விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பிப்ரவரி 24, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டியர் செப்பேடுகள் என்பது பாண்டிய வேந்தர்கள் கொடுத்த நில தானங்களையும், தன் முன்னோர் நில தானங்களை ஆவணப்படுத்தவும் உருவாக்கப்பட்ட பட்டயங்களாகும். பாண்டியர் செப்பேடுகளில் இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கொடுக்கப்பட்ட ஏழு செப்புப்பட்டயங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்தன. இவை கிடைக்காமல் போயிருந்தால் களப்பிரர் ஆட்சியை தமிழ்நாட்டில் வேரறுத்த பாண்டியர் வேந்தன் கடுங்கோன் பற்றி வரலாறு அறியாமலேயே போயிருக்கும். இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்களின் காலங்களை கணிப்பதற்கும், முறைப்படுத்துபவதற்கும் வகையிலாமல் போயிருக்கும். இந்த செப்பேடுகளில் பாண்டியர் சந்திரனிலிருந்து தோன்றியவர்கள் என்றும் அகத்தியரை குல குருவாக கொண்டனர் எனவும் இந்துக் கடவுளான இந்திரனை பலமுறை தோற்கடித்தனர் என்றும் ஆழ்கடலே வற்றும் அளவில் வேல் எறிந்தனர் என்றும் தொன்மக்கதைகள் கூறப்பட்டுள்ளன. மேலும்...


சோடியம் ஒரு தனிமம் ஆகும். சோடாவிலிருந்து பெறப்பட்டதால் இது 'சோடியம்' எனப் பெயர் பெற்றது. இதன் குறியீடு Na. இதன் அணு எண் 11. இது மென்மையான, வெண்ணிறமான தனிமம் ஆகும். சோடியம் மிகுந்த வினைத்திறன் கொண்ட தனிமம். இது காற்றில் விரைவில் ஆக்சிஜனேற்றம் அடைகிறது. எனவே இதைத் தடுக்க மந்தமான சூழலில் குறிப்பாக மண்ணெய்க்குள் வைக்கப் படுகிறது. சோடியம் கடலில் சோடியம் குளோரைடு என்னும் சேர்மமாக அதிக அளவில் கிடைக்கிறது. இது விலங்கினங்களுக்குத் தேவையான ஒரு முக்கியக் கனிமம் ஆகும். பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கக் கூடிய தனிமங்களுள் ஆக்சிஜன், சிலிகான், அலுமினியம், இரும்பு, கால்சியத்திற்கு அடுத்து சோடியம் ஆறாவது செழுமை மிக்க தனிமமாக உள்ளது. நிறையின் அடிப்படையில் 2.83 விழுக்காடு சோடியம் செறிவுற்றுள்ளது. இயற்கையில் சோடியம் ஒருபோதும் தனித்துக் காணப்படுவதில்லை. உப்புகளாகவே கிடைக்கின்றது. உப்புப் பாறையாக பூமியில் பல இடங்களில் கிடைக்கிறது. பல உப்பு நீர் ஏரிகளிலும், சுனை, ஊற்றுகளிலும் கூட சோடியம் குளோரைடு மிகுதியாகக் கரைந்திருக்கிறது. 1807 ல் இங்கிலாந்து நாட்டின் சர் ஹம்பிரி டேவி என்பார் சோடியத்தைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். மேலும்...