சிவலிங்கம் (நக்சலைட்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவலிங்கம்

அன்பு என்கிற சிவலிங்கம் (பிறப்பு 1942) என்பவர் ஒரு நக்சலைட் ஆவார். இவர் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு அருகில் உள்ள வக்கனாம்பட்டி என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். திருப்பத்தூர் அருகே கடந்த 1980ஆம் ஆண்டு ஓடும் காரில் வெடிகுண்டு வீசி 3 போலீசார் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்ட வழக்கில் சிவலிங்கத்துக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.[1]

வழக்கு விவரம்[தொகு]

1980 காலகட்டத்தில் தமிழகத்தில் நக்சலைட் இயக்கம் தீவிரமாக செயல்பட்டது. குறிப்பாக வேலூர் மாவட்டம், தென்னாற்காடு மாவட்டம், தர்மபுரி மாவட்டங்களில் நக்சலைட் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவந்த சிவலிங்கம் தலைமையிலான குழுவினர் 1978இல், மத்தூரில் அப்பாசாமி ரெட்டியார் என்பவரை கொலை செய்தது, மடவாளம் இரட்டை கொலை வழக்கு, ஏலகிரிமலை ரெட்டியார் கொலை என, சிவலிங்கம்மீது 11 கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகள் பதியப்பட்டன.[2] இதனால் நக்சசலைட்டுகளான சிவலிங்கம், பழனி, மகாலிங்கம் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடிவந்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்ட காவல் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலான காவலர்கள் 1980ஆம் ஆண்டு ஆகத்து 6ஆம் தேதி அதிகாலை ஏலகிரி மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த நக்சலைட் சிவலிங்கம், பெருமாள், ராஜப்பா, செல்வம், சின்னதம்பி ஆகியோரை பிடித்தனர்.

திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் இவர்களிடம் முதல் கட்ட விசாரணை முடித்துவிட்டு அனைவரையும் வேறு ஒரு தனி இடத்துக்கு காரில் அழைத்துச் சென்றபோது, வக்கணம்பட்டி என்ற இடத்தின் அருகே சென்றபோது மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து ஓடும் காரில் இருந்து சிவலிங்கம் தப்பினார் என்று கூறப்படுகிறது. இந்தில் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமைக் காவலர் ஏசுதாஸ், முருகேசன், நக்சலைட்டுகள் பெருமாள், ராஜப்பா, செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் நக்சலைட் சின்னதம்பி மீட்கப்பட்டார்.

அஜந்தா நடவடிக்கை[தொகு]

வேலூரில் நடந்த ஆய்வாளர் பழனிச்சாமியின் இறுதி ஊர்வலத்தில் அப்போதைய முதல்வர் எம். ஜி. ஆர் கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் நக்சலைட்டுகளை ஒழிக்க பழனிச்சாமியின் மகள் அஜந்தா பெயரில் ‘ஆபரேஷன் அஜந்தா’ தொடங்க உத்தரவிட்டார் இந்த நடவடிக்கை வால்டர் தேவாரம் தலைமையில் நடைபெற்றது. இதில் பல நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கது.

வழக்கும், தண்டனையும்[தொகு]

காவல்துறையினர் உள்ளிட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட வழக்கை இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இதற்கிடையில் தலைமறைவான நக்சலைட் சிவலிங்கம் கடந்த 2009ஆம் ஆண்டு திருவள்ளூர் அருகே கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது இந்த வழக்கில் நக்சலைட் சிவலிங்கத்துக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் வெடிகுண்டு பயன்படுத்திய குற்றத்துக்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டபின் சிவலிங்கம் செய்தியாளர்களிடம், அஜந்தா நடவடிக்கையில் 29 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் பல ஆண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்டது. திருப்பத்தூர் காவல் நிலையத்தில் கைகளைக் கட்டிய நிலையில் காரில் ஏற்றினர் அப்படி இருக்கும்போது வெடிகுண்டை எப்படி வீச முடியும் என்பதற்கு பதிலில்லை என்று கூறினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980-ல் கார் மீது வெடிகுண்டு வீசி 6 பேர் கொல்லப்பட்ட வழக்கு: நக்சலைட் சிவலிங்கத்துக்கு 5 ஆயுள் தண்டனை". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "போலீசாரை கொன்ற நக்சலைட்டுக்கு 5 ஆயுள் சிறை தண்டனை". தினமலர்.
  3. க. முகிலன் (மார்ச்சு 2016). "தோழர் சிவலிங்கத்துக்கு விதிக்கப்பட்ட கொடுந்தண்டனை". சிந்தனையாளன்: 44. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவலிங்கம்_(நக்சலைட்)&oldid=3929965" இலிருந்து மீள்விக்கப்பட்டது