ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்
| ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் | |
|---|---|
| பிறப்பு | {{{birthname}}} ஏப்ரல் 2, 1805 ஒடென்சு, டென்மார்க் |
| இறப்பு | ஆகத்து 4 1875 (அகவை 70) கோப்பன்கேகன், டென்மார்க் |
| தொழில் | புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், சிறுவர் கதை எழுத்தாளர் |
| நாடு | டேனியர் |
| இலக்கிய வகை | சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம் |
|
தாக்கங்கள்
|
|
| கையொப்பம் | |
டென்மார்க்கில் எச். சி ஆன்டர்சன் என அறியப்படும் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (Hans Christian Andersen) (ஏப்ரல் 2, 1805 – ஆகத்து 4, 1875) ஒரு டேனிய மொழி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் குறிப்பாகச் சிறுவர்களுக்கான கதைகளை எழுதுவதன் மூலம் புகழ் பெற்றார். த இசுட்டெட்பாஸ்ட் டின் சோல்டியர் (The Steadfast Tin Soldier), த சினோ குயீன் (The Snow Queen), த லிட்டில் மேர்மெய்ட் (The Little Mermaid), தம்பெலினா (Thumbelina), த லிட்டில் மட்ச் கேர்ல் (The Little Match Girl), த அக்லி டக்ளிங் (The Ugly Duckling) போன்றவை இவ்வாறான கதைகளுள் குறிப்பிடத் தக்கவை. இவரது வாழ்நாளில் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளைத் தனது ஆக்கங்கள் மூலம் இவர் மகிழ்வித்தார். இவருடைய கதைகள் 150 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்படிருப்பதுடன், இக் கதைகளைத் தழுவிப் பல திரைப்படங்களும், நாடகங்களும், நடன நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.[1]
பொருளடக்கம் |
இளமைப் பருவம்[தொகு]
ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன், டென்மார்க்கில் உள்ள ஒடென்சு என்னும் நகரில் 1805 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி பிறந்தார். "ஆன்சு" "கிறித்தியன்" என்பன டேனிய மரபுவழிப் பெயர்கள் ஆகும். இவரது தந்தையார் தாம் பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனக் கருதியிருந்தார். ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஆன்சின் தந்தையின் தாயார், முற்காலத்தில் தமது குடும்பம் உயர்குடியைச் சேர்ந்தது என ஆன்சின் தந்தையாருக்குக் கூறியதாகக் கூறுகின்றனர். பிற ஆய்வுகள் இதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதைக் காட்டுகின்றன. இவரது குடும்பத்தினர் அரச குடும்பத்தினரிடம் வேலை செய்ததன் மூலமும், வணிகம் செய்ததன் மூலமுமே அவர்களுடன் இவர்களுக்குத் தொடர்புகள் இருந்தன. ஆன்டர்சன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முறையின்றிப் பிறந்த ஒருவராக இருக்கலாம் என்று தற்காலத்து ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். காரணம் எதுவாக இருப்பினும், அரசர் ஆறாம் பிரடெரிக், ஆன்டர்சன் மீது தனிப்பட்ட கவனம் வைத்திருந்ததோடு, அவரது கல்விக்கான செலவுகளில் ஒரு பகுதியையும் பொறுப்பேற்றிருந்ததாகத் தெரிகிறது.
ஆன்சு கிறித்தியன் இளம் வயதிலேயே தன்னைத்தானே கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார். தொடக்கத்தில் ஒரு நெசவாளரிடம் வேலை பழகுபவராகச் சேர்ந்தார். பின்னர் ஒரு தையல்காரரிடம் சேர்ந்து வேலை பழகினார். 14 ஆவது வயதில் ஒரு நடிகராகும் எண்ணத்துடன் கோப்பன்கேகனுக்குச் சென்றார். இவரது சிற்ந்த குரல் வளத்துக்காக, அரச டேனிய நாடகக் குழுவில் இவரைச் சேர்ந்த்துக்கொண்டனர். இவரது குரல் விரைவிலேயே மாற்றம் அடைந்து விட்டது. இவருடன் நாடகக் குழுவில் இருந்த ஒருவர், ஆன்சை ஒரு கவிஞராகக் கருதுவதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து ஆன்சு எழுதுவதில் கவனம் செலுத்தலானார்.
ஜோனாசு கொலின் என்பவர் ஆன்சைத் தற்செயலாகச் சந்தித்தபோது, அவரால் பெரிதும் கவரப்பட்டார். தொடர்ந்து அவர் ஆன்சை சிலகெல்சு என்னும் இடத்தில் இருந்த பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைத்ததுடன் அதற்கான முழுச் செலவையும் தானே பொறுப்பேற்றார்.[2]. ஆன்டர்சன் 1822 ல் தனது முதல் கதையை வெளியிட்டிருந்தார். இவருக்குப் பள்ளிக்கல்வியில் ஆதிகம் ஆர்வம் இல்லாதிருந்த போதும் எல்சினோர் என்னும் இடத்தில் இருந்த இன்னொரு பள்ளியிலும் 1827 ஆம் ஆண்டு வரை கல்வி கற்றார்.[3]
பள்ளியில் படித்த காலமே மிகவும் இருண்ட காலம் எனவும், தனது வாழ்க்கையின் மிகவும் கசப்பான காலம் அது எனவும் பிற்காலத்தில் அவர் கூறினார். ஒரு பள்ளியில் படித்தபோது அவரது பள்ளி ஆசிரியரின் வீட்டிலேயே தங்கியிருந்தார். அங்கே அவரது ஆளுமையை மேம்படுத்துவது என்ற போர்வையில் மிகவும் கொடுமைகளுக்கு உள்ளானர். உடன் படித்தவர்களில் பலரையும் விட இவர் வயதில் மூத்தவராக இருந்ததனால் இவர் பெரும்பாலும் தனித்துவிடப்பட்டார். இவர் கவர்ச்சி இல்லாதவராகவும், புரிந்து கொண்டு கற்க முடியாதவராக இருந்ததாகவும் கருதப்பட்டது. இவரது ஆசிரியர்கள் இவர் எழுதுவதை விரும்பவில்லை என்றும் அதனால், தான் பெரும் மனச்சோர்வுக்கு உள்ளானதாகவும் ஆன்சு கூறியிருந்தார்.
தொலைக்காட்சி கார்ட்டூன்கள்[தொகு]
ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் கதைகளைத் தழுவி பெருமளவில் கார்ட்டூன்கள் தயாரிக்கப்பட்டன. இவ்வகையான கார்ட்டூன்கள் தொலைக்காட்சிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டன. இலங்கையில் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியில் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் கார்ட்டூன்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யபட்டு ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்[தொகு]
1967 ஆம் ஆண்டு முதல் இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம் (International Board on Books for Young People - IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இவர் பிறந்த ஏப்ரல் 2-ஆம் நாளை பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் (International Children’s Book Day - ICBD) என அறிவித்து உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறது.
குறிப்புகள்[தொகு]
- ↑ Elias Bredsdorff, Hans Christian Andersen: the story of his life and work 1805-75, Phaidon (1975) ISBN 0-7148-1636-1
- ↑ "H.C. Andersens skolegang og livet i Slagelse". Hcandersen-homepage.dk. பார்த்த நாள் 2010-04-02.
- ↑ "H.C. Andersens skolegang i Helsingør Latinskole". Hcandersen-homepage.dk. பார்த்த நாள் 2010-04-02.
வெளியிணைப்புக்கள்[தொகு]
- Hans Christian Andersen Information Odense
- Hans Christian Andersen biography
- Andersen's Fairy Tales லைப்ரிவொக்சு இல் பொதுக்கள ஒலி நூல்கள்.
- ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் தேவதைக் கதைகள்
- இணையக் காப்பகத்தில் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் ஆக்கங்கள். Scanned, வண்ணப்படங்களோடு கூடிய முதல் பதிப்புகள்.