மார்க் அந்தோனி பிரேசுகர்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க் அந்தோனி பிரேசுகர்டில்
Mark Anthony Bracegirdle
பிறப்பு(1912-09-10)10 செப்டம்பர் 1912
செல்சி, இலண்டன்
இறப்புசூன் 22, 1999(1999-06-22) (அகவை 86)
அறியப்படுவதுமார்க்சிய புரட்சியாளர், இடதுசாரி அரசியல்வாதி, செயற்பாட்டாளர்
பெற்றோர்ஈனா மார்ஜரி லைசுடர்,
ஜேம்ஸ் சீமோர் பிரேசுகர்டில்

மார்க் அந்தோனி லைச்டர் பிரேசுகர்டில் (Mark Anthony Lyster Bracegirdle, 10 செப்டம்பர் 1912 – 22 சூன் 1999) ஒரு ஆங்கிலோ-ஆஸ்திரேலிய மார்க்சியம் சார்ந்த புரட்சியாளர் ஆவார். இவர் இலங்கையில் வாழ்ந்தபோது இலங்கை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐரோப்பிய இனக்குழுவினரில் ஒருவர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

மார்க் பிரேசுகர்டில் இலண்டனில் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் நாள் ஈனா மார்ஜரி லைசுடர், ஜேம்ஸ் சீமோர் பிரேசுகர்டில் ஆகியோருக்குப் பிறந்தார். தெற்கு இலண்டனில் உள்ள கெனிங்டனில் பள்ளிப் படிப்பை தொடர்ந்தார். அவரின் தாய் பிரித்தானியத் தொழிற் கட்சியில் பெண்கள் வாக்குரிமை மூலம் இணைந்து 1925 இல் ஒல்போர்ன் பெருநகரத்திற்கு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்க் தனது தாயுடன் ஆத்திரேலியாவில் குடியேறினார். சிட்னி கலைப் பள்ளியில் பயின்ற மார்க் தொலைதூர வரண்ட நிலப்பகுதி வேளாண்மையாளராகப் பயிற்சி பெற்றார். 1935 இல் அந்நாட்டின் இளம் கம்யூனிஸ்ட் லீக் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இலங்கை வருகை[தொகு]

1936 மார்ச் மாதத்தில் மார்க் வெளியுலக வாழ்வைத் தேடி ஆத்திரேலியாவை விட்டுப் புறப்படத் தீர்மானித்தார். இலங்கையில் மலையகத்தில் மாத்தளை அருகேயுள்ள மடுல்கெல்ல, ரெலுகாஸ் தோட்டத்தில் பணிப்பாளராக இருந்த தோமசு என்பவருடன் ஏற்பட்ட தொடர்பில், தேயிலை பயிரிடலில் ஆர்வம் கொண்டு பென்டிகோ கப்பலில் இலங்கை சென்றார். இங்கு தேயிலைத் தோட்டக் கூலியாட்களாக பணிபுரிந்த மலையகத் தமிழர்களிடையே பணியாற்றினார். அங்கே இம்மக்கள் அத்தியாவசிய அடிப்படை சுகாதாரம், கல்வி இன்றி சிறு வரிசை வீடுகளில் வசித்து வந்தனர். இது இங்கிலாந்தில் கால்நடைகளை வளர்க்கும் இடத்தை விட மோசமாக இருந்தது. இவர்கள் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டனர் இதனால் இந்தத் தொழிலாளர்கள் மத்தியில் போராட்டம் பெருகியது. மார்க் தொழிலாளர்களுடன் கூட்டுறவு கொள்வதற்காகவும், தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிக்கும் செயலில் ஈடுபட்டதற்காகவும் நீக்கப்பட்டார். பின்னர் லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்தார்.[1]

கட்சிப் பணிகள்[தொகு]

1936 நவம்பர் 28 இல் கொழும்பில் நடைபெற்ற லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.[2] அக்கட்சியின் தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா மார்க்கை "ஒரு வெள்ளைத் தோழர் ஒரு தெரு முனையில் நடைபெற்ற கட்சி கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வது இதுவே முதல் தடவையாகும்", எனக் கூறி அறிமுகப்படுத்தினார். மார்க் இலங்கையில் தனது முதலாவது பொது உரையை தொடங்கினார். ஆங்கிலேய முதலாளிகள் இலங்கைத் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்கும், ஒருவர் மற்றொருவருக்கு எதிராகவும் செயல்பட குழிபறிக்க முயற்சிப்பதாக எச்சரித்தார்.

1937 சனவரி 10 ஆம் நாள் ஆங்கிலேய காவல் ஆணையர் சர் எர்பர்ட் டவுபிகின் என்பவர் இலங்கைத் தீவை விட்டுப் புறப்படும் நிகழ்வில் கொழும்பு காலிமுகத் திடலில் எதிர்ப்புக் கூட்டமொன்றை கட்சி ஏற்பாடு செய்ததில் அவர் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டார். 1915 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலேயர் கலகம் முதல் ஆங்கிலேய காவல் ஆணையர் சர் டவுபிகினின் அட்டூழியங்களுக்கு எதிராக லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.

1924 முதல் அட்டன் தொகுதியின் இலங்கை அரசாங்க சபையில் உறுப்பினராக இருந்த கோ. நடேசய்யர் இவரை நாவலப்பிட்டியின் தொழிலாளர்கள் இயக்கத்தின் மூலம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நலன் மற்றும் இயக்க செயலாளர்களின் எதிர்காலப் பணியை ஆராய்வதற்காக பணியிலமர்த்தினார்.[3]

பிரேசுகர்டில் நிகழ்வு[தொகு]

1937 ஏப்ரல் 3 அன்று நாவலப்பிட்டியில் இடம்பெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் திரண்டிருந்தனர். இக்கூட்டத்தில் இந்தியாவில் இருந்து காங்கிரசு சோசலிசக் கட்சியைச் சேர்ந்த கமலாதேவி சட்டோபாத்யாய் கலந்துகொண்டு உரையாற்றினார்.[4] இக்கூட்டத்தில் என். எம். பெரேரா பிரேசுகர்டிலை, "தோட்டத் தொழிலாளர்களுக்காகக் கண்ணீர் விட்ட வெள்ளைத் தோழர்" என அறிமுகப்படுத்தினார். பிரேசுகர்டில் உரையாற்ற எழுந்த போது தொழிலாளர்கள் அனைவரும் சாமி, சாமி என வாழ்த்தி வரவேற்றனர். "வெள்ளைகள் உங்கள் இரத்தத்தை உறிஞ்சி, சுகபோகத்தில் வாழ்கிறார்கள்" என அவர் உரையாற்றினார்.[4] 1937 ஏப்ரல் 16 இல் பிரேசுகர்டிலை நாடு கடத்தும் ஆணையில் ஆளுநர் சேர் எட்வர்ட் ஸ்டப்சு கையெழுத்திட்டார். ஏப்ரல் 25 இற்கு முன்னர் தீவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த வெளியேற்ற உத்தரவு நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மார்க்கைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவானார். "ஆளுநர் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதாக" இலங்கை அரசாங்க சபை ஏப்ரல் 26 ஆம் நாள் 34-7 என்ற வாக்குகளின் அடிப்படையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.[4]

1937 மே 5 இல் கொழும்பு, காலிமுகத் திடலில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை சமசமாசக் கட்சியினர் ஒழுங்கு செய்தனர். இக்கூட்டத்தில் என். எம். பெரேரா, பிலிப் குணவர்தன, லெசுலி குணவர்தனா, டி. எம். ராசபக்ச, ஹண்டி பேரின்பநாயகம், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா போன்ற தலைவர்கள் உரையாற்றிய பின்னர், திடீரென மார்க் பிரேசுகர்டில் தோன்றி உரையாற்றி விட்டு மறைந்தார்.[4] 1937 மே 7 இல் கொழும்பு புதுக்கடையில் வேர்ணன் குணசேகரா என்பவரின் வீட்டில் வைத்து மார்க்கை புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர். இக்கைதுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மே 10 அன்று அவரை நீதிமன்றத்தில் நிறுத்தும்படி ஆட்கொணர்வு மனு மூலம் காவல்துறையினருக்கு ஆணையிடப்பட்டது.[4] பிரதம நீதியரசர் சேர் சிட்னி ஆபிரகாம்சு, நீதிபதிகள் எச். வி. பெரேரா, ஆகியோர் தலைமையில் கூடிய உச்ச நீதிமன்றம் மே 18 அன்று பிரேசுகர்டிலை சுதந்திரமான பேச்சுரிமைக்கான உரிமையைப் பயன்படுத்தியதற்காக அவரை நாடு கடத்த முடியாதெனக் கூறி அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இவ்வழக்கில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து, பிரித்தானிய அரசின் ஆணையின் படி, ஆளுநர் ஸ்டப்சு 1937 சூன் 30 இல் தனது பதவியில் இருந்து "இளைப்பாறி" இங்கிலாந்து திரும்பினார்.[4]

1937 கோடை காலத்தில் மார்க் இங்கிலாந்து திரும்பினார். இவரை என். எம். பெரேரா, செலினா பெரேரா, வேர்ணன் குணசேகரா ஆகியோர் துறைமுகத்தில் வழியனுப்பி வைத்தனர்.

பிற்கால வாழ்க்கை[தொகு]

1939 இல் மேரி எலிசபெத் வின்டென் என்பவரைத் திருமனம் புரிந்தார். அவர் இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர் அவர் ஒரு பொறியியலாளராகத் தகுதி பெற்று குளொசுடர்சயரில் குடியேறினார். அணு ஆயுதக் குறைப்புக்கான பிரச்சாரத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆல்டர்மாஸ்டன் அணிவகுப்புகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் தொழிற்கட்சியின் உறுப்பினரானார். 1970களில் சாம்பியாவில் "பறக்கும் மருத்துவர்கள்" என்ற அமைப்பில் பணியாற்றினார். இவர் 1999 சூன் 22 இல் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. *Vinod Moonesinghe, 'Sri Lanka: Mark Bracegirdle and the revolt against empire', Socialist Worker, No 2035 (27 January 2007)
  2. *Wesley S Muthiah, 'Mark Anthony Lyster Bracegirdle (1912–1999): A Traitor to the Imperialist Cause', What Next, No 14 (1999)
  3. Lerski, Origins of Trotskyism in Ceylon இலங்கை வரலாறு
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 V. Vamadevan (1995). The Ceylon We Knew. New Delhi: Navrang. பக். 26-35. 

வெளி இணைப்புகள்[தொகு]