உள்ளடக்கத்துக்குச் செல்

விமலாதித்த மாமல்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


விமலாதித்த மாமல்லன்
பிறப்புநரசிம்மன்
19 சூன் 1960 (1960-06-19) (அகவை 64)
மதராசு,
மதராசு மாநிலம்
(தற்போது சென்னை, தமிழ்நாடு), இந்தியா
தொழில்தமிழ் எழுத்தாளர்
குடியுரிமைஇந்தியர்
கல்வி நிலையம்பச்சையப்பன் கல்லூரி
காலம்1980-தற்காலம்
வகைசிறுகதை, நெடுங்கதை, குறுநாவல், இலக்கிய விமர்சனம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்விமலாதித்த மாமல்லன் கதைகள், தவிப்பு, புனைவு எனும் புதிர்
துணைவர்உமா நரசிம்மன்
பெற்றோர்சி. கே. சக்ரபாணி ராவ் - சேது பாய்
இணையதளம்
maamallan.in

விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) (இயற்பெயர்: சி. நரசிம்மன்) (பி. ஜூன் 19, 1960) என்பவர் தமிழ் எழுத்தாளராவார். இவர் சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள் என அச்சு நூல்களாகவும் மின்னூல்களாகவும் வெளியிட்டுள்ளார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சி. நரசிம்மன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மாத்வ குடும்பத்தைச் சார்ந்த கன்னட – மராட்டியத் தாய் தந்தையருக்கு, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பிறந்தார். பள்ளிப்பருவம் பாண்டிச்சேரியில். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர், எனினும் பட்டதாரி அல்லர். கல்லூரி இறுதி ஆண்டுகளில் நவீன நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் நவீனத் தமிழ் இலக்கியச் சூழல் பரிச்சயப்பட, சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 1982-83ல் பரந்த அனுபவம் தேடிக் காவியுடுத்தித் தேசாந்திரம் புறப்பட்டவர், இரண்டு முறையும் பாதியிலேயே திரும்ப நேர்ந்தது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக சேவகரான பாபா ஆம்தே தலைமையில், நிட் இந்தியா இயக்கத்தில் (KNIT-INDIA MOVEMENT) பங்கேற்றார்.[சான்று தேவை] 1985 டிசம்பர் முதல் 1986 ஏப்ரல் வரை கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு, ஏறக்குறைய 5100 கிமீ சைக்கிளில் பயணம் செய்து, தேசிய ஒருமைப்பாட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2013 முதல் 2018 வரை சென்னை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். மத்திய கலால், சரக்கு மற்றும் சேவை துறையில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து 2020ல் ஓய்வு பெற்று, சென்னையில் வசித்து வருகிறார்.

எழுத்து வாழ்க்கை

[தொகு]

இவர் 1981ல் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவரின் முதல் சிறுகதையான 'வலி' வெளிவந்தது. அதே ஆண்டில் கணையாழியில் வெளியான 'இலை' மற்றும் 'பெரியவர்கள்' குறுநாவல் வழியே தமிழ் இலக்கியச் சூழலில் கவனத்திற்கு வந்தார். தொடர்ந்து இதழ்களுக்கு சிறுகதைகளை எழுதி வந்தார். கி. விட்டால் ராவ் தொகுத்த இந்த நூற்றாண்டுச் சிறுகதைகளிலும் இவரது 'சிறுமி கொண்டுவந்த மலர் சிறுகதை' இடம்பெற்றிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றிய வீ. அரசு தொகுத்த இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூலிலும் 'சிறுமி கொண்டுவந்த மலர்' இடம்பெற்றுள்ளது. இவரது 'உயிர்த்தெழுதல்' 1994ஆம் வருடத்தின் அக்டோபர் மாதத்தின் சிறந்த சிறுகதையாக இலக்கியச் சிந்தனையால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இடையில் பல ஆண்டுகளாக எழுதாமல் இருந்த மாமல்லன், சில ஆண்டுகளுக்கு முன் அமேஸான் கிண்டிலில் மின்னூல் வடிவில் படைப்புகளை வெளியிடத் தொடங்கினார். வாசகர்களின் உதவியுடன் கசடதபற இதழ் உள்ளிட்ட நிறைய அச்சு நூல்களை மின்னூலாக்கி அமேஸான் கிண்டிலில் வெளியிட்டுள்ளார்.[3] 2022 ஜூனில் இருந்து ஆபிஸ் எனும் நாவல், மெட்ராஸ்பேப்பர் எனும் இணைய வார இதழில் தொடராக எழுதினார்.

மொழிபெயர்க்கப்பட்டவை

[தொகு]

கணையாழியில் வந்த இவரின் 'இலை' சிறுகதை வஸந்தா சூரியாவால் மொழிபெயர்க்கப்பட்டு, எழுத்தாளர் திலீப்குமார் தொகுத்த தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பொன்றில் இடம்பெற்றது.[4] கவனம் சிற்றிதழில் 1981 - இல் வெளியான 'போர்வை' சிறுகதை மீனாக்‌ஷி பூரியால் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு சாகித்திய அகாதெமியின் 1999ஆம் ஆண்டு இதழில் வெளியாகி உள்ளது.[5][நம்பகமற்றது ] கல்கியில் 1981 - இல் வெளியான 'வலி' சிறுகதை எம். எஸ். ராமசுவாமியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மார்டன் தமிழ் ஸ்டோரீஸ் (Modern Tamil Stories 1990) எனும் தொகுப்பில் வெளியாகி உள்ளது.[6] மீட்சி சிற்றிதழில் 1984 - இல் வெளியான 'சிறுமி கொண்டுவந்த மலர்' சிறுகதை சுபஷ்ரீ கிருஷ்ணசுவாமியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தி டமில் ஸ்டோரி (The Tamil Story 2016) எனும் தொகுப்பில் வெளியாகி உள்ளது.

பாட நூல்களான படைப்புகள்

[தொகு]
  • 'சிறுமி கொண்டு வந்த மலர்' என்ற இவரது சிறுகதை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. [7]
  • காலச்சுவடு இதழில் வெளியான 'இணையமும் இலக்கியமும்' எனும் கட்டுரை கேரள அரசின் பதினோராம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது. [8]

பாராட்டுகள்

[தொகு]

விமலாதித்த மாமல்லனின் படைப்புகளைப் பற்றி தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் தங்கள் விமரிசனங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள்,

  • எழுத்தாளர் சுந்தர ராமசாமி "மிகக் கவனமாகக் கதைகளை உருவாக்குபவர் விமலாதித்த மாமல்லன். சிறுகதைக்கே உரித்தான தனித்தன்மையின் மரபில் ஊட்டம் பெற்றவர். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத ஜீவன்களின் பரிதவிப்பு இவரது கதைகளின் மையம்" என்கிறார். [9][not in citation given]
  • ஓர் அறிமுக எழுத்தாளனின் தயக்கத்துடனல்ல; தேர்ந்த கதையாளனின் சரளத்தன்மையுடன் அறிமுகமானவர் விமலாதித்த மாமல்லன்[10][நம்பகமற்றது ]
  • நவீன சிறுகதையில், ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட பெண்கள் துலக்கமாகத் தோன்றுவது இவர் கதைகளில்தான் என்று கூடச் சொல்லலாம். - விக்ரமாதித்யன் (இருவேறு உலகம்)[சான்று தேவை]
  • மீட்சி சிற்றிதழில் கவிஞர் ஆத்மாநாம் மாமல்லனின் சிறுகதைகளைப் பற்றி எழுதிய மதிப்புரை ஒன்றில் இவர் எடுத்துக் கொண்டுள்ள கருவெல்லாம் பெரும்பாலும் மனிதத்தின் வீழ்ச்சியை விவரித்து வாசகனையே இதற்கான முடிவுகளை கேட்கிறது என்கிறார்.[சான்று தேவை]
  • தாஸில்தாரின் நாற்காலி சிறுகதையில் இன்றைய சமூக அமைப்பில் அலுவலகங்களின் நிலை, அதிகாரிகளின் போக்கு, மனிதாபிமானமற்ற பழமையான, ஆணவப் போக்கு ஆகியன விமர்சிக்கப்படுகின்றன. கதை முழுவதும் குறியீடாக நின்று, தாஸில்தார் நாற்காலி நம்முடைய அதிகார வர்க்கங்களை அங்கதச் சுவையுடன் விமர்சிக்கின்றது. வடிவச் சிறப்பும், தொனிப்பொருளும், சமகாலச் சமூக விமர்சனமுமாக கதை, கலைத்திறமிக்க தரமான கதையாகியுள்ளது - சு. வேங்கடராமன் (கதை அரங்கம் 4 மணிக்கதைகள் - மீனாட்சி புத்தக நிலையம் 1990)[நம்பகமற்றது ]
  • உயிர்த்தெழுதல் கதைத் தொகுப்பில் ஆசிரியரின் மொழிப் பிரயோகம் முக்கியமாய் கவனிக்கப்படவேண்டிய விஷயம். எஸ்ரா பவுண்டு கவிதை பற்றி சொல்லும் வரி இங்கு பொருந்தகிறது. வார்த்தைகள் Charged with meaning என்கிறார். மந்திரம் போல் வேண்டுமடா சொல்லினின்பம் என்றாரே பாரதி. நெருப்பென்றால் வாய் சுட்டுவிட வேண்டும் என்கிறாரே லா. ச. ரா அதுபோலவே விமலாதித்த மாமல்லன் வார்த்தைகளை கவிதை அவற்றிற்கு தரும் கௌரவத்துடன் பயன்படுத்துகிறார். - ஐராவதம் (நவீன விருட்சம் சிற்றிதழில்)[சான்று தேவை]
  • ‘சிறுமி கொண்டுவந்த மலர்’ தான் தமிழின் முழுமையான மாய யதார்த்தக் கதை. இதில் வட்டிக்கடை சேட் ஒருவனிடம் தங்கத்திலான பூ ஒன்றை அடமானம் வைத்துப் பணம் வாங்கிப்போகிறாள் ஒரு சிறுமி. அந்தப் பூ தானே ரோஜாவாக மாறிவிடுகிறது. மாமல்லனின் இக்கதை பேராசை மனிதனை வீழ்ச்சியுறவே செய்யும் என்பதைச் சுட்டிக்காட்டுவது போல எனக்குத் தோன்றுகிறது. வடிவ நேர்த்தியும் சிறப்பான மொழிநடையும் கொண்ட முக்கியமான சிறுகதையிது என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். [11][not in citation given]

ஆகியன குறிப்பிடத்தக்கன ஆகும்.

அச்சு நூல்கள்

[தொகு]

சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள்

[தொகு]
  1. அறியாத முகங்கள் (1983 - சத்ரபதி வெளியீடு)
  2. முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் (1986 - சத்ரபதி வெளியீடு)
  3. உயிர்த்தெழுதல் (1994 - சத்ரபதி வெளியீடு)
  4. விமலாதித்த மாமல்லன் கதைகள் (2010 உயிர்மை, 2017 - சத்ரபதி வெளியீடு)
  5. தவிப்பு (2017 - டிஸ்கவரி பேலஸ், 2018 சத்ரபதி வெளியீடு)
  6. விளக்கும் வெளிச்சமும் (2022 சத்ரபதி வெளியீடு)

கட்டுரைகள்

[தொகு]
  • சின்மயி விவகாரம் - மறுபக்கத்தின் குரல் (2012 - சத்ரபதி வெளியீடு)

இலக்கிய ரசனை

[தொகு]
  1. புனைவு எனும் புதிர் (2017 காலச்சுவடு, 2018 சத்ரபதி வெளியீடு)
  2. ஷோபாசக்தியின் 12 கதைகள் - புனைவு எனும் புதிர் - (2018 - சத்ரபதி வெளியீடு)
  3. எழுத்துக் கலை (2019 - சத்ரபதி வெளியீடு)
  4. உலகச் சிறுகதைகள் - 1 - புனைவு எனும் புதிர் (2023 சத்ரபதி வெளியீடு)
  5. உலகச் சிறுகதைகள் - 2 - புனைவு எனும் புதிர் (2023 சத்ரபதி வெளியீடு)

அமேஸான் கிண்டில் மின்னூல்கள் (85)

[தொகு]
  • அமேஸானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி

கதைகள்

[தொகு]
  1. விமலாதித்த மாமல்லன் கதைகள் (1980 - 1994)
  2. ரோஸ்மில்க் - சிறுகதை: சக்கரம் நாவலின் ஒரு அத்தியாயம் (2012)
  3. தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு 2015 - 2016)
  4. விளக்கும் வெளிச்சமும் (தொகுப்பு 2020 - 2022)

ரசனை

[தொகு]
  1. புனைவு என்னும் புதிர்
  2. புனைவு என்னும் புதிர் – ஷோபாசக்தியின் 12 கதைகள்
  3. எழுத்துக் கலை
  4. புனைவு என்னும் புதிர் - புரிதலுக்கான சிறு வெளிச்சம்
  5. புனைவு என்னும் புதிர்: நூல் - 2
  6. புனைவு எனும் புதிர் - உலகச் சிறுகதைகள் - 1
  7. புனைவு எனும் புதிர் - உலகச் சிறுகதைகள் - 2
  8. காஞ்சனையின் பரிகாஸம்
  9. மொக்கு அவிழும் தருணம்
  10. நீரில் மிதக்கும் நிலவு

கடிதங்கள்

[தொகு]
  • அன்பான சுந்தர ராமசாமிக்கு: கடிதங்கள்

கிண்டிலுக்குக் கொண்டுவந்தவை

[தொகு]
  1. கவனம் - முழுத் தொகுப்பு
  2. ழ - முழுத் தொகுப்பு
  3. மொழிபெயர்ப்புக் கதைகள் (I - VIII) - ஆர். சிவகுமார்
  4. மீட்சி இதழ்கள்
  5. கவிஞர் விக்ரமாதித்யன் நூல்கள்
  6. கசடதபற முழுத் தொகுப்பு

அனுபவங்கள்

[தொகு]
  • நானும் நானறிந்த ஜேகேவும் அமியும்

பொது

[தொகு]
  1. எமூர்
  2. எழுத்தும் பிழைப்பும்
  3. முகமும் நகமும்
  4. அது வேறு இது வேறு: கட்டுரைகளும் நடைச்சித்திரமும்
  5. நூறு செருப்படிகள்
  6. டிரைவ் இன் நண்பர்கள்
  7. அக்கப்போர்
  8. எலிகளின் பந்தயம்
  9. புத்தகக் கண்காட்சி 2020

திரைக்கதை

[தொகு]
  • கி. ராவின் நிலை நிறுத்தல் – திரைக்கதை

வெளி இணைப்புகள்

[தொகு]

1. கசடதபற – மின்னூல்கள் - சொல்வனம்

2. புனைவு என்னும் புதிர் - திண்ணை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "விமலாதித்த மாமல்லன்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-20.
  2. மாற்றுவெளி (13). ஜூன் 2012. https://www.keetru.com/index.php/2009-10-07-12-27-44/matruveli-june12/20446-2012-07-13-04-28-13. பார்த்த நாள்: 6 June 2022. 
  3. அருணாசலம், சேதுபதி. "கசடதபற – மின்னூல்கள்". சொல்வனம். பார்க்கப்பட்ட நாள் 1 May 2024.
  4. Surya, Vasantha (2004). A place to live: contemporary Tamil short fiction. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-303159-8. பார்க்கப்பட்ட நாள் 16 June 2022.
  5. பூரி, மீனாக்‌ஷி. ஆண்டு இதழ். சாகித்திய அகாதெமி. p. 73. பார்க்கப்பட்ட நாள் 1999. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  6. ராமசாமி, எம். எஸ். மார்டன் ஸ்டோரீஸ் 2வது தொகுதி. Writers Workshop publication. p. 129. பார்க்கப்பட்ட நாள் 1991. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  7. "பாடத்திட்டத்தில் 'சிறுமி கொண்டு வந்த மலர்'" (PDF). திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பாடத்திட்டம். பார்க்கப்பட்ட நாள் 16 June 2022.
  8. https://samagra.kite.kerala.gov.in/files/samagra-resource/uploads/tbookscmq/Class_XI/Tamiloptional/TamilOptional.pdf
  9. சுந்தர ராமசாமி (2004). ஆளுமைகள் மதிப்பீடுகள் : 1963 முதல் 2003 வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. 1985: கலைகள், கதைகள், சிறுகதைகள்: காலச்சுவடு. p. 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87477-81-5.{{cite book}}: CS1 maint: location (link)
  10. https://archive.org/details/2010_20220707_202207/c.jpg
  11. எஸ். ராமகிருஷ்ணன் (2013). நூறு சிறந்த சிறுகதைகள். டிஸ்கவரி புக் பேலஸ். p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-925627-6-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலாதித்த_மாமல்லன்&oldid=4057100" இலிருந்து மீள்விக்கப்பட்டது