (திருத்தூதர் பணிகள் 12:1-11) |
” |
எருசலேம் சிறைக்கூடத்தில் பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலி எருசலேம் நகரில் ஆயராக இருந்த யுவனாலிஸ் என்பவரிடம் இருந்தது. அவர் அச்சங்கிலியை உரோமைப் பேரரசனாகிய இரண்டாம் வாலன்டீனியன் என்பவரின் மனைவியாகிய ஏலியா யூதோசியா அரசிக்கு, அவர் எருசலேமுக்குத் திருப்பயணமாகச் சென்றபோது பரிசாக அளித்திருந்தார். தம் கைவசம் வந்த சங்கிலியை ஏலியா யூதோசியா அரசி, மூன்றாம் வாலன்டீனியன் என்னும் பேரரசனின் மனைவியும் தம் மகளுமாகிய லிச்சீனியா யூதோக்சியாவுக்கு அன்பளிப்பாக்கினார். அவர் பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலியை திருத்தந்தை முதலாம் லியோ என்பவருக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்.
உரோமையில் புனித பேதுரு இறப்பதற்கு முன் "மாமெர்த்தின்" என்னும் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரைக் கட்டியிருந்த சங்கிலி ஏற்கனவே வணக்கத்துடன் காக்கப்பட்டு வந்தது. அச்சங்கிலியையும் எருசலேமிலிருந்து கொண்டுவரப்பட்ட சங்கிலியையும் ஒப்பிட்டுப்பார்க்க அருகருகே கொண்டுசென்றபோது அவை இரண்டும் ஒன்றொடொன்று இணைபிரியாமல் ஒன்றுசேர்ந்துவிட்டன என்றொரு புராதன கதை உண்டு. இந்த அற்புத சங்கிலியைப் பாதுகாக்க கட்டப்பட்ட கோவில் "புனித பேதுரு சங்கிலிக் கோவில்" என்றும், "யூதோக்சியா கோவில்" என்றும் அழைக்கப்பட்டது.
கோவில் கட்டடமும் நேர்ந்தளிப்பும்
[தொகு]லிச்சீனியா யூதோக்சியா என்னும் அரசியின் ஆணையின்படி இக்கோவில் கி.பி. 432-440இல் கட்டப்பட்டது. 1956-59 ஆண்டுகளில் நடந்த அகழ்வாய்வுகளின் பயனாக, இக்கோவில் இருந்த இடத்தில் ஏற்கனவே ஒரு கிறித்தவக் கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அக்கோவிலின் அடியில் பண்டைய உரோமைக் காலத்துக் கட்டடங்களும் இருந்தனவென்று தெரிகிறது.
திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் என்பவர் இக்கோவிலை 439இல் நேர்ந்தளித்தார். இக்கோவில் பல முறை புதுப்பிக்கப்பட்டது. குறிப்பாக, முதலாம் ஹேட்ரியன் என்னும் திருத்தந்தை செய்த புதுப்பித்தல் பணியையும் பதினொன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பணிகளையும் கூறலாம். ஆறாம் சிக்ஸ்துஸ் என்னும் திருத்தந்தையின் உறவினர் கர்தினால் தெல்லா ரோவெரே (இவர் 1503இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் ஜூலியஸ் என்னும் பெயரை ஏற்றார்) இக்கோவிலைச் சீரமைத்துக் கட்டினார்.
1475இல் கோவிலின் முன் நுழைவாயில் பகுதி இணைக்கப்பட்டது. கோவிலை அடுத்த துறவியர் இல்லம் 1493-1503இல் சேர்க்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் 1875இலும் சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டன.
கோவிலின் உட்பகுதி
[தொகு]கோவிலின் உட்பகுதி நெடுநீளத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பண்டைய "டோரிக்" கலைப்பாணியில் அமைந்த பெருந்தூண்கள் கூரையைத் தாங்கிநிற்கின்றன. நடுப்பகுதியின் உள்கூரையில் ஜொவான்னி பத்தீஸ்தா பரோடி என்பவர் வரைந்த ஓவியம் புனித பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலிகள் இணைந்த அதிசயத்தைச் சித்தரிக்கின்றன (1706).
கோவிலின் உள் காணப்படுகின்ற ஓவியங்களுள் குறிப்பிடத்தக்கதொன்று புனித செபஸ்தியான் கற்பதிகை ஓவியம் ஆகும். இது 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. வடக்கு இத்தாலியாவில் பவீயா என்னும் நகரில் ஏற்பட்ட கொள்ளைநோயின்போது, அந்நகரில் அமைந்திருந்த "புனித பேதுரு சங்கிலிக் கோவிலில்" புனித செபஸ்தியானுக்கு ஒரு பீடம் கட்டினால் அந்நோய் தணியும் என்னும் நம்பிக்கையில் ஒரு பீடம் எழுப்பப்பட்டது. அதுபோலவே, உரோமையில் அமைந்த புனித பேதுரு சங்கிலிக் கோவிலிலும் புனித செபஸ்தியானுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் ஒரு பீடம் கட்டினர் என்பது வரலாறு.
மைக்கலாஞ்சலோ செதுக்கிய புகழ்மிக்க மோசே பளிங்குச் சிலை
[தொகு]புனித பேதுரு சங்கிலிக் கோவிலின் சிறப்புக்கு ஒரு முக்கிய காரணம் அக்கோவிலில் உள்ள மோசே சிலை ஆகும்[2]. இதை மைக்கலாஞ்சலோ என்னும் தலைசிறந்த கலைஞர் 1515இல் பளிங்குக் கல்லில் செதுக்கி முடித்தார். உரோமை நகரின் கலை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்த இரண்டாம் ஜூலியஸ் என்னும் திருத்தந்தையின் கல்லறையைக் கலையழகோடு அமைக்கும் பணி மைக்கலாஞ்சலோவிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்லறைக் கட்டடத்தை அணிசெய்ய 47 சிலைகள் வடிப்பதாய் இருந்தது. கல்லறையும் வத்திக்கானில் அமைந்த புனித பேதுரு பெருங்கோவிலில் நிறுவப்படுவதாய் இருந்தது. ஆனால் நிதி தட்டுப்பாடு காரணமாக அத்திட்டம் குறுக்கப்பட்டு, சிலைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. கல்லறையும் புனித பேதுரு சங்கிலிக் கோவிலில் அமைக்கப்படலாயிற்று. அச்சிலைகளுள் ஒன்றாக அமைந்த மோசே சிலை கல்லறைக் கட்டடத்தின் மையச் சிலையாக உருவெடுத்தது.
மைக்கலாஞ்சலோ வடித்த மோசே சிலையின் தலையில் இரு கொம்புகள் உள்ளன. கடவுளைக் கண்டு அவரோடு உரையாடிவிட்டுத் திரும்பிய மோசேயின் முகம் ஒளிவீசி மிளிர்ந்தது; ஒளிக்கதிர்கள் சிதறிப் பரந்தன. அக்காட்சியைக் கொம்புகள் வழி செதுக்கியுள்ளார் மைக்கலாஞ்சலோ (காண்க:விடுதலைப் பயணம் 34:29-35).
மோசே சிலையைச் செதுக்கி முடித்த மைக்கலாஞ்சலோ அதன் அழகையும் ஆற்றலையும் கண்டு வியந்த நிலையில் தம் கையிலிருந்த சுத்தியலைச் சிலையின் வலது கால் முட்டில் தட்டி, "பேசு!" என்று கூறியதாக வரலாறு. அத்துணை உயிரோட்டத்தோடு தோற்றமளித்தது அச்சிலை. வலது கால் முட்டில் தழும்பு இன்றும் உள்ளது.
படத்தொகுப்பு
[தொகு]-
புனித பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலி அடங்கிய திருப்பண்டப் பேழை
-
கோவிலின் உயர்மட்டத்தில் ஜாக்கமோ கோப்பி என்னும் கலைஞரால் வரையப்பட்ட ஓவியம் (1577)
-
கற்பதிகை ஓவியத்தில் புனித செபஸ்தியான்