உள்ளடக்கத்துக்குச் செல்

சிவப்பு மூக்கு ஆள்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு மூக்கு ஆள்காட்டி
இந்தியாவில் ஒரு சிவப்பு மூக்கு ஆள்காட்டி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
V. indicus
இருசொற் பெயரீடு
Vanellus indicus
(Boddaert, 1783)
வேறு பெயர்கள்

Hoplopterus indicus
Lobivanellus indicus
Lobivanellus goensis
Tringa indica
Sarcogrammus indicus

சிவப்பு மூக்கு ஆள்காட்டி என்பது ஒரு கரைப்பறவை. இது மனிதர்களையோ அல்லது எதிரிகளையோ கண்டால் ஒலிஎழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்தும். இதனால் இப்பறவை ஆள்காட்டி என்றும் ஆள்காட்டிக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பறவை தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.

தோற்றக்குறிப்பு

[தொகு]

ஆட்காட்டிகள் அளவில் பெரிய கரைப்பறவைகளாகும். இவை 35 செமீ நீளம் இருக்கும். இதன் இறக்கைகளும் முதுகுப் பகுதியும் ஊதா நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் தலை, மார்பு, கழுத்தின் முன்பகுதி ஆகியன கருப்பு நிறத்திலும் இவ்விரண்டு நிறங்களுக்கு நடுவில் உள்ள பகுதி வெண்ணிறமாகவும் இருக்கும். இதன் கண்ணைச் சுற்றிலும் சிவப்பு நிறத்திலான தோல் இருக்கும். அலகுகள் சிவப்பாக நுனி மட்டும் கருப்பாக இருக்கும். கால்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

சிவப்பு மூக்கு ஆட்காட்டி குருவி

ஆண் மற்றும் பெண் பறவைகள ஒன்று போலவே இருக்கும், ஆனால் ஆண் பறவையின் இறக்கைகள் 5% நீண்டும், கால் மணிக்கட்டு சற்றே துருத்தி கொண்டுமிருக்கும். பறவைகளின் நீளம் 320 முதல் 350 மில்லி மீட்டர் அளவும், இறக்கைகளின் நீளம் 208 முதல் 247 மில்லி மீட்டராகவும் அமைந்துள்ளது. இந்தியாவில் காணப்படும் இவ்வகை ஆட்காட்டி பறவைகளின் இறக்கைகளின் நீளம் சராசரியாக 223 மில்லி மீட்டர் அளவும், ஆனால் இலங்கையில் காணப்படும் இவ்வகை பறவைகளின் இறக்கைகளின் நீளம் சற்றே குறைவாக சராசரியாக 217 மில்லி மீட்டர் அளவும் அமைந்துள்ளன.

இவை பொதுவாக இணைகளாகவும் அல்லது சிறு குழுக்களாகவும் உழுத நிலங்களிலும், மேய்ச்சல் பகுதியிலும் மற்றும் குளம், குட்டைகள் போன்ற நீர் நிலைகளினோரமும் காணப்படுகின்றன. இனப்பெருக்கம் அல்லாத குளிர் காலங்களில் அரிதாக இப்பறவைகள் பெருங்குழுக்களாக சுமார் 26 பறவைகள் முதல் 200 பறவைகள் வரை ஒன்றாக வசிக்கின்றன. இவை மழை வளம் நிறைந்த வனங்களுக்கு அருகாமையிலும் வசிக்கின்றன.இவை தத்தி தத்தி, உடம்பை முன்னால் சாய்த்து உணவுகளை தேடி உட்கொள்ளும்.இவை இரவு நேரங்களிலும் சுறுசுறுப்பாக இரை தேடும் என்றும் பௌர்ணமி இரவுகளில் இதன் இயக்கம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவை இடையறாது இரவு மற்றும் பகல் நேரங்களில் தான் சுற்றுபுறத்தை கண்காணித்து, மனிதர்களோ மற்ற எதிரிகளோ எதிர்பட்டால் முதலில் எச்சரிக்கை குரல் எழுப்பி மற்ற உயிரினங்களை எச்சரிக்கை செய்கிறது. எனவே இப்பறவைகள் வேடர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கிறது.இவை மெதுவான வேகத்தில், குறிப்பிடத்தக்க அளவு சிறகசைவுகளுடன் பறக்க கூடியவை ஆனால் கூட்டினை பாதுகாக்கும் போதும் மற்றும் பருந்தினால் வேட்டை ஆடப்படும் போதும் மிகுந்த வேகத்தோடு பறக்க கூடிய ஆற்றல் படைத்தவை. இவற்றின் குரல் அதீத சத்ததுடன் அலறல் ஒலியை ஒத்ததாய்யிருக்கும்.

பரவியிருக்கும் பகுதிகள்

[தொகு]

இது மேற்கு ஆசியாவில் (ஈரான், தென் மேற்கு ஈரான், அரேபிய / பாரசீக வளைகுடா) தொடங்கி கிழக்கு புறமாக தென் ஆசியா (பலுச்சிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், முழு இந்திய துணை கண்டம் முழுவதிலும் கன்னியாகுமாரி வரையும் மற்றும் காஷ்மீரில் / நேபாளில் 1800 மீட்டர் உயரம் வரையும் பரவியுள்ளது) , இதன் மற்ற துணை இனங்கள் மேலும் கிழக்கில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவி காணப்படுகிறது. தேவையான வாழ்விடங்களின் பொருட்டு இவை மழை கலங்களில் ஏகமாக இடம்பெயர்ந்து காணப்படுகின்றன. ஆயினும் இப்பறவை பெரும்பாலும் இடம்பெயராமல் நிலையாக ஒரே இடங்களில் வழக்கூடியவை.

இந்த இனங்கள் மேற்கு பகுதிகளில் குறைந்து வருகிறது, ஆனால் தென் ஆசியாவில் எந்த ஈரநிலத்தினறுகிலும் இவற்றை ஏராளமாக பார்க்ககூடிய அளவில் பெருகி உள்ளது.

நடத்தை மற்றும் சூழலியல்

[தொகு]

இப்பறவையின் இனப்பெருக்க காலம் மாசி முதல் ஆவணி வரை ( மார்ச் முதல் ஆகஸ்ட் வரை). இணை சேர்வதற்கான முந்தைய காலங்களில் ஆண் பறவை தன் இறகுகளை சிலும்பி பெரிதாக மாற்றியும் தன் அலகை மேல் நோக்கி காண்பித்தும் பெண் பறவைகளை கவர முயற்சிக்கும். பெண் பறவைகளை கவர ஆண் பறவைகளினிடையே பெருத்த போட்டி நிகழும்.

சிவப்பு மூக்கு ஆட்காட்டி குருவியின் அழைப்புக் குரல்
சிவப்பு மூக்கு ஆட்காட்டி குஞ்சுகள் மற்றும் முட்டைகள்

இப்பறவைகள் தரையில் தாழ்வான பகுதிகளில் முட்டையிடும். இந்த முட்டைகளின் ஓடுகள் ஒழுங்கற்ற கருப்பு நிற புள்ளிகளை கொண்டிருக்கும். இந்த முட்டைகள் பொதுவாக மண்ணின் நிற வடிவமைப்பை பெற்று இருப்பதால், இவற்றை கண்டுபிடிப்பது அரிது. ஒரு கூட்டில் 3 முதல் 4 மூட்டைகள் வரை இருக்கும். ஒவ்வொரு முட்டையும் சராசரியாக 42x30 மில்லி மீட்டர் அளவு இருக்கும். குடியிருப்பு பகுதிகளில் சில நேரங்களில் இப்பறவைகள் கூரையின் மேற் புறங்களில் முட்டையிடும். இவை சில நேரங்களில் தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட கற்களுக்கு இடையேவும் தன் கூடுகளை உருவாக்குவதாக சில குறிப்புகள் உள்ளன. இவை, விவசாயத்தின் பொருட்டு மேற்கொள்ளப்படும் வேலைகளால் தன் கூட்டிற்கு ஏதேனும் பாதிப்பேற்படுமாயின், ஒவ்வொரு முட்டையாக எடுத்துச்சென்று தன் கூட்டினை புதிய பாதுகாப்பான இடத்திற்கு இட மாற்றம் செய்கிறது.

சிவப்பு மூக்கு ஆட்காட்டி குஞ்சு கூடு விட்டு பெற்றோரை பின்தொடர்கிறது

அடைகாக்கும் போது இப்பறவைகள் பாய்ந்து பறந்தும், எதிரிகளை திசைதிருப்பியும் முட்டைகளையும், குஞ்சுகளையும் காக்க முயற்சிக்கும். ஆண் மற்றும் பெண் பறவைகள் இரண்டும் முட்டைகளை அடைகாக்கும். தன் இறக்கைகளை வேகமாக அடித்து தன் கூட்டை அச்சுறுத்தும் எந்த தாவரவுண்ணியையும் பின்வாங்க வைக்கும்.ஆண் பறவை குறிப்பாக வெப்பமான நண்பகல் நேரத்தில் கூடு திரும்பி , அடை காக்கும் பெண் பறவைக்கு ஓய்வு அளிக்கும். 28 - 30 நாட்களில் முட்டைகள் குஞ்சு பொரிக்கின்றன. சுமார் 40% முட்டைகள் வெற்றிகாரமாக குஞ்சு பொரிக்கின்றன. தோராயமாக 43% முட்டைகள் கீரி, காகங்கள் போன்றவற்றல் அழிந்து போகின்றன. ஆனால் இதனோடு ஒப்பிடும் போது குஞ்சுகளின் இறப்பு சதவிகிதம் குறைவாக அதாவது 8.3% ஆக நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. முதல் வாரத்திற்கு பிறகு குஞ்சுகளின் உயிர் வாழும் விகிதம் இன்னும் அதிகரிக்கிறது.

மற்ற ஆட்காட்டி குருவிகள் போல், இவ்வகை சிவப்பு மூக்கு ஆட்காட்டி குருவிகள் தங்கள் வயிற்று புறமுள்ள இறக்கைகளை நனைத்து அந்த தண்ணிரை கொண்டுவந்து குஞ்சுகளுக்கு ஊட்டி மற்றும் வெயில் நேரங்களில் முட்டைகளின் வெப்பத்தையும் குறைத்துக்கொள்கின்றன.இவைகள் நீர் நிலைகளில் தண்ணீர் கிடைக்கும் போது குளித்தும் மற்றும் பெரும்பாலும் தன் இறகுகளை கோதி சுத்தப்படுத்துவதிலும் தன் ஓய்வு நேரத்தை செலவிடுகின்றன.இவை சில சமயங்களில் தன் நீண்ட கால்களை தரையில் கிடத்தி ஓய்வு கொள்ளும். சில சமயங்களில் ஒற்றை காலில் நின்றபடியே ஓய்வு கொள்ளும்.

ஆரோக்கியமான இளம் பறவைகளுக்கு சில எதிரிகள் உண்டு. நாடா புழு மற்றும் ட்ரிமேடோட்ஸ் போன்ற சில இனங்கள் இப்பறவைகளின் ஒட்டுண்ணிகள் என்று அறியப்படுகிறது.

உணவு

[தொகு]

ஆட்காட்டிகள் பலவகையான பூச்சிகள், நத்தைகள், மற்றும் சிறு நீர்வாழ் உயிரினங்களை உணவாகக் கொள்ளும். இவை தானியங்களையும் சில சமயம் உண்ணும். பெரும்பாலும் இவை பகலிலேயே இரை தேடும், சில சமயம் இரவு நேரங்களில் இரை தேடும். இவைகள் சில நேரங்களில் பூச்சி இரையை கால்களைக் கொண்டு தொந்தரவு செய்து பிடித்து உண்ணும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vanellus indicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2009.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vanellus indicus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: