பழுப்புக் கொழுப்பு
பழுப்புக் கொழுப்புத் திசு (brown fat) என்பது கொழுப்புத் திசுவின் இரு வகைகளுள் ஒன்றாகும். (மற்றொன்று வெள்ளைக் கொழுப்புத் திசு).
பொருளடக்கம் |
வெள்ளைக் கொழுப்புடன் வேறுபடுதல் [தொகு]
இது பிறந்த குழந்தைகளிலும் குளிர்காலத் தூக்கம் (hibernation) மேற்கொள்ளும் விலங்குகளிலும் அதிகமாகக் காணப்படும். இதன் முக்கியப் பணி வெப்ப உற்பத்தி (thermogenesis) ஆகும். வெள்ளைக் கொழுப்புத் திசுவோடு ஒப்பிடுகையில் இவற்றில் எண்ணற்ற கொழுப்புத் துளிகளும் இன்னும் பல மைட்டோகாண்ட்ரியங்களும் (mitochondria) உள்ளது. இதன் மைட்டோகாண்ட்ரியங்களில் உள்ள இரும்பே (iron) இதன் பழுப்பு நிறத்திற்குக் காரணமாகும்.
உயிர்வேதியியல் [தொகு]
மைட்டோகாண்ட்ரியங்களில் நடக்கும் எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி (electron transport chain) மூலமாக ஏ.டி.பி (ATP) உற்பத்தி ஆகிறது. எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி இரண்டு கூறுகளை உடையது. அவை, ஆக்சிஜனேற்றம் மற்றும் பாஸ்ஃபோ ஏற்றம் (phosphorylation) ஆகும். ஆக்சிஜனேற்றத்தால் உண்டாகும் ஆற்றலைக் கொண்டே பாஸ்ஃபோ ஏற்றம் அதாவது ஏ.டி.பி உருவாதல் நடைபெறுகிறது. இவ்விரு கூறுகளையும் பிரிக்கும் போது (uncoupling)ஆக்சிஜனேற்றத்தினால் உண்டாகும் ஆற்றலால் வெப்பம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பிரிக்கும் வேலையைத் தான் பழுப்புக் கொழுப்புத்திசுவில் உள்ள தெர்மோஜெனின் (thermogenin) (வெப்ப உருவாக்கி) எனும் புரதம் செய்கிறது.
பிறந்த குழந்தைக்குப் பாதுகாப்பு [தொகு]
புதிதாகப் பிறந்த குழந்தைகள் வெப்பத்தை வெகுவில் இழக்கக் கூடியவை.
இதற்கான காரணங்களாவன:
- உடல் பரப்பளவுக்கும் உடல் கனஅளவுக்குமான விகிதம் அதிகமாக இருப்பது
- விகிதாச்சார அடிப்படையில் தலையின் பரப்பளவு அதிகமாக இருப்பது
- குறைந்த தசைப்பகுதிகள் மற்றும் நடுக்கத்தால் வெப்ப உற்பத்தி செய்ய இயலாமை
- நிர்வாணமாய்ப் பிறத்தல், குறைவான முடிகள் கொண்டிருத்தல்
- முழுதும் வளர்ச்சி பெறாத நரம்பு மண்டலம்
ஆகவே, வெப்ப உற்பத்திக்கான ஒரு வழியாக இயற்கை அளித்ததே பழுப்புக் கொழுப்புத் திசுவாகும். பிறந்த குழந்தையின் உடலளவில் ஐந்து விழுக்காடு பழுப்புக் கொழுப்புத் திசுவே! இது குழந்தையின் பின் பகுதி, தோள் பட்டைகள் ஆகியவற்றில் அதிகம் காணப்படும்.
பெரியவர்களில் காணப்படுதல் [தொகு]
குழந்தை வளர்ந்ததும் பழுப்பு நிறத்தை அளிக்கும் மைட்டோகாண்ட்ரியங்கள் மறைந்து அது வெள்ளைக் கொழுப்பு போல் மாறி விடுவதாக நம்பப்பட்டது. ஆனால் புதிய ஆராய்ச்சிகளின் முடிவுகள் இதை மறுக்கின்றன. பாசிட்ரான் வெளிவிடும் வெட்டுவரைவியன் (positron emission tomography) மூலம் ஆராய்ந்ததில் பெரியவர்களிலும் மேல் மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் பழுப்புக் கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெகு அபூர்வமாக இந்த பழுப்புக் கொழுப்பு ஹைபர்னோமா (hybernoma) எனும் கட்டியாக மாறலாம்.
கருவியல் [தொகு]
பழுப்புக் கொழுப்புத் திசுவும் தசைத் திசுவும் ஒரே குருத்து திசுவில் (stem cell) இருந்து வளர்வதாகத் தெரிகிறது.