விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 29, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டென்மார்க்கில் எச். சி ஆன்டர்சன் என அறியப்படும் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805 – 1875) ஒரு டேனிய மொழி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் குறிப்பாகச் சிறுவர்களுக்கான கதைகளை எழுதுவதன் மூலம் புகழ் பெற்றார். இவரது வாழ்நாளில் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளைத் தனது ஆக்கங்கள் மூலம் இவர் மகிழ்வித்தார். இவருடைய கதைகள் 150 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்படிருப்பதுடன், இக் கதைகளைத் தழுவிப் பல திரைப்படங்களும், நாடகங்களும், நடன நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளியில் படித்த காலமே மிகவும் இருண்ட காலம் எனவும், தனது வாழ்க்கையின் மிகவும் கசப்பான காலம் அது எனவும் பிற்காலத்தில் அவர் கூறினார். உடன் படித்தவர்களில் பலரையும் விட இவர் வயதில் மூத்தவராக இருந்ததனால் இவர் பெரும்பாலும் தனித்துவிடப்பட்டார். இவர் கவர்ச்சி இல்லாதவராகவும், புரிந்து கொண்டு கற்க முடியாதவராக இருந்ததாகவும் கருதப்பட்டது. மேலும்..


டாஸ்மாக் எனப்படும் தமிழ் நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. டாஸ்மாக், 1983 ஆம் ஆண்டு எம். ஜி. ராமசந்திரனின் அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் 1956 இன் படி மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்து வந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. 2001 இல் மதுவிலக்கு விலக்கப்பட்ட போது, மாநில அரசு டாஸ்மாக் நிறுவனத்தை மீண்டும் மொத்த விற்பனை நிறுவனமாக பயன்படுத்தியது. தமிழ் நாடு அரசே இதன் நூறு சதவிகித உரிமையாளர் இந்நிறுவனம் அரசின் மதுவிலக்கு மற்றும் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. மேலும்..