ரெய்னர் மரியா ரில்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெய்னர் மரியா ரில்கே
1900ஆம் ஆண்டில் ரில்கேயின் ஒளிப்படம்.
1900ஆம் ஆண்டில் ரில்கேயின் ஒளிப்படம்.
பிறப்பு(1875-12-04)4 திசம்பர் 1875
பிராகா, பொகீமிய இராச்சியம், ஆஸ்திரியா - அங்கேரி
இறப்பு29 திசம்பர் 1926(1926-12-29) (அகவை 51)
மோன்த்ரே, சுவிட்சர்லாந்து
தொழில்கவிஞர், புதினங்கள்
தேசியம்ஆஸ்திரியர்
காலம்1894–1925
கையொப்பம்

ரெனே கார்ல் வில்லெம் யோகண் யோசஃப் மரியா ரில்கே (René Karl Wilhelm Johann Josef Maria Rilke, டாய்ச்சு ஒலிப்பு: [ˈʁaɪnɐ maˈʁiːa ˈʁɪlkə]; 4 திசம்பர் 1875 – 29 திசம்பர் 1926) ஓர் பொகீமியஆஸ்திரிய கவிஞர். இவர் ரெய்னர் மரியா ரில்கே என்று நன்கு அறியப்பட்டவர் . இடாய்ச்சு மொழியில் மிகவும் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராக விளங்குகிறார். மரபுவழிக்கும் நவீனத்துவத்திற்கும் இடைப்பட்டவராக கருதப்படுகிறார்.

ரில்கே கவிதைகளாகவும் கவிதை வடிவ உரைகளாகவும் எழுதி உள்ளார். இவரது பெரிதும் அறியப்பட்ட படைப்பாக டியூனோ எலெஜீஸ் விளங்குகிறது. உரைநடையில் லெட்டர்ஸ் டு எ யங் பொயட் மற்றும் பகுதியும் தன்வரலாற்று நூலான த நோட்புக்ஸ் ஆஃப் மால்டே லௌரிட்ஸ் பிரிக்கேயும் பரவலாக அறியப்பட்டவை. தவிரவும் தனது விருப்ப இருப்பிடமாக தேர்ந்தெடுத்த சுவிட்சர்லாந்தின் வலாய் கன்டன் குறித்து பிரெஞ்சில் 400க்கும் மேற்பட்டக் கவிதைகளை வடித்துள்ளார்.

வாழ்கைச் சுருக்கம்[தொகு]

ரெய்னர் மேரியா ரில்க் பிராகுவில் பிறந்த, பொகீமிய இனத்தைச் சார்ந்த, ஆஸ்திரியக் குடிமகனான ஜெர்மன்கவி ஆவார். இவரது தந்தை ஓய்வு பெற்ற ஆஸ்திரிய இராணுவ அதிகாரி; பெண் குழந்தை வேண்டும் என்று விருப்பத்தோடு காத்திருந்த தாய்க்கு, ரில்க் ஆணாகப் பிறந்தது பெருத்த ஏமாற்றம்: ஏனவே ரில்க்கை ஒரு பெண்ணைப் போல வளர்த்தார் ‘ரெனி’ என்று பெயர் சூட்டி. பெண்ணுடையும் சுருள் முடியும் அணிவித்து, பொம்மைச் சமையலறையொன்று விளையாடக் கொடுத்து வளர்த்தார். பொருள்களையும் இருக்கைகளையும் துடைத்து தூய்மையாக வைத்திருப்பது எப்படியென்றும், வீட்டு வேலைகளில் தாய்க்கு எப்படி உதவுவது என்றும் கற்றுக் கொடுத்தார்.[1]

இவரது இளமை இராணுவப் பள்ளியிலும், வணிகக் கல்லூரியிலும் கழிந்தது. பிராகு பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் சட்டக் கல்வி பயின்றார். கொஞ்சநாள் வழக்குரைஞராக இருந்த தன் உறவினரிடம் பணிபுரிந்தார். கடைசியில் இலக்கியப் பணியே தனக்கு ஏற்ற பணியென்று முடிவு செய்தார். பெற்றோர்களின் மணவிலக்கும், இராணுவப்பள்ளி அனுபவங்களும் இவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தின.[1]

1899-1900 ஆம் ஆண்டுகளில் ரில்க் லோ ஆண்ட்ரியல் சலோமி என்ற பெண்ணுடன் உருசியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கே எழுத்தாளரும் தத்துவஞானியுமான லியோ டால்ஸ்டாயைச் சந்தித்தார். பின்னர் பெர்லின் திரும்பியதும் உருசிய நாட்டு வரலாற்றையும், அந்நாட்டின் கலை இலக்கியங்களையும் விரும்பிப் பயின்றார். ரில்க், பிரான்ஸ், ஸ்காண்டினேவியா, இத்தாலி, ஸ்பெயின், வடக்கு ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும், உருசியப்பயணம் இவர் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவருடைய எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாகவும் அடிப்படையாகவும் விளங்கியது; தான் தரிசித்த முதல் புனித பூமியாக அதைக் கருதினார். உருசியப் பயணத்தின் விளைவாகத் தோன்றிய கவிதைகளில் உருசிய நாட்டைத் தனது ஆன்மீகப் பெருவெளியாக அதிசயங்கள் மிக்க கற்பனை உலகமாக-வருணிக்கிறார். 1900-இல் இவர் எழுதி வெளியிட்ட ‘கடவுளின் கதைகள்’ (Stories of god) என்ற நூல் இவர் உள்ளத்தில் ஆட்சி செய்த கற்பனை இருசியாவை மிக உயர்வாக உருவகப்படுத்துகிறது.[1]

1902-இல் புகழ்பெற்ற பிரெஞ்சுச் சிற்பியான ரோடினின் செயலாளராகச் சேர்ந்து இரண்டாண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் பாரிசில் பத்தாண்டுகள் தங்கியிருந்து தம் இலக்கியப் பணியைத் தொடர்ந்தார். 1915-ஆம் ஆண்டில் இராணுவப் பணிக்காக அழைக்கப்பட்டு வியன்னா சென்றார். இராணுவத்தின் கடுமையான நடைமுறைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நோய் வாய்ப்பட்டார். இவருடைய மோசமான உடல் நிலை காரணமாக இராணுவத்தில் இவருக்கு எழுத்தர் பணி வழங்கப்பட்டது. ஓரிரண்டு ஆண்டுகளில் அப்பணியிலிருந்தும் விடுதலைபெற்று மியூனிச் சென்று தங்கினார். தமது கடைசி நாட்களை ஸ்விட்சர்லாந்தில் கழித்தார்.[1]

தனிபட்ட வாழ்கை[தொகு]

சிற்பியிலிருந்து சீமாட்டிவரை ரில்க்கின் வாழ்க்கையில் பல பெண்கள் குறிக்கிட்டனர். அவர்களிடம் ரில்க் கொண்ட காதலுறவு சுவையானது; புதிரானது. ரில்க்கின் முதற் காதல் 1897-இல் வேலரி டேவிட் ரோன்ஃபீல்ட் என்ற பெண்ணிடம் ஏற்பட்டது. இவரது முதல் கவிதை நூலுக்கு அவள் ஊக்கச் சக்தியாக விளங்கியதோடு அந்த நூலை வெளியிடும் பொருட்செலவையும் அவளே ஏற்றாள். ‘வல்லி’ என்று தன் குறிப்புகளில் வாஞ்சையுடன் குறிப்பிடுகிறார் ரில்க். ஆனால் அவள் உறவு குறுகிய காலத்தில் முறிந்தது.

அடுத்து ரில்க்கைக் கவர்ந்தவள் ‘லோ சலோமி’. என்னும் அழகி. இருபது வயதில் ஜெர்மானியத் தத்துவஞானி நீட்சேயைத் தன் அழகினால் கவர்ந்தவள். ரில்க்கைச் சந்தித்த போது அவளுக்கு வயது முப்பத்தைந்து; திருமணமானவள். ரில்க் அப்போது இருபத்து மூன்று வயதுக் இளைஞர். அவளைக் கண்டதும் காதல்வயபட்டார்! விரைவில் அவர்கள் பிரிந்தாலும், காதல் தொடர்பு அற்றுப் போகவில்லை; வாழ்க்கையின் இறுதிவரை நீடித்தது. ரில்க்கின் ஆதர்ச நங்கையாக எப்போதும் விளங்கினாள்.

இவர் நெருங்கிப் பழகிய பெண்களுள் டிரிஸ்டி நகருக்கருகில் இருந்த டியூனோ கோட்டை இளவரசி ‘மேரிவான்தான்’ குறிப்பிடத்தக்கவள். அவளுடைய அன்புக்கு கட்டுப்பட்டு ஆண்டுக் கணக்காக அவளுடைய கோட்டையில் தங்கியிருந்தார். புகழ்பெற்ற ‘டியூனோ இரங்கற்பா’ (Duing Elegies) தோன்றக் காரணமாக இருந்தவள் இவளே.[1]

உருசியப் பயணம் முடிந்து ஜெர்மன் திரும்பியதும். சில்க் ‘வொர்ப்ஸ்வீட்’ என்ற சிற்றூருக்குச் சென்றார். அங்கே ‘கிளேரா வெஸ்ட்ஹாஃப்’ என்ற இளம் பெண்ணான சிற்பியைச் சந்தித்தார். அவள் புகழ் பெற்ற சிற்பி ரோடினுடைய மாணவி. இருவரும் காதலித்து 1901-இல் திருமண்ம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ‘ரூத்’ என்று குழந்தையும் பிறந்தது. குடும்பு வாழ்க்கை என்னும் கட்டுத்தறியில் ரில்க் நிலையாகத் தங்கும் பழக்கமற்றவராக இருந்தார்.[1]

இறப்பு[தொகு]

ரில்க்கின் சாவும் கற்பனைச் சுவை பொருந்தியது. செடியிலிருந்து ஒரு ரோஜா மலரைக் கிள்ளிய போது, முள்குத்தி இவர் இறந்து விட்டதாக ஒரு செய்தி வழங்குகிறது. ‘டெட்டனஸ்’ என்ற இசிவு நோயைப் பற்றி அறியப்படாத அந்தக் காலத்தில் இச்செய்தி வியப்பிற்குரிய ஒன்றாக இருந்திருக்கலாம். ஏற்கெனவே இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரில்க்கின் உடல் நிலை, முள் குத்தியதும் மேலும் மோசமாகி, அதுவே இசிவு நோய்க்குக் காரணமாகி, அதுவே சாவுக்கும் காரணமாகியிருக்கலாம்.[1]

இலக்கியப் பணிகள்[தொகு]

சிறுகவிதைகள் நிறைய எழுதிக் குவித்திருந்தாலும், ரில்க்கிற்கு அழியாப் புகழைச் சேர்க்கும் கவிதைத் தொகுதிகளாக மூன்றைக் குறிப்பிட்டப்படுகிறது. அவை ‘மால்டே லாரிட்ஸ் பிரிக்கின் குறிப்புகள்’ (The Note books of Malte Lawrids Brigge) ‘டியூனோ இரங்கற்பாக்கள்’ Duino Eeegies ‘ஆர்ஃபிசை நோக்கி எழுதிய ஈரேழ்வரிக் கவிதைகள்’ (Sonnets To Orpheus) என்பன. இவை நிகழ் காலத்தைப் பின்னுக்குத் தள்ளிய முன்னோடிக் கவிதைகளாகும். மேலும் ‘கிறிஸ்துவின் அகக் காட்சிகள்’ (Vision of Christ) என்ற நூலையும் எழுதியுள்ளார்.

இந்த நூல்கள் அல்லாமல் ‘புதுக் கவிதைகள்’ (The New Poems) என்ற நூலையும் ரில்க்கின் படைப்புகளுள் முக்கியமான ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் உள்ள கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக முறையே 1907, 1908 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. சிறுத்தை (The Panther) பியானோ பயிற்சி (Piano Practice), லீடா (Leda) வெனிசில் காலங் கடந்த இலையுதிர்க் காலம் (Late Autumn In Venice), ஸ்பானிய நடனமங்கை (Spanish Dancer) ஊதாரிப் பிள்ளையின் புறப்பாடு ( The Departure of The Prodigal Son) என்ற புகழ் பெற்ற கவிதைகள் இத்தொகுப்புக்களிலேயே உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 கவிஞர் முருகு சுந்தரம் (1993). "புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்". நூல். அன்னம் (பி)லிட். pp. 42–54. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெய்னர்_மரியா_ரில்கே&oldid=3744923" இலிருந்து மீள்விக்கப்பட்டது